விந்தைக் கலைஞர்களின் விசித்திர உலகம்

விந்தைக் கலைஞர்களின் விசித்திர உலகம்

பூமியில் மனிதன் தன் பணி முடிந்ததும் உலக வாழ்விலிருந்து துண்டித்துக்கொண்டு, விடைபெற்றுக்கொள்ள முடிந்தால் அதுவே விவேகமான காரியமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது. இளம் மேதைகள் விஷயத்தில் இதுதான் நிச்சயம் அழகான முடிவாக இருக்கமுடியும். இளம் மேதைகள் இளம் பிராயத்திலேயே தங்கள் கனவுகளின் உச்சத்தை எட்டிவிடுவதோடு அவ்வுலகில் பரிபூரணமாக வாழ்ந்தும் விடுகிறார்கள். தங்கள் துறை சார்ந்த மேதைமையின் சிகரத்தை எட்டிவிட்ட பிறகு, முதலில் மரணம் நேர்வது அவர்களுடைய கனவுகளுக்குத்தான். கனவுகளின் மரணத்துக்குப்பின் வாழ நேர்வது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல; அவலமும்கூட. அப்படி நேராமல் தடுத்தாட்க்கொள்ளும் அழகிய சாதனம்தான் மரணம்.

[‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ நாவலிலிருந்து… பக்:107]

O

சில நாட்களாக, கலக்கத்துடனும் தன்னைப் பேணாமலும் திரியும் ராமன் தனது கடைசி நிமிடங்களை ‘தேவி’யுடன் (‘தேவி’ எனப் பெயர் சூட்டப்பட்ட ஆண் நாய்) கழிக்கிறான். தேவி அவனைச் சுற்றித் திரிந்து களியாட்டம் புரிகிறது. அவனது கன்னத்தோடு தன் மூக்கை உரசுகிறது. தேவியைக் கட்டிக்கொண்டு கண் கலங்குகிறான். ஒரு நாயின் உடலில் தன் தலை பொருந்தியிருப்பதாக ஒரு சித்திரம் வரைகிறான். அச்சித்திரத்தில் அவன் முகம் துயரம் ததும்பி வழிகிறது. இந்தச் சித்திர முகம் அவனைக் கொடூரமாக இம்சிக்கிறது. தேவியின் கண்களைச் சந்திக்காமல் பூச்சி மருந்து அருந்துகிறான். தேவி அவனையே மலங்கமலங்கப் பார்த்தபடி கலக்கத்துடன் அவனுடலை சுற்றிச்சுற்றி வருவதாக முதல் அத்தியாயம் நிறைவுறுகிறது.

கலைஞனின் உலகத்தில் சாமான்யன் நுழையத் தகுதியற்றவன் அல்லது சாமானியனின் உலகம் கலைஞனுக்கானதல்ல. இதற்குச் சான்றாக நம் முன்னோடிகள் பலரையும் குறிப்பிட முடியும். கலை வாழ்வில் வென்று இயல்பு வாழ்விலே நலிந்து மாய்ந்த கலைஞர்களின் பட்டியலும் ஏராளம். கலைஞர்களின் உலகம் கேலிக்குள்ளாக்கப்படும் நவீன யுகத்தில் ஒரு கலைஞனின் தற்கொலையில் தொடங்கும் ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ புதினமானது, அக்கலைஞனின் மரணத்திற்கு எவ்வகையில் நியாயம் சேர்க்கப்போகிறது எனும் கேள்வி முதல் அத்தியாயத்தை வாசித்ததும் எழுகிறது.

