வெண்டி டானிகரும் இந்தியாவும்

வெண்டி டானிகரும் இந்தியாவும்

வணக்கம்

தற்போது வென்டி டானிகரின் “இந்துக்கள் :ஒரு மாற்று வரலாறு” (The Hindus : AnAlternative History) என்ற நூலை பெங்குவின் பதிப்பகம்திரும்பபெற்றிருப்பது சரியான முடிவா?உண்மையில் அந்த புத்தகம் காட்டும்
வரலாறு என்ன? மிகுந்த வேலைகளுக்கிடையில் இருக்கிறீர்கள் என அறிவேன். இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் தனி கட்டுரையாக பதிவுசெய்தால் சிறப்பு.

செ. நிஜந்தன்

***

அன்புள்ள நிஜந்தன்,

நான் அந்நூலை வாசிக்கவில்லை. அதைப்பற்றிய ஒரு மதிப்புரையை மட்டுமே வாசித்தேன். அந்நூலை முழுக்க வாசித்துப்பார்க்கும் மனநிலையிலும் இல்லை. மதிப்புரையை வைத்துப் பார்த்தால் அந்த அம்மையார் புதியதாக ஏதும் இந்தியாவைப்பற்றியோ இந்துமதம் பற்றியோ சொல்லிவிடவில்லை. சென்ற நூறாண்டுகளில் இந்தியாவில் உள்ள நவீன யுக எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் இதைவிடத் தீவிரமான, கூர்மையான விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். இந்த அம்மையாரே கூட அவ்வகையான ஒரு விரிந்த சொல்லாடல்களனில் இருந்தே தன் விமர்சனங்களை பொறுக்கிக் கொண்டிருக்கிறார்.

இங்கே நினைவுகூரவேண்டியது காதரின் மேயோ என்ற அமெரிக்க ஆய்வாளர் 1927ல் எழுதி வெளியிட்ட மதர் இந்தியா என்ற நூல். இந்தியாவை ஓர் அழுகியநாகரீகமாக சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் அந்நூலை எதிர்த்து அன்று இந்தியாவில் கடும் விமர்சனம் எழுந்தது. காந்தி அந்நூலை சாக்கடை இன்ஸ்பெக்டரின் அறிக்கை என்று சொன்னார்.

அந்த எதிர்ப்பு ஒருவகையில் புதியது. ஏனென்றால் அதே தொனியில் இந்தியாவைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான ‘ஆய்வு’ நூல்கள் அதற்கு முன்பு கிறித்தவ மதப்பரப்புநர்களாலும் காலனியாதிக்கவாதிகளாலும் எழுதப்பட்டிருந்தன. பெரும்பாலானவை எந்த வகையான எதிர்ப்பும் இல்லாமல் அவர்களுக்குள் புழங்கிக்கொண்டும் இருந்தன.

மிகச்சிறந்த உதாரணம் என்றால் ராபர்ட் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சாணார் வரலாறு. நாடார் சாதியின் வரலாறு, வாழ்க்கைமுறை பற்றிய அக்கறையோ அடிப்படை மரியாதையோ இல்லாமல் அவர்கள் மதம் மாறாவிட்டால் மிருகங்களே என்ற தோரணையில் எழுதப்பட்ட அந்நூல் பின்னர் புழக்கத்திலேயே இல்லாமலாகிவிட்டது.

[ The Tinnevelly Shanars : a sketch of their religion and their moral condition and characteristics : with special reference to the facilities and hindrances to the progress of Christianity amongst them. London : Clay for the Society for the Propagation of the Gospel, 1850.]

இந்தியாவை மேலைநாட்டினர் அணுகுவதில் இரு பார்வைகள் உள்ளன. இந்தியவியலின் அடிப்படை விவாதம் எப்போதுமே இவ்விரு பார்வைகள் நடுவேதான்.

முதல்பார்வை இந்தியாவை மதமாற்றக் களமாக கண்ட பாதிரியார்களால் உருவாக்கப்பட்டு ஐரோப்பிய- அமெரிக்க சூழலில் மிக வலுவாக நிலைநாட்டப்பட்டது. இந்தியா ஒரு வறுமைமிக்க, பிற்பட்ட, அரைக்காட்டுமிராண்டி நாடு. இங்குள்ள பண்பாடு என்பது சில உயர்குடிகளையும் நகரங்களையும் மட்டும் சார்ந்து இருந்த ஒரு போலிப்பாவனை மட்டுமே. இங்குள்ள சிந்தனைகள் கலைகள் அனைத்துமே ஆன்மாவற்றவை, மோசடியானவை. இந்தியப்பண்பாடு தேங்கிநின்றுவிட்ட ஒன்று. இந்தியமக்களை மீட்டு, அவர்களுக்கு பண்பாட்டையும் ஆன்மீகத்தையும் வளர்ச்சியையும் அளிக்க ஐரோப்பாவால் மட்டுமே முடியும். அது வெள்ளைதோல் கொண்டவர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும்.– இதுவே இவர்களின் நிலைப்பாடாகும்.

நான் சில ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் பயணம்செய்த நாட்களில் அங்கே மாதாகோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான துண்டுப்பிரசுரங்களில் இந்தியாவைப்பற்றிய இந்தச் சித்திரம் முன்வைக்கப்பட்டு நிதியுதவிக்கான கோரிக்கை எழுப்பப்பட்டிருப்பதை வாசித்தேன். பதினேழாம் நூற்றண்டின் தொடக்கத்தில் முன்வைக்கப்ப்பட்ட இப்பிரச்சாரம் இன்றும் அதே வேகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த முந்நூறாண்டுப் பிரச்சாரத்தின் வல்லமையை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. சராசரியான வெள்ளையன் இந்த மனநிலையையே கொண்டிருக்கிறான், நுட்பமாக வெளிப்படுத்துவான்.

ஐரோப்பியச் சிந்தனையாளர்களில் கணிசமானவர்கள் இந்தமனநிலையை வெளிப்படுத்துவதைக் காணலாம். மிகச்சிறந்த உதாரணம் கார்ல் மார்க்ஸ். அவர் முன்வைத்த ஆசிய உற்பத்திமுறை என்ற கருதுகோள் இந்தியாவில் உற்பத்திமுறை தேங்கிநின்றுவிட்டது என வாதிடுகிறது. வெளிநாட்டினரிடம் வணிகத் தொடர்புடைய நகரங்கள் மட்டுமே இந்தியாவில் வளர்ந்திருந்தன. அங்குமட்டுமே போலியான ஒரு த்த்துவ வளர்ச்சி இருந்தது. மற்றபகுதிகள் பழங்குடிகள் மட்டுமே வாழ்ந்தவையாக இருந்தன என்று மார்க்ஸ் சொல்கிறார். ஆகவே பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றும் அது இந்தியாவை மீட்கும் வல்லமைகொண்டது என்றும் நினைக்கிறார் இதே தோரணையை முன்வைக்கும் இன்னொரு சிந்தனையாளர் ஆல்ஃபிரட் ஸுவைட்சர். ஆப்ரிக்காவில் கிறித்தவ மதப்பிரச்சாரகராக அரும்பணியாற்றியமைக்காக புகழ்பெற்ற இவர் இந்திய தத்துவ ஞானமரபை தொகுத்துச் சொல்லி அடிப்படையில் அறவுணர்வற்ற போலியான தத்துவமரபு, பெரும்பாலும் நகல்களால் ஆனது என நிராகரிக்கிறார்.

