தொ.ப பற்றி:
பிறப்பு:1950. தமிழகப் பண்பாட்டு ஆய்வாளர்களுள் முதன்மையானவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மற்றும் திருநெல்வேலி மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். நாட்டார் மக்களின் வாய்மொழி வழக்காறுகள், சடங்குகள், உரையாடல்களிலிருந்து ஆய்வை முன்னெடுத்தவர். சிறு தெய்வ வழிபாடுகள் குறித்த இவரது ஆய்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தது.
எச்சங்களாகவும் மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை தொடர்ச்சியாக எடுத்துரைத்து வருபவர். திராவிடக் கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர், ஐயா தொ.ப.
தொ.பரமசிவத்திடமிருந்து தெறிக்கும் கருத்துக்களும், சான்று, மேற்கோள்களும், வாழ்ந்து பெற்ற பட்டறிவும் மலைப்பை ஏற்படுத்தக்கூடியவை. நாம் நன்கு அறிந்தது என்று நினைக்கும் விஷயத்தில் புதிய ஒளி பாய்ச்சுவதும், பழகிப் பழகி பொருளிழந்துவிட்டது என்று நாம் உணர்வற்று நோக்கும் ஒரு சொல்/ தொடர்/ பழமொழியிலிருந்து ஒரு சமூகப் புரிதலை சற்றும் எதிர்பாராத சமயத்தில் வழங்குவதும் தொ.பவின் கருத்துப் புலப்பாட்டு முறை. வானிலும் மண்ணிலுமாக மாய ஜாலங்களைக் காட்டும் இந்திரசித்தின் போர்முறையுடன் ஒப்பிடத்தகுந்தது இது என்கிறார் வரலாற்றாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி.
புத்தகம்: விடுபூக்கள்
விடு பூக்கள் என்பது நெல்லை வட்டாரத்தில் மாலை கட்டியபின் எஞ்சிய பூக்கள் ஆகும். அதைப்போல இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் ஒரு பொருள் பற்றியனவோ, ஒரே காலப்பகுதி பற்றியனவோ அல்ல என முன்னுரையிலேயே தொ.ப குறிப்பிடுகிறார்.
இந்நூலில் வெவ்வேறு அரிய தகவல்களைக் கொண்ட பத்தொன்பது கட்டுரைகள் உள்ளன.முதல் கட்டுரையான நீராட்டும் ஆறாட்டும் என்ற கட்டுரையில் குளித்தல் என்பதற்கு புதிய பொருள் தெரிந்து கொண்டேன். “குளித்தல்” என்ற சொல்லையே நீராடுவதைக் குறிக்க இன்று தமிழர்கள் பயன்படுத்திவருகின்றனர். இது பொருட்பிழையான சொல்லாகும். குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினைத் தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள்; சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக் ‘குளிர வைத்தல்’ என்பதே அதன் பொருளாகும். குளிர்தல் என்பதையே நாம் குளித்தல் என்று தவறாகப் பயன்படுத்துவதை உணர்த்துகிறார்.
உணவும் குறியீடும் என்ற கட்டுரையில், கீரை பற்றிய அருமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. “ வறுமைப்பட்ட மக்களே கீரையினை உணவாகக் கொண்டனர் என்பதனைச் சங்க இலக்கியம் இரண்டு இடங்களில் குறிப்பிடுகின்றது. எனவேதான், இன்றளவும் கோயில்களில் கீரை தெய்வங்களுக்கு உணவாகப் படைக்கப்படுவதில்லை. ஏனென்றால் தெய்வங்கள் ஏழ்மையானவை அல்ல; எல்லாச் செல்வங்களையும் மக்களுக்கு அருளுவனவாகும்”.
மாலை என்னும் கட்டுரை தமிழர்களின் வெவ்வேறு சடங்குகளில் பூக்களும், மாலையும் எவ்வாறு பிரிக்க முடியாததாக இருக்கிறது என்பதை அழகாக விளக்குகிறது. பிணையல், கண்ணி,சரம்,தொடையல், தொங்கல் என பூமாலைகளின் விதங்களை இக்கட்டுரை அழகுற விளக்குகிறது.
“ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி மூங்கில் போல் முசியாது’ என்று வாழ்த்து மரபு கண்ட மக்கள் கூட்டத்தார் பண்பாடு என்ற தொன்மையான அசைவுகளின் தொடர்ச்சியைக் கண்டவர்கள் என பண்பாடு பற்றிக் கூறும் தொன்மையா? தொடர்ச்சியா? கட்டுரை முக்கியமானது.
விதவை, கைம்பெண், கைம்பெண்டாட்டி(கம்மனாட்டி), அறுத(ர)லி, முண்டை, வெள்ளைச் சேலைக்காரி என்பன தமிழில் கைம்பெண்ணைக் குறிக்க வழங்கும் இழிவான சொற்கள். இந்த கைம்பெண்ணின் சொத்துரிமை பற்றிக் கூறும் “ கைம்பெண்ணும் சொத்துரிமையும்” என்ற கட்டுரை பல தகவல்களை உள்ளடக்கியது. இதில் ஒப்பாரி என்பது , தமிழ்ச் சமூகத்தின் குடும்ப அமைப்புக்குள் பெண்கள் பட்ட துயரங்களை அவர்களின் கவித்துவ ஆற்றலோடு ஒரு சேரப் புலப்படுத்தும் இலக்கிய வடிவம் ஆகும் என ஒப்பாரிக்கான வரையறை சிறப்பு.
திருவிழா என்பது சமூக அசைவுகளில் ஒன்று ஆகும். திருவிழாக்கள் இல்லாமல் ஒரு சமூகம் இயங்க இயலாது. சுடு வெயிலில் நடப்பவன் மரத்து நிழலில் தங்கி, அடுத்து நடப்பதற்கான உடல், மன வலிமையினைச் சேர்த்துக் கொள்வது போலத் திருவிழா என்பது ஒரு சமூக இளைப்பாறுதல் நிகழ்வு ஆகும். ஆடுதல், பாடுதல், கூடிக்களித்தல், கூடி உண்ணுதல் ஆகிய அசைவுகளும் தொடர்ந்து வரும் அவற்றின் நினைவுகளும் ஒரு சமூகத்தைச் சோர்வின்றி இயங்கச் செய்கின்றன இதுவே திருவிழாவின் பொருள் என்று சொல்லலாம் என்று கூறும் சமூக வரலாற்றுப் பார்வையில் திருவிழாக்கள் என்னும் கட்டுரை பல தகவல்களை உள்ளடக்கியது.
தானியம் என பொருள்தரும் கூலம் என்னும் வார்த்தையிலிருந்து உருவான கூலி எவ்வாறு ஆங்கிலத்துக்குச் செனறது என்பது பற்றியும், கூலி என்பதன் மாற்றுச் சொல்லான சம்பளம் என்பது சம்பா நெல்லும், அளத்து உப்பும் உழைப்புக்குப் பதிலாகப் பெற்றதைக் குறிக்கும் சொல் போன்ற தகவல் உள்ளடக்கிய கூலமும் கூலியும் கட்டுரை அருமையானது.
சிதம்பரம் கோயிலைப் பாடுகின்ற சேக்கிழார் தஞ்சைப் பெருவுடையார் கோயிலை ஏன் பாடவில்லை? இராசராசனை இன்னும் கொண்டாடுவதேன்? இது போன்ற நுட்பமான கேள்விகளுக்கு, இந்நூலின் இரண்டு கட்டுரைகள் ஆதாரத்துடன் விளக்கம் தருகின்றன.
இன்னும் இன்னும்…
இவ்வாறு 19 கட்டுரைகளில் பல அறிய தகவல்களை உள்ளடக்கியதாக 80 பக்கங்களிலான இந்நூல் உள்ளது.
இந்நூலைப் படித்தவுடன் எனக்கே ஒரு சிந்தனை. சம்மணமிட்டு அமர்தல் என்பது சமணர்கள் அமர்ந்து தவம் செய்யும் நிலைதானோ?
இதிலிருந்துதான் சம்மணமிடுதல் என்பது வந்திருக்குமோ? இதுவும் சமயங்களின் எச்சம்தானோ? இதைப்பற்றி என் நண்பர் பிரபாகரனிடன் கேட்டேன். அவருக்கும் இந்த சிந்தனை வந்தது என்றார். தொ.ப என்னுள் நன்றாகவே வேலை செய்கிறார். வாழ்க வளமுடன் தொ.ப.!