ராமன் கூச்ச சுபாவி. திக்கு வாய். யாரோடும் இயல்பாக உரையாடத் தயங்கும் குணமுடையவன். அவனது அம்மாவுடன் மட்டுமே சகஜமாகவும் சினேகமாகவும் இருக்க முடிகிறது. படிப்பில் ஈடுபாடற்றவன். பிறவிக் கலைஞன்! ராமனின் அண்ணன்கள் மற்றும் ஓவிய சகபாடிகள் சிலரைத் தவிர எல்லோருமே ராமனிடம் அன்பு பாராட்டும் ஜீவன்களாகவே இருக்கிறார்கள். ராமனின் ஓவியங்கள்மீது பெரும்மதிப்பு கொண்டு அவனை வெகு தூரம் அவ்வுலகில் அழைத்துச் செல்லவும் துணை நிற்கிறார்கள். அவனைப் பாராட்டுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். அவனிடம் தவறாக நடந்துகொள்பவர்களைக் கண்டிக்கவும் செய்கிறார்கள். இதெல்லாம் மட்டுமே நமக்கு ஆறுதலான விஷயமாக இருக்கிறது. ஆனால், இவையெல்லாம் ராமனைப் பொறுத்தவரை புறகாரணிகள். அவனது உலகம் ஓவியம் மட்டுமே. தவிரவும் காமத்தின் போதாமை வேறு அவனை வாட்டும் அம்சமாக இருக்கிறது. ‘ஒரு ஜெந்தில்மேனாக’ வாழ ஆசைப்படும் ராமனுக்கு மிஞ்சுவது என்னவோ மரணம்தான்.

ராமனின் தனிப்பட்ட வாழ்வும் அவனது இயல்பும் மரணமும் இந்நாவலில் பேசப்பட்டிருப்பதற்கு நிகராக அவனது ஓவியங்களும் அது குறித்த உரையாடல்களும் (மெட்டாபிஃக்ஷன் பாணியில் மூன்று அத்தியாயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் ராமனின் ஓவியங்கள் குறித்தும் ஓவிய பாணி குறித்தும் சிலாகிக்கப்படுகின்றன.) பிரதான அம்சமாக இடம்பெறுகின்றன. ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ நாவலானது அளவில் மிகச் சிறியதெனினும் ஓவியம் குறித்த சிறப்பான சித்திரத்தைத் தருகிறது. ராமானுஜம் எனும் ஓவியரின் நிஜ வாழ்வை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்ட நாவல் இது. நாவலில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் சிலவற்றை ராமானுஜத்தின் ஓவியங்களோடு ஒப்பிட்டுப்பார்க்க முடிந்தது. இந்நாவலில் ராமனின் ஓவியங்களும் அவனது ஓவிய உத்தி பற்றிய குறிப்புகளும் தோராயமாக ஏழு இடங்களில் வருகின்றன. இது தவிரவும் ராமனின் ஓவியம் சார்ந்த பிறரின் பார்வையும் சிறுசிறு குறிப்புகளாக இடம்பெற்றிருக்கின்றன.

நாயின் உடலில் தன் தலை பொருந்தியிருக்கும் ஓவியம். அவனுடைய கோலாகல விந்தை உலகின் ஜீவன்களற்ற, அவனின் மிடுக்கான பவனியோ இருப்போ கொண்டிராத சித்திரம். ‘கவ்-பாய்’ தொப்பி இல்லாத அவனுடைய யதார்த்தமான தலையும், நேர்த்தியான தாடியோ, முறுக்கிய கம்பி மீசையோ இல்லாத அவனுடைய இந்தப் படைப்பில் வெளிப்பட்டிருந்தது. விந்தை உலகின் உல்லாசம் ததும்பும் முகத்தை இழந்து இச்சித்திரத்தில் அவனுடைய முகம் கடும் துயரைச் சுமந்திருந்தது [பக்: 22, 23].
ராமன் தான் தற்கொலை புரிவதற்கு முன்பாக வரையும் ஓவியம் இது. வலியும் துயரமும் நிரம்பியிருந்த அவனது இச்சித்தர முகம் கொடூரமாக இம்சிக்கிறது. அதிலிருந்து ஒரு குரல் ‘விட்டு விலகு வெளியேறு’ என்கிறது. பூச்சி மருந்து அருந்துகிறான்.

தனது சித்திர முகத்தைக் கண்டு துயருற்றதாக ராமானுஜம் பற்றிய குறிப்பிலும் காண முடிகிறது.

/K Ramanujan, who died young, typified the image of a troubled artist struggling with his own self-image. Ramanujan, who died young at the age of 33, on 4th January 1973, was a schizophrenic./

[Source: http://www.saffronart.com/artists/k–ramanujam]

அவருடைய கனவுகள்தான் அவருடைய படைப்புலகம். கனவுலகில் விந்தைத் தன்மைகள்தான் அவருடைய படைப்புக் கூறுகள். கனவுலகத்தின் மூட்டத்தைக் கொண்டுவருவதற்காக அவர் மேற்கொண்ட ஓர் உத்தி மிகவும் அலாதியானது. வரைவதற்கு முன் தாளைத் தண்ணீரில் நனைத்துவிட்டு, அதைக் காய வைத்து, அது லேசான ஈரப் பதத்தில் இருக்கும்போது வரையத் தொடங்குவார். விந்தைப் புனைவு வினோதமாய் கூடிவரும். சமயங்களில் முதலில் தாளில் வரைந்துவிட்டுப் பின்னர் தண்ணீரில் லேசாக ஒற்றியெடுத்துக் காய வைப்பார். விந்தையுலகை அற்புதமாக்கும் அவருடைய வெளிப்பாடுகள் வியப்பூட்டும் தனித்துவம் கொண்டவை [பக்: 31, 32].

எண்ணற்ற தூண்கள் கொண்ட ஒரு இருண்ட மண்டபத்தில், பிற தூண்கள் எல்லாம் இருளின் ஒளியில் மூட்டமாகத் தெரிய, ஒரு தூண் மட்டும் பிரகாசித்துக்கொண்டிருக்கும் சித்திரம் [பக்: 40].

வேணுகோபாலன் சிற்ப மாதிரியில் கருடன் குழலூதும் சித்திரம். கருடன் வான் வெளியில் குழலூதுவதான தோற்றத்தை அளிக்க சில மேக மூட்டங்களை உருவாக்கினான். நட்சத்திரங்கள் உதித்தன. நிலா தோன்றியது. அதன் மத்தியில் அவன் பேண்ட், சட்டை அணிந்தவனாக அமர்ந்தான் [பக்: 45].

‘கனவு’ என்ற அந்த ஓவியத்தில் பெங்குவின் தோற்றத்திலான வினோதப் பறவைகளும் விலங்குகளும் ஒன்றோடொன்று நெருக்கமாக நெருங்கிக்கொண்டிருக்க, அவற்றோடு ராமன் பேண்ட், சட்டை, கம்பி மீசை, நேர்த்தியான தாடி, தொப்பி என தன் ஓவிய உருவத் தோற்றத்தில் மிடுக்கான வெகுளித்தனத்தோடு நின்றுகொண்டிருந்தான். பெரும் கொம்புகள் கொண்ட எருதின் தலை அப்படைப்பில் மையம் கொண்டிருந்தது. கீழ்ப்பகுதியின் இடது ஓரத்திலிருந்து ஒரு பருத்த மலைப்பாம்பின் தலை உட்புகுந்திருந்தது. வானில் வலது ஓரத்தில் நிலா வீற்றிருந்தது. வெகுளித்தனமும் அச்சமும் முயக்கம் பெற்று கலை மேதைமையோடு உயிர்கொண்டிருந்த படைப்பு [பக்: 59, 60].

சித்திரம் வரைய அவர் பேனாவைத் தவிர வேறெந்த உபகரணத்தையும் பயன்படுத்துவதில்லை. ராமனின் கலை மனம் எல்லை கடந்த வெட்ட வெளியில் வெகு பாந்தமாக சஞ்சரிக்கக் கூடியது. கோட்டை இயக்கம் விதம் மூலமாகவும் வெகு நுட்பமாக நெருக்கும் விதம் மூலமாகவும் ராமன் வடிவமைக்கும் தன்மை பிரத்தியேகமானது. மிகத் தீவிரமான கிராஃபிக் பாணியிலானது. மேதைமையை வெளிப்படுத்தும் அம்சமிது [பக்: 86].
அவனுடைய படைப்புலகில் எவ்வளவோ விலங்குகளும், பறவைகளும், தெய்வீக மானுடர்களும் பல்வேறுபட்ட விந்தை ரூபங்களில் வெளிப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு ஓநாய் எந்த ரூபத்திலும் வெளிப்பட்டதில்லை. ஒரு புதிய படைப்புலகிற்குள் பிரவேசிப்பதற்கான தொடக்கமாக அது இருக்கக்கூடுமென அவனுக்குத் தோன்றியது. அன்று பகலில் அவன், வானில் கரும் மேகங்கள் திட்டுத் திட்டாய் அடர்ந்திருக்க, அவனும் ஓநாயும் அருகருகாக அமைந்திருக்கும் ஒரு ஓவியத்தை வரைந்தான். அந்த ஓவியத்தில் மிகப்பெரிய யானை தும்பிக்கையை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறது [பக்: 103].

இதுதான் ராமன் இறுதியாக வரைந்த முற்றுப்பெறாத ஓவியம் எனும் குறிப்பு நாவலில் இடம்பெற்றிருக்கிறது.

ராமானுஜத்தின் கடைசி ஓவியம் பற்றிய குறிப்பு:

/His last painting, mostly unfinished, reflected his state of mind. Dark clouds hovering at the horizon, engulfing a large elephant with his trunk raised in salutation and Ramanujan himself, standing next to a wolf./

[Source: http://www.saffronart.com/artists/k–ramanujam]

மெட்டாபிஃக்ஷன் பாணியில் கதைசொல்லி, டக்ளஸ், பணிக்கர் ஆகியோர் இறந்து போன ராமனைப் பற்றியும் ராமனின் சித்திரங்கள் பற்றியும் உரையாடுவதாக மூன்று அத்தியாயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை மூன்றும், ஓவியங்கள் குறித்த உரையாடலாகவும் ராமனின் முடிவை வாசகனிடத்தே விடாமல் கதைசொல்லியே விளக்கம் தருவதாகவும் அமைந்திருக்கின்றன. ராமானுஜத்தின் நிஜ வாழ்வை மிகத் தீவிரமாக அணுகியிருப்பதற்கு வலுசேர்க்கும் விதமாக இந்த உத்தி அமைந்திருக்கிறது. ராமன் குறித்து டக்ளஸ் பேசும் ஒரு வரியிலேயே நாவலின் சாராம்சம் பிடிபட்டதாக இரண்டாம் அத்தியாயத்தில் ஒரு வரி வருகிறது. இந்நாவலில் புனைவின் கலப்பு மிகமிகக் குறைவு.

இறுதி அத்தியாயத்தில் ராமனின் துயருக்கு நிகராக ராமன் மீதான தேவியின் பிரியமும் நம்மை வாட்டுகிறது. ராமன் இறந்து போன சில நாட்களிலேயே அவனது பிரிவைத் தாள முடியாமல், ராமன் இறந்து கிடந்த இடத்திலேயே சுருண்டு கிடந்து தேவியும் இறந்து போகிறது. பிரான்சிஸ் கிருபாவுடனான உரையாடலொன்றில் ‘கன்னி’ நாவலின் ஜிம்மி பற்றிய பேச்சு எழுந்தது. ஒரு நாயுடன் ஒரு நாள் பழகிவிட்டு அதைப் பிரிந்து சென்று சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கையில் அது நம் வாசனையை உணர்ந்து நம் காலைச் சுற்றி வரும், இது வேறெந்த பிராணிகளிடமும் சாத்தியமில்லை, நான் வீட்டை விட்டுச் செல்வதாக முடிவெடுத்து வெளியேறுகையில் முன்னங்கால் இரண்டையும் என் மார்பில் நிறுத்தி என்னைப் போகவிடாமல் தடுத்தது ஜிம்மி, இதை ‘கன்னி’ நாவலில் எழுதியிருப்பேன், நான் வீட்டைவிட்டு வெளியேறுகிறேன் என்பதை அது உணர்ந்திருக்கிறது என்றார். ஒருவன் தனக்கென யாருமின்றி ஒரு நாயைத் தன்னுடன் பழக அனுமதிக்கும்போது அவனைக் கொன்றுவிடுவது சிறந்தது என்பார் அர்ஜுன். ராமன் பூச்சி மருந்தை அருந்தி தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன்பாக தேவிக்கும் சிறிது ஊற்றி விட்டுருப்பதே பெருங்கருணையாக இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

அவர் தன்னைத் தானே கொன்றுகொண்டிருக்கவில்லை. தற்கொலை எனும் அழகிய சாத்தியத்தைத்தான் அவர் கைகொண்டார் என்று தோன்றுகிறது… அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ரில்கேயின் வரிகள் ஞாபத்துக்கு வரத் தவறுவதில்லை.

ஒரு ஜீவன் ஓடற்று இருக்குமெனில்

வலி எளிதில் தாக்கும்

ஒளியால் வதையுறும்

ஒவ்வொரு சப்தமும் நிலை குலையச் செய்யும்.

ராமன் ஒரு ஓடற்ற ஜீவன். உலக வாழ்வில் அவர் நடமாட்டம் அப்படித்தானிருந்தது. அவருடைய படைப்பு வெளியில்தான், அவருடைய அந்த விந்தை உலகில்தான், அவருடைய அந்த அதீதக் கற்பனை உலகில்தான், அவர் சகஜமாக வாழ்ந்துகொண்டிருந்தார். அவருடைய கனவுலக சஞ்சாரத்திலும் அதன் அபார கலை வெளிப்பாட்டிலும்தான் அவரின் உயிர் தரித்திருந்தது. அவர் எதை சிருஷ்டிக்க நினைத்தாரோ அதை சிருஷ்டித்துப் பார்த்து, அதில் முழுமையாக வாழ்ந்தும் விட்டிருந்தார். அவர் தன் பணி முடிந்ததும் விடைபெற்றுக்கொண்டுவிட்டார்… அவ்வளவுதான். அவர் தன்னைக் கொன்றுகொள்ளவில்லை. [பக்: 114]

இந்நாவல் வாசிக்கையில் ‘மஞ்சள் வெயில்’ கதிரவனும், ‘அஸீஸ் பே’யும் ஆங்காங்கே நினைவுக்கு வந்தபடி இருக்கிறார்கள். கதிரவனும் ஓவியன். ஒரு பெண் தன்னை விசாரித்தாள் என்று அறிந்ததற்கே கனவுகளில் மிதக்கிறான். நடு இரவில் துணி துவைத்து, மறுநாள் அவளைச் சந்திக்கையில் தன்னை அழகாகக் காட்டிக்கொள்ளத் தவிக்கிறான். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ நாவலில் ராமனும் ஒரு போலிக் கடிதத்தை உண்மையென நம்பி பேருவகைகொள்கிறான். மிடுக்காக உடையணிந்து பூரிப்புடன் திரிகிறான். ராமனும் கதிரவனைப் போல ஒரு கூச்ச சுபாவி. கதிரவனிடமும் ஒரு நாய் இருப்பதாக ஞாபகம். அஸீஸ் பே ஓர் இசைக்கலைஞன். வாடிக்கையாளருக்காகத் தனது கலையை விட்டுத்தராமல் விடாப்பிடியாக முரண்டு பிடித்து ஸேகியால் அவமானத்திற்குள்ளாகிறான். ஸேகிக்கு அஸீஸ் பேயின் மீது பெரும் மதிப்பு இருந்தபோதும் அவன் அவ்வாறு நடந்துகொள்வதற்கு அச்சூழ்நிலை காரணமாக அமைகிறது. ராமனின் இறப்புக்கும் நாம் யாரைக் காரணம் சொல்ல முடியும்? தனது கனவுலகில் மரணம் நேரவும் தன்னையும் இப்பூமியிலிருந்து துண்டித்துக்கொள்ளத் துணிகிறான் ராமன். ராமனின் அத்தகையதொரு முடிவுக்கு சூழ்நிலை மட்டுமல்லாமல் அவனது இயல்பும் சுபாவமும்கூட காரணமாக இருக்கிறது. தற்கொலை செய்யாமல் இருந்திருந்தால் அஸீஸ் பேயின் அவலமான முடிவுதான் ராமனுக்கும் கிட்டியிருக்கும்!

(நன்றி: சாபக்காடு)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp