(கவிஞர் பெருந்தேவி 2014 ஆண்டு சென்னையில் ஒருங்கிணைத்த “அசோகமித்திரனை வாசித்தல்” என்ற கருத்தரங்கில் பகிர்ந்த கட்டுரையின் விரிவாக்கம்; அசோகமித்திரன் காலமாகி ஓராண்டு முடிவுறும் சமயம் நினைவில் எழுந்ததால் பிரசுரிக்க தோன்றியதால் உயிர்மை ஏப்ரல் 2018 இதழில் பிரசுரமானது)
அசோகமித்திரனின் “இன்று” நாவலை முன்வைத்து அவரது அழகியலை குறித்து எழுத நான் ஆர்வம் கொள்வதற்குப் பின்புலமாக இரண்டு தொடர்ந்த ஈடுபாடுகளும், மூன்று நிகழ்வுகளும் உள்ளன. முதல் ஈடுபாடு அசோகமித்திரனின் புனைவுகள் மீதானது. சிறுபத்திரிகை சூழலுக்கு அறிமுகம் ஆகும் முன்பே நூலகங்களில் அவருடைய கதைகளை படித்திருந்தேன் என்றாலும், அதற்குப் பிறகு உருவான இலக்கிய பயிற்சியின் ஊடாக அவர் எழுத்தின் முக்கியத்துவதை உணரத்தொடங்கினேன். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் அவருடைய கதைகள் எனக்கு அளித்தது ஒருவிதமான விடுதலையுணர்வு என்றுதான் இன்று யோசித்துப் பார்க்கையில் தோன்றுகிறது. அவருடைய குதூகலம் கதையில் உடலைவிட்டு பிரிந்த உயிர் உலகைப் பார்ப்பது போல, வாழ்வின் நுட்பமான அசைவுகளை விலகி நின்றி பார்க்கும் அனுபவம் கிடைத்தால் கிடைத்த உணர்வாக அது இருக்கலாம். அதனால் பல சந்தர்ப்பங்களில் அவர் கதைகள் அவநம்பிக்கை சார்ந்தவை, மத்தியதர வர்க்கத்து அவலமான, அபத்தமான வாழ்க்கையை கூறுபவை என்றெல்லாம் நண்பர்கள் சொல்லும்போது ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. இந்த வகையில் அவர் புனைவுலகை, எழுத்தை எப்படி புரிந்துகொள்வது என்ற நீண்ட நாள் தொடர் ஈடுபாடு முதலாவதும், முக்கியமானதுமாகும்.
இரண்டாவது தொடர் ஈடுபாடு கடந்த பத்தாண்டுகளில் உருவானது. அது காலம், வரலாறு, கதையாடல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் குறித்த சமகால தத்துவார்த்த ஆய்வு. குறிப்பாக தெல்யூஸ், பால் ரிகெளர் ஆகிய இருவரையும் இணைத்து வாசிக்க நான் செய்துவரும் முயற்சிகள். இந்த இரண்டையும் தவிர மூன்று நிகழ்வுகளை இங்கே சுருக்கமாக நினைவுகூர விரும்புகிறேன்.
1989/90 ஆம் ஆண்டு வாக்கில் திருச்சி தமிழ் இலக்கிய கழகத்தில் அசோகமித்திரனின் “இன்று” நாவல் குறித்து பேசினேன். தனிப்பட்ட முறையில் என்மீது பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்திய படைப்பு இது. ஆனால் எனது அன்றைய மனநிலையில் இந்த நாவல் கடுமையான போதாமைக்கு ஆட்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. முன்னூறு அடி ஒவிய கேன்வாஸை வண்ணங்களாலும், வடிவங்களாலும் இட்டு நிரப்பாமல் மெல்லிய பென்சிலால் ஆங்காங்கே சில கோட்டோவியங்கள் வரைந்திருப்பது போலத் தோன்றியது. டால்ஸ்டாயை தொடர்ந்து மேற்கோள் காட்டும் நாவல் டால்ஸ்டாயைப் போன்ற வர்ணணை விரிவுகொள்ள வேண்டாமா என்பது என் வாசக ஏக்கமாக இருந்ததால் அதற்கான அக, புற காரணங்களை யோசிப்பதாகவே அந்த பேச்சு அமைந்தது. பேராசிரியர் ஆல்பர்ட் இது ஒரு முழுமையான படைப்பு என்று வாதிட்டார். என்றாவது ஒரு நாள் இந்த நாவலின் அழகியல் அடிப்படையை புரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்கொரு விருப்பு தோன்றியது.
