வாரிஸ் டைரியின் பாலைவனப் பூ என்னும் நூலானது, சோமாலியா நாட்டு நாடோடிப் பெண்ணின் நெடுந்தூரப்பயணத்தை விவரிக்கும் ஒரு தன்வரலாறாகும். வாரிஸ் டைரி தனது இந்நூலினை கேத்லீன் மில்லருடன் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை ‘பாலைவனப் பூ’ என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அர்ஷியா பாராட்டப்படக்கூடியவர். சோமாலிய நாட்டு மாடல் அழகியான வாரிஸ் டைரி, தனது சமூகத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமையை விவரிக்கும் வகையில் தனது சுய விமர்சனத்தை பாலைவனப் பூ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டு உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்துள்ளார். வாரிஸ் டைரி சிறுவயதில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் சிறுமியாக இருந்த போது, மதம் மற்றும் சடங்கின் பெயரால் அந்நாட்டுப் பெண்களின் பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்படுவதையும், அதைத் தொடர்ந்து அந்தப் பெண்களின் வாழ்க்கையே போர்க்களமாக மாறுவதைக் கவனித்தும், தானும் அந்த நரகவேதனையை அனுபவித்தும் தனது நூலில் அதனை விளக்கியிருக்கிறார். தனது வாழ்வில் பிற்காலத்தில் பிரபல மாடல் அழகியாக தான் உருவெடுத்ததும் சர்வதேச ஊடகங்கள் அவரை பேட்டியெடுக்கக் குவிந்தபோது, தன்னைப்பற்றிய தற்பெருமை பேசாமல் தனது நாட்டில் நிகழும் மனித விரோதச் செயல்களையும், மனதை நோகடிக்கும் இன்னும் பல இழிசெயல்களையும் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். இதனை ஆராயப்புகுந்த ஐ.நா சபை அந்த உண்மைகளின் அடிப்படையில் இத்தகைய கொடுமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள 28 நாடுகளில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 13 கோடி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இஸ்லாமிய நாடுகளில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் சிறுமிகள், இந்த ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்ற அதிகாரப் பூர்வமான தனது அறிவிப்பை வெளியிட்டது.
நெடுங்காலமாக இந்திய மற்றும் உலகளவிலான பெரும்பான்மையான நாடுகளின் புராதன கலாசாரம் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே பார்க்கிறது. இன்றளவில் பல பெண்களின் வாழ்க்கை மேம்பட்டிருந்தாலும், சராசரிப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து விலகி அவர்களுக்கென சில வரையறைகள் வகுக்கப்பட்டிருந்ததையும், அப்பெண்களின் அகப்புற மனவேதனைகளை தன் வாயிலாக எடுத்துரைப்பதாக தனது நூலை படைத்தளித்துள்ளார் வாரிஸ் டைரி. எங்கோ முற்றத்தில் தெரியும் நிலவை ரசித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அது நம் முகத்தில் ஓங்கி அறைந்தால் எப்படி இருக்குமோ, அது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது பெண்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை குறித்த இதுபோன்ற பதிவுகள். இன்றளவும் உலகம் முழுவதும் கடந்தகால மற்றும் சமகால பெண்களின் நிலை, துயரம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மதங்களின் பெயராலும் சடங்குகளைக் கைமாற்றும் நீட்சியாலும் பெண்களைத் தங்களின் உடமையாகக் கருதும் ஆண் வர்க்கம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் அல்லது தக்கவைத்துக் கொள்ளவுமே போராடுகிறது. இதுபோன்ற ஆணாதிக்க நிலைகளை அறிந்தும் பெண் கைவிட்டுப் போய்விடக் கூடாதென்னும் சொந்தம்கொள்ளும் மனோபாவத்தால் தங்கள் மீது சுமத்தப்படும் அத்தனை விதிகளையும் கடவுளுக்காகவும் தங்களின் சந்ததிகளுக்காகவும் சிலுவை போலச் சுமப்பவர்களாகப் பெண்கள் வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகக் கட்டுமானத்திலிருந்து ஒரு சில பெண்கள் வெகுண்டெழுந்து தன்னிலைகளிலிருந்து மீற முயலும்போது, அவர்களை நோக்கி அனைத்துத் திசைகளிலிருந்தும் வீசப்படும் அடக்குமுறைக் கயிறுகள், பெண்ணுடலையும் அவர்களின் எண்ணங்களையும் தரைமட்டமாக்குகின்றன. அப்படியொரு அடக்குமுறையிலிந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர்தான் வாரிஸ் டைரி.
