ஒரு நாவலின் தொடக்க வரி மூலம் அந்நாவல் அளிக்கவிருக்கும் சுவை எத்தகையதாக இருக்குமெனத் தோராயமாக ஊகித்துவிடலாம். எதிர்பாராத கணத்திலேயே அந்த ஆப்பிள் மடியில் விழுகிறது. மார்க்கேஸின் இக்குறுநாவலின் முதல் வரியே தீர்மானிக்கப்பட்ட கொலைக்கான முஸ்தீபுகளுடன் ஆரம்பிக்கிறது.
ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டவுடன் குற்றம் நடந்த இடத்துக்கு அவனைக் கூட்டிச்சென்று மீண்டும் ஒரு முறை அதை அடி பிறழாமல் நடித்துக் காட்டச் சொல்வது விசாரணையின் நடைமுறைகளுள் ஒன்று. கிட்டத்தட்ட இந்நாவலும் அவ்வாறானதே. கால் நூற்றாண்டுக்கு முன் நடந்ததை மீண்டும் நம் கண் முன் எழச் செய்கிறது. ஆனால், இங்கு குற்றவாளிக்குப் பதிலாக அதைச் செய்வது கொலையுண்டவனுக்குப் பால்ய காலம் தொட்டே நண்பனாக இருந்தவனும் உறவினனும் நாவலில் ஒன்றிரண்டு இடங்களில் வந்து செல்பவனுமான கிளைப் பாத்திரம். புலனாய்வின் கூர்மையுடனும் தவறவிடும் சிறு புள்ளியிலும் பார்வைக்கோணம் மாறிவிடக்கூடும் என்ற பத்திரிகையாளனின் எச்சரிக்கையுணர்வுடனும் விவரித்துச் செல்லும் மார்க்கேஸ், இந்நாவலில் வலைப்பின்னல் போன்ற வடிவத்தில் புனைவைக் கையாள்கிறார்.
துப்பறியும் நாவல்
‘கட்டுப் போடப்படாத காயம் போலிருந்த’ அந்த நகரத்தில் 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலையின் காரணத்தைத் தேட விழைகிறது இக்குறுநாவல். விகாரியோ சகோதரர்களின் வன்மம் மிகுந்த பழியுணர்வால் பன்றிகளை அறுக்கும் கத்தியால் கூறுபோடப்படும் சந்தியாகோ நாஸாருக்கு, அவர்கள் அதிகாலையிலிருந்து தனக்காகக் காத்திருப்பது சில நிமிடங்களுக்கு முன்பே தெரியவருகிறது. சாகசக்காரனாக ஊருக்குள் நுழைந்து தன் தங்கை ஆங்கெலா விகாரியோவைக் காதலித்து மணந்த பயோர்தோ சான் ரோமான் முதலிரவு அன்றே அவளை தாய் வீட்டில் விட்டுச் செல்கிறான்.
சொல்லப்படும் காரணம் அவள் முன்னரே கன்னித்தன்மை இழந்தவள் என்பது. அம்மாவின் மூர்க்கமான அடிகளுக்குப் பின் ‘அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல்’ அவளால் சுட்டப்படும் பெயருக்குரியவன் அடுத்த சில மணி நேரங்களில் அவன் சொந்த வீட்டின் வாசலின் முன் துண்டுபோடப்படுகிறான். ஆனால் ஊரெங்கும் காற்றுக்குத் தீ பிடித்ததுபோல் பரவிவிட்ட அச்செய்தி சந்தியாகோ நாஸார் காதுகளுக்கு மட்டும் எட்டாமலேயே இருப்பது பெரும்புதிர் என்றால் அந்த துர்சம்பவத்துக்குக் காரணம் அவன்தான் என்பதற்கான சிறு சாட்சியோ சுவடோ நாவலில் தட்டுப்படாததும் அது நிறுவப்படாமல் விடப்பட்டிருப்பதும் பேரவலம்.
தினசரிகளின் ஏதேனுமொரு மூலையில் பிரசுரமாகும் கொலைச் செய்தி போன்றதுதான் இக்குறுநாவலின் கருவும். இக்குறுநாவலை உளவியல்ரீதியான வாசிப்புக்கு உட்படுத்து கையில் அது மனப் புதிர்களின் முன் கொண்டு நிறுத்துகிறது. செய்யவிருக்கும் கொலையை மிக வெளிப்படையாக, கிட்டத்தட்ட தங்களைக் காண நேர்கிறவர்களிடமெல்லாம் கூறும் விகாரியோ சகோதரர்கள், எவரேனும் இதைத் தடுத்து நிறுத்த மாட்டார்களா எனும் எதிர்பார்ப்புடனேயே வளைய வருகிறார்கள். அந்த நகரத்து மனிதர்களும் நடக்கவிருக்கும் விபரீதத்தை முன்னுணர்ந்தவர்களாக அவனைக் காப்பாற்ற இயன்ற அளவு முயல்கிறார்கள். அவற்றில் ஏதேனுமொன்று பலித்திருந்தாலும் சந்தியாகோ தப்பித்திருக்கக்கூடும். ஆனால் அவை அனைத்தும் முறிக்கப்படுகின்றன.
மேயர் ஒருவரே அவர்களிடம் நேரடியாகப் பேசிக் கத்திகளைப் பிடுங்கி வீட்டுக்கு அனுப்புகிறார். வேறு கத்திகளை எடுக்கப் போகும்போது, சகோதர்களில் ஒருவனுக்குச் சோர்வும் நடுக்கமும் ஏற்பட்டுவிடுகின்றன. தனியாகப் போய்க் கொல்லுமாறு கேட்டுக்கொள்ளும் அளவுக்கு மற்றவனது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடுகிறது. ஆனால், கொலை செய்த பின் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் குற்றவுணர்வு சிறிதுகூட இருப்பதில்லை. மூன்று இரவுகள் அவர்கள் உறங்காமல் சிறைக்கூடத்தில் விழித்திருப்பினும் அவர்களின் பேச்சு தெளிவாக இருந்திருக்கிறது. பிறகு அவர்களுள் ஒருவனுக்கு, மோசமான வயிற்றுப்போக்கு ஆரம்பிக்கிறது. இவற்றுக்குள் இருக்கும் இணைப்புகளும் கொலைகாரனின் மனநிலையை ஊடுருவிச் செல்லும் நுட்பமும் வியக்க வைக்கின்றன.
‘தன் தகுதிக்கு மீறியவர்’ என முதலில் ரோமானை மணக்க மறுப்பவளும் அவனுடன் ஒரு நாள்கூட முழுமையாக வாழாதவளுமான ஆங்கெலா விகாரியோதான் அவனுக்குப் பதினேழு வருடங்கள் இடைவெளியின்றிக் கடிதங்கள் எழுதுகிறாள். இந்த மன அமைப்பின் மீதான யோசனை வாசகருக்குள் ஓடும்போதே, முதிர்ந்த வயதில் ஒரு நண்பகல் வேளையில் அவள் எழுதிய ஏறக்குறைய இரண்டாயிரம் கடிதங்களுடன் அவள் வீட்டின் முன் நிற்கிறான் ரோமான். கடிதங்கள் பிரிக்கப்படாமல் கிடக்கின்றன. அப்படியெனில் அவர்கள் பரஸ்பரம் அறிந்திருந்தார்களா? அவ்வளவு ஆண்டுகள் இருவரின் உள்ளேயும் கிடந்ததுதான் என்ன?
விகாரியோ சகோதரர்களின் கண் கொண்டு நோக்கினால் பழிதீர்க்கும் ஆக்கம்போலத் தோன்றும். நாடகீயத் தருணங்களால் ஆனது என்றபோதும் இந்நாவலை ஒரு காதல் கதையாகவும் வாசிக்க இடமிருக்கிறது. சந்தியாகோவின் அம்மாவான ப்ளாஸிதா லினேரோவின் தனிமையின் வழியாகவும் இந்நாவலுக்குள் நுழையலாம். இறந்துபோன மனைவியின் நினைவுகளுடன் தன் மாளிகையில் வாழும் சையுஸிடம் ஆங்கெலாவின் ஆசையின் பொருட்டுப் பணத்தைக் கொட்டி அந்த மாளிகையைத் தன்னுடையதாக மாற்றிக்கொள்ளும் ரோமான், கசந்த மண வாழ்க்கையால் ஒரு முழு இரவைக்கூடக் கழிக்க முடியாமல் அம்மாளிகையிலிருந்து வெளியேறுகிறான். சையுஸின் கண்ணீரிலிருந்து ரோமானின் வாழ்க்கை சீர்கெடுவதாக வாசிக்கும் சாத்தியமும் இதில் உண்டு. போதிய காரணமேதுமின்றி பலிகடாவாக ஆகும் சந்தியாகோ நாஸார், வாழ்க்கை என்பது விதிகளின் அபத்தமான ஒத்திசைவுகளின் தொகுப்பு எனக் காட்டுகிறான்.
தமிழின் தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான அசதா Chronicle of a Death Foretold நாவலை அருமை செல்வத்துடன் இணைந்து பெயர்த்துள்ளார். மெச்சத்தக்க மொழியாக்கம். சொற்களின் தெரிவும் குழப்பமற்ற வாக்கிய அமைப்புகளும் அதே தீவிரத்தன்மையை வாசிப்பவருக்கும் கடத்திவிடுகின்றன.
கே.என். செந்தில், எழுத்தாளர், ‘அரூப நெருப்பு’, ‘விழித்திருப்பவனின் கனவு’ ஆகிய நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: knsenthilavn7@gmail.com
(நன்றி: தி இந்து)