1950களில் அம்பேத்கரிய லட்சியவேகத் தோடு செயற்படவந்த தலித் செயற் பாட்டாளர் ஒருவரின் கடைசிக்கால எண்ணங்களை அண்மையில் களஆய்வொன் றின்போது தெரிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டது. அதுவரையிலும் தான் ஏற்றிருந்த நம்பிக்கைகளுக்குச் சமூகமும் குடும்பமும் நெருக்கடி தருவதாக மாறியபோது அவற்றோடு சமரசம் காணவேண்டி வந்ததை எண்ணி அவர் பலகாலம் புழுங்கினார். படித்துப் பெரிய ஆளாக வருவதும் சமூக மேம்பாடுதான் என்று கருதிவந்த அவரின் மகன் முழுநேரக் குடிகாரராய் மாறிப்போனதைப் பார்த்து அவனுக்குப் படிக்கக் கிடைத்த மருத்துவ சீட், அதே ஒதுக்கீட்டில் வேறொரு தலித் மாணவனுக்குக் கிடைத்திருந்தால் அந்த வேறொருவரின் குடும்பத்திற்காவது வழி பிறந்திருக்குமே என்று சொல்லிச்சொல்லிக் கடைசிவரை வருத்தப்பட்டிருக்கிறார். லட்சியவாத முனைப்போடு செயல்படும் பலருக்கும் காலமாற்றம் சார்ந்து ஏற்படும் முரண் இது. அழகிய பெரியவன் எழுதியிருக்கும் ‘வல்லிசை’ நாவலை படித்து முடிக்கும்போது அவைதான் என் நினைவுக்கு வந்தன. லட்சியவாதத்தோடு செயற்பட வந்தவர்கள் அவற்றின் எதிர்மறை விளைவுகளையும் வாழ்க்கை நடைமுறை தரும் அழுத்தங்களையும் ஒருசேரச் சந்திக்கும்போது ஏற்படும் முரணொன்றின் பின்னணியை வைத்து விவரிப்பதோடு நாவல் முடிகிறது. அம்பேத்கரியம் என்னும் நவீன அரசியல் வட எல்லையோரத் தமிழகத்தில் உருவாக்கிய ஒரு நூற்றாண்டு வரலாற்றின் பின்னணியில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. பேசப்படாத வரலாறு என்று சொல்லப்பட்டுவிட்டாலே அளவிற்கதிகமான புகழாரங்கள் பெருகும் இக்காலத்தில் வடதமிழக தலித்துகளின் அரை நூற்றாண்டுப் போராட்ட வரலாற்றைப் பேசும் இந்நாவல் பேசப்படாமலேயே விடப்பட்டிருப்பது வியப்பளிக்கிறது.
வடதமிழக எல்லையோரக் கிராமமொன்றிலிருந்து 1945ஆம் ஆண்டில் தொடங்கி 1990களில் நாவல் முடிகிறது. ராவணேசன், திருவேங்கடம், சமநீதியரசு என்று தந்தை, மகன், பேரன் என்கிற பாத்திர வார்ப்புகளின் வழியாகக் குறிப்பிட்ட காலவரலாறு புனைவின் மொழியில் உருக்கொள்கிறது. 1945க்கு முன்பு அதாவது 1942ஆம் ஆண்டு தான் அம்பேத்கர் All India Scheduled Caste Federation (AISCF) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்ட அகில இந்திய பட்டியலின வகுப்பார் கூட்டமைப்பை நிறுவியிருந்தார். இப்போதும் வடஆற்காடு பகுதிகளில் பழைய அம்பேத்கர்வாதிகளை பெடரேஷன்காரர் என்று குறிப்பிடும் வழக்கு உண்டு. அம்பேத்கர் ஏற்கெனவே தமிழ்ப்பகுதியில் அறிமுகமாகியிருந்தாலும் 1936ஆம் ஆண்டு சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கி செயற்பட்டிருந்தாலும் அவரின் தலைமையிலான தலித்தியச் செயற்பாடுகள் அழுத்தம்பெற்றது இந்த 1940களின் பெடரேஷன் அமைப்பின் கீழ்தான்.
தலித்துகளோடு பிறரையும் இணைத்துச் சுதந்திரா தொழிலாளர் கட்சியை நடத்தியதில் ஏற்பட்ட அனுபவம், இந்திய அரசியல் சூழலில் ஏற்பட்டுவந்த புதிய மாற்றங்கள் ஆகியவற்றின் பின்னணியில் தீண்டப்படாத வகுப்புகளாக வரையறுக்கப்பட்டிருந்த சாதிகளை ஒருங்கிணைத்துத் தேசிய அளவில் (AISCF) என்ற இந்த அமைப்பை அம்பேத்கர் உருவாக்கியிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களை எண்ணிக்கைப் பலமுடையவர்களாக ஒருங்கிணைத்த இந்த அமைப்பு இந்திய சுதந்திரம், அதற்குப் பிந்திய செயல்முறைகள் பற்றிய பேச்சு எழுந்துவந்த நிலையில் தலித்துகளுக்கான அழுத்தக்குழுவாகத் தன்னை இருத்திக்கொள்ள முயன்றது. இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் அமைப்பு மேற்கொண்ட கள அளவிலான உள்ளூர்ப் போராட்டங்களும் புரிதலும் முக்கியமானவை. தலித்துகள்மீது திணிக்கப்பட்ட இழிஅடையாளங்களையும் தொழில்களையும் கைவிடுதல், மீறித் திணிக்கப்படும்போது எதிர்த்துப் போராடுதல், அதற்கு ஆதரவாக சட்டவாதத்தின் துணையைக் கோரல் என்ற வேலைத்திட்டங்கள் இந்த அமைப்பின் கீழ் வலுப்பட்டன. சாதி எதிர்ப்பு அரசியலுக்கும் இச்செயல் முறைகளுக்கும் இருந்த தொடர்பை இம்முன்னோடிகள் புரிந்துகொண்டிருந்த விதம் நுட்பமானது. அதாவது, இழிமரபுகளை மறுக்கும் இடத்தில் அதற்கு மாற்றாகக் கல்வி வேலைவாய்ப்பு, அவற்றிற்கான இடப்பெயர்ச்சி என்கிற நவீனகால வாய்ப்புகள் மூலம் சுயமரியாதை அடைவதைச் சாதி எதிர்ப்பு அரசியலின் வழிமுறையாகப் புரிந்திருந்தனர். குடியிருப்பு அமைவிடம், தொழில், கடமைகள் சார்ந்து உள்ளூர் அளவில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் இடம் சாதியடிப்படையிலானது. இவற்றை மரபு, தொன்மை, நம்பிக்கை ஆகியவற்றோடு தொடர்புபடுத்திவிடும்போது அது பண்பாடு தொடர்பானதாகவும் ஆகிவிடுகிறது. இந்நிலையில் இந்த வரையறைகளை மறுப்பது சாதி எதிர்ப்பாக மட்டுமல்லாது பண்பாட்டு அதிகார எதிர்ப்பாகவும் மாறுகிறது. இதனால்தான் இன்றளவும் சாதாரண இழிதொழில் மறுப்புகூட கடும் வன்முறையோடு எதிர்கொள்ளப்படுகிறது.
AISCFஇன் இத்தகைய வேலைத் திட்டங்களோ இழிதொழில் மறுப்பின் உள்ளூர் அனுபவங்களோ நவீன தமிழக வரலாற்றில் சிறுகோடாகவும் பதிவு பண்ணப்படாதவை. உருப்பெற்றிருக்கும் இன்றைய தலித் வரலாறு என்னும் வகைமையினுள்ளும் கூட இதுவரை இவை இடம்பெறவில்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும் ஆதாரங்களின் போதாமை பிரதான காரணம். இப்போராட்டங்களின் தன்மை அப்படிப்பட்டவை. ஒரு பேரளவிலான அமைப்பு, தொடர் பிரச்சாரம் செய்து திரட்சியோடும் அதிகார நோக்கத்தோடும் செய்த போராட்டங்கள் அல்ல இவை; நுண் அளவிலானவை. தலித்தாகிய ஒருவரின் ஒவ்வொரு தருணமும் சாதியமைப்பின் விளைவினால் ஆனவை என்ற முறையில் இயக்கமாக மாறாவிட்டாலும் இந்த இழிதொழில் மறுப்பை உள்ளூரளவில் ஒவ்வொரு தலித்தும் ஏதோவொரு வகையில் தன்னளவில் நிகழ்த்தியபடியே இருக்கிறான். மரபார்ந்த கிராம அமைப்பின் பிரதான நம்பிக்கையையே மறுக்கிறான் என்ற முறையில் தலித்துகள் சந்திக்க நேரும் இழப்புகள் நுட்பமானவை. அரசியல் போராட்டங்களில் நிர்ப்பந்திப்பதற்கும் பொறுப்பேற்பதற்கும் அங்கு அரசு என்றொரு வடிவம் இருக்கிறது. ஆனால் தலித்துகளின் போராட்டங்களோ சமூக அமைப்பை நோக்கியவை. இவற்றில் அவர்கள் பொருளாதார இழப்பை மட்டுமல்ல வாழ்வாதாரத்தையேகூட இழக்கின்றனர். பண்பாட்டு நம்பிக்கைகளுக்கு எதிரான இப்போராட்டங்கள் வர்க்கப்போராட்டங்கள் போன்று நேரடி வயிற்றுப் பிரச்சினையாக இல்லாததால் கவனத்தை ஈர்ப்பவையாகவும் இருந்ததில்லை. பறையடிக்க மறுப்பது, பிணக்குழி தோண்ட மறுப்பது போன்றவை ஓரிடத்தில் நடப்பவையுமல்ல. கிராமம் கிராமமாக நடக்கவேண்டியவை. எனவே இது ஒருநாளில் நடந்துவிடுகிற போராட்டமாகவும் இருப்பதில்லை. தொடர் நடைமுறையாக இருப்பதால் இவற்றில் பெரும்பாலும் பொதுத்தலைமையும் இருப்பதில்லை. ஊருக்குஊர் தலைமைகள் உருவாகிவிடுகின்றன; அல்லது இழிவுமறுப்பில் ஈடுபடும் ஒவ்வொருவருமே போராளியாகிவிடுகின்றனர். எனவே இப்போராட்டங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பதிவுகள் உருவாகி ஆதாரங்களாக நிலைபெறவில்லை. எனவே இப்போராட்டப் பின்னணியைத் தகவல் குறிப்புகளோடு வரலாற்று நூலில் எழுதுவதைக் காட்டிலும் புனைவில் விவரிப்பதற்கான சாத்தியமே அதிகம். பல்வேறு அனுபவங்களைக் குறிப்பிட்ட பாத்திர வார்ப்புகளின் மேலேற்றி உருவகப்படுத்த வேண்டியிருக்கிறது. இப்பின்னணியில்தான் வல்லிசை என்ற இந்நாவலின் வாசிப்பு அமைகிறது.
வல்லிசையை வாசிக்கும்போது இரண்டு பின்னணிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஒன்று, அண்மைக்காலத் தமிழ் நாவல் போக்குகள் சார்ந்தவை. தொண்ணூறுகளில் அடிக்கத் தொடங்கிய கோட்பாட்டு அலை சற்றே ஓய்ந்து தமிழில் எதார்த்தவாத நாவல்களே மீண்டும் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. தலித் இலக்கிய வருகையை உட்பக்கம் காணும் வகையில் இனவரைவியல் நாவல்களும் சமூக வரலாற்றை உள்ளீடாகக்கொண்ட நாவல்களும் குறிப்பிடத்தக்க அளவில் வெளிவந்திருக்கின்றன. இரண்டாவதாக, தலித் வரலாறு பற்றிய ஓர்மையைச் சொல்ல வேண்டும். அயோத்திதாசர் எழுத்துகளின் தொகுப்பு, இதழ்கள் - ஆவணங்கள் - பேச்சுகள் ஆகியவற்றின் தொகுப்புகள், வரலாற்றை நேர்செய்தல் - மொழிதல் - மறுவிளக்கம் என்கிற அணுகுமுறைகள் போன்றவற்றை இவற்றுள் அடக்கலாம்.
இவ்விரண்டு போக்குகளில் தொடர்ச்சியிலேயே இந்நாவலை வாசிக்க வேண்டியிருக்கிறது. 20ஆம் நூற்றாண்டு தலித் தலைவர்களின் பெயர்கள், நடத்திய போராட்டங்கள், இதழ்கள், வரலாற்றுச் சம்பவங்கள் நேரடியாகவும் புனைவாகவும் ஆண்டு உள்ளிட்ட தகவல் பின்னணியோடு நாவலில் கையாளப்படுகின்றன. அதேவேளையில் அண்மிய ஆவண நாவல்கள் பின்னோக்கிச் சென்று வரலாற்றை மரபில் தேடுவதாக இருக்கும் நிலையில் இந்நாவல் துண்டித்துக்கொள்ளும் ஆர்வத்தோடு போராடிய தலைமுறையின் அரசியலைப் பேசுகிறது. மேற்கண்ட நாவல்களின் கதையாடல்கள் சமயங்களில் சாதியமைப்பில் தங்களுக்கொரு இடம்தேடும் அபாயத்தை நெருங்கிவிடுகிற நிலையில், இந்நாவல் சாதியை ஒழிக்க வேண்டும் என்ற நவீனகால நம்பிக்கையைக் கைக்கொண்டிருந்தவர்களின் அரசியலைப் பேசுகிறது; இது ஒரு புது வகைமை.
தமிழில் தலித் இலக்கிய வகைமை என்ற அடையாளம் தோன்றியது முதலே, அது பெரும்பாலும் அம்மக்களின் துயரங்களையும் இழிவுகளையும் மட்டுமே பேசி வந்திருக்கிறது என்பது அதன்மீது உள்ளும்புறமும் இருந்துவரும் விமர்சனம். தலித் இலக்கியத்திற்கு ஆங்கிலவுலகச் சந்தை கிடைத்தமைக்கு இதுவே முக்கிய காரணமென்றும் அந்த விமர்சனம் நீண்டது. தங்கள் அவலங்களை எடுத்துரைப்பதன் மூலம் பொதுவாசகருக்குக் குற்றவுணர்வை உருவாக்குவதாக அது சொல்லிக்கொண்டாலும் ஒடுக்குகிறவன் என்கிற மறைமுக அதிகாரத்தை ஒடுக்குகிறவர்களுக்கே அளிப்பதற்கு அது வழிவகுத்து விடுகிறது என்பதும், இழிவோ கழிவிரக்கமோ பொதுஉளவியலுக்கு எந்தத் தொந்தரவையும் தராமல் அவரவர் இடத்தை அவரவர்க்கென்றே தாரை வார்க்கிறது என்பதும் தலித் இலக்கியம்மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு. இவ்வாறான விமர்சனங்கள் இந்த முனை என்றால், தலித் என்று வகைப்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஒடுக்குமுறைகளோ அவலங்களோ இருந்ததே இல்லையென்பது மற்றொரு முனையாக வெளிப்படுகிறது. இவ்விரண்டு தரப்பு வாதத்திலும் பிரச்சனை இருக்கிறது. அதே வேளையில் தலித் இலக்கியம்பற்றி வெளிப்பட்ட விமர்சனங்களில் உண்மை இல்லாமலும் இல்லை.