நாலாயிரம் ஆண்டுகாலமாக ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் இருந்துவந்த, பெண் உறுப்புச் சிதைப்பைத் தடைசெய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய வாரிஸ் டைரியின் சேவையைப் பற்றி னுநளநசவ குடழறநச என்னும் ஆங்கில நூல் பேசுகிறது. வாரிஸ் டைரியின் ‘பாலைவனப்பூ’ என்னும் நூலின் தலைப்பானது நூலின் உள்ளார்ந்த கருத்தை நேரிடையாகப் பிரதிபலிப்பதில்லை என்றாலும், இப்பெயர் மிகப்பொருத்தமானது என்பதனை நாவலோடு பயணப்படுகையில் நாம் உணரமுடிகிறது.
சோமாலியாவில் தாரூத், ஹாவியே என்னும் பழங்குடித் தம்பதியருக்கு மகளாகப் பிறந்த வாரிஸ் டைரி, திருமண வயதை நெருங்கும்முன்னே இவரின் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது. ஏனெனில், தான் பிறந்த பழங்குடி இனத்திலிருந்து சிந்தனையிலும், செயலிலும் மாறுபட்டவளாய் தன் சமூகத்தை எதிர்க்கும் எண்ணமுடையவளாய் சிறுவயதிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மரபார்ந்த தன் சமூகத்தில் பெண்கள் எதையும் எதிர்த்துக் கேட்கும் வழக்கம் இல்லாதபோது தான் ஒரு பெண்ணாக அதைத் துணிந்து செய்கிறார். மேலும், பெண்கள் தன் சமூகத்தில் காலம்காலமாக அடிமைப்பட்டு ஆண்களின் கைப்பாவையாக வாழும் நிலையை உடைத்தெரிய வேண்டுமென நினைக்கிறார். ஐந்து ஒட்டகத்திற்காக அறுபது வயதுக் கிழவனுக்கு பதிமூன்றே வயதானத் தன்னை திருமணம் செய்துவைக்க முயலும் தந்தையை ஏமாற்றிவிட்டு, பாலைவனம் வழியாக, பலநூறு மைல்கள் நடந்தும் ஓடியும் தப்பிப்பிழைக்கிறாள் வாரிஸ் டைரி. பிறகு வீட்டுவேலை செய்பவளாக, பன்னாட்டு உணவகத்தில் தரைப் பெருக்கும் தொழிலாளியாக வயிற்றுப்பாட்டைக் கழுவி, பின்னர் மாடலாகவும், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கதாநாயகியாகவும் வளர்ந்து உலகப் புகழ்பெறுகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு நேர்காணல் அவரை வேறொரு தளத்துக்கு இட்டுச்சென்று விடுகிறது. அடிமனதில் ஆழமாய்த் தங்கிப்போன அழுக்கைத் துடைக்கும் முயற்சியாக, ஐ.நா சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கான ‘பெண் உறுப்புச் சிதைப்பு தடுப்புப் பிரிவில்’ இணைந்துகொள்ள அழைப்பு கிடைக்கிறது. இவ்வாறு வாரிஸ் டைரி என்னும் ஒரு சிறுமியின் கால ஓட்டத்தை ஒவ்வொரு அத்தியாயங்களாக அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறது இந்நூல்.
நாகரீக வாழ்வின் பிரதேசத்தில் நாம் சஞ்சரிக்கும்போது அது போன்று எந்த வாழ்வுடனும் தொடர்பில்லாத பாலைவனத்தில் அடிப்படைத் தேவைகளுக்காய் சுற்றித் திரியும் நாடோடி மக்களில் இவர் மட்டும் வெளியேறுகிறார். மிருகத்தனம் நிறைந்த நாகரீக சமூகத்தைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் எளிமையாக உள் நுழையும் இந்த இளம்பெண் தன்; வாழ்வில் நேரும் ஒவ்வொரு சிக்கலிலும் தான் கையாளும் முறைகளோடு விறுவிறுப்பாகவே தன் சுய விமர்சனத்தை நகர்த்திச் செல்கிறார். இந்நூலின் நாயகி வாரிஸ் டைரி சிறுமியாக இருந்தபொழுது தன் முயற்சியை, தன் வாழ்நாளை முன்நோக்கி நகர்த்துவதிலேயே முனைப்பு காட்டுகிறார். அதற்காக தொடக்கத்திலேயே, சிங்கத்தின் அருகில் குற்றுயிராய் வீழ்ந்து கிடந்தும் அதை எதிர்க்கத் துணிந்து, தான் வாழும் காலம் கடவுளின் அருளால் இன்னும் நீட்டிக்கப்படுவதாகத் தொடங்கி தமக்கு ஒரு எதிர்காலம் இருப்பதையும் குறிப்பால் உணர்த்தியே தனது சுய விமர்சனத்தை எழுதிச் செல்கிறார்.
எனவேதான், தனது நூலின் பின் குறிப்பில் “நான் பேசியிருப்பது மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூடத்தெரியாது. எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்ட கலாச்சாரம். அதை நான் என்னால் முடிந்த அளவிற்கு எப்போதும் பேசுவதுபோல மிக எளிதாக வெளிப்படுத்தி விட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் பேசியிருக்கிறேன் என்கிறார் வாரிஸ் டைரி.”
வாரிஸ் டைரியின் தன்வரலாற்றின் களம் சோமாலியாவில் தொடங்குகிறது. இந்நூலின் நாயகி தண்ணீரை நேசிப்பவளாக இருக்கிறாள். ஏனெனில், நமக்கு நேசிக்கத் தெரியாத ஒன்றாய் இருக்கிறது காரணம் நமக்கு அது எளிதில் கிடைத்துவிடுகிறது. ஆனால் நாட்காட்டி இல்லாத பாலைவனத் தேசத்தில் விழாக்கள் குறிப்பெடுத்துக் கொண்டாடப்படுவதில்லை எனும்போது மழைக்கான காலமும், மழைக்கான வேண்டுதல்களுமே இவர்களின் விழாக்களாக இருக்கிறது. முழுமையான உணவையோ நாகரீகத்தின் காற்றையோ சுவாசிக்காத இம்மக்களின் வாழ்வில் அளவிற்கு அதிகமான குழந்தைப் பிறப்பு மிகச் சாதாரணமாக இருப்பதும், தன் பெற்றோர்களையும், குடும்பத்தின் மூத்தவர்களையும் அவர்களின் முதுமைக் காலத்தில் உறுதுணையாகி நின்று காப்பாற்றுவார்கள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதை இந்நூல் வழி அறியலாம்.
சோமாலியா என்றவுடனே நம் நினைவில் வருவது பஞ்சமும் பட்டினியும் கொண்ட ஒரு ஆப்பிரிக்க உள்நாட்டுப் போர்களால் சிதையுண்ட ஒரு தேசம் அவ்வளவே. ஆனால் அவர்களின் தேசத்தில் துறைமுக நகரான மொகதிவைப் பற்றி அழகாய் விவரிக்கிறார். அது சோமாலியாவின் விடுதலைக்கும் முன் இத்தாலியும், காலனி ஆதிக்கத்தால் அதன் தாக்கமும் காணப்படுவதாகக் கூறுகிறார். மதத்தின் பெயரால், இல்லாத ஒன்றை நினைத்து அதை தங்கள் கவுரவமாகப் பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தில் அதன்மூலம் பெண்கள் இழக்கும் உரிமைகளையும், உணர்வுகளையும், உயிரிழப்புகளையும் பல்வேறு சொல்லமுடியாத நோய்த் தொற்றுகளைப் பற்றியும் அதனால் அவர்கள் அடையும் துயரத்தைப் பற்றியும் இந்த ஆணாதிக்க சமூகம் கண்டு கொள்வதில்லை எனும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. ஏனெனில், நாம்வாழும் நாகரீக சமுகத்தில் இங்கு பெண்ணுரிமைக்கானப் போராட்டம் முற்றிலுமாகவே மாறுபட்டே காணப்படுகிறது.
‘வாழு அல்லது மடி’ என்ற இந்த இரண்டைத் தவிர வேறேதுமில்லை என்கிறார் ஒருவர். ஏனெனில், ஒருவர் வாழ்கிறார் என்றால், அவர் வாழ்வில் எல்லாம் சரியாக நடக்கிறது என்ற அர்த்தம் அது. ஆம்! பாலைவன நாடோடி வாழ்வில் இந்த வாசகம் பொருத்தமாகப் படுகிறது. அவர்களுக்கு எதுவும் எளிதில் கிடைப்பதில்லை அவர்கள் நீரையும் ஒட்டகத்தையும் தங்கள் உயிராய் பாவிக்கிறார்கள். மருத்துவம் என்றால் என்ன எனச் சொல்லுமளவிற்கும் இந்த நூற்றாண்டில் வாழ்வது கொடுமையே. இதனால் அவர்களின் குழந்தைகள் இறந்துபோவதும், பல நேரங்களில் இறந்தே பிறப்பதும், மேலும், விருத்தச்சேதத்தால் அவர்களின் குழந்தை பிறப்பிலேயே பலவிதமான சங்கடங்குள்ளாவதையும் இந்நூல் விவரிக்கிறது.
