நமக்கு நம்முடைய பண்பாட்டைப் பற்றிய புரிதல் என்பது மிகமிகக் குறைவானதாகவே உள்ளது. நம்முடைய பண்பாட்டின் எல்லைகள் என்ன, சாராம்சமான போக்குகள் என்ன, அதன் அதிகார அடுக்குகள் என்ன - எதுவும் நமக்குத் தெரிந்திருப்பதில்லை. நாமறியும் நமது பண்பாடென்பது நம்மைச் சுற்றி இருக்கும் வாழ்க்கையில் இருந்து நாமறியும் சிக்கல்கள் மட்டுமே. நம்முடைய பண்பாட்டை நாம் இன்று அறியும்விதமே மிகச் சிக்கலானது. இன்றைய அரசியல் தேவைகளுக்காகப் பண்பாட்டை திரித்தும் உடைத்தும் பேசுபவர்களிடமிருந்து நாம் துண்டு துணுக்குகளாகவே பண்பாடு பற்றித் தெரிந்துகொள்கிறோம். ஆலயத்தில் இறைவனுக்கு உணவைப் படைப்பதனால் செல்வம் பெருகும் என ஒருவரும் அது உணவை வீணடித்தல் என இன்னொருவரும் சொல்வார்கள். அந்த சடங்கின் வரலாறென்ன, அது நமக்களிக்கும் மனநிலையின் விளைவென்ன என்று நாம் யோசிப்பதில்லை. இக்கட்டுரைகளில் பண்பாட்டு விவாதங்களை வரலாற்றுப் பின்னணியுடன் நிகழ்த்த முயன்றிருக்கிறேன். நம் அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு சிக்கலுக்கும் பின்னாலிருக்கும் பண்பாட்டு முடிச்சுகளைத் தொட்டுக் காட்டுகிறேன். பண்பாட்டை ஒரு அமைப்பாக அல்லாமல் ஒரு தொடர்ந்த பரிமாணமாகவே பார்க்கிறேன். தன் பண்பாட்டை அறியவும் தன் வாழ்க்கைச் சூழலைப் புரிந்து கொள்ளவும் முயலும் ஒருவருக்கு இந்நூல் புதிய பார்வைகளை அளிக்கும்.
- ஜெயமோகன்
Be the first to rate this book.