குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவுசெய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098தான் இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்கை கொள்ளவும் சமூகம், அதன் கட்டமைப்புகள் இட்டுச்செல்லவே விழைகின்றன.
இந்த நாவலில், வழக்காடு மன்றத்துக்கு சாட்சியங்கள் எத்தனை முக்கியம் என்பதையும்; அவை வழக்கு விசாரணைக்கு வரும் கால அவகாசம் வரை அப்படியே இருப்பதில்லை என்பதையும்; மனிதர்களின் ஞாபக அடுக்குகளில் இருந்து அந்த நினைவுகள் கலைந்துவிடுவதையும்; கால ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையே வளரிளம் பருவத்தைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிடுவதையும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
'1098' என்ற இந்த நாவலும் அவரின் முந்தைய நாவல்களைப் போன்றதே. குழந்தைகளின் பாலியல் வன்முறைகள் சார்ந்த சமூக அவலநிலையை எடுத்தியம்பத் தவறவில்லை. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளுக்குக் கொடுக்கப்படும் போக்சோ சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவும், குழந்தைகள் நலச்சங்கங்களின் சீரிய பணியும், மகிளா வழக்காடு மன்றங்கள் குறித்தும் அதிகமான விழிப்புணர்வு நம் சமூகத்துக்குத் தேவையான ஒன்றாய் இருக்கிறது. அதை இந்த நாவல் பூர்த்தி செய்திருக்கிறது.
- அகிலா, எழுத்தாளர், மனநல ஆலோசகர்
Be the first to rate this book.