நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் ஒவ்வொன்றிற்கும், ஒரு முன்னோடி அமைந்திருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். தமிழ் இலக்கியத்தில் மேலை நாடுகளைப் போலவே, இலக்கியத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து விமர்சனப் பார்வையோடு வைத்து, வாசகர்களின் வாசிப்புத் தரத்தை உயர்த்திய பெரியோர்களும் தோன்றினார்கள். அவர்களில் முக்கியமானவர் சி.சு.செல்லப்பா.
அக்காலத்திய எல்லா எழுத்தாளர்களையும் போலவே உயர் கல்வி கற்று காந்தியவாதியாக விடுதலைப்போரில் குதித்தவர்தான் இவரும். சுதந்திரச் சங்கு, மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதி வந்த செல்லப்பா தமிழில் மேற்கத்திய பாணி விமர்சனக் கலையை வளர்க்கும் நோக்கத்தோடு எழுத்து என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து புதுத்தடம் போட்டுக் கொண்டு, இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் என்று க.நா.சு ஒரு முறை குறிப்பிட்டார். அது முற்றிலும் சி.சு.செல்லப்பாவிற்கே பொருந்தும். பத்திரிகை 2000 பிரதிகளுக்கு மேல் அச்சடிக்கப் படாது. சந்தாதாரர்களுக்கு மட்டும்தான். கடைகளில் தொங்கவிடப் படாது என்ற அறிவிப்போடு வந்த எழுத்து தமிழின் மிகப் பெரிய ஆளுமைகளுக்கு இடம் கொடுத்தது.
எதிலும் புதுமை செய்பவரான செல்லப்பா ஜல்லிக் கட்டை வைத்து எழுதிய வாடிவாசல் நாவல் இன்றளவும் போற்றப்படுகிறது. புகைப்படம் எடுப்பதில் மிகவும் ஆர்வமுள்ள அவர் பல ஜல்லிக்கட்டுகளை நேரில் சென்று ஆராய்ந்து, புகைப்படங்கள் எடுத்து, களஆய்வோடு எழுதினார். பிராமணத் தமிழிலேயே படைப்புகள் எழுதப்பட்ட ஒரு காலத்தில் முழுக்க முழுக்க வட்டாரவழக்கிலேயே எழுதப்பட்டது என்ற பெருமையும் வாடிவாசலுக்கு உண்டு. வாடிவாசலிலிருந்து ஒரு சிறுபகுதியை இங்கு தருகிறேன். மாட்டிற்கும், மாடுபிடி வீரனுக்கும் நடக்கும் போராட்டமும், மாடு பிடிபடுவதும் நம் கண்முன் காட்சியாக விரியும்.
ஜல்லிக்கட்டு ஆரம்பமாவதற்கு வெகு முன்னாடியே வாடிவாசலைச் சுற்றிக் கூட்டம் எகிறி நின்றது. இன்னும் மேலே மேலே வந்த வண்ணம்தான். வாசலை விட்டு வெளியேறும் காளையின் செறுமலுக்குக்கூட பயந்து ஒரு பயந்தாங்குள்ளி ஒரு எட்டுக்கூட பின்னரிக்க முடியாதபடி நெருக்கியடித்து நின்ற அந்தக் கூட்டத்தில், அநுபவமும் திறமையும் பெற்ற மாடு பிடிப்பவர்கள் டஜன் கணக்கில்தான் இருக்கும். மீதிப் பெரும்கூட்டம் கத்துக் குட்டி மாடு பிடிப்பவர்களும், ஆபத்தானது என்று தெரிந்தும் மாடு அணைவதைக் கிட்ட நின்று வேடிக்கை பார்க்கும் ஆர்வம் நிறைந்த கூட்டமும் கலந்து கட்டியாக உள்ளது.