இரண்டாவது நிகழ்வு 1994 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு வித்தியாசமான கூட்டம். அழகியசிங்கர் ஏற்பாடு செய்திருந்த அந்த கூட்டத்தில் நாகார்ஜுனன் சமகால நவீன தமிழ் இலக்கியத்தின்மீது ஒரு விமர்சனத்தை வைத்து அதற்கு அசோகமித்திரனின் எழுத்தை முன் உதாரணமாக்கி பேசினார்; அதன் பிறகு அசோகமித்திரன் அதைக்குறித்து பேசினார். நாகார்ஜுனனின் பிரச்சினை என்னவென்று என் நினைவிலிருந்து. சொன்னால் ஏன் நவீன தமிழ் இலக்கியம் தமிழகத்தின் இலக்கிய, கலாசார பாரம்பர்யங்களுக்கு முகம் கொடுத்து அவற்றை படைப்புகளில் உட்செரிக்கவில்லை என்ற கேள்வியாகும். புதுமைப்பித்தன் பட்டினப்பாலையிலிருந்து சில தகவல்களை எடுத்து சிறுகதைகளில் கையாண்டிருந்தாலும் அந்த போக்கு வலுவடையவில்லை. வேறு யாரும் பண்டைய இலக்கிய வேர்களை நாடிச்செல்லவில்லை. நாகார்ஜுனன் அந்த சமயத்தில் நவீனத்தின் மீது கடும் விமர்சனம் கொண்டிருந்தார். நவீன மனிதன் இறந்தகாலமற்று தன்னை புத்துருவாக்கிக்கொள்ளலாம் என்று நினைப்பது குறித்து வெறுப்பு கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இலக்கிய ஆக்கங்களிலும் மரபின் தொடர் இழைகள் குறித்த ஒரு எதிர்பார்ப்பை முன்வைத்தார்.
நாகார்ஜுனன் அவருடைய பிரச்சினையை எழுப்ப அசோகமித்திரன் எழுத்தை முன்னுதாரணமாக்கியதை என்னால் ஏற்க முடியவில்லை. அசோகமித்திரன் என்ன சொன்னார் என்பதைக்கூட கவனிக்க முடியாதபடி மனம் குமைந்துபோயிருந்தேன். ஏனெனில் அசோகமித்திரனின் அழகியல் அடிப்படைகளுக்கு இந்த கேள்வி பொருந்தாது என்பதே என் எண்ணமாக இருந்தாலும் அதை எப்படி பேசுவது என்று அன்று எனக்குத் தெரியவில்லை.
மூன்றாவது நிகழ்வு, ஜெயமோகன் 1999-இல் அசோகமித்திரனின் படைப்புலகுக்கு ஒரு வாசல் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை. இன்றும் அவர் வலைத்தளத்தில் காணக்கிடைக்கிறது. பொதுவாக கோபம், வருத்தம் ஆகிய இரண்டு உணர்ச்சிகளும் என்னிடம் வற்றாமல் இருக்கச்செய்யும் ஆற்றல் அவர் கட்டுரைகளுக்கு உண்டு. இந்த கட்டுரையும் விதிவிலக்கல்ல. ஜெயமோகனுக்கு அசோகமித்திரனை பற்றி நல்லபடியாக எழுதவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அவருடைய கொச்சையான ஹெகலிய தத்துவ புரிதலில் அதை எப்படி செய்வது என்று தெரியாமல் தடுமாறியதில் பிழையான, தேவையற்ற பல முன்முடிவுகளை நோக்கி தள்ளப்படுகிறார். உதாரணமாக அசோகமித்திரனின் தார்மீக உணர்வு மேற்கத்திய தன்மை கொண்டது என்று கூறுமளவு சென்றுவிடுகிறார். ஏனெனில் அசோகமித்திரன் தன் கதைகளில் காட்டும் எளிய மனிதன் மேற்கத்திய லிபரல் ஜனநாயகம், வெல்ஃபேர் ஸ்டேட் எல்லாம் உருவாக்கிய மனிதன் என்பது அவருடைய முடிவு. அசோகமித்திரன் பிரவாகத்தை பார்ப்பதில்லை என்று பலமுறை புலம்பும் ஜெயமோகன் அவர் ஒரு புழு நதியைப்பார்ப்பதுபோல நதியின் ஒரு துளியைத்தான் பார்க்கிறார் என்று உருவகம் செய்கிறார். அந்த துளியில் நதியின் பிரம்மாண்டம் தெரிந்தால்கூட பிரவாகம் நிலை மாறுதலாகத்தான் தெரிகிறது என்கிறார். முத்தாய்ப்பாக நவீன கால நகர்புற மத்தியதர வர்க்க குடிமக்களின் சுய வர்க்கக் குரல் என்று அவர் கதைகளை புரிந்துகொள்வதே அவர் படைப்புலகின் வாசல் என்கிறார்.
இது அசோகமித்திரன் கதைகளின் அழகியல் தளத்தை மிக மோசமாக சுருக்கி விடுகிறது. ஜெயமோகனின் பல கட்டுரைகளைப் போல இந்த கட்டுரைக்கும் மறுப்பு எழுதவேண்டும் என்று நினைத்திருந்தாலும் இதுவரை சந்தர்ப்பம் அமையவில்லை.
