வெண்ணிற இரவுகளும் எஞ்சும் இருளும்: ஒரு பயணக் கட்டுரை

வெண்ணிற இரவுகளும் எஞ்சும் இருளும்: ஒரு பயணக் கட்டுரை

மூன்றரை மணிக்கு எழ வேண்டும் என்ற கவலையில் மூணு மணிக்கே விழிப்பு தட்டிவிட்டது. உலகின் பயங்கரமான மனிதர்களையும் பெருந்துயர் மிக்க மனிதர்களையும் என் கற்பனையில் நான் சந்திக்கும் தருணங்கள் இந்த அதிகாலைகள். ஒருவேளை இந்த தருணங்களை சுருக்கிக் கொண்டால் அந்த நாள் நலமுடன் நகருமென்பது ஒரு எண்ணம் மட்டுமே. இன்றும் மூன்று முதல் மூன்று நாற்பது வரை புரண்டு கொண்டே கிடந்தேன். வாட்ஸ்அப்பில் யாரிடம் இருந்தெல்லாம் செய்தி வந்திருக்கும் முகநூலில் யாரெல்லாம் ப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுத்திருப்பார்கள் மாமலர் தவிர்த்து ஜெ வெப்சைட்டில் என்னவெல்லாம் இடம்பெற்றிருக்கும் என இனிதாகத் தொடங்கி எதிர்காலத்தில் என்னவாகப் போகிறேன் தேய்ந்திருக்கிறோமா கூராகி இருக்கிறோமா எப்போது சாவோம் இப்போது ஏன் இருந்து தொலைய வேண்டும் என்பது வரை போதையான எண்ணங்கள் நீளும்.

"மணி மூணே முக்காலாச்சு எளுந்திரி" என அம்மா எழுப்பிய போது உண்மையில் மணி மூன்று நாற்பது தான். இதே அம்மா நான் அலுவலகம் கிளம்பும் போது ஏழே முக்காலை இரக்கமே இல்லாமல் "ஏள்ற தான ஆவுது. ஏன் பறக்கிற" என்று சொல்லும். வீடு கட்டி வரும் பிப்ரவரி அல்லது பெப்ருவரி இருபத்திரண்டாம் தேதியோடு இரண்டாண்டு ஆகப் போகிறது. ஜிம்மிதான் எங்கள் வீட்டின் சின்ன பையன் என்ற எண்ணத்தை இரண்டாண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடு மாற்றிவிட்டது. பெரிய சைஸ் குழந்தை போல அந்த வீடு தான் இப்போது எங்களுக்கு சின்ன பிள்ளை. மூத்தவன் ஜிம்மிக்கும் வீட்டுக்கும் ஆகாது போல. மார்போனைட் பதித்த தரையும் அதை லைசால் போட்டுக் கழுவுவதும் அதிலேயே படுத்திருக்கும் ஜிம்மிக்கு ஒத்துக் கொள்ளாமல் அடிக்கடி புண் வந்து விடும். வீடு கட்டுவதற்கு முந்தைய ஒரு வேண்டுதல் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதனால் என்ன ஆனாலும் எல்லோருமாக புறப்பட்டு விட வேண்டும் என்று வழக்கம் போல் அம்மா முடிவெடுத்துவிட்டார். நேற்று மாலை அரசியல் சூழ்நிலை ஏற்படுத்திய பரபரப்பால் மீண்டும் பயணத்தை தள்ளிப் போட்டு விட வாய்ப்பிருந்தது. மாலை திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் வர ஒரு சில பேருந்துகளே நேற்று இயங்கின. ஆனால் இரவு நிலைமை சீராகிவிட்டது.

எல்லோரும் குளித்து முடித்து நாலரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினோம். ஜூலியின் நுண்ணுணர்வு வியப்பேற்படுத்தக் கூடியது. எல்லோரும் எழுந்ததுமே இன்று வீட்டில் தன் மகனுடன் தனியே தான் இருக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டு வீட்டை விட்டு தள்ளிப் போய் படுத்துக் கொண்டது. அதன் மகன் ஜிம்மியும் அறிந்திருப்பான்.சிறிய நூல் என்பதால் கிருஷ்ணையா மொழிபெயர்ப்பில் டிஸ்கவரி பேலஸ் வெளியிட்டிருக்கும் தாஸ்தோவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை எடுத்துக் கொண்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு நட்சத்திரங்களைப் பார்த்தேன். இரவுகளை விட புலர்கையிலேயே நட்சத்திரங்கள் அழகாக உள்ளன. வெண்ணவாசல் பாலத்தின் குறுக்கே காவல் துறை பொலேரோ நின்றது. பேட்ரல் வண்டி அல்ல. ஒருவேளை நேற்றைய அரசியல் பதற்றத்தால் அந்த வண்டி அங்கு நின்றிருக்கலாம். கொரடாச்சேரி திருவாரூர் மாவட்டத்தில் சற்றே பதற்றமான ஊர் தான். பேருந்து நிறுத்தத்தில் செய்தித்தாள்களை பிரித்துக் கொண்டிருந்தனர். என் எல்லா விடியல் பயணங்களிலுமே இந்தச் செயலை பார்ப்பதாலோ என்னவோ மனம் அதை மிக விரும்பியது.

போடி செல்லும் பேருந்தில் ஏறினோம். "இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது" பாடல் ஒலிக்கத் தொடங்கியது பேருந்தில். வெண்ணிற இரவுகளுக்கு எஸ்.ராமகிருஷ்ணன் முன்னுரை எழுதி இருந்தார். தாஸ்தோவ்ஸ்கி குறித்து எனக்குள் இருந்த சித்திரமே முன்னுரையாக இருந்தது. தாஸ்தோஸ்கியின் குற்றமும் தண்டனையும் ஆங்கிலப் பிரதியை வாசித்திருக்கிறேன். ஆனால் அதை நல்ல வாசிப்பு என சொல்ல முடியாது. ஆழ்ந்து படிக்க வேண்டிய நூலை ஏனோதானோ என்று வாசித்து விட்டதாக எனக்கொரு குற்றவுணர்வுண்டு. ஆகவே வெண்ணிற இரவுகளே நான் வாசிக்கும் தாஸ்தோவ்ஸ்கியின் முதல் நூல் என்று சொல்வதில் தவறேதுமில்லை. ராஸ்கால்நிகாபின் மற்றொரு வடிவமே வெண்ணிற இரவுகளின் நாயகனும். பீட்டர்ஸுபர்கின் இருளான ஒரு தெருவில் வாழ்பவன். வீடுகளுடன் நட்பாகப் பழகக்கூடியவன் என்ற சித்திரம் ஒரு விவரிக்க இயலாத உவகையை உள்ளே நிறைத்தது. பொதுவாக ஒரு பெரு நகரின் மாளிகை என்பதும் பகட்டுக்கும் செறுக்குக்குமான அடையாளம். அதே நேரம் அது ஒரு கலை வடிவமும் கூட. பகட்டு ஆணவம் செறுக்கு என அனைத்துமே மனிதர்களுடையது. அனைத்திற்கும் மேல் அந்த வீடு தனியே நிற்கிறது. அதன் தனிமையை கதை சொல்லி நிரப்புகிறான். சிகப்பில் இருந்து மஞ்சள் வண்ணம் மாற்றப்பட்டதால் வீட்டிற்கு எழும் வருத்தத்தை கதை சொல்லியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஒட்டு மொத்தமாக அந்நகரை நேசிக்கும் அவனால் குறிப்பிட்ட ஒரு மனிதனை நேசிக்க முடியவில்லை. கோடைக்காலத்தில் பீட்டர்ஸ்பர்க் தனித்து விடப்படுவதை நினைத்து வருந்துகிறான். எனக்கு தீபாவளிக்கு ஊருக்கு வர முடியாது சென்னையில் வசிக்கும் நண்பர்களின் நினைவெழுந்தது.

தனியே அழுதபடி நிற்கும் நாஸ்தென்காவை மனம் குதூகலித்து இருக்கும் ஒரு இரவில் சந்திக்கிறான். அடுத்த மூன்று இரவுகள் அவளுடன் பேசுகிறான். அவ்வளவு தான் நாவல் முடிந்து விடுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே தாஸ்தோவ்ஸ்கியால் நம்மை நெடுந்தூரம் இழுத்துச் சென்று விட முடிகிறது. குறிப்பாக கனவுலக வாசியாக தன்னை சொல்லிக் கொள்ளும் கதை சொல்லி நாஸ்தென்காவிடம் தன்னைப் பற்றிச் சொல்லும் கணங்கள். தாஸ்தோவ்ஸ்கி எழுந்து வரும் கணங்கள் அவை. கதை சொல்லி தன் கனவுகளை நாஸ்தென்காவிடம் சொல்கிறான். நாஸ்தென்கா தன் வாழ்க்கையைக் கதை சொல்லியிடம் சொல்கிறாள். பெண்ணிடம் பேசியறியாத ஒருவனின் படபடப்புடனும் பரவசத்துடனும் சித்தரிக்கப்பட்டிருக்கிறான் கதை சொல்லி. உருக்குலைந்து போன மனிதர்களால் புனையப்பட்ட உலகு தஸ்தோவ்ஸ்கியினுடையது. கதை சொல்லியும் அதில் ஒருவனே. அதீதமான கூச்சமும் கருணையும் நிறைந்தவன்.

நாஸ்தென்காவின் காதல் கதையைக் கேட்கிறான். அவளால் ஈர்க்கப்படுகிறான். சகோதர அன்பு நட்பு என அந்த ஈர்ப்பினை நாஸ்தென்கா கடக்கும் இடங்கள் சொல்ல முடியாத தவிப்பினை உருவாக்குகின்றன. இறுதியில் நாஸ்தென்காவை கதை சொல்லி பிரியும் இடம் ஆழமான வறட்சியை மனதில் உண்டு பண்ணி விடுகிறது. ஆனால் அந்த வறட்சியை தொடக்கம் முதலே கதை சொல்லியின் வாயிலாக உருவாகி இருப்பதால் ஒரு பெண்ணின் மனதை அதற்கே உரிய தயக்கங்களுடனும் குழப்பங்களுடனும் எடுத்துரைப்பதால் நாவலின் இறுதி கணங்கள் தாங்கிக் கொள்ளக்கூடியவையாகவே உள்ளன. இருந்தும் நாஸ்தென்கா கதை சொல்லிக்கு எழுதும் கடிதம் உச்சமாக மீள முடியாத சிடுக்கொன்றினை போட்டுவிடுகிறது. அந்த சிடுக்கு இந்த நாவலை மறக்க முடியாததாக சங்கடத்துடன் எண்ணிக் கொள்வதாக மாற்றிவிடுகிறது. வெண்ணிற இரவுகள் ஒரு இனிய துயராக மனதில் நீடிக்கும் என நினைக்கிறேன்.

நம்முடைய வாசிப்புச் சூழலையும் சமூகச் சூழலையும் பார்க்கும் போது தாஸ்தோவ்ஸ்கி மீண்டும் வாசிக்கப்படுவார் என்றே தோன்றுகிறது. வாசிக்கப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.

பேருந்து தஞ்சையைத் தான் தாண்டி இருந்தது. ஒருவர் தஞ்சை தாண்டும் போது திடுமென இறங்கி ஓடினார். அவர் மணி பர்ஸை தஞ்சாவூரில் தொலைத்து விட்டதாகவும் தொலைத்தவருடைய அண்ணன் வெளிநாடு செல்வதாகவும் அண்ணன் தம்பிக்காக பேருந்தில் அழுதபடியே தொழுகை செய்ததாகவும் இறங்கும் போது அவருடைய அலைபேசி கீழே விழுந்துவிட்டதாகவும் அவரொரு இஸ்லாமியர் எனவும் என் அண்ணன் சொன்னான். சில நொடிகளில் இவனால் எவ்வளவு விஷயங்களை கவனிக்க முடிகிறது என வியப்பு ஏற்பட்டது. அவதானக் கலைஞரை கவனகன் என தமிழால் அழைக்கிறார்கள் போல.

நான் சென்று இறங்கும் பேருந்து நிலையங்களில் என்னை குறைவாக முகம் சுழிக்க வைப்பது திருச்சி ஜங்ஷன் தான். பெரும்பாலும் சுத்தமாக இருக்கும். இம்முறை பேருந்து நிலையத்தின் கூரையை செப்பனிட்டு அழகு படுத்தி இருந்தனர். தேநீர் அருந்திவிட்டு சத்திரம் வழியாக மண்ணச்சநல்லூர். அங்கு தான் கோவில் இருக்கிறது. காவிரி ஆற்றை பாலத்தின் வழியே கடக்கும் போது எப்போதும் ஏற்படும் ஒரு மனவெழுச்சி ஏற்பட்டது. மண்ணச்சநல்லூருக்கு முன்பாகவே இறங்க வேண்டிய இடம் வந்தது. அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சாமி திருக்கோவிலுக்கு அருகே ஒரேயொரு வெற்றிலைப் பாக்கு கடை மட்டுமே உள்ளது.

சமூக வலைதளங்களில் "ட்ரெண்ட்" என ஒன்றிருப்பது போல சமூகத்துக்கென ஒரு டிரெண்ட உண்டு. அதைத் தீர்மானிப்பது மத்தியத் தர வர்க்கமே. உயர் வகுப்பினரின் சுவை தனித்துவமானது விலையுயர்ந்தது. அது போல பணமற்றவர்களின் சுவையையும் சமூகம் பேசாது. மத்திய தரத்தினருக்கு ஏற்றது போல சமூகம் தன்னை நடித்துக் கொள்வதாக எனக்குத் தோன்றும். ஒரேயொரு ஆறுதல் இந்த மத்திய தரத்தினரின் "பேண்ட் வித்" அதிகம் என்பது தான். இன்றைய இந்திய மத்தியத்தர வர்க்கத்தினரின் டிரெண்ட் வீடு கட்டுவது. வீடு வியாபாரம் போன்றவை நிச்சயமற்ற தன்மை கொண்டவை. ஆகவே எவ்வளவு அடர் கருப்பு சட்டை அணிந்தவருக்கும் உள்ளூர ஒரு கிலி இருக்கவே செய்யும். அந்த நம்பிக்கையை சரியாகவே பயன்படுத்திக் கொள்கிறது இந்த கோவில். செதுக்கப்படாத லிங்கம் உடைய கோவில் என்கிறார்கள். லிங்கமும் சற்று ஏடாகூடமாக இருப்பதால் அவர்கள் சொல்வதை நம்பலாம். துவாரபாலகர்களை எங்கிருந்தோ பெயர்த்துக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். பத்திலிருந்து பதினைந்தாம் நூற்றாண்டுகளுக்குள் உருவான கோவிலாக இருக்கலாம்.( தமிழக கோவில்களின் வரலாற்றை அறிய உதவும் நல்ல நூல்களை நண்பர்களிடம் பரிந்துரைக்க வேண்டுகிறேன்). அங்கிருக்கும் வெண்ணி மரத்தின் அடியில் இருந்து மண் எடுத்துத் தருகிறார்கள். வீடோ வியாபாரமோ வெற்றி அடைந்த பிறகு வீடோ வியாபார நிறுவனமோ இருக்கும் இடத்தின் மண்ணை கொண்டு வந்து போட்டு விட்டு வேண்டுதலை முடிக்க வேண்டும் என்பது அங்குள்ள நம்பிக்கை. நாங்கள் முடிக்கவே சென்றிருந்தோம். முடிக்கும் போது மூவாயிரம் காணிக்கை தர வேண்டும் என்பது விதி!!! விதி!!!!!

அண்ணன் உச்சகட்ட எதிர்ப்பினை காட்டிய பிறகு வழக்கம் போல் அம்மா சொன்னது தான் நடந்தது. ஆனால் மூவாயிரம் கொடுத்ததற்காக இப்போதும் அம்மாவை அவன் மன்னிக்கவில்லை. எனக்கு என்ன லாபம் என்றால் அபிஷேகம் முடிந்த பிறகு கோவிலை பதினாறு முறை வலம் வரச் சொன்னார்கள். அவ்வளவு தூரம் நடந்து வெகு நாளாயிற்று. "வெற்றி" பெற்றவர்கள் என அங்குள்ள அர்ச்சகர் எங்களுடையதையும் சேர்த்து எட்டு குடும்பங்களைச் சொன்னார். ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் வெற்றிபெற அதாவது வீடு வாங்கவோ நிலம் வாங்கவோ வியாபாரம் தொடங்கவோ வந்திருந்தனர். "வெற்றி" பெற்றவர்கள் அவர்களுக்கு பிரசாதம் அளிக்க வேண்டுமாம். இந்த ஒரு ஏற்பாடு நிறைவளிப்பதாக இருந்தது. ஒரு செயலை முடித்தவர்கள் திருப்தியுடன் அந்த செயலைத் தொடங்கவிருப்பவர்களிடம் அன்னம் அளிப்பது என்னுள் உவகையை நிறைத்தது.

போனி டெயில் கட்டிய ஒரு பெண். சட்டை சுடிதார் இரண்டிலும் சேர்க்க முடியாத ஒரு உடை அணிந்திருந்தாள். வழக்கம் போல் அவள் என்னை அடிக்கடி திரும்பிப் பார்த்ததாக கற்பனை செய்து கொண்டேன். ஒரு விஷயம் தெளிவடைந்தபடியே வருகிறது. ஒரு குழந்தையின் கண்களால் தான் நான் பெண்களைப் பார்க்கிறேன் போல. ஏனெனில் கண் காது மூக்கு என தனித்தனியே அழகாக இருந்ததாக எனக்கு சொல்லத் தெரியவில்லை. மனதில் மலர்வேற்படுத்தும் ஒரு முகம். அவ்வளவு தான். கோவிலை விட்டு வெளியே வந்த போது அவளுடைய "பெரிய" குடும்பம் ஒரு சிவப்பு நிற ஆல்டோவில் புறப்பட்டது. பெரியம்மா வீட்டிலிருந்து புறப்படும் போது சிறு வயதில் எழும் ஒரு மெல்லிய நமைச்சல் உள்ளுக்குள் தோன்றியது.
திரும்பும் போது பேருந்து ஸ்ரீரங்கம் வழியே வந்தது. கோபுரத்தை மட்டும் பார்க்கவே நேரமிருந்தது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை. கோவிலில் கிடைத்த வெண் பொங்கலும் சக்கரை பொங்கலும் போதுமானதாக இருக்கவில்லை. சரவண பவனில் சாப்பிட்டுவிட்டு பேருந்தில் ஏறினோம். வாட்ஸ்அப் உரையாடலில் தஞ்சை வரும் முன்னே அலைபேசியில் சார்ஜ் தீர்ந்தது. அப்போது தான் உணர்ந்தேன். வீட்டில் நால்வரும் இணைந்து வெளியே சென்றால் என்னுள் ஒரு முனையில் கசப்பு ஊறிக் கொண்டே இருக்கும். அது இந்தப் பயணத்தில் சுத்தமாக இல்லாமல் இருந்தது. வீட்டில் ஜிம்மியும் ஜூலியும் ஆவலுடன் வரவேற்றனர். வீட்டு முன்னே இருக்கும் சீனி கொய்யா மரத்தில் பத்துக்கும் மேல் காய்களைப் பறித்துத் தின்றுவிட்டேன்.

நெடுநாளைக்கு பின் ஏற்படும் அனுபவமாக பொழுது மங்கும் சமயத்தில் இரண்டு கிலோமீட்டருக்கு மேல் சைக்கிளில் இன்று பயணிக்க நேர்ந்தது. கண் ஆயின்மெண்டை காலுக்கு போட்டால் பித்தவெடிப்பு சரியாகும் என்பதை என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை எனினும் அம்மா கேட்டதற்காக வாங்கச் சென்றேன். அந்த மென் இருளும் குளிரும் திடீரென நான் அதிகமாக வெறுக்கும் என் ஊரை விரும்பச் செய்து விட்டது. சற்று தூரத்திற்கு எந்த பெட்ரோல் வாகனமும் என்னை கடக்காத போது அந்த இருட்பயணம் மனதை என்னவோ செய்து விட்டது. அது வேறெங்கும் சாத்தியமே இல்லை. எல்லா விளக்குகளும் அணைந்த பின் நான் அந்த இருட்டில் சென்றால் பத்து வயது குறைந்துவிட்டதாகக் கூட உணர்ந்து விட முடியும் போல.
வீட்டிற்கு திரும்பிய போது அண்ணன் ஏதோ பேப்பரை பார்த்து விட்டு "கரண்டி ஆம்லெட்" போட்டுக் கொடுத்தான். அண்ணனும் அம்மாவும் சமீப காலங்களில் இது போன்ற பயிற்சிகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். அடுத்து ஏதோ கறி தோசை செய்யப் போகிறானாம். நலலா இருந்தா சரி. சாதாரண ஆம்லெட்டுக்கும் கரண்டி ஆம்லெட்டுக்கும் சுவை வேறுபாடு இல்லையெனினும் இரண்டு முட்டைகளில் ஏழெட்டு ஆம்லெட் போட்டு விட முடிகிறது.

வெண்ணிற இரவுகளோடு என்னுடைய மிகச்சிறிய சைக்கிள் பயணத்தை நினைத்துக் கொள்கிறேன். இருளை உறக்கத்துடன் மௌனத்துடன் நிராசைகளுடன் மட்டுமே இணைத்து கற்பனை செய்திருந்த மனம் இப்போது இருளை வேறொன்றாகப் பார்க்கிறது. நாஸ்தென்காவை அந்தக் கதை சொல்லி ஒரு முறை கூட பகலில் பார்க்கவில்லை. ஒருவேளை பார்த்திருந்தால் நாஸ்தென்கா இறந்து போயிருப்பாள். நூற்றியறுபது ஆண்டுகள் கழித்து என்னைப் போட்டு குடைந்து கொண்டிருக்க மாட்டார்கள் இருவரும். இரவென்பது இரவு மட்டுமல்ல.

(நன்றி: சுரேஷ் பிரதீப்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp