மலையாள இலக்கியம் என்றாலே தமிழ் வாசகன் தகழி, கேசவதேவ், பஷீர், ஓ.என்.விஜயன், எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற பெயர்களோடு தன் நினைவுகளை நிறுத்திக் கொள்ளும் காலமும் இருந்தது; இருக்கிறது. புனைகதை வட்டத்தில் ஒரு சிலர் எம்.முகுந்தன், ஆனந்த், சேது வரைகூட வரக்கூடும். ஆனால் மலையாளப் புனைகதைப் ‘புழை’ இவர்களை யெல்லாம் உள்வாங்கி, கடந்து, பல்வேறு நதிகளாய்ப் பாய்ந்தும் பரந்தும் செல்கிறது. இதை உறுதி செய்யும் வகையில்தான் ‘யௌவனத்தின் கடல்’ என்னும் இந்த நவீன மலையாளச் சிறுகதைகளின் தொகுப்பு நூல் அமைந்துள்ளது. தமிழ் வாசகர்களால் பெரிதும் அறியப்படாத அல்லது அறிந்துகொள்ள வேண்டும் என்று மொழிபெயர்ப்பு ஆசிரியர் யூசுப் கருதிய பதினொரு எழுத்தாளர்களின் இருபத்திரண்டு சிறுகதை களின் தொகுப்பு நூலிது. இந்த நூலில் உள்ள சிறுகதைகள் எந்தப் பொது அம்சத்தையும் கவனத்தில் கொண்டு தேர்வுசெய்யப்பட்டவை அல்ல; ஆசிரியர்களின் வரிசைப்படுத்தல் கூட அவர்தம் வயதை அடிப்படையாகக்கொண்டது.
புணர்ச்சி வெறியின் வெளிப்பாடுகள், ஆண்துணை அற்ற பெண்ணின் தனிமை அச்சம், அகதிச் சிறுவனின் வாழ்க்கை அவலம், பழி வாங்கும் வெறி, முதுமையின் எதிர்பார்ப்பு கள், தோல்விக்கு அளவுகோல் உண்டா, உலகச் சந்தையில் தன்னை விற்க விரும்பாதவன், நாம் குருடர் என எண்ணுவோரின் விழிப்பு, மரணமும் மனிதமும் எனத் தொடர்பற்ற ஆனால் உலக மண்ணில் எங்கோ வேர்கொள்ளும் சக்தி வாய்ந்த விதைக் கருக்களாகவே இச்சிறுகதை கள் அமைந்துள்ளன.
“படைப்பு, யதார்த்தங்களின் அவநம்பிக்கையிலிருந்து தன்னை விலக்கி அல்லது தப்பித்து அகம் சார்ந்து குறுக்கிக்கொள்வதும், நிலச்சித்திரங்களை வளமான சொந்த மண்ணிலிருந்து அகற்றி, தொலை தூரங்களைக் காட்சிப்படுத்துவது போன்ற அம்சங்களும் தர்க்கத்திற்குட்பட முடியாத இலக்கியத் தன்மைகள்” என யூசுப் (முன்னுரை) குறிப்பிடுவது இத்தொகுப்பு நூலுக்கு மிகவும் பொருந்துவதாகும்.
‘வாழ்க்கையைக் கொத்துவதற்கொரு கல்’ என்னும் ஜோசஃப் மரியனின் கதை, வாசகனின் மனத்தை, அகதிச் சிறுவனின் அவலங்களை, கொத்திக் காட்டும் கூரிய சிற்றுளி யாகும். அகதிச் சிறுவன் ஒருவன் நள்ளிரவில் ஒரு நகரத்திற்குத் தொடர்வண்டி (இரயில்) மூலம் வந்திறங்குகிறான். ஒரு பழைய சாக்குப் பையும், தொடைவரை தொங்கும் பெரிய சட்டைக்குள் மறையும் நிக்கரும், இலங்கையின் தமிழ் ஈழத்தில் எங்கோ இருக்கும் வீடு-தாய்-சிறிய தம்பியின் நினைவுகளும் மட்டுமே அவனது உடைமைகள். காலை விடியும் முதல் மாலை மடியும் இரவு வரை வேலை செய்யத் தயாராக இருக்கும் - ’அம்மி கொத்தும்’ தொழில் தெரிந்த அந்தச் சிறுவன் சின்ன சிவத்தின் வாழ்க்கையே இந்தக் கதை. கடைக்காரனால் காலால் தூக்கி யெறியபட்டு நடுச் சாலையில் வந்து விழும் சின்ன சிவம் அச்சமும், பசியும், வாழ்க்கையும், ஊர் நினைவும் துரத்த கதை முழுக்க ஓடிக்கொண்டிருக்கிறான்.
கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள், நகரவாசிகள் மற்றும் பெரிய வீட்டு நாயின் குரல், ‘ஓடுடா’ என்ற ஒற்றைச் சொல்லால் அவனை விரட்டுகின்றனர். நகரத்தை விட்டு நீங்கி ஒரு கிராமத்திற்குள் செல்கிறான். ஒரு வீட்டு முற்றத்தில் சிரிக்கும் குழந்தையைக் கண்டு தன் தம்பியின் நினைவு வர, மகிழ்ந்து, தன் பையில் இருந்து சிறிய குண்டுமணியை எடுத்து விளையாடத் தருகிறான். அந்தக் குழந்தையோ அதை வாயில் போட்டுக்கொள்ள, இதைப் பார்த்துவிட்டு ஓடிவரும் தாய் கூச்சலிடுகிறாள். பிள்ளைபிடிக்கும் கொள்ளைக் கூட்டத்தின் வேவுகாரன் எனத் தீர்மானிக்கப்பட்டு நையப் புடைக்கப்படுகிறான்.
“ஜீப் நகரும்போது சின்ன சிவத்தின் உதடுகள் மெல்ல அசைந்தன. அதில் பட்டிருந்த நீரை நாவால் தொட்டு அருந்தினான்... போலீஸ்காரர்கள் அவனிடத்தில் ஒன்றுமே கேட்க வில்லை...”(ப.31). ஊருக்கு வெளியே அவனை மயக்க நிலையிலேயே இறக்கிவிடுகின்றனர். “அவனை ஆறுதல்படுத்துவதற்குக் குன்றின் சரிவிலிருந்து இருள்வந்து மூடியது” (ப.33).
ஆதரவற்ற எல்லோருமே ஏழைகளாகின்றனர்; குரலெழுப்ப முடியாததாலேயே குற்றவாளிகள் எனத் தீர்மானிக்கப்படுகின்றனர். இந்தக் கதை ஈழத்திலிருந்து தப்பிவந்த ஒரு சிறுவனைப் பற்றியது; ஆனால் கதை நிகழும் இடம் எது எனக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இந்தியாவின் எந்தவொரு நகரத்திலும் ஏதிலியர்க்கு-அகதி களுக்கு வாழ்வு மறுக்கப்படுகின்ற கொடுமையே இந்தக் கதை.
இந்தத் தொகுப்பின் சிறப்பே ‘ஒரு சோறு பதம்’ எனக் கூற முடியாததுதான். அந்த வகையில் 22 கதைகளுமே 22 பதங்களாக அமைந்துள்ளன.
ஆண் விபச்சாரகனைப் பற்றிய கதை (ப.67); கல்ஃப் பணம் உறவுகளின் புனிதத்தை மீறி எப்படிக் காமவெறியின் கால்வாயாகிறது (ப.83); புரட்சியாளனாய் இருந்து அடிவாங்கியே கரைந்துபோன நாராயணன், போதேஸ்வரன் என்ற இன்ஸ்பெக்டரின் போலிப் பெருமைக்காக, அவர் தன் நடு வீட்டில் மாட்டிவைக்க, அவருடைய தாத்தா படத்தை வரைவது (ப.92); மகனால் – மருமகளால் புறக்கணிக்கப்பட்ட அப்பா ஒருவர் ஆறாவது வார்டில் இருக்க, வீட்டுக்குத் தெரியாமல் தன் தாத்தாவைப் பார்க்கவந்த பேத்தி, தான் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தைத் தந்துவிட்டுப் போதல் (ப.114); விமர்சனத்தாலோ வெளியீடுகளாலோ எந்தப் புகழும் பெறாத, ஆனாலும் ஒரு எழுத்தாளனாக விளங்கும் ஒருவன் இலட்சக்கணக்கான ரூபாய்க்காகத் தன்னை உலகச் சந்தையில் விற்றுக்கொள்ளாதிருத்தல் (ப.123); நண்பனையும் அவன் மனைவியையும் அவர்தம் திருமண ஆண்டு விழாவிற்காக அழைக்கும் ஒரு சில நண்பர்கள் அவளை வலுக்கட்டாயமாகத் தங்கள் விருந்தாக்கிக்கொள்ளும் ’நட்பு’ (ப.156); - இப்படி எந்தத் திசையில் ஓடுகிறது, எந்தக் கோட்டில் விரைகிறது எனக் கண்டுபிடிக்க முடியாத வகையில் கருவாலும் உருவாலும் வரைவாலும் நவீன மலையாளச் சிறுகதைகள் விரிகின்றன.
சாட்சிக் கையெழுத்துப் போட்டவன் விசுவன். கடன் வாங்கிய சுதாகரன் தலைமறை வாகிறான். வங்கி, விசுவனின் கழுத்தை இறுக்குகிறது. ‘குடும்பமே ‘ஆகஸ்டு 15இல்’ தற்கொலை செய்துகொள்ளும்’ என ஒரு போர்டு எழுதி வீட்டின் வெளியே வைக்கிறான் விசுவன். ஊடகங்கள் விவாதிக்கின்றன - விசுவன் சாவானா இல்லையா என்று. மனோதத்துவ நிபுணர், கூட்டுறவு வங்கியின் செயலர், நேஷனல் கிரைம் ரிகார்ட்ஸ் ரிசர்ச் பீரோ அதிகாரி, விசுவனின் வழக்கறிஞர் என எல்லோரையும் கூட்டிவைத்து விவாதிக்கிறது தொலைக்காட்சி. இடையிடையே செய்தி ஒளிபரப்பு, வறட்டு விவாதங்கள்.
‘எப்படியாவது சுதாகரனைக் கண்டுபிடித்தே தீருவது’ என்ற தீர்மானத்துடன் வீட்டை விட்டு வெளியேறிய விசுவன், இரவின் நடுப்பகுதியில் சாலையோரத் தேநீர்க் கடைக்கு வந்துசேர்கிறான். நெடுஞ்சாலையிலே வண்டி மோதி ஒருவன் துடித்துக்கொண்டிருக்கிறான். தேநீர்க் கடையில் இருப்பவர்கள் யாரும் அசையவும் இல்லை. இது சாதாரணம் அவர்கட்கு. கடையும் மூடப்படுகிறது. விசுவன் தவியாய்த் தவித்து ஏதோவொரு ஜீப்பை நிறுத்துகிறான். ‘நான் வேணும்னா கூட வர்றேன்’ என அந்த வழியே வரும் ஒருவன் உதவிக்கு வருகிறான். ஜீப் நகர்கிறது. அடிபட்டவனுக்கு இன்னும் உயிர் இருக்கிறது. வழியில் வந்தவன் ஜீப்பை நிறுத்தி, அவன் வந்துசேர வேண்டிய இடம் வந்துவிட்டதாகக் கூறிவிட்டு, “தாங்க்யூ, குட்நைட்” சொல்லி விட்டு இறங்கிப் போகிறான். அடிபட்டவன் இறக்கிறான். விசுவன், ’இறந்தவனும் தன்னைப் போலவே ஒரு அப்பாவியாக இருக்கலாம்’ என எண்ணுகிறான். தற்கொலை எண்ணத்தைக் கைவிடுகிறான்.