மேற்சொன்ன இரண்டு தொடர் ஈடுபாடுகள் மூன்று நிகழ்வுகளின் தாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கட்டுரையில் நான் விவாதிக்க விரும்பும் முக்கிய கருத்தாக்கம் அன்றாடம் என்பதாகும்.
ஆங்கிலத்தில் “everyday” என்று குறிப்பிடப்படக்கூடிய அன்றாடம் என்பது என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமான கருத்தாக்கமாகும். தினசரி அல்லது நாள்பாடு என்று சொல்வதற்கு ஒப்பானது என்றாலும், நாள் என்றவுடன் நாம் சூரிய உதயம், அஸ்தமனம் என்ற அடிப்படையில் யோசிப்பதையோ, தினம் என்றவுடன் செயலுடன் இணைத்து யோசிப்பதுபோலவோ அன்றி காலத்தின் மாறுபட்ட பண்பை, பரிமாணத்தை சுட்டுவதாக நான் அன்றாடம் என்ற கருத்தாக்கத்தை உபயோகிக்கிறேன்.. அன்றாடம் என்பது நாட்காட்டியோ, கடிகாரமோ கிடையாது. பேரண்டத்தின் பண்பான ஓயா சலனத்தின் வாழ்வியல் பரிமாணமே அன்றாடம். அது நாம் narrative என்று ஆங்கிலத்தில் கூறும் கதையாடல் வகைகளால் கற்பித்துக்காட்டும் வரலாறு என்பதன் உள் அலகு அல்ல. அதவாது, வரலாற்றை பிரித்துப்போட்டால் கிடைக்கும் துகள்கள் அல்ல அன்றாடம். அது எல்லையற்ற காலத்தின் தளம். அன்றாடத்தின் பரப்பில் உருவகிக்கப்படும் சிறு கோடுகளே வரலாறு, அதன் பிரவாகம் எல்லாம். ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் சில கோடுகள் போட்டு அழித்துவிட்டால் அந்த கோடுகளின் தடம் லேசாக பதிந்திருப்பதை பார்க்கலாம். நாட்பட, நாட்பட அந்த பலகை முழுவதுமே இப்படிப்பட்ட தடங்களால் நிறைந்திருக்கும். அன்றாடம் அந்த பலகை என்றால், அதில் எழுதி அழிக்கப்பட்ட கோடுகளின் மங்கிய தொடர்ச்சியற்ற தடங்களே வரலாறு எனலாம். அசோகமித்திரன் அழகியல் அந்த மங்கிய தடங்களை கொண்ட அன்றாடத்தையே காட்ட முனைவதால் வண்ணங்களாலும், வடிவங்களாலும் நிரம்பிய ஓவியங்களை வரைவதில்லை எனலாம். இதுவே இன்று குறித்த அன்றைய என் விமர்சனத்திற்கான இன்றைய பதில்.
அதேபோல புனைவின் கதையாடலை வரலாற்று கதையாடலுக்கு பதிலீடாக்கும் கலைஞர்கள்தான் நாகார்ஜுனன் விரும்புவதுபோல இலக்கிய பாரம்பர்யம், மரபு போன்றவற்றை பரிசீலிப்பதில் அர்த்தமிருக்கும். அன்றாடத்தின் விரிவில் அதற்கு பெரிய அர்த்தங்கள் ஏதும் கிடையாது. அன்றாடம் ஒரு அணு. அண்டத்தின் சிறு வார்ப்பு.
இதை நாம் புரிந்த கொள்ள அசோகமித்திரனின் “இன்று” நாவலில் ஒலிக்கும் பல கதைசொல்லிக் குரல்களில் ஒன்றினை கவனிக்கவேண்டும். உரைநடையிலிருந்து விலகித்தெரிவதற்காக கவிதையாக வடிவம் கொண்டிருக்கும் இந்த குரல் ஒரு முக்கிய நிகழ்வை கூறுகிறது. தலைப்பு “காலத்தின் நீளம்”. முன்னிரவு நேரத்தில் சென்னையில் சைக்கிளில் செல்லும் ஒருவன் முன் லாரி ஒன்று வருகிறது. இவன் மனதிலும் சுமைகள்; லாரியிலும் சுமை. ஒரு கணம் சைக்கிளை லாரியை நோக்கி திருப்பினால் என்று தோன்ற, கணத்திலும் சிறு பகுதியான கால அணு ஒன்றில் ஏதோவொன்று திருப்பாமல் தடுக்க இவன் அந்த கால அணுவின் இருபதாண்டுகால நீட்சியாக தன்னை பார்க்கிறான். “நானிருக்கும் வரை காலமே அணு” என்று முடிகிறது கவிதை.
