கணிதத்துக்கு அடுத்தபடியாகப் பலரும் வெறுக்கக்கூடிய ஒரு துறை இருக்கிறதென்றால், அது வரலாறுதான். அதிலும் வரலாற்று ஆய்வு நூல் என்றால், அதைத் தூக்க மாத்திரைக்கு ஒரு நல்ல மாற்றாக மட்டுமே பலர் பயன்படுத்த விரும்புகிறார்கள். அலுப்பூட்டும் மொழி, முடிவற்று விரிந்து செல்லும் வறட்டுத் தகவல்கள், கரடுமுரடான கருத்தாக்கங்கள் என்று வாசிப்பைச் சோர்வடையச் செய்யும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டிருக்கும் ஒரு நூலை யார்தான் விரும்பியெடுத்து வாசிப்பார்கள்? வேறு வழியில்லாத மாணவர்களையும் அது ஒன்றையே வேலையாக வைத்திருக்கும் ஆய்வாளர்களையும் தவிர்த்து?
பரவலாக இருக்கும் இந்தச் சலிப்பை மாற்றக்கூடிய திறன் பெற்றவை ஆ.இரா. வேங்கடாசலபதியின் எழுத்துகள். கனமான ஆய்வுகளை எளிமையான மொழியில் அவரால் முன்னெடுக்க முடிகிறது. அதிக வரலாற்றுப் பரிச்சயமில்லாத எளிய வாசகர்களும் துறை சார்ந்த நிபுணர்களும் ஒருங்கே வாசித்து மகிழக்கூடிய வகையில் அவரால் எழுதிச்செல்லவும் முடிகிறது. சமகாலத் தமிழுக்கு இந்தக் கூட்டணி மிகவும் புதிது. இலக்கியம், வரலாறு ஆகிய இரு துறைகளிலும் வலுவாகக் காலூன்றி நிற்க முடிவதால்தான் வேங்கடாசலபதியின் ஆய்வுமொழி ஆற்றல்மிக்க செழிப்புடன் தனித்து நிற்கிறது. இந்த ஆய்வுமொழியை மட்டுமல்ல, இத்தகைய ஆய்வுப் போக்கையும் நவீன தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களில் முக்கியமானவராக அவரைச் சொல்ல முடியும். இந்த இரண்டையும் கொண்டிருக்கும் ‘அந்தக் காலத்தில் காபி இல்லை’ அந்த வகையில் ஒரு திருப்புமுனை நூல்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிவரும் வேங்கடாசலபதியின் சமீபத்திய நூல்களில் ஒன்று, ‘ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள்’. இதில் காந்தியைப் பற்றி முதல் முழுநீள ஆவணப்படத்தை எடுத்த ஏ.கே. செட்டியாரும் இருக்கிறார்; ‘நீண்ட 19-ம் நூற்றாண்டு’ குறித்த புகழ்பெற்ற தொடர் வரிசை நூல்களை எழுதிய மார்க்சிய வரலாற்றாசிரியரான எரிக் ஹாப்ஸ்பாமும் இடம்பெற்றிருக்கிறார். அதிகம் அறியப்படாத அல்லது விவாதிக்கப்படாத ஆளுமைகள் நேர்த்தியான முறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். சென்னைத் தொழிற்சங்கத்தின் வரலாற்றை எழுதிய வீரராகவன், ‘தோழர் ஸி.எஸ்’ என்று அழைக்கப்படும் கோமல் சுந்தரம் சுப்பிரமணியம் இருவரையும் நெருக்கத்தில் அறிந்தவர் என்பதால், அவர்களைப் பற்றிய வேங்கடாசலபதியின் கட்டுரைகள் இந்த இருவரையும் பற்றிய முதல் விரிவான அறிமுகங்களாக இருக்கக் கூடும்.
நன்கு அறியப்பட்ட ஆளுமைகளையும்கூட இதுவரை அணுகாத கோணத்தில் அல்லது இதுவரை பதிவு செய்யப்படாத புதிய தகவல்களுடன் அறிமுகப்படுத்துகிறார் வேங்கடாசலபதி. ஜி.யு. போப், எல்லீசன் என்னும் எல்லீஸ், உ.வே.சாமிநாத அய்யர், வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோர் குறித்த சித்திரங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை.
சுவாரஸ்யமான கள ஆய்வுகளும் இருக்கின்றன. ஜி.யு.போப்பின் கல்லறையில் ‘நான் ஒரு தமிழ் மாணவன்’ என்னும் குறிப்பு எழுதப்பட்டிருப்பதாகப் பலரும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே அப்படியொரு குறிப்பு இருக்கிறதா என்னும் கேள்விக்கு விடை காண அவருடைய கல்லறையைத் தேடிச் சென்றிருக்கிறார் சலபதி. அப்படியொரு குறிப்பு அங்கு இல்லை என்பதைக் கண்டறிந்து பதிவுசெய்திருப்பதன் வாயிலாக, ஒரு பிழையான புரிதலைத் திருத்தியிருக்கிறார். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் ஏன் காலம் காலமாக இப்படியொரு செய்தி சொல்லப்பட்டுவந்தது என்பதற்கான காரணங்களையும் ஆராய்கிறார்.
இதைவிடவும் மேலான இன்னொரு துப்பறியும் சாகசம், புத்தகத்தின் தலைப்பாக இடம்பெற்றுள்ள கட்டுரை. வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டவர் என்பது போக வேறு எந்தத் தடயத்தையும் விட்டுச்சென்றிராத ஆஷ் என்னும் பிரிட்டிஷ் ஐசிஎஸ் அதிகாரியைத் தேடி அயர்லாந்தின் தலைநகரம் டப்ளின் செல்கிறார் சலபதி. ஆஷின் உறவினர்களுடனான அவருடைய சந்திப்பும் உரையாடலும் உணர்ச்சிபூர்வமான ஒரு கடந்த காலத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. திருநெல்வேலியிருந்து டப்ளினுக்கும் தூத்துக்குடியிலிருந்து பாளையங்கோட்டைக்கும் பயணக் குறிப்புகளிலிருந்து ஆஷின் மனைவிக்கு எழுதப்பட்ட கடிதங்களுக்கும் மாறி மாறிப் பயணிக்கிறது ‘ஆஷ் அடிச்சுவட்டில்...’ என்னும் கட்டுரை. சந்தேகமில்லாமல் இந்த வகை எழுத்து தமிழுக்குப் புதிது. அது அளிக்கும் வாசிப்பனுபவமும் புதிதுதான்.
ஆஷ் குறித்தும் வாஞ்சிநாதன் குறித்தும் எந்தத் தேடலை எவர் முன்னெடுத்தாலும், அவர் இந்தக் கட்டுரையையே தனது அடித்தளமாகக் கொள்ள வேண்டியிருக்கும்.
மொத்தத்தில், அனைவரும் வரவேற்று, கொண்டாடவேண்டிய முக்கியமான தொகுப்பு, ‘ஆஷ் அடிச்சுவட்டில்’. இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் வரலாற்றை ஒரு புதிய கண் கொண்டு பார்க்கவும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருங்கிச் சென்று நேசிக்கவும் செய்வார்கள் என்பது உறுதி.
(நன்றி: தி இந்து)