இவ்வாறு நேரடியாகச் சொல்லாவிட்டாலும் இந்தியாவைப்பற்றிப் பேசும் கணிசமான ஆய்வாளர்களிடம் அவர்களின் மேலோட்டமான ஜனநாயகபாவனைகளுக்கு அடியில் இம்மனநிலை இருப்பதை கொஞ்சம் அணுகியதும் காணலாம். பொதுவாக இவ்வகை ஆய்வாளர்கள் தங்கள் கிறித்தவச்சார்பை, வெள்ளை இனச்சார்பை, ஐரோப்பிய மேட்டிமைவாதத்தை நேரடியாகக் காட்டிக்கொள்ளமாட்டார்கள். நாத்திகர்களாக, ஜனநாயகவாதிகளாக, உலகப்பொதுமைபேசும் அறிவியல்நோக்குள்ளவர்களாகவே காட்டிக்கொள்வார்கள். அது ஐரோப்பிய அமெரிக்க அறிவுலகின் பொதுப்பாவனை. ஆனால் பெரும்பாலும் அது ஒரு தற்காப்புப் பாவனை மட்டுமே. விதிவிலக்குகள் மிகமிகமிக அபூர்வம். அந்த அடிப்படைக்காழ்ப்புகளில் இருந்து அங்கே பிறந்து அக்கல்விக்கூடங்களில் கற்ற ஒருவர் வெளியே வருவதும் மிகமிகமிகக் கடினம்.

இந்த மனநிலைக்கு இருவகையான எதிர்வினைகள் இங்கிருந்து எழுகின்றன. இந்தியாவில் கல்வித்துறையில் உள்ள ஐரோப்பிய அடிமை மனநிலை மேற்கண்ட ஐரோப்பிய மேட்டிமை நோக்கை அப்படியே அள்ளி தன் கருத்தாக வைத்துக்கொள்கிறது. அதையே சொல்லிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க- ஐரோப்பியக் கல்விநிலையங்களில் கற்றவர்கள் அனேகமாக அனைவருமே இந்த மனநிலையைத்தான் ‘ஆய்வு நோக்குடன்’ சொல்லிக்கொண்டிருப்பார்கள். விதிவிலக்குகளை நான் அதிகம் கண்டதில்லை. எவரேனும் அப்படி எங்கேனும் இருந்தால் நண்பர்கள் எனக்குத் தெரிவிக்கலாம்.

இரண்டாவது எதிர்வினை, ஐரோப்பிய அங்கீகாரத்துக்காக இங்கே எழுதப்படும் எழுத்துக்கள். இவை ஐரோப்பிய ரசனைக்காகவும் அவர்களின் ஆமோதிப்புக்காகவும் எழுதப்படுபவை. அங்கே புகழ்பெற்றபின் அவை இங்கு ‘அவர்களாலேயே’ அங்கீகரிக்கப்பட்டவை என்ற பேரில் முன்வைக்கப்பட்டு நம்மவர்களாலும் கொண்டாடப்படுகின்றன. மிகச்சிறந்த உதாரணம், நிரத் சௌதுரி என்ற வங்க எழுத்தாளர். காதரீன் மேயோவின் குரலிலேயே எழுதிய இந்திய எழுத்தாளர் இவர். லண்டனில் ஒருகாலத்தில் இந்தியாவைப்பற்றி ‘உண்மையாக’ எழுதும் ஒரே எழுத்தாளர் என பெரும்புகழ்பெற்றிருந்தார். அவரது நூல்கள் இங்குள்ள ஊடகங்களிலும் பரவலாக புகழ்பெற்றிருந்தன. இன்று அவை மறக்கப்பட்டுவிட்டன.

நிரத் சௌதுரியின் வெவ்வேறு வடிவங்களையே நாம் இந்திய ஆங்கில எழுத்துக்களில் திரும்பத்திரும்பக் காண்கிறோம். ‘so called’ இந்தியப்பண்பாட்டில் சலிப்புற்ற, ஏமாற்றமடைந்த, விலகிச்சென்று ஐரோப்பியப் பண்பாட்டின் மென்மையிலும் மேன்மையிலும் சரண்புகுந்த கதைமாந்தர்கள் கொண்ட கதைகளே புகழ்பெற்ற இந்திய ஆங்கில இலக்கியங்களில் பெரும்பாலானவை. உதாரணமாக ரோகிண்டன் மிஸ்திரி முதல் அருந்ததி ராய், வரையிலானவர்களின் நாவல்களைச் சொல்லலாம்.