வாரீஸின் வாழ்வில் முதன்முதலாய் ஒரு புகைப்படம் எடுத்தவர் “மால்கம் பேர்சைல்ட்” அவரைப் பற்றிய நல்ல சுவாரசியத் தகவலோடு நகரும் கதை இந்தப் புகைப்படத்திற்குப் பிறகு வாரிஸ்ஸிற்கு இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. இது மேலைநாடுகள் பெண்களுக்கு பாதுகாப்பைப் கொடுக்கிறது என்று நம்பும்நிலையில் உள்ளது. அதேநேரத்தில், “இங்கிலாந்தில் இளம் பெண்ணொருத்தி தனியாகத் துணையில்லாமல் இருப்பது அத்துணை உவப்பல்ல” என்று சொல்லும்போது, மீண்டும் இந்த உலகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது விடையறியா கேள்வியாகவே நம்முன் வைக்கப்படுகிறது.
மாடலிங் துறையில் அவளுக்குக் கிடைக்கும் அனுபவங்களூடே ஊடாடிப் போகும்போது தன் கடவுச்சீட்டிற்காக தான் படும் துயரங்களையும் அதற்காய் நடக்கும் திருமணங்களும் அதனால் ஏற்படும் இன்னல்களையும் விவரித்துச் செல்கிறது இரண்டாவது பகுதி. தன் குடும்பத்திலிருந்து பிரிந்த பிறகு தனிமை எப்படி தன்னை வாட்டுகிறது என்பதைச் சொல்லும்போதும் தனக்கான கணவன், குடும்பம் என்று அமையும் என ஏங்கி எதிர்பார்ப்பதாகச் சொல்லும்போதும் தன்னுள் நடந்த அந்த பாதிப்பு எப்படி உணர்வுரீதியில் தன்னை சொல்லவிடாமல் தடுக்கிறது எனும்போதும் நம்மை கண்களங்கச் செய்கிறார் வாரிஸ் டைரி.
குர் ஆன் இப்படிச் செய்யச் சொல்கிறது என்று பலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள அத்தனை இஸ்லாம் நாடுகளிலுமே இந்த வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றபோதும், அது இப்போது பிரச்சினையில்லை. ஆனால் குர் ஆனோ அல்லது பைபிளோ கடவுள் பெயரால் பெண்களுக்கு ‘அதை வெட்டிவிட வேண்டும்’ என்று எங்கும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கம் மிக எளிதாக, ஆண்களால் நடத்தப்படுகிறது. அவர்கள்தான் இந்தக் கோரிக்கையை வலுவாக ஆதரிக்கிறார்கள். அவர்களின் அறியாமை, சுயநலம் ஆகியவை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களின் பாலின விருப்பத்துக்குத் தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். தங்கள் மனைவிகளும் உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ள வேண்டும் என ஆண்கள் வற்புறுத்துகிறார்கள் என்கிறார் வாரிஸ் டைரி.
மேலும், தாய்மார்களும் தங்கள் மகள் மீது இந்தக் கொடுமையைத் திணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில், மகள்கள், தங்களுக்கு விருப்பமான ஆண்களோடு தொடர்பு வைத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் தாய்மார்களுக்கு இருந்துவருகிறது. உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ளாத பெண் மோசமானவள், மாசுற்றவள், காம வேட்கை கொண்டு திரிபவள், திருமணம் செய்துகொள்ளத் தகுதியற்றவள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
நான் வளர்ந்து வந்த நாடோடிக் கலாச்சாரத்தில் திருமணமாகாத பெண் என்ற சொல்லுக்கு இடமேயில்லை. ஆனால் தாய்மார்கள், தங்கள் மகள்களுக்கு சிறப்பான வாழ்க்கைச் சாத்தியங்கள் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பதுபோல, ஆப்பிரிக்கத் தாய்மார்கள் இந்த நடைமுறையைக் கைக்கொள்கிறார்கள். அறியாமையாலும் மூடத்தனம் நிறைந்த நம்பிக்கைகளாலும் ஆண்டுதோறும் பல லட்சம் சிறுமிகள், பிறப்புறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்படுவதற்குத் தகுந்த காரணங்கள் ஏதுமில்லை. உடல்ரீதியான வலி, மனரீதியான வேதனை, உயிரிழப்பு போன்ற காரணங்களே மிகுந்திருக்கின்றன.
இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 கோடிப் பெண்கள் இந்த வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பெண் உறுப்புச் சிதைப்பை எதிர்த்துப் போராடி வருகிறார் வாரிஸ் டைரி. உலகின் சூப்பர் மாடலாகவும் நடிகையாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியவர். ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ மூலம் உலகின் பல நாடுகளிலும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.
சோமாலியா நாட்டில் வறுமை தாண்டவமாடும் ஒரு கிராமத்தில் பிறந்த வாரிஸ் டைரி,; மாடு மேய்ப்பது, தண்ணீர் கொண்டு வருவது, வீட்டு வேலைகளைச் செய்வதுதான் இவரது பணியும், அந்நாட்டில் பிறந்த பெண்களின் பணியும் என்பார். மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸ{ம் அந்தக் கொடூரத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். கடவுளின் விருப்பம் இதுதான் என்றார் அம்மா. அப்படியானால் ‘கடவுளுக்கு என்னைப் பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கடவுளை எனக்கும் பிடிக்கவில்லை’ என்ற வாரிஸின் பேச்சு அம்மாவுக்குக் கலக்கத்தை உருவாக்கியது. சரி எவருக்கும் தெரியாமல் எங்காவது ஓடிவிடு என அம்மா சொன்னாள். ஒருநாள் அதிகாலை. பணம், துணி, உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல். வெற்றுக் கால்களுடன் ஓட ஆரம்பித்தார் வாரிஸ். எங்கிருந்துதான் அவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் வந்ததென்று தெரியவில்லை. இரவு, பகலாகப் பாலைவனத்தில் ஓடிக்கொண்டே இருந்தார். ஒருநாள் தூங்கி விழித்தபோது, அருகில் ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. தன்னுடைய அத்தனை முயற்சிகளும் இந்தச் சிங்கத்துக்கு இரையாவதில் முடியப் போகிறது என்று எண்ணி கண்களை மூடிக்கொள்கிறார் வாரிஸ். எலும்பும் தோலுமாக இருந்த வாரிஸை உற்றுப் பார்த்த சிங்கம் அவரைத் தீண்டாமலே சென்றுவிட்டது. அங்கிருந்து நகரை நெருங்கும் நேரத்தில் ஒரு டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார் வாரிஸ். விலங்குகளைவிட மனிதர்கள் ஆபத்தானவர்கள் எனபதை அப்போதுதான் அவர் தெரிந்து கொண்டதாகக் கூறுவார்.
300 மைல்களைக் கடந்து தன் சகோதரி வீட்டுக்கு வந்து சேர்ந்த வாரிஸ், அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டார். வீட்டு வேலை செய்வதற்காக லண்டனில் உள்ள உறவினர் ஒருவருக்கு ஆட்கள் தேவைப்பட்டபோது, தானே முன் வருவதாகச் சொன்னார் வாரிஸ். அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் உறவினர் மீண்டும் சோமாலியாவுக்கே சென்றுவிடுகிறார். தனக்கு பாஸ்போர்ட் என்பதால் அங்கேயே அவர் தங்கிவிடுகிறார். மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை செய்துகொண்டு, ஆங்கிலம் கற்றுக்கொண்ட அவருக்கு, டெரென்ஸ் டொனொவன் என்ற புகழ்பெற்ற புகைப்படக்காரரிடமிருந்து அழைப்பு வருகிறது. வருமானம் இல்லாமல் தன்னால் லண்டனில் வாழ முடியாது. தன் அம்மாவுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்ற காரணத்தால் அவ்அழைப்பை ஏற்றுக்கொள்கிறார் வாரிஸ். 1987-ம் ஆண்டு புகழ்பெற்ற பைரலி காலண்டரில் அவரது புகைப்படம் வெளியானது. அதிலிருந்து வாரிஸின் மாடலிங் பயணம் தொடங்குகிறது. அன்றிலிருந்து லீவைஸ், ரெவ்லான், சானல் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் வாரிஸ் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தன. விரைவில் உலகின் சூப்பர் மாடலாக மாறிய வாரிஸ் புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளை அலங்கரித்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் நடித்தார். கனவிலும் எதிர்பார்க்காத வசதியான லண்டன் வாழ்க்கை, உலகப் புகழ் எல்லாம் கிடைத்தாலும் வாரிஸால் பெண் உறுப்புச் சிதைப்பை மறக்க முடியவில்லை. ஐந்து வயதில் ஏற்பட்ட கொடூரம் ஒவ்வோர் இரவும் அவரது தூக்கத்தைக் கலைத்தது. புகைப்படங்களில் அவர் புன்னகை செய்தாலும் அதற்குப் பின்னால் வார்த்தைகளால் அளவிட முடியாத வலியும் வேதனையும் நிறைந்திருந்தது.
‘ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையின் பாதிப்பு உயிர் உள்ள வரை மறக்காது. ஏனெனில், உறுப்புச் சிதைப்புக்கு ஆளாக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் நோய்த் தொற்றால் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றனர். தன் சகோதரியும் கூட அதனால் மரணத்தை தழுவியதாகக் கூறுவார் வாரிஸ். கன்னித் தன்மையைப் பாதுகாப்பதற்காக மதத்தின் பெயரால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. திருமணத்தின்போதுதான் தையலை வெட்டிவிடுவார்கள். குடும்பம் நடத்துவதும் குழந்தைகளை பெற்றெடுப்பதும் இவர்களின் வாழ்வில் மரணவேதனைதான். ஏனெனில், தாயும் குழந்தையும் இறந்துவிடும் நிகழ்வே அதிகம். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமில்லாமல், அங்கிருந்து வந்து ஐரோப்பாவில் வசிப்பவர்கள்கூட எவ்வளவு படித்திருந்தாலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதைச் செய்யாமல் விடுவதில்லை. மதம் என்று வந்துவிட்டால் அங்கே கேள்விக்கே இடமேயில்லை’ என்கிறார் வாரிஸ்.
1999-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வலியையும் வேதனையையும் வெளியே சொன்ன வாரிஸ். அதற்காக வாரிஸ் ஃபவுண்டேஷன் என்ற ஒன்றையும் நிறுவினார். பின்னர் அது ‘டெசர்ட் ஃபவுண்டேஷன்’ என மாற்றம் பெற்றது. இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸ{க்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பையும் அவருக்கு அளித்தது. ஐந்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பையும் திறம்படச் செய்தார் வாரிஸ். மேலும், சூடான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, பெர்லின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற ஏராளமான நாடுகளில் வாரிஸின் ஃபவுண்டேஷன் இயங்கி வருகிறது. இவற்றின் மூலம் பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுகிறது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து சிகிச்சையும் அளித்துவருகின்றார். பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்குக் கல்வி அளிக்கப்படுகிறது.
ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடும் வாரிஸ் டைரி, நான்கு குழந்தைகளுடன் போலந்தில் வசித்து வருகிறார். வாரிஸ் டைரியின் பாலைவனப் பூ என்னும் நூலானது, 1 கோடியே 10 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்ததோடு, திரைப்படமாகவும் வெளிவந்து உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. ‘இனி ஒரு குழந்தைகூடப் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற வன்முறைக்கு இலக்காகவில்லை என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வருகிறார் வாரிஸ் டைரி. ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் அரசாங்கங்களின் உதவி போதுமானதாக இல்லை. மேலும், காலம் காலமாகக் கடைப்பிடித்துவரும் மத நம்பிக்கையைத் தகர்த்தெறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குப் பெண்கள் காரணமல்ல. அதனால் ஆண்களிடம்தான் புரிதலை ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான வாரிஸ், தன் மகன்களிடம் தெளிவை உண்டாக்கியத்தாகக் கூறுகிறார். நீங்களும் அதைச் செய்தால் போதும். தொடர்ந்து போராடுவோம். பெண் குழந்தைகளுக்கான வன்முறைகளற்ற சமூகத்தை உருவாக்குவோம்’ எனது கனவெல்லாம் இந்த உலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் அதைநோக்கிய பயணத்திற்கு இந்த மனிதர்கள் உதவட்டும் என்ற நூலின் முடிவுரையோடு தன்னிலையை தெளிவுபடுத்தியுள்ளார் வாரிஸ் டைரி.
தெளிந்த நீரோடை போன்ற சுவாரசியமான வாரிஸ் டைரியின் எழுத்தானது வாசிக்கும் வாசகருக்கு வலியையும் வேதனையையும் அனுபவித்தத் தந்தாலும் அனைத்தையும் வென்றுவிடும் உத்வேகமும் அதனுள் உள்ளது. அதுதான் பெண் எழுத்தின், பெண் சக்தியின் வெற்றி எனக் கருதுகிறேன்.
(நன்றி: இண்டங்காற்று)