மிருகத்தை ரோசப்படுத்தி அதன் எல்லையைக் கண்டுவிட்டு, பிறகு அதை மனிதன் அடக்கி வசப்படுத்தி வெற்றி காட்டத் துணிவதை ஒரு கலையாக சாதகம் செய்திருக்கிறார்கள் அவர்கள் அத்தனை பேர்களும். ஒன்று, காளையின் திமிலில் கைபோட்டு அணைந்து, கொம்பு இரண்டையும் கையால் பிடித்து அழுத்தி அது எகிறிவிடாமல் சில விநாடி நாலு கால்களில் அசையாமல் நிற்கச் செய்துவிட வேண்டும். ஏன், கால்கள் துவளத் தடுமாறி முட்டியிலே மடித்து அது கீழே சரியச் செய்துவிட வேண்டும். இல்லை, அவன் திறமைக் குறைவால் காளையிடம் அவன் வேலை பலிக்காமல் போய்க் கோட்டை விட்டுவிட்டு, தன் இயலாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏன், காலில்லாதவன் மாதிரி முகத்தைக் காட்டிக்கொண்டு, காளைகிட்ட நெருங்காமல் இருந்துவிட வேண்டும் பயந்து. சாய்கிற சூரியன் விழுகிற பொழுதில் அந்தக் கோதாவுக்குள், ஒத்தைக்கு ஒத்தையாக இறங்கும் மனுஷனுக்கும் மாட்டுக்கும் நடக்கிற பலப்போட்டியில் இந்த இரண்டிலொரு முடிவு காணும் – அந்த வாடிவாசலில்.
இந்த இரண்டிலொரு முடிவைக் காணத்தான் பிச்சியும் அன்று திட்டிவாசலை அடுத்த அடைப்பின் வலது பக்கத்து விளும்போரம் பதித்திருந்த கனத்த, பருத்த இடுப்புயர அணை மரத்தின் மீது நெஞ்சைப் பதித்துச் சாய்ந்துகொண்டு, உள்ளே இருக்கும் பனியன் வெளித்தெரியும்படியான அல்வாந்துணி குடுத்துணியும் முண்டாசுமாக நின்றுகொண்டிருந்தான். அவனை ஒட்டினாற்போல நின்றுகொண்டிருந்தான், அதேமாதிரி உடுத்து மருதன் – பிச்சியின் சகபாடி; அவன் மச்சானும்கூட. மாப்பிள்ளையும் மச்சினனும் பிரிந்து ஒரு ஜல்லிக்கட்டுக்குப் போனது கிடையாது.
குடுத்துணியையும் கழற்றி வேஷ்டியையும் அவிழ்த்து, “பாட்டயா! வச்சுக்கிடுங்க,” என்றான். மருதனும்கூட. உடம்போடு ஒட்டிய பனியனும் லங்கோடுமாக நின்றார்கள். எல்லாக் கண்களும் திட்டிவாசலை நோக்கிப் பாய்ந்தன.
பில்லைக் காளையைக் கொணர்ந்தவன் உள்வாடியில் மாட்டை அவிழ்த்துவிட்டு பிடிகயிறும் கையுமாக அடைப்புக்குள்ளிருந்து வெளியே வேகமாக வந்து நடைபாதையை நோக்கிப் போனான். கொம்புகளுக்கு நடுவே அடிப்பாகத்தில் குறுக்கும் நெடுக்குமாகப் பின்னிக் கட்டியிருந்த ஜரிகை சல்லா பளபளக்க, இரண்டு கூர்மையான கொம்புகளை முன் நீட்டிக்கொண்டு வாடிவாசலில் தலை நீட்டியது பில்லை.
“முருகு! நீ பிடிச்சுக்கிரப்பா,” என்று கத்தினான் கிழவன்.
