சுமார் இருபது நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் சேக்கிழார் அடிப்பொடி டி.என்.இராமச்சந்திரனை அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். வழக்கமான சந்திப்புத் தான். பேசிக்கொண்டிருக்கையில் ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். இது கால்டுவெல் எழுதிய தமிழ் நூல் என்றார். 1893இல் வெளியிடப்பட்டதாகக் குறிப்பு இருந்தது. கால்டுவெல் எழுதிய தமிழ் நூல்களாக “நற்கருணைத் தியான மாலை” (1853) “தாமரைத் தடாகம்” (1871) என்ற இரண்டு நூல்களையும் “நற்கருணை”, “ஞானஸ்ஞானம்” என்ற இரண்டு கட்டுரைகளையும் மயிலை சீனி.வேங்கட சாமி ‘கிருத்துவமும் தமிழும்’ என்ற நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இப்போது நான் பார்த்த இந்த நூலின் பெயர் “பரத கண்ட புராதனம்” என்று இருந்தது. ‘இண்டியன் ஆன்டிகுடீஸ் பை த லேட் பிஷப் கால்டுவெல்’ என்று ஆங்கிலத்திலும் தலைப்பு இருந்தது. எனவே அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்று கருதினோம். மேலும் ஒரு குறிப்பாக ‘த பிரண்லி இன்ஸ்ரெக்டர்’ செய்த மறுபதிப்பு - என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. புத்தகத்தின் முன்பக்கமும், இறுதிப் பக்கமும் காணாமல் போயிருந்தது.
சென்ற வாரம் முழுமையும் என் துணைவியாருக்கு உதவியாக சென்னையில் ஒரு மருத்துவமனையில் இருந்தேன். இடையில் ஒருநாள் ரோஜா முத்தையா நூல் நிலையம் சென்றேன். அங்கே நூலக இயக்குநர் திரு.சுந்தர் அவர்களிடம் இந்த நூலைப் பற்றிக் கூறினேன். சிறிது நேரத்தில் நூல் என் கைக்கு வந்தது. நூல் முழுமையாக இருந்தது. நூலின் இறுதிப் பக்கத்தில் அந்தக் காலத்தில் வெளியான 34 நூல்களின் விலைப்பட்டியல் ஒன்று இருந்தது. அதில் ‘ஆப்பிரிக்கா சிரவியோன் மிஷன் சரித்திரம்’ என்ற ஒரு நூலை மட்டுமே எனக்கு ஏற்கனவே தெரியும். திருக்குறளை மொழிபெயர்த்த ‘துறு’ பாதிரியார் எழுதிய நூல் அது. மற்ற நூல்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை.
‘பிரண்லி இன்ஸ்ரெக்டர்’ மறுபதிப்பு செய்த நூல் என்ற குறிப்புத் தவிர முதல் பதிப்பு எப்பொழுது வந்தது என்று தெரியவில்லை. பேராசிரியர் கா.மீனாட்சி சுந்தரம் தன்னுடைய ‘ஐரோப்பியர் தமிழ்ப் பணி’ என்ற நூலில் பக்கம் 412இல் “இந்நூல் ‘Friendly Instructor’ என்னும் நூலின் மறுபதிப்பாகும்” என்று எழுதி இருந்தார். எனவே குழப்பம் மேலும் அதிகமாகியது. நண்பர் திரு.ஆ.இரா.வேங்கடா சலபதியைத் தொடர்பு கொண்டு இதைப் பற்றிக் கேட்டேன். உடனே அவர் “நற்போதகம்” என்ற பத்திரிகையின் ஆங்கிலப் பெயர்தான் ‘பிரண்லி இன்ஸ்ரெக்டர்’ என்பது என்றும், 19ஆம் நூற்றாண்டில் இதுபோன்று தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டும் வழக்கம் இருந்தது என்றும், சுமார் 1848இல் இருந்து வெளிவருகின்ற ஒரு கிருத்துவ பத்திரிகைதான் இது என்றும் கூறினார். கூடவே இப்பொழுது கூட இந்தப் பத்திரிகை வெளி வருவதாகத் தெரிகிறது என்றார். எனவே கால்டுவெல் இந்தப் பத்திரிகையில் தமிழில் எழுதியதே தான் 1893இல் ‘கிருத்துவ இலக்கியச் சங்கம்’ SPCK பிரஸ் மூலம் நூலாக்கியுள்ளது என்பது புரிந்தது.
1856-ஆம் ஆண்டு கால்டுவெல்லின் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ வெளிவந்தது. இந்த நூலுக்கு முன்பாக அல்லது பின்பாக ‘பரத கண்ட புராதனம்’ எழுதப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள முடிய வில்லை. ஆனால் பரத கண்ட புராதனத்தில் உள்ள பல செய்திகள் ஒப்பிலக்கணத்தின் முன்னுரையிலும் பேசப் பட்டுள்ளன. ‘இந்து மதம்’ என்று அழைக்கப்படுகின்ற இம்மதம் வரலாற்றுக் காலம் முழுமையிலும் ஒரு படித்தானதாக இருந்ததா? அல்லது காலத்தால் மாறுதல் அடைந்து இன்றைய நிலைக்கு வந்ததா? என்பதை பரத கண்ட புராதனத்தில் ஆராய்ச்சி செய்கிறார். தன் ஆய்வுக்கு வேதங்களையும், இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்றவற்றையும் உட்படுத்துகிறார்.
முதலில் வேதங்களை எடுத்துக்கொண்டு வேதங்கள் பார்ப்பனர்கள் சொல்வது போன்று ‘தான் தோன்றி’ என்றோ, இறைவனால் அருளப்பட்டது என்றோ கொள் வதற்கு வேதங்களில் உள்ள செய்திகளே முரணாக உள்ளன என்கின்றார். வேதப் பாடல்களை இன்னின்ன ரிஷிகள் பாடினார்கள் என்று வேதமே சொல்வதை எடுத்துக் காட்டுகின்றார். வேதப் பாடல்களில் உள்ள துதிகள் இறைவனைப் பாடவில்லை. இயற்கையையே பாடு கின்றன. இந்திரன், வருணன், அக்னி என்று சொல்லப் படுபவை ஐம்பூதங்களே என்பதை வேதத்திலுள்ள சான்றுகளைக் கொண்டே விளக்கி விடுகின்றார். எனவே வேதங்களின் வழிபாடு என்பது வளர்ச்சியடையாத மனிதர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வணங்கியதே என்றும், வேத காலத்தின் இறுதியில் இயற்கையைத் தேவர்களாக்கி அவர்களுக்கு நெருப்பின் வழியாகக் கையுறை கொடுத்ததே தீ வேள்வி என்றும் கூட்டிக்காட்டு கின்றார். இந்தப் பகுதியில் மேற்கோளாக ரிக்வேதத்தி லிருந்து மூன்று பாடல்களை மொழிபெயர்த்துத் தருகின்றார். அந்த மொழிபெயர்ப்பு ஜம்புநாதன் அவர்களுடைய (ஜம்புநாதன் மொழிபெயர்ப்பை ஏழு தொகுதிகளாக அலைகள் வெளியீட்டகம் வெளி யிட்டுள்ளது) மொழிபெயர்ப்பைவிடத் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தபடியாக வால்மீகி இராமாயணம், வியாச பாரதம் ஆகியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றார். முதலில் இரண்டு காவியங்களின் கதைச் சுருக்கத்தை மிக அழகாகத் தருகின்றார். பின்னர் அவற்றின் மீதான தனது விமரிசனத்தைக் கூறுகின்றார். அதில், இராமாயண காலம் வேதகாலத்திலிருந்து மாற்றம் அடைந்ததைக் கூறுகின்றார். அதை அவருடைய நடையிலேயே பார்த்தால் 19ஆம் நூற்றாண்டின் தமிழ் உரைநடையின் போக்கையும் கண்டுகொள்ளலாம். “இருக்கு வேத காலத்தில் தேவர்களை வணங்கும் ஆசாரங்களில் யாகமே பிரதானம். இராமாயண காலத்தில் யாகஞ் செய்தல் முற்றிலும் ஒழிந்து போகா திருந்தும் யாகத்தைப் பார்க்கிலும் தவமே பிரதானமென்று ஜனங்கள் எண்ணினார்கள். ரிஷிகளைப் பார்த்தாலும் ரிக்வேதத்திற்கும் இராமாயணத்திற்கும் வித்தியாசமுண்டு. இருக்குவேத காலத்தில் ரிஷிகள் எனப்பட்டவர்கள் பஞ்சநதமாகிய பஞ்சாப் தேசத்து இராஜாக்களுக்குப் புரொகிதரென்னப்பட்ட குடும்பத்து ஆசாரியர்களாய் அவர்களுடைய அரண்மனைகளில் வாசம்பண்ணி அவர்களுக்குப் பல ஊழியங்கள் செய்து வந்தவர்களாய் இருந்தார்கள். இராஜாக்களுக்கு இந்திரனுடைய கிருபையும், அந்த கிருபையினாலே பசுக்கள், குதிரைகள், பிள்ளைகள், ஐசுவரிய முதலான லோக பாக்கியங்களும் கிடைக்கும்படிக்கு அவர்களுக்காக அந்த ரிஷிகள் பாட்டுக்களைக் கட்டிப் பாடி, யாகங்களை நடப்பித்து வந்தார்கள். இராமாயணத்திற் சொல்லிய ரிஷிகளோ இராஜாக்களுக்குப் புரோகிதராயிராமலும் அவர்கள் அரண்மனைகளில் வாசம் பண்ணாமலும் ஊரையும் நாட்டையும் விட்டுக் காட்டிலே சென்று தவமும் தியானமும் பண்ணிக் கொண்டவர்களாயிருந்தார்கள். விசேஷித்த கீர்த்தி அடைய வேண்டுமென்றிருந்த சந்நியாசிகள் அகஸ்தியன் செய்தது போல சுயதேசத்துக்கு வெகுதூரமாய்ச் சென்று அதிகமதிகமாய்த் தெற்கே நடந்து கொண்டு போனார்கள். இருக்கு வேத ஆசாரங்களோடே இந்த ஆசாரங்களை ஒத்துப் பார்க்கும்போது இந்துக்கள் பூர்வீகத்தில் அனுசரித்த மதம் வெகுவாய் மாறினதாக விளங்கும். இருக்குவேத காலத்தை யாக காலமென்றும் இராமாயண காலத்தைத் தவகாலமென்றுஞ் சொல்லலாம்.”
இதைப் போன்று மகாபாரதத்தைப்பற்றிக் கூறு கையில் இந்தக் காவியத்தின் கதை கிருஸ்து காலத்திற்கு முன்பே உருவாகி கிருத்துவிற்குப் பின் 400-500 ஆண்டுகளில் தான் தற்போதைய வடிவத்தை அடைந்திருக்கிறது என்கின்றார். இதே கருத்தை அம்பேத்கரும் தன்னுடைய மகாபாரதம் பற்றிய ஆய்வில் குறிப்பிடுகின்றார். இறுதி முடிவாக அவர் கூறுவது “அடக்கமாய்ச் சொன்னால், வேதகாலத்துக்குரிய ஆசாரம் யாகமே, இராமாயண காலத்துக்குரிய ஆசாரம் தவமே, பாரத காலத்துக்குரிய ஆசாரம் தீர்த்த யாத்திரையே, புராண காலத்துக்குரிய ஆசாரம் கோயில் பூஜையே.”
புராணங்கள் பற்றிய அவருடைய குறிப்பின் ஒரு பகுதி வாசிப்புச் சுவையுடையதாக இருக்கின்றது. “புரவெசர் (புரொபசர் என்பதை இப்படி எழுதியுள்ளார்) வில்சன் என்னும் சாஸ்திரியார் புராணங்கள் இத்தன்மையுள்ளவை களென்பதை யூரோப் கண்டத்தாருக்குக் காட்ட வேண்டு மென்று கருதி விஷ்ணு புராணத்தைத் தெரிந்தெடுத்து அதை இங்கிலீஷ் பாஷையில் திருப்பியிருக்கிறார் (மொழிபெயர்த்திருக்கிறார்). அவர் இந்தப் புராணத்தை திருப்பியிருக்கிறது மன்றி ஒவ்வொரு புராணத்தையும் ஒத்துப்பார்த்துப் பொதுப்பாயிரம் செய்து விவேகமுள்ள குறிப்புக்களையும் அபிப்பிராயங்களையும் எழுதிப் புராண இயல்பை விளக்கிக் காட்டி இருக்கிறார். புராணங்களைக் குறித்து அதில் கண்டிருக்கிற விவரங்களில் மிகுதியான பங்கை அவர் எழுதின பிரபந்தத்தில் தெரிந்தெடுத்திருக் கின்றது. விஷ்ணு புராணமும் பாகவத புராணமுமாகிய இவ்விரண்டுமே யூரோப் கண்டத்துப் பாஷைகளில் முழுவதும் திருப்பப்பட்டிருக்கிறது. மற்றப் புராணங்களில் சில பங்குகள் மாத்திரம் திருப்பப்பட்டதுண்டு. பெருங் காப்பியங்களில் இராமாயண முழுவதும் திருப்பப் பட்டிருக்கிறது.” (பக் - 101)
இந்துமதம் பற்றிய விமர்சனமாகவும் சமஸ்கிருத இலக்கியத்தின் ஒரு பகுதியினுடைய வரலாறாகவும் இந்த நூல் அமைந்துள்ளது. கூடுதலாகத் தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தின் உரைநடையைவிட தெளிவானதாக இவருடைய உரைநடை அமைந்துள்ளது. மொழிபெயர்ப்பு என்ற சொல் தொல்காப்பியத்தில் கையாளப்பட்டுள்ளது. இது தெரியாததால் என்னவோ, கால்டுவெல், மொழிபெயர்ப்பு என்பதை ‘திருப்பி இருக்கிறது’ என்று எழுதுகிறார். இதுபோன்று புலவர்களை சாஸ்திரிகள் என்று குறிப்பிடுகின்றார். ஆனாலும் படிப்பதற்குச் சுவையாகவே உள்ளது.
இந்நூலை வெகுவிரைவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடுவதாக அதன் இயக்குநர், நண்பர் கே.ஏ.குணசேகரன் என்னிடம் உறுதி கூறியிருக்கின்றார். எனவே வாசகர் கைகளில் மிக விரைவிலேயே இந்நூல் தவழும் என்பதை எதிர்பார்க்கலாம்.
(நன்றி: கீற்று)