இந்த நிகழ்வுப்பதிவு தெளிவாக்குவதைப் போல அசோகமித்திரன் பாத்திரங்கள் தனி நபர்களல்ல; தனி இருப்புகள். சமூகத்தின் துளிகளல்ல; காலத்தின் துளிகள். அன்றாடம் என்னும் கால நீட்சியின் அணுக்களான, நிகழ்வுகளான அவர்களை சமூகத்தின் துளிகளாகவும், சமூக இயக்க சித்தரமான வரலாற்றின் துளிகளாகவும் பார்ப்பதுதான் ஜெயமோகனின் பிழை.
அசோகமித்திரன் அழகியலின் முக்கியத்துவம் அன்றாடத்தின் பிரதிமங்களான அவருடைய பாத்திரங்களை வரலாறாக உருவகம் கொள்ளும் சமூக இயக்கத்தில் வைத்துப்பார்ப்பது. அது அவர்களுக்கு பொருந்துவதில்லை. குழந்தைகளின் ஆடைகளைப் போட்டுக்கொள்ளும் பெரியவர்களைப் போலவோ, அல்லது பெரியவர்களின் ஆடைகளுக்குள் தங்களை நுழைத்துக்கொள்ளும் குழந்தைகள் போலவோ அவர்கள் அபத்தமாக காட்சி தருகிறார்கள். அதனால் ஏற்படும் எல்லா அவஸ்தைகளையும், உபாதைகளையும் கடந்து அவர்கள் வாழ்வியக்கம் கொள்ளும்போது அன்றாடத்தின் மடியில் அமைதியடைகிறார்கள். ஏனெனில் அன்றாடம் என்பதே வாழ்வின் மீது பற்றுதான். அந்த சைக்கிளை ஒரு கால அணுவில் லாரியிலிருந்து திருப்பிய பற்றுதான் அன்றாடத்தின் இன்றியமையாத பரிமாணம். அதே அன்றாடத்தின் காருண்யம்தான் ஐந்தாவது மாடி கைப்பிடிச்சுவரிலிருந்து குதிக்கும் சீதாவின் தலை தரையில் மோதிச் சிதறுவதற்கு ஒரு நொடி முன்னமே அவள் உயிரை பறித்துவிடுகிறது.
அசோகமித்திரன் புதினங்களிலேயே மிகவும் கசப்பான, தீவிரமான அவலச்சுவை கொண்ட எழுத்து என்று இன்று நாவலை சொல்லலாம். அதிலும் சீதாவின் தற்கொலை போன்ற கையறு நிலையின் உச்சத்தை யோசித்துப்பார்ப்பதே கடினம். மனித ஏற்பாடுகளின் குரூரமும், அபத்தமும், அர்த்தமின்மையும், சோகமும், அவலமும் சிறு, சிறு வாழ்க்கைச் சித்திரங்களாக பக்கத்திற்கு பக்கம் திணற அடிக்கும் இந்த நாவல்தான் நெருக்கடி நிலை என்று இந்திய வரலாற்றில் அறியப்பட்ட அரசியல் நிகழ்வின் பதிவு. இது எந்த அரசியலை பேசுகிறது? ஏன் டால்ஸ்டாயினை தொடர்ந்து சுட்டுகிறது? நாவலின் தொடக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கோட்பாட்டாளர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயாவின் அசம்பாவித மரணம் குறித்த குறிப்பொன்று வருகிறது. அவர் பெயரிலுள்ள தெருவினை தேடியலையும் ஒருவனது நினைவாக அதைப் பார்க்கலாம். நாவலின் இறுதியில் ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தொடர்பு கொண்டவர்கள் இருவர் பேசிக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவன், போலீஸ் வன்முறையால் பாதிக்கப்பட்டு, பின்னர் நம்பிக்கையிழந்து இயக்கத்திலிருந்து விலகியவன். 1980 ஆண்டு பொதுத்தேர்தல் முடிந்து இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆவதற்கான சாத்தியங்கள் தென்படும் சூழலில் அவனிடம் மற்றவன் “அர்த்தம்! நாம் தேடத்தேட அது நழுவிக்கொண்டே போகிறது” என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கிச் செல்வதுடன் நாவல் முடிகிறது. உண்மையில் இந்த நாவல் நெருக்கடி நிலை குறித்தது, என்றோ ஆர்.எஸ்.எஸ் குறித்தது என்றோ, ஏதோவொருவிதத்தில் இந்திய அரசியல் வரலாறு குறித்ததோ என்று சொல்லமுடியாது. அமைப்புகள், அதிகாரம், வன்மங்கள், ஆசாபாசங்கள், விபத்துகள், வன்முறை, என்று எந்த ஒரு பிரதேசத்திலும், எந்த ஒரு காலத்திலும் நிகழக்கூடியதாக இந்த சம்பவங்களை மாற்றியமைத்துவிடலாம் என்பதுதான் உண்மை. தலைப்பின் “இன்று” ஒரு கால அணுவாக நிரந்தர நீட்சி கொள்கிறது.