“என்ன மாமா, என்னை கொம்பு சீவி விடறே, கிளக்கேயிருந்து பெரிய கைக வந்திருக்கிறபோது?” சொல்லிவிட்டு இடக்காக பிச்சி பக்கம் பார்த்தான். பிச்சி அவனைப் பார்க்காமல் பேச்சைக் காதில் வாங்கிக்கொண்டே மருதனை அர்த்தத்துடன் பார்த்தான். அடுத்த விநாடி மருதன் பாய்ந்து அணைமரத்தில் ஒரு கை வைத்து மற்றொரு கையால் உள்ளே இருந்து நுனி தெரியும் கொம்புக்கு துளாவினான். “உன்னாலெ முடியாட்டி விட்டிரு, முருகு அண்ணே!”
பில்லைக்காளை கொம்பை மேலே தூக்காமல் கீழ் நோக்கியே முகத்தைத் தணித்து நின்றது. அதன் கொம்பைப் பிடிக்கப் படபடக்கும் கைகளை கொம்பில் நிலைக்கவிடாமல் பக்கங்களில் உலுப்பிக்கொண்டே இருந்தது. அடைப்புப் பலகைகளில் கொம்புகள் அடித்தன. திட்டிவாசலுக்கு உள்ளேயிருந்து ஒரே பிடுங்காக மருண்டு பாய்ந்து போகிற ஜாதியல்ல அது. எந்தப் பக்கம் இருந்தெல்லாம் கைகள் கொம்பைத் தேடுகின்றன என்பதை உஷாராகப் பார்த்து ஆராய்ந்து கொண்டிருந்தது. தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம் திமில்மீது விழும் கைப்பிடியிலிருந்து என்று ஆராய்ந்து வருவதுபோல் அங்குலம் அங்குலமாகக் கால்களை முன் நகர்த்தியது.
கொம்பு கொஞ்சம் நீண்டு வெளித் தெரியவும், முருகு கப்பென்று பிடித்து அதை நிலைக்கச் செய்யப் பார்த்தான். ஆனால் காளை ஒரு அலைப்பு அலைத்து முருகு கையை உதறிவிட்டுவிட்டது. அவன் கொஞ்சம் சுதாரித்து கையை எடுத்திருந்திருக்காவிடில் அணைமரத்தில் அடிபட்டு அவன் விரல் எலும்புகள் நொறுங்கியிருக்கும்.
இன்னொரு கொம்புப் பிடிக்கு இடம் கொடுக்காமல் இடைவிடாமல் கொம்பை வெட்டி அலைத்துக்கொண்டே காளை இம்மியளவாக முன்நோக்கி காலை நகர்த்திக்கொண்டிருந்தது. காளை சமாளித்து கொம்புகளைத் தேடும் கையை விரட்டி அடிப்பதும், முருகு கை கொம்புக்காக அந்தரத்தில் தடுமாறுவதும் வேடிக்கையாக இருந்தது. கூட்டம் ஆர்ப்பரித்து அநுபவித்தது.
“அட! அதை துண்டா வெட்டித்தான் பாரேன். கொம்பை பிடிக்க விடும்னா நினைக்கிறே?” என்று கிழவன் பிச்சி காதில் விழச் சொன்னான். “கொம்புப்பிடி கொடுத்திச்சுன்னா அப்புறம் என்ன அதுக்கு? பின்னாடி போய் ஒரு பொட்டைக் குட்டி வாலைப் புடிச்சு இளுக்கலாமே, களுதை என்ன செய்யப் போகுது பாரு!”
பில்லைக் காளையின் கழுத்துவரை வெளியே நீண்டு விட்டது. முருகுவின் கை இன்னும் கொம்பைப் பிடித்த பாடில்லை. அவன் முக நரம்புகளின் விடவிடப்பு அவன் அவஸ்தையைக் காட்டியது.
“என்ன அண்ணே, காளையையா புடிக்கிறே?” என்று மருதன் கேட்டான். “இல்லாட்டி பசலைக்கன்னுக்கு முட்டுப் பளக்கிறியா?” சுற்றி எங்கும் சிரிப்பு எழுந்தது.
முருகுக்கு ரோஸம் பொத்துக்கொண்டு வந்தது. காளையோ, அவன் கையை உதறி விட்டுக்கொண்டே தன் திமிலையும் வெளியே நீட்டிவிட்டது. இதற்குமேல் அதன் கொம்பைப் பிடிப்பது எவ்வளவு சிரமம், அடுத்த வினாடி அது என்ன செய்யும் என்பதையும் அறிந்திருந்த முருகு, “இந்தா, நீதான் புடிச்சுப்பாரேன்,” என்று கையை இழுத்துக்கொண்டு பின் சாய்ந்தான். முழுத் திமிலும் வெளித்தெரியவும் ஒரே தவ்வில் வாடிவாசலின் மத்தியில் போய் நின்று, இன்னொரு தவ்வில் வாடிவாசல் வட்டத்தின் விளும்புக்குப் போய் பாதைவழியே நெட்டுக்கு சிட்டாப் பறந்துவிடும் என்றும், இனி கொம்பிலேயோ திமிலிலேயோ கை போட முடியாதென்றும் நிச்சயம் அவனுக்கு. ஆனால் அவன் கையை பின்னரித்த அதே க்ஷணம் கழுகு பாய்ந்து அடிக்கிற மாதிரி இரண்டு கைகள் விரித்துச் சீறி மாட்டின் கொம்பின்மீது விழுந்தன. சபக் என்ற சப்தம் தான் கேட்டது. வீசிப் பின்தள்ளப்பட்ட மருதன், மாட்டின் கழுத்தோடு ஒட்டி பிச்சி இரு கொம்புகளையும் சேர்த்துப் பிடித்து மாட்டின் முகத்தை கீழ்நோக்கி அமுக்குவதைப் பார்த்தான். காளை கைகளை உலுப்ப முழு வலுவுடன் அலைத்துப் பார்த்தது. ஆனால் கீழ்நோக்கி அமுக்கும் அந்தப் பிடி வலுவில் கொம்பலைப்பு வேகம் தளர்ந்தது. சில வினாடிகளுக்குத் திணறியது.
“முருகு அண்ணே, எங்கிட்டு இருக்கே? இந்தா, கொம்புலே இருக்கிறதையெல்லாம் அவுத்துக்க,” என்று எதிர்ப்பக்கம் நின்ற முருகுவைப் பார்த்துக் கத்தினான் பிச்சி. முருகு அசையவில்லை. முகம் கீழே பார்த்தது. “என்ன, பேசாமே நிக்கிறே, வாணாமா? சரி, போ.” ஒரு தம் கொடுத்து காளையின் கொம்புகளை எதிர்த் திசைப்பக்கம் நெக்கு நெக்கித் தள்ளிவிட்டு பின் பாய்ந்தான் பிச்சி. விடுபட்ட பில்லை சுபாவப்படி இரண்டு தவ்வில் ஓடி விட்டது.
கூட்டம் மலைத்துப்போய் நின்றது ஒரு விநாடிக்கு, ஆர்ப்பாட்டம் செய்வதை மறந்து.
நாவலைப் போலவே செல்லப்பா எடுத்த ஜல்லிக்கட்டு புகைப்படங்களும் புகழ்பெற்றவை. 20 ஆண்டுகால உழைப்பில் மூன்று முறை திருத்தி எழுதி சுமார் 2000 பக்கங்களுக்கு சுதந்திரதாகம் என்று சுதந்திரப் போர் பற்றிய நாவலை தனது 86 வயதில் எழுதி வெளியிட்டவர். வாழ்நாளெல்லாம் புத்தகங்களை மூட்டையாகக் கட்டி தலைச்சுமையாக விற்ற அந்தப் பெரியவரை தமிழ்ச் சமூகம் எப்போதும் போல் மறந்துவிட்டது.
(நன்றி: ச. சுப்பாராவ்)