அ. முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. 'இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது' என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே.
அ. முத்துலிங்கத்தின் இணையதளத்தை, நான் பெரும்பாலும் இரவில் கடைசியாக வாசிக்கிறேன். விதவிதமான அன்றாட வாழ்க்கையனுபவங்கள் வழியாகச் செல்லும் அவரது நாட்குறிப்புகள் எப்போதும் என்னை மெல்லிய புன்னகையுடன் தூங்கச்செல்ல வைக்கிறது.
தமிழில் எழுதிய எல்லாவற்றையுமே, எவரையும் படிக்கவைக்கும் திறன் கொண்ட மூன்று எழுத்தாளர்கள் மட்டுமே உள்ளனர். கல்கி அவர்களில் காலத்தால் முன்னோடி. சுஜாதா அடுத்தவர்.
அ. முத்துலிங்கம் தொடர்பவர். ஆனால், அ. முத்துலிங்கம் வணிக எழுத்தாளர் அல்ல. எழுத்தை ஒவ்வொரு கணத்திலும் தீவிரமாகவே அணுகிய இலக்கியவாதி. அ. முத்துலிங்கத்தின் ரசனையும் தெரிவும் ஆழமானவையும் கறாரானவையும் ஆகும். அவ்வகையில் அவரை நாம் புதுமைப்பித்தனின் மரபுவரிசையைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்த வேண்டும். கி. ராஜநாராயணன், நாஞ்சில்நாடன் வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லவேண்டும்.
- ஜெயமோகன்
Be the first to rate this book.