ஒரு புத்தகம் படித்து முடித்தேன். The Pyramid of Corruption – ஊழல் பிரமிடு. கன்னடர் கிரண் பட்னி எழுதியது. ஐஐடி தில்லியில் முதுநிலைப் பொறியியல் முடித்தவர். ஐஐடி முடித்தோமா. வெளிநாட்டில் நாலு காசு பார்த்தோமா என்றில்லாமல் ஊழல் ஊற்றுக்கண் எது? என ஆய்ந்து புத்தகம் எழுதியுள்ளார். குறிப்பாக இந்திய ஊழலின் அடிப்படைகளைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார்.
அதென்ன ஊழல் பிரமிடு? வர்ணப் பிரமிடு எப்படி எப்படி எல்லாம் ஊழல் பிரமிடை உருவாக்குகிறது என்பதே புத்தகத்தின் அடிப்படை ஆய்வு.
அன்றாடம் அரசுப் பணியாளர்களின் ஊழல்களை மட்டும் காணும் நாம் அது ஒன்றையே பெரிதாக எண்ணுகிறோம். அதைத்தான் அன்னா அசாரே போன்றோர் மாபெரும் ஊழல் எனக் காட்டுகின்றனர். கமலும் ரஜினியும் சிஸ்டம் கெட்டுப் போச்சு என்கின்றனர். இதுவும் ஊழல்தான்! ஆனால் ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டுபிடித்தால் இது வெறும் கொசுறு எனக் காணலாம்.
கிரண் ஊழலுக்குத் தரும் வரையறை மிக எளிதானது, ஆனால் மிக மிக ஆழமானது, அடிப்படையானது.
அவர் சொல்கிறார், மனிதர்களுக்குள் உள்ள பிரிவினைகளால் ஏற்படும் இடைவெளிகள் எந்தளவுக்கு விலகி உள்ளனவோ அந்தளவுக்கு ஊழல் அளவும் மிகும். அதாவது மனிதர்களுக்கு இடையிலான பிளவும் ஊழல் அளவும் நேர்த் தகவுடையவை (directly proportional).
மேலும் அவர் சொல்கிறார், ஆள்வோர் தாம் ஆளும் சமூகத்தில் நிலவும் பிரிவினைகளைக் கண்டுகொள்ளாது அவற்றை எந்தளவுக்குச் செயற்கையாக ஓர்மையாக்குகிறார்களோ அந்தளவுக்கு ஊழல் மிகுந்து செல்லும்.
அவர் சொல்கிறார், மனிதச் சமுதாயத்தில் பிரிவினை மிகும் போது உச்சியில் ஆள்பவருக்குத் தம்மால் ஆளப்படுவோரைச் சுரண்டுகிறோமே என்ற உணர்வே இல்லாது போகிறது. அப்படியானால், ஆள்வோர் ஆளப்படுவோருக்கு நெருக்கமாக வர வர, அந்த ஆள்வோரைப் பொறுத்த வரை, நமக்கு மிக நெருக்கமானவர்களைச் சுரண்டுகிறோமே என மனச்சான்று உறுத்தும். இதற்கு நேர்மாறாகப் பார்த்தால், ஆளப்படுவோரைப் பொறுத்த வரையும், தம்மை ஆள்வோர் தம்மிடமிருந்து எந்தளவுக்கு விலகி இருக்கிறார்களோ அவர்களுக்கும் அந்தளவுக்கு ஆள்வோர் தம்மைச் சுரண்டுவதே உரைக்காமல் போகிறது. அப்படியானால் இவர்களைப் பொறுத்த வரை, இவர்களுக்கு நெருக்கமாக இருப்போர் சுரண்டினால் உடனே உரைக்கும்.
அவர் சொல்கிறார், எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர் இந்தியா என இன்று அழைக்கப்படும் பகுதிக்குள் வந்தபோது, ஐந்நூறுக்கு மேற்பட்ட சிற்றரசுகள் இருந்தன. அந்த ஆட்சிப் பரப்புகள் அனைத்தையும் படிப்படியாகக் கைப்பற்றியவர்கள் இந்தியா என்னும் கட்டமைப்பை உருவாக்கினார்கள் (இங்கு தெளிவாக கிரண் இந்தியாவை நாடு, தேசம் என்றெல்லாம் குறிக்காமல் கட்டமைப்பு எனக் குறிப்பிடுகிறார்.) அந்த வகையில் இந்தியாவின் மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்தியா என்னும் பெயரில் ஓர்மையாக்கினர். இந்த இடத்தில்தான் கிரண் கூறுகிறார், இந்த ஓர்மையாக்கல் என்பதுதான் ஊழல், எனவே இந்தியா என்பதே ஊழல்தான்! இந்தியா என்னும் இந்தப் பெரிய ஊழல் குறித்துப் பேசாமல் குட்டி குட்டி ஊழல் குறித்தெல்லாம் பேசுவது பெரும் அபத்தம்.
அவர் சொல்கிறார், ஆங்கிலேயர் அன்னியர் என்பதால்தான், அவர்களால் எந்த உறுத்தலுமின்றி இந்தியாவின் பன்மைத்துவம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அனைவரையும் இந்தியத்துக்குள் அடைக்க முடிந்தது, அதனை மூலதனமாகக் கொண்டு ஈவிரக்கமின்றி அயலவர்களைச் சுரண்ட முடிந்தது. அதாவது பிரித்தானியர்களுக்குப் பணத்தைக் கொள்ளையடிக்கையில், அதனைச் சொந்த ஆங்கிலேயர்களிடம் செய்யும் போது ஏற்படும் குற்ற உணர்வு, காலனி நாட்டு மக்களிடம் செய்யும் போது இருப்பதில்லை. இங்கிலாந்து மக்களுக்குமே கூட இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாம் அனுபவிக்கிறோமே என்ற கவலையில்லை. உலகின் காலனிய ஆட்சிகளிலேயே மிகக் கொடூரமான ஊழல் சுரண்டல் ஆட்சி பிரித்தானியர் ஆட்சியே!
பிரித்தானியர்கள் இந்தியாவில் தொடர்வண்டிப் பாதைகள் கட்டமைக்கும் போது கூட, இங்கிருக்கும் வெள்ளை அதிகாரிகளுக்கு லண்டன் தலைமையிடத்திலிருந்து குறிப்புகள் வந்தன. அதன்படி, இங்கிருக்கும் ஆங்கிலேயே அதிகாரிகளுக்குக் கிடைத்த அறிவுரை என்னவென்றால், தொடர்வண்டித் தடம் அமைக்கும் பணி என்பது இந்தியர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்கு என்று நினைத்து விட வேண்டாம். அந்தப் பணி முழுக்க இந்தியச் சரக்குகளை விரைவாக நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கானதாய் இருக்க வேண்டும். எனவே பார்த்து பார்த்துச் செலவழியுங்கள். பிரித்தானியர்கள் கல்வி கொடுத்ததும் கூட இதே அடிப்படையில்தான். அதாவது ஆங்கிலேயர்கள் கல்வி கொடுத்தது இந்தியர்களின் அறிவைப் பெருக்குவதற்கல்ல, அவர்களிடம் வேலை செய்வதற்கேற்ற கூலிகளை உருவாக்கிக் கொள்வதற்கே!
அவர் சொல்கிறார், ஆரியர்கள் கட்டமைத்த வர்ணப் பிரமிடு என்பதே ஊழல் பிரமிடுதான்! இந்த பிரமிடில் உச்சாணிக் கொம்பில் இருக்கும் பார்ப்பனர்கள் தங்களுக்குக் கீழே உள்ளோரை வேற்று மனிதர்களாகப் பார்க்கிறார்கள். இப்படித்தான் சத்ரியர்கள் வைசியர்களை, வைசியர்கள் சூத்திரர்களை, சூத்திரர்கள் பஞ்சமர்களைப் பார்க்கிறார்கள். வர்ணங்களுக்குள் அடங்கியுள்ள ஆயிரமாயிரம் சாதிகள் ஒவ்வொன்றும் மற்றொன்றைப் பிளவுபடுத்திப் பார்க்கிறது. எனவே ஒருவர் மற்றொருவரைச் சுரண்டுவதற்கு உறுத்தல் ஏதும் இல்லை.
அவர் சொல்கிறார், வடவர்களாகிய ஆரிய பார்ப்பன-பனியாக்களுக்குத் தென்னிந்தியர்களைச் சுரண்டிக் கொழுப்பதில் எந்த உறுத்தலோ குற்ற உணர்ச்சியோ இருப்பதில்லை. தென்னிந்தியர்களுக்கும் தில்லியில் எங்கோ அயலவன் வடவன் செய்யும் சுரண்டல் கண்ணில் படாமல் போய், பக்கத்து ஊரில் சாதாரண பியூன் வேலை பார்ப்பவன் வாங்கும் கையூட்டு பெரும் ஊழலாகத் தெரிகிறது. தென்னிந்தியர்களாகிய நாம் இந்தியாவின் முதல் 25 பணக்காரர்களில் 22 பேர் வடஇந்திய ஆரிய வைசியர்கள் என்பதைக் கண்டுகொள்வதே இல்லை.
அவர் சொல்கிறார், ஆனால் இப்படி மையப்படுத்தப்பட்ட ஓர் ஆரியக் கட்டமைப்பை எழுப்புவதற்கு அம்பேத்கர் காரணமாகிப் போனது கெடுவாய்ப்பே!
அவர் சொல்கிறார், எப்படிப் பார்த்தாலும், இந்தியாவின் தலையாய ஊழல் வர்ணந்தான்! பார்ப்பனர் ஒருவர் தன்னை எத்தகைய நேர்மையாளனாகவும் காட்டிக் கொள்ளலாம், ஆனால் அவர் பார்ப்பனராய் இருப்பதே பெரும் ஊழல்தான்!
அவர சொல்கிறார் எனவேதான் பிரித்தானிய ஊழலும் பார்ப்பன ஊழலும் இந்தியம் என்ற போலி ஓர்மையில் கைகோத்துக் கொண்டன! எனவேதான் பிரித்தானியர் வெளியேறிய பின்னும் வெள்ளையரின் அரசமைப்பைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வைத்துக் கொண்டனர் வர்ணப் பிரமிடின் உச்சியில் இருப்போர்.
அவர் சொல்கிறார், பிரித்து ஆள்வது பிரித்தானிய ஊழல் என்றால், ஒன்றாக்கி ஆள்வது ஆரிய இந்திய ஊழல்!
ஆக, அதிகாரத்தை மையத்தில் குவிப்பது ஊழலைப் பெருக்குவது, அதிகாரத்தைக் கடைசி ஊராட்சி வரை படிப்படியாகப் பரவலாக்குவது ஊழலைக் குறைப்பது.
கிரண் சாரமாகக் கூறுவது என்னவென்றால், ஊழல் ஒழிப்பு என்பது கடைமட்ட ஊழியர் வாங்கும் கையூட்டை ஒழிப்பதன்று, ஊழலின் ஊற்றுக்கண்ணை அடைப்பது ஆகும். அப்படியானால், பார்ப்பன-பனியா ஆதிக்கத்தின் கீழ் மையப்படுத்தப்பட்ட தில்லி ஒற்றையாட்சியை உடைத்து, மொழிவாரி மாநிலங்களின் கையில் முழு அதிகாரத்தை ஒப்படைப்பதன் வாயிலாகவே ஊழல் கோட்டையை இழுத்து மூட முடியும்.
இந்திய மைய மறுப்பில் தாகூருக்குள்ள பங்கைப் புத்தகம் முழுக்க தருகிற கிரண் இந்திய-பார்ப்பனிய உறவைத் தெளிவாய் எடுத்துரைத்த அன்றைய இந்தியாவின் ஒரே தலைவராகிய பெரியார் பற்றி சரியாகப் பதிவு செய்யாதது குறையே. இதற்கு அவர் திராவிட அரசியலை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளாததே காரணம். ஆனால் பெரியாரின் இந்திய ஒழிப்புக் கருத்துகளைக் கன்னடம் உள்ளிட்ட இன்ன பிற இந்திய மொழிகளில் பெயர்த்துக் கொடுக்காத நாமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தித் திணிப்பின் மூலம் இந்திய எதிர்ப்பை முன்வைத்த திராவிடக் கட்சிகளை அவர் பாராட்டுகிறார். இருப்பினும் திராவிடக் கட்சிகள் இந்தியத்திடம் தோற்றதற்குத் தமிழையும் சமஸ்கிருதத்துக்கு இணையாகச் செம்மொழியாக்கச் சொல்லி தில்லியிடம் கேட்டுக் கொண்டதே காரணம் எனத் தவறாகக் கூறுகிறார். உள்ளபடியே, திராவிடக் கட்சிகள் இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன்னிறுத்தியதே தமிழர்களின் வீழ்ச்சிக்குக் காரணம் எனச் சரியாகச் சுட்டத் தவறுகிறார்.
முடிவாகப் புத்தகம் நமக்கு உணர்த்தும் கருத்து: பிரித்தானியம் = இந்தியம் = வர்ணம் = பார்ப்பனியம் = ஊழல்.
வர்ணப் பிரமிடு = இந்தியப் பிரமிடு = ஊழல் பிரமிடு.