இரண்டாவது இந்திய அணுகுமுறை என்பது இந்தியாவின் பண்பாடு மீதான அடிப்படை ஆர்வத்துடன் நிகழ்த்தப்படுவது. அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆரம்பகால இந்தியவியலாளர்களுக்கு ஆரிய இனவாத நோக்கு இருந்தது என்கிறார்கள்.ஆனால் இந்தியசிந்தனையை புரிந்துகொள்ள, இந்தியப்பண்பாட்டை உள்வாங்கிக்கொள்ள முயல்வதனாலேயே அவை முக்கியமானவை. மோனியர் விலியம்ஸ் முதல் ஏல்.எல்.பாஷாம் வரை உதாரணமாகக்ச் சொல்லலாம். அவர்களுக்கு இந்தியா கடன்பட்டுள்ளது.

வெண்டியின் இந்நூல் ஒன்றும் புதிய தாக்குதல் அல்ல. அது ஐரோப்பிய மேட்டிமைநோக்கின் குரலாக சென்ற முந்நூறாண்டுகளாக இந்தியா, சீனா, ஆப்ரிக்கா மீது முன்வைக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.இந்தியாவின் பண்பாட்டு அடையாளமாக எந்த ஆளுமை முன்வைக்கப்பட்டாலும் உடனடியாக இந்த ஐரோப்பிய அறிவுத்தளத்தால் அந்த ஆளுமை சிறுமைப்படுத்தப்படும். காந்தி, அரவிந்தர், விவேகானந்தர், ஜெ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரைப்பற்றி மிகக்கீழ்த்தரமான நூல்கள் பல எழுதப்பட்டுள்ளன. அவை வெறும் சிலையுடைப்புகள் அல்ல, அவதூறுகள்.

இணைய அறிமுகம் உடையவர்கள் சென்ற ஓரிரு வருடங்களுக்குள்ளேயே இத்தகைய நூல்கள் சில பரபரப்பாக பேசப்பட்டு மறக்கப்பட்டதை நினைவுகூரலாம். காந்திக்கும் அவரது நண்பருக்கும் ஓரினச்சேர்க்கை உறவு இருந்தது என்று அவரது கடிதங்களில் இருந்து ‘கண்டுபிடித்து’ எழுதப்பட்டது. விவேகானந்தரும் ராமகிருஷ்ணபரம ஹம்ஸரும் ஓரினச்சேர்க்கை உறவுள்ளவர்கள் என ஒருவர் ஆய்வுசெய்து எழுதினார்.

இராமனைப்பற்றியும் கிருஷ்ணனைப்பற்றியும் ஏராளமான நூல்கள் இங்கே எழுதப்பட்டுள்ளன.இந்தியப்புராணங்கள், இந்திய தெய்வங்கள் பற்றி எழுதப்படுகின்றன. ஏன்? இவற்றின் பெறுமதி உண்மையில் என்ன?

ஒப்ரி மேனன் என்ற எழுத்தாளர் திருவனந்தபுரத்தில் இருந்தார். அவர் பி.கெ.பாலகிருஷ்ணனின் நண்பர். அன்று உலகப்புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளராக இருந்தார் ஓப்ரி மேனன். தாய் வழியில் ஐரிஷ்காரர் தந்தைவழியில் மலையாளி. அவரது ராமாயண மறுஆக்கம் நூல் இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருந்தது. [The Ramayana, As Told by Aubrey Menen (1954)] அவரை 1987ல் பி.கெ.பாலகிருஷ்ணனுடன் சென்று சந்தித்தபோது அதைப்பற்றி நான் கேட்டேன். ‘இந்தியாவில் தடைசெய்யப்படுவதற்காக எழுதப்பட்ட நாவல் அது. ஏராளமாக பணம் கிடைத்தது. என் பிறநூல்களுக்கு கவனமும் பெற்றுத்தந்தது’ என்றார் ஒப்ரி. அதை அவர் எழுதியதன் நோக்கமென்ன என்று மீண்டும் கேட்டேன். ‘அதைத்தானே சொன்னேன்’ என்று சிரித்தார். அந்நூலை தடைசெய்திருக்கக் கூடாது என நான் ஒரு கட்டுரை எழுதினேன், ஒரு வணிகத்தை ஏன் தடைசெய்யவேண்டும்? அதனால் என்ன ஆகிவிடப்போகிறது?

இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இதற்கு அதிக எதிர்வினையாற்றுவதும் தடைசெய்வதும் சரியல்ல என்பதே என் எண்ணம். முதலில், இன்றைய இணையச்சூழலில் தடை என்பது மறைமுக விளம்பரம் மட்டுமே. அடிப்படையில் நூல்களை தடைசெய்யும் அதிகாரம் அரசுகளுக்கு அளிக்கப்படக்கூடாது. எந்நூலையும் எக்காரணத்தாலும் தடைசெய்யக்கூடாது.

மேலும் வெண்டியின் இந்நூலை தடைசெய்தால் அதைப்போல எழுதப்பட்ட பலநூறு நூல்களை என்ன செய்வது? 1979ல் கீதாமேத்தா என்பவர் எழுதிய கர்மகோலா என்ற நூல் இதேபோல ஒட்டுமொத்தமாக இந்திய ஆன்மீகத்தை கேவலப்படுத்துகிறது என்றார்கள். அது என்ன விளைவை உருவாக்கியது? வெண்டியின் நூலைப்பற்றிய மதிப்புரையை வைத்துப்பார்த்தால் நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட ஒரு நூலாக அது தெரியவில்லை.இன, மத காழ்ப்புடன் எழுதப்பட்ட சர்வசாதாரணமான நூலுக்கு அதற்குத் தகுதியற்ற விளம்பரத்தை அளிப்பதனால் என்ன பயன்? இத்தகைய காழ்ப்புகளால் சீண்டப்படுவதா இந்துப்பண்பாடு?

ஆகவே இந்த மிகையான எதிர்வினைகள்தான் இந்தியப்பண்பாட்டுக்கும், இந்துப்பண்பாட்டுக்கும் எதிரானவை என நினைக்கிறேன். இந்தியப்பண்பாடும் இந்துமதமும் கீழ்த்தரமானவை என சித்தரிப்பவர்கள் இந்த மிகையுணர்ச்சிமிக்க எதிர்வினைகளைத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இந்நூல்களை இந்து, இந்திய பண்பாட்டுமரபில் ஞானம் கொண்டவர்கள் புன்னகையுடன் கடந்துசெல்லும்போது தெருவில் இறங்கும் ஏதுமறியாத கும்பல் தங்களை இந்து- இந்திய பிரதிநிதிகளாக முன்வைக்கிறது. ஐரோப்பிய மேட்டிமையாளர்களுக்கு மேலும் வசதியானதாக ஆகிறது. பண்பாட்டுத்தாக்குதல்களுக்கும், வணிகத்துக்கும்
இந்த தாக்குதல்களை உண்மையில் எதிர்கொள்ளும் வழிகள் இரண்டுதான்.முதல் வழி சிந்தனையின் தளத்தில். அந்தசெயல்பாடுகளுக்கு இந்திய கல்வித்துறை முற்றிலும் தகுதியற்றதாக ஆகிவிட்ட நிலையில் வெளியே இருந்து வலுவான அறிவார்ந்த குரல்கள் எழவேண்டியிருக்கிறது.

இன்னொரு வழி உண்டு. இருபதாண்டுகளுக்கு முன்புவரை சீனா ஐரோப்பாவால் நம்மைவிட அதிகமாக வசைபாடப்பட்டு அவதூறுசெய்யப்பட்டு இழிவுபடுத்தப்பட்டது. அதன் நாகரீகமும் பண்பாடும் ஐரோப்பாவால் சிறுமையாகவே பேசப்பட்டன. இன்று அது உலக வல்லரசு. இன்று ஐரோப்பா அதை பணிவுடன் மரியாதையுடன் கௌரவத்துடன் பேசத்தொடங்கியிருக்கிறது.

ஜெ

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp