‘வினயா’ என்ற இந்த நூலின் துணைத் தலைப்பாக ‘ஒரு பெண் காவலரின் வாழ்க்கைக் கதை’ என்ற தலைப்புக் குறிப்பிடப்பெற்றுள்ளது. மலையாளத்தில் அண்மைக் காலத்தில் எழுதப்பெற்றுத் தமிழில் மொழிபெயர்க்கப் பெற்றுள்ள பல்வேறு தன்வரலாற்று/சுயசரிதை நூல்களுள் (ஆமென், நளினி ஜமீலா, நக்சலைட் அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்), “வினயா”, சமூகப் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவல்துறைப் பணியில் சேரும் பெண்களுக்கு அந்தக் காவல்துறை க்குள்ளேயே ‘பாதுகாப்பில்லை’ என்ற வியப்பை – மனஅதிர்வை வாசகனுக்குள் ஏற்படுத்துகிறது. சிஸ்டர் ஜெஸ்மி, நளினி, அஜிதா போன்றோர் அவர்கள் வாழ்ந்த ‘சமூக அமைப்பு’ (System), ‘நிறுவனம்’ (Institution), மற்றும் ‘அரசு’ (State) ஆகியவற்றைக் கேள்விக்கு உள்ளாக்கிய வர்கள் மற்றும் அவற்றை எதிர்த்துப் போரிட்டவர்கள். ஆனால் வினயா தான் பணி புரிந்த காவல்துறையை ‘அமைப்பு மற்றும் நிறுவனம்’ என்ற தன்மையில் கேள்விக்கு உட்படுத்தியவர் அல்ல. காவல்துறைக்குள் தான் ஒரு பெண் (பாலினம் - gender) என்ற சுயமரியாதைச் சிந்தனையோடும், தன் மீது சுமத்தப்பட்ட பாலின இழிவுகளை – அவமதிப்புகளை ஒப்புக்கொள்ளாமல் எதிர்த்தும் வாழ்ந்ததற்காக அவர் அனுபவித்த சுடு/இழி சொற்கள், அலைச்சல், அவமானம், தாய் என்ற நிலையிலான பரிதவிப்பு எந்த வாசக மனத்தையும் கலங்கச் செய்வதாகும். இந்த நூலைப் படித்த பிறகு, பொதுவாக, மருத்துவம், கல்வி, அலுவலகம், மாணவர் முதலான ஒவ்வொரு துறை சார்ந்தும் பாலின ஒடுக்கு முறை மற்றும் ஒருசார்புத் (biased) தன்மைகள் பற்றிய மிகுதியான நூல்கள் வெளிவர வேண்டும் என்ற உணர்வும் அவசியமும் ஏற்படுகின்றன.
சாதாரண மத்தியதரக் குடும்பத்தில் எல்லாப் பெண்க ளுக்கும் இருக்கும் இயல்பான ஆசைகளோடும் கனவுகளோடும் பிறந்து வளர்ந்தவர்தான் வினயா. சகோதரிகளோடு குறும்பு செய்தல், பள்ளிக்கூடக் கலகலப்பு, ஆற்றில் குளிப்பதில் மகிழ்ச்சி, அப்பாவால் இம்சைக்குள்ளான அம்மாவின் மீது தனிப்பட்ட அன்பு, வேறுபாடு காட்டாமல் எல்லோரோடும் கலந்து பழகும் இனிய இயல்பு எனச் சாதாரணப் பெண்ணாக – இளம் பெண்ணாகத்தான் வளர்ந்தார் வினயா. ஆனால் பிற பெண்களுக்கு ஏற்படாத அல்லது அவர்களால் காண முடியாத, வாழ்வையொட்டிய செய்திகள், நிகழ்வுகள் அவர் உள்ளத்தில் மட்டும் எரியும் வினாக்களை – பதில் தேடும் சுயமரியாதை உணர்ச்சியை ஏற்படுத்தின. முதல் கேள்வி, நொந்துபெற்ற அம்மாக்களுக்கு ‘அம்மா’ என்ற இடம் தாண்டி வாழ்வில் எந்த இடத்திலும் சமயத்திலும் சமமரியாதை இல்லையே, ஏன் என்பதுதான். ‘இனிசியல்’ (பெயருக்கு முன்னுள்ள முதலெழுத்து) என்பது எப்போதும் தந்தை வழிப் பட்டதாகத்தான் இருக்க வேண்டுமா; குடும்ப மரியாதைகள் கூட ‘கணவன் வீட்டார்’ என்ற நிலையில்தான் வழங்கப்பட வேண்டுமா என்பன வினயா என்ற இளம் பெண்ணின் மனசில் முதன்முதலாக ஓர் ‘எதிர்ப்புத்’ (rebel) தளத்தை உருவாக்கின.
பாலியல் அத்துமீறல்கள் – ஆணாதிக்கக் ‘கரங்களின் அசிங்கம் பிடித்த விரல்கள்’ அவருடைய தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளி வாழ்விலேயே அவரை இம்சித்தன. மனிதனின் பொருளியல் மேன்மைகளைப் பற்றிய அளவுகோலை உருவாக்கவே பெண்கள் அணியும் ஆபரணங்கள் உதவுகின்றன என்றும், ஆபரணங்கள் பெண்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கின்றன என்றும் உயர்நிலைப் பள்ளி வாழ்விலேயே உணர்கிறார் வினயா. தன் நூலின் பல பகுதிகளில் தன்னை இடர்ப்பாடுகளில் இருந்து காப்பாற்றிய, மீள உதவிய ஒவ்வோர் ஆணைப் பற்றியும், மறக்காமல், மிக்க நன்றியுணர்வுடன் நெகிழ்ந்து எழுதுகிறார். வினயா ஓர் ஆண் வெறுப்பாளி (male hater) அல்ல என்பதோடு ஆண்களோடு களங்கமற்றும் சமமரியாதையோடும் வாழ விரும்பியவர் என்பதையும் இந்த நூலில் பல இடங்களில் காண முடிகிறது.
தன் தங்கை கீதாவிற்குத் தனக்கு முன்பே திருமணமாகி விட்டதையும், அதனால் தன்னைப் பிறர் பரிகாசம் செய்ததையும், அதற்காகத் தன் பெற்றோரைக் குற்றப்படுத்தியதையும், தான் சோர்ந்து போனதையும் மனம் திறந்து எழுதும் வினயா, அதனால் அவர் தன் வாழ்வு முடிந்துவிட்டது என எண்ணாமல், தான் வாழும் பகுதியில் மகளிர் சங்கம் அமைத்துப் பாடுபட்டதில்தான் வித்தியாசப்படுகிறார். எந்தவொரு கட்டத்திலும் தான் ஒரு பெண் என்பதற்காக அவர் நிலைகுலையவில்லை. மகளிர் சங்கம் சார்பாக, யாரும் நடத்தாத வகையில், பொது இடத்தில் ஓணப் பண்டிகை விழாவை நடத்திக் காட்டுகிறார்; பெண்களின் கல்வி விழிப்புணர்வுக்கு ‘ஆண்கள் கலை நிகழ்ச்சி நடத்துவது’ என்ற தன்மையை மாற்றி, பெண்களைக்கொண்ட கலைக்குழுவை அமைத்து வயநாடு முழுக்கக் கலைப் பயணம் மேற்கொள்கிறார்.
செல்லரித்துப் போன ஆசாரங்களும் விதிகளும் தகர்க்கப்பட்டால் ஒழிய பெண்கள் முன்னரங்கிற்கு வர முடியாது, பொறுப்புகள் ஏற்க முடியாது, பொது நீரோட்டத்தில் தனக்கான வாய்ப்புகளைத் தேடிக் கொள்ள முடியாது என்ற கருத்தியலோடும், ஆளுமையோடும், சமூகம் பற்றிய நுண்ணுணர்வுகளோடும், அனுபவங்க ளோடும்தான் 1991 மார்ச்சு 13இல் தன் காவல்துறை வாழ்க்கையைத் தொடங்குகிறார்.
வினயாவின் பயிற்சிக் கால வாழ்க்கை, காவல்துறையின் ‘பால பாடத்தை’ அவருக்கு வழங்கியது. காவலராக இருந்தாலும் பெண்ணின் உடை சேலைதான் என்பதை எதிர்க்கிறார். காவல் துறையில் பணி மற்றும் பான்ட் சர்ட் அணியும் பெண்களுக்குத் திருமணமாகாது என்று சமூகத்தில் ஒரு சாராரிடையே நிலவும் கருத்தை மறுக்கிறார். காவல்துறைப் பணி ‘எக்ஸ்க்யூடிவ் தகுதி பெற்ற ஒரு பணி’ என்பதை மற்ற பெண்காவலர்கள் உணரவும் இல்லை, இடர்களில் தனக்கு உதவவும் இல்லை என வருந்துகிறார். ஆனால் ‘பான்ட் – சர்ட்’ சீருடையில் வெற்றி பெறுகிறார். ‘பெண்கள்தானே, தங்கும் விடுதியில் சமைத்துச் சாப்பிடக்கூடாதா’ என்ற கேள்வியை மறுத்து, வெளியே இருந்த ஆயுதப்படை முகாமில் மற்ற பெண்களையும் அழைத்துக்கொண்டு போய்ச் சாப்பிடுகிறார். தங்கும் விடுதியில் ஓய்வு நேரத்தில் பாடவும் ஆடவும் பெண்களைப் பழக்குகிறார்.
வினயாவின் காவல்துறைப் பயிற்சிக் காலத்தில் அவருடைய ஒவ்வோர் அசைவும் இசைவற்றதாகவே கருதப்பெற்றது. அவர் பெண்களின் போக்கைக் கண்டுதான் மிகவும் வருந்துகிறார். “எனது அருகாமை (அருகில்) அன்றும் சரி, இன்றும் சரி அவர்களால் அங்கீகரிக்க முடியாததாக இருந்தாலும் நான் அவர்களுக்குத் தைரியம் தருபவளாகவே இருந்திருக்கி றேன் என்று எனக்குப் பலமுறை தோன்றியதுண்டு எனப் பயிற்சிக் காலம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
வினயாவின் வாழ்க்கைப் போக்கின், சிந்தனை முறையின் சிறப்பே எதற்கும் கலங்காமைதான்; எந்த அநீதியையும் சுட்டியாவது காட்டுவதுதான்; பரிகாரம் தேடி உரிய மேலதிகாரிகளுக்குத் தொடர்ந்து விண்ணப்பிப்பதுதான்; எந்த விண்ணப்பம் எத்தனை முறை மறுக்கப்பட்டாலும், தொடர்ந்து அதற்காக மீண்டும் மேலதிகாரிகளோடு விவாதிப்பதுதான் அவருடைய நடைமுறை.
தொடர்ந்து பான்ட் – சர்ட் அணிவதில் பிரச்சினை; திருமணமாகாதே என்ற விமர்சனம்; போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பணியில் வெயிலில் நின்றால் கறுத்துப் போய்விடுவோமே என்ற மற்ற பெண்காவலர்களின் வருத்தம். இதற்கிடையேதான் வினயா வேலை செய்கிறார். காவல் நிலையப் பணி என்றால் பெண்களுக்கு வயர்லெஸ் பணியும் எழுத்தர் பணி யும்தான். வேறு எந்தப் பணியும் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
சக ஆண் காவலர்களைப் பெயரிட்டு அழைக்கக் கூடாது என உத்தரவிடப்படுகிறது. எவ்வளவு இளையவர்களாக இருந்தாலும் ஆண்காவலர்கள் பெண்காவலர்களைப் பெயரிட்டுதான் கூப்பிடுவர். இதைப் பற்றிப் புகார் செய்த வினயாவுக்கு வாய்மொழியாகக் கிட்டிய பதில்: “அதனால் என்ன? உங்களை எதற்குச் சார் போட்டுக் கூப்பிட வேண்டும்? நீங்கள் பெண் போலீஸ் அல்லவா!” பரஸ்பரம் ‘சார்’ என்றுதான் அழைக்கவேண்டும் என்பது ஏட்டில் உள்ள விதி.
வினயாவுக்கு, மோகன்தாஸ் என்னும் சகக் காவலரோடு திருமணம் நடக்கிறது. தாலி கட்டிக்கொள்ள மறுக்கிறார்; அதன் மகிமையைப் பற்றிப் பிறர் கூறியபோது ஒதுக்கித் தள்ளுகிறார். திருமண நாளன்று, இறுதியில் ஆண் வீட்டார் கொடுத்த சேலையைத்தான் பெண் – வினயா கட்ட வேண்டும் என்ற கெடுபிடி. மோகன்தாஸ் – தாஸேட்டன் குறுக்கிட்டு, “வினயாவுக்கு விருப்பமில்லே ன்னா அவ உடுக்க வேண்டாம். விடுங்க” என்கிறார். “இந்த வார்த்தைகளை நான் இன்றும் நன்றியுடன் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன். எங்களிடையிலான தாம்பத்ய பந்தம் திடமாகவும் பிரியத்துடனும் அமைந்திருப்பதற்குக் காரணமும் இந்தச் சொற்கள்தான்” என்று நெகிழ்ந்து எழுதுகிறார் வினயா. இதுதான் அப்பட்டமான உண்மையுமாகும். வீடு கட்டும் பணி, வீட்டுப் பணி, குடும்பப் பணி என்ற எந்தச் சூழலிலும் இருவரும் ‘ஒரே இதயமாக’ வாழ்ந்ததுதான் வினயாவின் அனைத்து வலிமையும் ஆகும்.
வினயா எந்தச் சமயத்திலும், தன் பணியில் தன்னைப் – பெண்ணை இழிவு செய்பவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் விட்டுக்கொடுக்காமல் கூரிய வினாவைத் தொடுப்பார். ஒருமுறை வயர்லெஸ் பணியில் இருந்தபோது டி.ஒய்.எஸ்.பி. கூப்பிட, பணியில் இருந்த நாலு பெண் காவலர்களும் அவர் முன்னேபோய் நின்றிருக்கிறார்கள். பெண்களின் சீருடையைப் பார்த்துவிட்டு மிகக் கேலியாக, “பெண்களுக்குச் சேலைதம்பா நல்லாருக்கும்” எனக் கூறியுள்ளார். உடனே வினயா, “சார், போலீஸூக்கு யூனிஃபார்ம்தானே நல்லாருக்கும்” எனக் கூற, அதிகாரியோ பரிகாசம் மேலிட, “ஓஹோ…? அப்படீன்னா நீங்க அவசரமா ஒன்னுக்குப் போவணும்னு வைங்க, என்ன பண்ணுவீங்க” என்று கூறிவிட்டுக் கேலியாகச் சிரித்திருக்கிறார். மற்ற மூன்று பெண்களும் குன்றிப் போய்விட்டிருக்கிறார்கள். வினயா எழுதுகிறார்: “நான் எல்லாத் தைரியங்களையும் திரட்டித் திருப்பிக் கேட்டேன். சாருக்குக் கக்கூசுக்குப் போவணும்னா என்ன செய்வீங்க?” இப்படிப் பதில் சொல்ல வினயா தயங்கியதும் இல்லை; அஞ்சியதும் இல்லை. இதன் பலனாக அவர் மீது ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்; ஆண்டுதோறும் உரிய சம்பள உயர்வு “கட்” செய்யப்படும். வினயா தொடர்ந்து ‘இன்கிரிமெண்ட்’ வாங்கியதாக வரலாறே இல்லை.
வினயா’வின் சுயமரியாதை, பெண் என்ற தன்னுணர்வு சார்ந்த பெருமிதம், தகுதியும் ஒழுக்கமும் அற்ற எந்த ஆணையும் மதிக்க மறுத்தல் என்ற அனைத்துப் பண்புகளுமே அவருக்கு எதிராகவே இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. ஆண் காவலர்களைப் போலப் பெண் காவலர்கள் சட்டையை ‘இன்சைடு’ செய்யக்கூடாது; செய்ததற்காக வினயாவுக்கு 3 வருட ஊதிய உயர்வு ரத்து. இதைவிடக் கொடுமையானது அவரை எப்போது எந்தக் காவல் நிலையத்திற்கு மாற்றுவார்கள் என்ற நிச்சயமற்ற தன்மைதான். காலையில் மானந்தவாடியில் இருந்து பத்தேரிக்கு மாற்றம்; அன்று இரவே மீண்டும் மானந்தவாடிக்கு மாற்றம்.
போராட்டத்தில் பங்குகொண்ட சிறுவர்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் ஏற்பட்ட அலைச்சலில் அவர்களைப் பட்டினி போட்டதாகப் பத்திரிகையில் பழியும் அவதூறும். வினயாவுக்குக் கிடைத்தது, பத்திரிகைச் செய்தியை வைத்துப் பணி நீக்கம்; நாலாவது நாள் கருச்சிதைவு.
வாழ்வின் ஒவ்வொரு நொடியும் அலைச்சல்; மனு; மேல்முறையீட்டு மனு; ‘மாற்றல் என்ற தொங்கும் ஆயுதம்’; சம்பள உயர்வு வெட்டு; பரிவோடு பேசிய மேலதிகாரியே பழிவாங்குதல். வினயாவின் ஒரே, ஒப்பற்ற, திடமான வலிமை அவருடைய அன்புக் கணவர்தான். வினயா’வின் போராட்டத்தால் பயன்பெற்ற பெண்காவலர்கள் கூட, உதவிக்கு வராமைதான் வேதனை. இந்தத் தொடர் வேதனைகள் 2003 ஜூன் 13ஆம் தேதி ‘நிரந்தரமான பணி நீக்க உத்தரவு’ மூலம் முடிவுக்கு வருகின்றன. இதைப் ‘பணி நீக்கமெனும் மரண தண்டனை’ என்கிறார் வினயா. இந்த இழப்பின் ஆழம் போலத் தாஸேட்டனும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற செய்தி வருகிறது.
டி.ஜி.பி.மேல் வினயா போட்டிருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவரிடமே மன்னிப்புக் கேட்க வேண்டும்; இல்லையென்றால் தாஸேட்டனின் பணி நீக்கம் உறுதி. வினயா மன்னிப்புக் கேட்கக் கூடாது எனக் கூறும் தாஸேட்டன், தான் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறுகிறார். வினயா அன்பின் பேருருவம். “தாஸேட்டா… நீங்க சொல்றது போல நான் எது வேண்டுமானாலும் செய்கிறேன்… எனக்கு என் தாஸேட்டனைவிட பிரியமான எதுவுமே இந்தப் பூமியில் இல்லை. குழந்தைகளும் கூட… விழுமியங்களோ கருதுகோள்களோ எதுவுமே, தான் அன்பு செலுத்தும் தனி நபரை விட பெரிதல்ல…”.
வினயா அரசைப் புரட்டிப் போடப் புரட்சிச் செய்தவரல்ல; வேலை செய்த இடத்தில் ஒட்டுமொத்தமான பெண்களின் சுயமரியாதைக்காகப் பாடுபட்டவர். மேற்கண்ட யாவும், அதற்காக அவர் அனுபவித்த தண்டனைகள்தான். தனது முப்பது வயதுக்குள் அவர் ஒரு பிறவி முழுமைக்குமாக இழப்புகளை, இகழ்ச்சியை, பரிகாசத்தை, கேலிப் பேச்சை, இட மாற்றல்களை, சம்பள உயர்வு வெட்டை, அலைச்சலை, குடும்ப வாழ்வு இழப்பை அனுபவித்தவர். அவருடைய ஒரே வலிமை கணவர் தாஸேட்டனும் அவர்களுக்கிடையே இருந்த அன்பும்தான். வினயா தன்மானம் மிக்கவர்; தீமையைக் கண்டு கொதித்தெழுந்தவர்; பாசம் மிக்கக் குடும்பத் தலைவி; சமூக சேவகி; நல்ல ஆண்களின் மிகச் சிறந்த நண்பர்; எல்லாவற்றிற்கும் மேலாகக் கணவனிடம் கொண்ட காதலின் முழுமை.