இந்திய விடுதலைப் போரில் இன்னுயிரைத் துச்சமென ஈந்தோர். இல்லம் இழந்தோர், இல்லாளைப் பிரிந்தோர், தடியடிபட்டோர், தண்டனைகள் பெற்றோர், சிறைச்சாலைகளில் சித்திரவதைக்குள்ளானோர் என நீண்டு கொண்டே செல்லும் தியாக சீலர்களின் வரலாற்றில் அத்தியாயங்களாக, வாக்கியங்களாக, என் வார்த்தையாகக்கூட இடம் பெறாமல் வஞ்சிக்கப்பட்டு தங்கள் வரலாற்றையே தியாகம் செய்த தமிழக முஸ்லிம்கள், இந்திய விடுதரைப் போரில் வேலூர்ப் புரட்சியின்போது ஆற்றிய தியாகத்தை இயன்ற வரை இந்நூலில் தொகுத்திருக்கிறேன்.
இன்னும் தொடர்ந்து அந்தப் பணியினைச் செய்து வருகிறேன். சுதந்திரமும், சுயமரியாதையும் இரு கண்கள் எனக் கருதி வாழும் இந்திய முஸ்லிம்கள், தங்கள் வீட்டை மறந்து, நாட்டை நினைத்து, தங்களை மெழுகுவர்த்திகளாக்கிக் கொண்டு, இந்திய நாட்டிற்குச் சுதந்திரம் ஈட்டித் தந்தனர். நம் கண்ணறையின் ஒளிபடாமல் கல்லறையில் துயிலும் அந்த விடுதலை வீரர்கள் கண்ணியத்திற்குரியவர்கள். அவர்கள் நம் கருத்தில் நிறைந்திருந்து, கால காலங்களுக்கும் முஸ்லிம்கள், இந்த மண்ணில் யாருக்கும் தாழாமல், தன்மானத்தோடு சரிநிகர் சமமாக வாழவும், ஜனநாயகத்தால் ஆளவும், நாளும் நாளும் உத்வேகம் தந்து கொண்டே இருப்பார்கள். அத்தகைய வீரத்தியாகிகளின் வரலாற்றினை நினைந்து போற்றுதல் மிகமிக அவசியமன்றோ.
இந்நூலில் இட்டுக்கட்டியும், இல்லாதவற்றையும் எவரைப் பற்றியேனும், எதனைப் பற்றியேனும், எங்கேனும், எள்ளளவேனும் எழுதியிருப்பதாக எவரேனும் கருதினால் என்னை பொறுத்துக் கொள்ளத் தேவையில்லை. கனலாக மாறலாம்; அனலாகச் சுடலாம். அக்கினிப் பிரவேசத்துக்கு ஆயத்தமாகப் புதர்க் குப்பைகளை அல்ல, பொன்னைத்தான் தொகுத்துத் தந்துள்ளேன்.
-செ. திவான்.
Be the first to rate this book.