நீதி பரிபாலனத்தையும் இலக்கியத்தையும் ஒருசேர தன் வாழ்நாளில் போற்றிப் பாதுகாத்தவர்கள் மிகச்சிலரே! காரணம், இரண்டும் இரு துருவங்கள். இரண்டுக்கும் இருக்க வேண்டிய ரசனையும், மன ஒருமைப்பாடும் வெவ்வேறு. நீதித் துறையின் சாதிப்புக்கும் நேர்மைக்கும் நிகராக இலக்கியத்தில் இரண்டறக் கலந்து வியக்க வைத்தவர் நீதிபதி எஸ்.மகராஜன். ரசிகமணி டி.கே.சி-யின் பேரன்பு பெற்ற மாணவர். அவர் எழுதிய அதியற்புதக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். கம்பனின் வார்த்தை நயங்களை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கும் சிலிர்ப்பு நிலை தொடங்கி தன் மன ஓட்டத்தின் அத்தனைவிதப் பதிவுகளையும் இங்கே இறக்கி வைக்கிறார் நீதிபதி எஸ்.மகராஜன். திருக்குறளின் ஆழம், குற்றாலக் குறவஞ்சியின் ஆனந்த நடனம், தனிப் பாடல்களின் வீதி உலா, ஒளவையின் வாழ்வியல் தத்துவங்கள், காரைக்கால் அம்மையாரின் இறையார்வம் எனப் புத்தகத்தின் மொத்தப் பக்கங்களும் இலக்கியச் சோலையாக நிச்சயம் உங்களை ஈர்க்கும். இலக்கியம், ரசனைக்கானது மட்டும் அல்ல... அது நம் வாழ்வியலின் வடிவம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இந்தத் தொகுப்பு. டி.கே.சி-யைப் பற்றி நீதிபதி எஸ்.மகராஜனின் சிலிர்ப்பைச் சொல்ல வேண்டுமா என்ன! டி.கே.சி-யின் மேன்மையான குணங்கள், விட்டுக்கொடுத்து வாழ்ந்த பெருந்தன்மை, இடுக்கண் வந்தபோது நண்பர்களைக் கைவிடாமல் காத்த கருணை மனம், தன் சுய கௌரவத்தை மட்டுமே பார்க்காமல் எதற்கும் துணை நின்ற பக்குவம் என நீதிபதி எஸ்.மகராஜன் விவரிக்கும் உண்மைகள் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டல்கள். இன்றைய தலைமுறை தெரிந்துகொண்டு, கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் கூறுகளை நீதிபதி எஸ்.மகராஜன் விவரித்த விதம் அலாதியானது. தமிழ்த் தலைமுறை தன் பெரும் சொத்தாகப் பேணிக் காக்க வேண்டிய அரிய தொகுப்பு இது!
Be the first to rate this book.