காலத்தை வரலாறாக உருவகிக்கும் பழக்கம், தனி இருப்புகளை தனி மனிதர்களாகவும், சமூக அங்கங்களாகவும் உருவகிக்கும் பழக்கம் ஆகியவை தவறானது என்றெல்லாம் நான் நினைப்பதில்லை. அவ்வாறு உருவகம் செய்த ஹெகல், மார்க்ஸ் ஆகியோரை உரிய மரியாதையுடன் அணுகுவதே என் விமர்சன செயல்முறை. ஆனால், பெர்க்ஸன், ஹைடெக்கர் போன்ற காலத்தினை இருப்பின் (being) மற்றும் உளவாதலின் (becoming) உள்ளார்ந்த விசையாக உருவகிப்பவர்களை மிகுந்த முக்கியத்துவம் உள்ளவர்களாக கருதுபவன். ஹெகலிய, மார்க்ஸீய சிந்தனைகளின் எல்லைகளை கடந்து, மாற்று பரிமாணங்களில் வாழ்வை புரிந்துகொள்ள இவர்கள் அவசியமானவர்கள் என்று எண்ணுபவன். அசோகமித்திரனின் எழுத்தின் அழகியல் பரிமாணம் இவர்களது காலம், இருப்பு குறித்த சிந்தனைகளுக்கு மிகவும் அணுக்கமானது என்ற எண்ணத்தினால்தான் இவர்களை இங்கே சுட்டுகிறேன். இவர்களை அணுகாமல் ஹெகல், மார்க்ஸ் தத்துவ அடிப்படையில் அசோகமித்திரனை அணுகினால் அவர் நதிக்கரை புழுவின் பார்வை கொண்டவராகத்தான் தெரிவார். நதிப்பிரவாகத்தையே ஒரு சிறு புழுவின் அசைவாகப் பார்க்கும் அகண்ட பார்வையின் சாத்தியம் புரியாது போய்விடும்.
முதலில் பெர்கஸனிடமிருந்து சில அம்சங்களை விவாதிப்போம். அவருடைய “பொருளும், நினைவும்” (Matter and Memory) என்ற நூல் மிக முக்கியமானது. அதில் அவர் பிம்பம் (image) என்பதை பிரபஞ்ச இயற்கையின் அடிப்படை அலகாக உருவகிக்கிறார். இது ஜடப்பொருளும் இல்லை, கருத்தும் இல்லை; இரண்டிற்கும் இடையிலான தன்மை கொண்டது என்கிறார். கருத்து என்பதைவிட கூடுதல் உள்ளீடும், பொருள் என்பதைவிட குறைந்த உள்ளீடும் கொண்ட ஒன்று என்று அறுதியிடுகிறார். இந்த பிம்பங்கள் ஓயாமல் தங்களுக்குள் வினைபுரிந்த வண்ணம் இருக்கின்றன. அவை ஒன்றின்மீது ஒன்று செலுத்தும் தாக்கங்கள் பெளதிக விதிகள் ஆகின்றன. இவற்றினிடையே நாம் உயிரி என்று அழைக்கக் கூடிய சில விசேஷ பிம்பங்கள் உருவாகின்றன. இந்த உயிரியின் சிறப்பம்சம் இவை விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே இயங்காமல் தேர்வு என்ற சாத்தியத்தை உருவாக்கிக்கொள்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உயிரியின் உடலில் பிம்பங்கள் செயலாகவும், தோற்றமாகவும் பிரிவதுதான். செயல் தோற்ற பிம்பமாக பிரிந்து உயிரியின் இருப்பில் சேகரமாகிறது. இதுவே நினைவு. அதன் பிறகு உயிரியின் உணர்வுகளை தாக்கும் எந்த பிம்பமும் நினைவுசேகரத்தில் உள்ளதுடன் உடனடியாக ஒப்பீடு செய்யப்பட்டு உடலியக்கம் அதற்கு ஏற்றாற்போல நிகழ்கிறது. ஒருமுறை தீயைத் தீண்டிய குழந்தை அடுத்தமுறை அதை செய்யாது; காரணம் அந்த தீயின் வெம்மை உடலுக்குத் தீங்கானதாக நினைவு சேகரத்தில் பதிவாகிறது. உயிரிகளின் உடல்களில் உள்ள நரம்பணுக்களின் எண்ணிக்கை, ஆற்றலை பொறுத்து நினைவுசேகரம் விரிவடைகிறது.
புலன்கள் தரும் தரவுகளை நினைவுசேகரம் தொகுத்து மனித செயல்களுக்கான களமாக புறவுலகை கட்டமைக்கிறது. மானுட புறவுலகு என்பது மனித நினைவுசேகரத்தின் பொதுப்பண்பினால் பொதுவெளியாக சமைக்கப்படுகிறது. ஒரு சில உடல்களின் புலன் வேறுபாட்டால் (உ-ம்: நிறக்குருடு) சில பேதங்கள் நிகழ்ந்தாலும் பெருமளவில் மனித உயிரிகள் புறவுலகை தங்களுக்கு பொதுவானதாக காண முடிவதால்தான் கூட்டியக்கம் சாத்தியம் ஆகிறது. கூட்டியக்கத்தின் அடிப்படையான குறியியக்கம் அதன் உச்சபட்ச சாத்தியமான மொழி ஆகியவையெல்லாம் உருவாகின்றன.
இந்த நிலையில் மானுட அறிவின் முதிர்ச்சி என்பது செயலின் சாத்தியங்கள் மானசீகமாக பெருகினாலும், உடலின் செயல் என்பதை மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்ந்தெடுப்பதுதான். நினைவுசேகரம் பெருகப் பெருக செயல் என்பது கட்டுப்படுத்தப்படுகிறது. உந்துதலுக்கெல்லாம் கீழ்படிவது மானுட சாத்தியத்தின் கீழ்நிலையாகிறது. சகவாழ்வின் சிறப்பு சகிப்புத்தன்மை என்ற எதிர்வினை தவிர்த்தலாக மாறுகிறது. காலம் என்பது செயல்களின் களமாக சுருங்காமல், நினைவுகளின் களமாக விரிவு கொள்கிறது. எல்லையற்ற கடல்போன்ற மனப்பதிவுகளில் வாழும் நமக்கு உடல் இயக்கம் என்பது இன்றியமையாத செயல்களுக்கு மட்டுமாகவே தேவைப்படுகிறது.
இந்த நிலையை துல்லியமாக பரிசீலிக்கும்போது வெளி என்பது செயலின் களமாகவும், காலம் என்பது மனதின் களமாகவும் பிரிகின்றன. வெளியுடன் பிணைக்கப்பட்ட காலம் அளவிடக்கூடியதாக, நிமிடங்களாக, நாழிகைகளாக, கடிகார சுழற்சியாக செயலினை கணக்கிட்டு நிற்கிறது.
உண்மையான காலமோ மனவெளியில் அளவிட முடியாதபடி விரிகிறது. தீவிரம் மந்தம் என்று பண்புரீதியாகத்தான் இங்கே காலம் பாகுபடுமே தவிர விநாடிகளாக அளவுரீதியாக எண்ணிக்கை கொள்ளாது. வெளியுடன் பிணைக்கப் படாத மனவெளி காலத்தை, இருப்பின் விஸ்தீரத்தை பெர்க்ஸன் காலநீட்சி (duration) என்றும், வெளியுடன் பிணைந்த காலத்தை நேரம் (time) என்றும் பிரித்துக் காண்கிறார்.
இந்த பிரிவை நாம் ஹைடெக்கருக்கு எடுத்துச்செல்லும்போது தனி இருப்பான செயல்பூர்வமான உயிரியை அவர் அங்கிருப்பு (dasein – already there beingness) எனவும், எல்லையற்ற கால வெளியின் விரிவை இருப்பு (Being) எனவும் பிரிக்கிறார் என்று கொள்ளலாம். செயல்வெளி அறிதல் (epistemology) என்பது, எல்லையற்ற விரிவு குறித்த பிரக்ஞையான தோற்றவெளி அறிதல் (ontology) என்பதை பதிலீடு செய்யமுடியாது, செய்யக்கூடாது என்பது ஹைடெக்கரின் முக்கியமான வாதம். அவர் மானுட உயிரிகளின் பொதுவெளி உறவை உடனிருப்பு (middasein – being with) என்று வர்ணிக்கிறார். இடதுசாரி ஹைடெக்கரியர்களுக்கு இணக்கமான கருத்தாக்கம் இது. சமூக இயக்கத்தை உடனிருப்பின் விகசிப்பாக பார்ப்பதே அன்றாடத்தின் தத்துவம். இது உயிரியின் இருத்தலியல் பரிமாணம். மேலும் அங்கிருப்பு, இருப்பினை காலமாக உணர்வது அக்கறை அல்லது கவலை எனப்படும் பந்தத்தால்தான் (sorge, care) என்றும் ஹைடெக்கர் கூறுகிறார்.
இதற்கு மாறாக மானுட கூட்டியக்கத்தை நினைவுசேகரத்தால் சாத்தியமாகும் வரலாற்று பிரக்ஞையாக கணித்து, அந்த பிரக்ஞையின் புரிந்துணர்வு அக உலக, புற உலக இயங்கியல் முரணியக்கத்தில் விளைந்து அவற்றை உள்ளடக்கி நிற்பதாக கற்பிதம் செய்வதே ஹெகலிய வரலாற்றுவாதம். அந்த புரிந்துணர்வுக்கு அடிப்படை கருத்து என்று ஹெகல் நினைத்தார்; பொருள் என்று மார்க்ஸ் கூறினார். ஆனால் இருவருமே இயங்கியல் முரணியக்கம் மானுட புரிந்துணர்வை தொடர்ந்து மேம்படுத்தி, வரலாற்று இயக்கத்தை சாத்தியமாக்கி, அரசின் வடிவத்தை சீரமைத்து சிறந்த சமூக ஒழுங்கையும் இலட்சிய உலகையும் சாத்தியப்படுத்தும் என்ற வகையிலேயே சிந்தித்தனர். புரிந்துணர்வு இருமையின் ஒருங்கிணைவான பிறகு புலன்களின் அக உலக, புற உலக இயக்கத்திற்கு, செயலாகவும், நினைவாகவும் பிரிந்த நிலைக்கு, முக்கியத்துவம் இல்லை என்று இவ்வகை இயங்கியல் முடிவு செய்ததே மகத்தான பிழை எனலாம். சமகால கலை இலக்கிய வெளிப்பாடுகளில் ஆகச்சிறந்தவை மீண்டும் புலன்களின் தர்க்கம் நோக்கி செல்பவையே; அவை புரிந்துணர்வின் மேம்பாட்டு செயல்திட்டத்தில் பயணிப்பவை அல்ல. இந்த வேறுபாட்டை முதலில் கவனம் கொள்வோம்.
வரலாற்றுவாத இலட்சியவாத சிந்தனைகளில் நினைவுசேகரம் நிகழ்வுகளை கதையாடலாக தொகுத்து, காரண காரிய முடிச்சுகளை போட்டு புனைவெழுத்தாகவும், வரலாறாகவும் மாற்றி பிரக்ஞையை மேம்படுத்திக்கொண்டே செல்லும் என்ற கற்பிதம் முக்கியமானது. கதையாடல் என்பது நினைவுசேகரத்தின் இன்றியமையாத உப விளைவு. ஆனால் அதை காரண காரிய தொடர்ச்சியாக வலிந்து மாற்ற வேண்டுமா, அல்லது நிகழ்வுகளின் சிதறலாக அன்றாடத்தின் பெருவெளியில் வைத்து பார்க்க வேண்டுமா என்பதே கேள்வி. இந்த அடிப்படையில்தான் கட்டுரையின் துவக்கத்தில் அன்றாடத்தின் மேற்பரப்பில் தீட்டப்பட்ட கோட்டோவியங்களே வரலாறு என்றும், வரலாற்றின் துளிகளாக அன்றாடத்தை பார்த்துவிடக்கூடாது என்றும் வலியுறுத்தினேன்.
நிகழ்வுகளும் உணர்வூட்டங்களும் உருவாக்கும் புலனியல் தர்க்கமாக உளவாதலை மதிப்பிடும் தெல்யூஸிய பார்வையையும், கதையாடலே அர்த்த உருவாக்க களமாக மாறி காலத்தை கட்டமைப்பதை விவாதிக்கும் பால் ரிகெளரையும் இணைத்து வாசிக்கும் என்னுடைய முயற்சி என்பதே அன்றாடத்திற்கும் அதன் மீது வரையப்படும் வரலாற்று கோட்டோவியங்களுக்கும் உருவாகும் தொடர்புகளை புரிந்துகொள்வதுதான். அந்த முயற்சிக்கு சிறந்த திறப்புகளை வழங்கும் புனைவாகவே நான் “இன்று” நாவலையும், பொதுவாகவே அசோகமித்திரனின் அழகியலையும் காண்கிறேன். அவர் வரலாற்றின் கரையில் செயலற்று ஒதுங்கவில்லை. வரலாற்று மேற்பூச்சினை கடந்து அன்றாடத்தின் பெரும் நிகழ்வுப் பரப்பில் உலவுபவர்.
அசோகமித்திரனின் அழகியலில் நிகழ்வுகள் இறுக்கமாக காரண காரியத்தொடர்ச்சியில் கட்டப்படுவதில்லை. அக உலகும், புற உலகும் தொடர்ந்து முயங்கி செயல்கள் பிரக்ஞாபூர்வமாக வெளிப்படுவதில்லை. மாறாக தற்செயல்களால் வாழ்க்கை நிறைந்துள்ளது. அவற்றில் பல அபத்தமாக உள்ளன. சமூக அமைப்புகளின் வன்முறைகளில் பாதிக்கப்படுபவர்களால் பெரிதாக எதிர்வினை ஆற்றிவிட முடிவதில்லை. ஆனால், அன்றாடத்தின் பெரும்பரப்பில் யாரும் உறவுகளே அற்றுப் போய்விடுவதில்லை. எவ்வளவு மெலிதாக இருந்தாலும் அக்கறைகள் உடனிருப்பை ஆசீர்வதிக்கத்தான் செய்கின்றன. என்ன செய்வது, இவ்வளவுதான சாத்தியமாகிறது மானுடத்திற்கு என்ற கரிசனமும், காருண்யமும் வாசக மனதை நிரப்புகின்றன.
இன்று நாவலின் அத்தியாயங்கள் சித்தரிக்கும் நிகழ்வுகள், கையறு நிலை, நிராசை, நுட்பமான அதிகார வலைப்பின்னலின் சகிக்க முடியாத அழுத்தம் என அவலச்சுவையால் நிறைந்துள்ளன. ஆனால் இவ்வளவு அவலச்சுவையிலும் இந்த நாவல் மனதை நெகிழ்த்தக் காரணம் நாவலின் பின்புலத்தில் அன்றாடத்தின் உயிர்ப்பற்று மங்காதிருக்கிறது. முகம் தெரியாத ஊர்களில் அந்நியர்களுடன் உறவுகள் ஏற்படுவதும், நட்பு ஏற்படுவதும் சாத்தியமாகிறது. எந்த சூழ்நிலையிலும் மனங்களில் ஆசாபாசங்கள், அபிலாஷைகள் நிறைந்துதானிருக்கின்றன. கல்லுக்கள் உயிர்த்துவிடும் தேரையைப் போல எவ்வளவு கடினமான சூழலிலும் வாழ்வை நோக்கிய ஈர்ப்பு துளிர்க்கிறது. தன் மகனுக்கு சொல்லும் அறிவுரையை முகமறியாத அவன் நண்பனுக்கும் சொல்லும் சீக்காளி அம்மாக்கள் இருக்கிறார்கள். “போலீஸிடம் வம்புக்கு போகாதே, கல்யாணம் செய்துகொள்.” அர்த்தத்தை வரலாற்று இயக்கத்தில் தேடி சலிப்புறும் இளைஞர்களின் வீட்டினுள் அந்த சீக்காளி அம்மாவின் அக்கறை உயிர்ப்பற்றின் பேரர்த்தமாக ஒலிக்கிறது.
அன்றாடத்தை குறித்து எழுதியவர்களில் முக்கியமானவர் மிஷல் டி செர்ட்டூ (1925-1986). இவர் செயலின் முக்கிய களமாக அன்றாட வாழ்வை கணித்தார். வரலாற்றுவாதிகள் அன்றாட வாழ்வின் இயக்கத்தை செயலற்ற தன்மையாகவே கருதாவர்கள். அவர்கள் போர்கள், போராட்டங்கள், புரட்சிகள் என்று பெரும் கூட்டுச்செயல்பாடுகள் தேரோட்டமாக மானுடத்தை இழுத்துச்செல்வதாக நினைப்பார்கள், முற்போக்கு, பிற்போக்கு என்று ஆர்ப்பரிப்பார்கள். ஆனால் மக்கள் எல்லா ஆரவாரங்களையும் தங்கள் அன்றாட வாழ்விற்குள் இழுத்துக்கொள்கிறார்கள். உயிரிகளாக ஒருவர் கரங்களை ஒருவர் பற்றிக்கொள்கிறார்கள். ஒரு வரலாற்று அடையாளம் இன்னொரு வரலாற்று அடையாளத்தை அழிக்க வன்முறை வெறிகொள்ளும்போது இவர்கள் சத்தமின்றி மாற்று அடையாளத்திற்கு அடைக்கலம் கொடுத்து காக்கிறார்கள். அன்றாடத்தின் இயக்கம் உயிரின் இயக்கமாக இருக்கிறது. அன்றாடத்தை எழுதுவதும் அவ்வாறே பெரும் ஆரவாரத்தையும் தன் விரிந்த தளத்தில் உள்ளிழுத்துக்கொள்கிறது; ஆற்றுப்படுத்துகிறது.
வரலாற்றுவாதத்திலும், இலட்சியவாதத்திலும் வாழ்வின் உத்தரவாதங்கள் எதுவுமில்லை. அவை அலைகளின் மேற்பரப்பில் நுரைத்து அடங்கும் நீர்போல. அந்த அலைகள் மோதியடங்கும் நிலப்பரப்பாகிய, நெடுந்தோங்கி நிற்கும் கரும்பாறையாகிய அன்றாடத்தில்தான் இருக்கிறது வாழ்வின் உத்தரவாதம். அது தனி இருப்புகளான உயிரிகளை, அவற்றின் உயிர் பற்றுக்களை உறவுகளாக மாற்றித்தருகிறது. எத்தனை வரலாற்று அலை அடித்தாலும் அந்த பற்றும், உறவுகளும் சிதறிவிடாது. இலட்சியம் என்ற பித்தநிலைதான் வாழ்வுக்கு அப்பால் அர்த்தங்களை தேடுகிறது. அன்றாடம் உயிரி வாழ்வின்மீது கொள்ளும் பற்றின் இன்றியமையாமையின் விகசிப்பினை காட்டுகிறது. அசோகமித்திரனின் அழகியல் அந்த அன்றாடத்தின் காட்சிகளே என்று கருதுகிறேன்.