உலகப் புகழ்பெற்ற மெக்சிகன் எழுத்தாளர் ஹுவான் ருல்ஃபோவின் ‘பெட்ரேபராமோ’ என்னும் நாவலில் வரும் ‘கொமால’ என்னும் நகரம் இறந்தவர்களின் நகரமாகும். அதைப் போலவே கேரளமும் இன்னொரு ‘கொமால’ வாகிவிடும் எனத் தொலைக் காட்சி ஒருங்கிணைப்பாளர் சிரிக்கிறார். சந்தோஷ் ஏச்சிக்கானம் இந்தச் சிறுகதைக்குக் ‘கொமால’ என்றே தலைப்பிட்டிருக்கிறார் (ப.195).
இந்தச் சிறுகதைத் தொகுப்புப் படம்பிடித்துக் காட்டும் கேரளம் வித்தியாசமான தளத்தில் அமைந்துள்ளது. ஒழுக்கத்தைப் புறக்கணிக்கும் கேரளம்; நட்பை விகாரமாக்கிப் பார்க்கும் இன்றைய இளைய சமூகம்; வயதானவர்களை வாழ்க்கைக்கு வெளியே நிறுத்தும் குடும்பங்கள்; மனிதத்தை விற்பனைப் பொருளாக்கிக் காசு பார்க்கத் துடிக்கும் ஊடகங்கள்; சாவில் - பிற மனிதனின் இரத்தச் சூட்டிலும் தன்னைப் பற்றியும் தன் வசதியைப் பற்றியும் மட்டுமே எண்ணும் மனிதன்; எந்தச் சூழலிலும் கொஞ்சமாவது ஈரமாய் இருக்கும் மனிதம் - என எத்தனையோ செய்திகளை அள்ளித் தெளிக்கிறது இந்த நூல். இதுதான் இன்றைய கேரளம் - 100% கல்வி அறிவு பெற்ற மாநிலம் - என்றால், நம்ப முடியாத வேதனை வாசகன் மனதில் ஏற்படத்தான் செய்யும். முப்பது களிலிருந்து எழுபது வரைக்கும் கூட மலையாளப் புனைகதை உலகில் தலைதூக்கி நின்ற ‘வர்க்கம், கூலி, போராட்டம், சிறை, மண் மணம்...’ இன்னும் இவை போன்ற எந்தச் சொல்லும் இந்தத் தொகுப்பில் இல்லை. இந்தச் சொற்களுக்குப் பின்னாலுள்ள உணர்வுகளையும் அரிதாகவே உணரமுடிகிறது.
“படைப்பு, தளைகளற்றும் வாசகர்கள், மனத்தடைகளை அகற்றியும் விமர்சகர்கள், வகைமாதிரிகளன்றியும் தங்களை விசாலப்படுத்திக் கொள்ளும்போது கலை என்பது ஒரே நேரத்தில் கலைக்காகவும் மக்களுக்காக வுமான ஒரு பொதுத் தளத்திற்கு வந்துசேரும். வாசிப்பின் அரசியல்தான் பிரச்சினைக்குரிய எழுத்துகளையும் சூழல்களையும் உருவாக்குகிறது. ஒரு வகையில் இது எழுத்துரிமைக்குப் பாதகம் செய்யும் விஷயம். மலையாள இலக்கியத்தைப் பொறுத்தவரை அதன் வீரியத்திற்குப் புறச் சூழல்களின் அனுகூலம் மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது” (முன்னுரை) என்னும் மொழிபெயர்ப்பு ஆசிரியரின் விளக்கம் தொடர்ந்த படிப்பறிவாலும் ஆராய்ச்சிகளாலும் மெய்ப்பிக்கப்பட வேண்டியதாகும்.