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எந்த சாதிக்கும் ஒரே தன்மை இருந்திருக்காதபோது தலித் சாதிகளுக்கு மட்டும் நிரந்தரமான இழிவுகளோ பெருமையோ இருந்திருக்க நியாயமில்லை. ஆனால் திரும்பத்திரும்ப அவலங்களை மட்டுமே பேசும்போது அதுவே அவர்களின் நிரந்தரப் பண்பாகவும் வாழ்வின் வேறு அங்கங்கள் இல்லாதவர்களாவும் ஆக்கப்பட்டு மாறிவிடுவதைப் பார்க்கிறோம். இழிவை யாரும் விரும்பி ஏற்றுக்கொள்வதுமில்லை; அதிலேயே தொடர்ந்திருக்க விரும்புவதும் இல்லை. தங்கள் மீதான இழிவை மறுக்கவும் மற்றவர்போல் மதிப்புமிக்க வாழ்நிலையை அடையவும் சாதி அதிகாரத்திற்கு எதிராக இயல்பான மீறல்களையும் ஓர்மையோடு கூடிய அரசியல் விழிப்புணர்வையும் தலித்துகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். இப்பயணத்தில் பலமும் பலவீனங்களும் இருந்திருக்கலாம் என்பது வேறு.
இந்நிலையில்தான், தலித் இலக்கியம் பற்றிய இக்குற்றச் சாட்டைத் தலித் இலக்கியம் என்ற அடையாளத்தை மறுக்காமலேயே ‘வல்லிசை’ நாவல் எதிர்கொள்ள முயன்றிருக்கிறது. சாதி அதிகாரத்திற்கு எதிரான தலித்துகளின் போராட்ட மரபையும் அவர்தம் வாழ்க்கை முறையில் விரவிக்கிடக்கும் தனித்தன்மை கொண்ட அடையாளங்களையும் ஒருசேர இந்நாவல் பேசியிருப்பதை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடிகிறது. அதே வேளையில் இவ்விரண்டு போக்குகளையும் புனைவின் மொழியில் சாத்தியமாக்குவதில் அழகிய பெரியவன் எந்த அளவிற்கு முன்னகர்ந்திருக்கிறார் என்று ஆராய்வது மற்றொரு விஷயம். ஆனால் அவர் அத்திசையில் நடந்திருக்கிறார் என்பதே இங்கு குறிப்பிட வேண்டியது. பெருமைகளை மட்டுமே எழுத்தாக்கும் சாதி வரலாறுகள்போல் எழுதப்பட்டால், அது வாழ்வின் குறுக்குவெட்டு நோக்கில் அமையும் புனைவாக இருக்க முடியாது. இந்நாவல் போராட்டங்களின், போராட்டத் தொடர்ச்சியின் வெற்றியை மட்டுமே பேசவில்லை. அவ்விடத்தில்தான் தன்னைப் படைப்பூக்கம் கொண்ட பிரதியாக இது மாற்றிக்கொள்ள முனைகிறது.
1945இல் திருவேங்கடத்தை அவன் தந்தை ராவணேசன் மேற்படிப்புக்கு இட்டுச்செல்லும் தருணத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அவ்வட்டாரத்தில் அம்பேத்கரிய அரசியலின் தொடர்பில் இயங்கிவரும் சிவமலை சிபாரிசின் மூலம் திருவேங்கடம் படிக்க சென்னைக்குச் செல்லுகிறான். அப்பாவின் பணிகள்பற்றி அதுவரை மங்கலாகத் தெரிந்திருந்த திருவேங்கடத்திற்குச் சென்னையில் உருவாகும் தொடர்புகள் மூலம் அரசியல் பார்வை கிட்டுகிறது. நகரத்திலிருந்து மீண்டும் கிராமத்திற்குத் திரும்பும்போது அப்பாவின் பாதையைப் புரிந்துகொள்வதோடு தானும் அவ்வழியையே தேர்ந்தெடுக்க விரும்புகிறான்.
தலைவர் சிவமலையோடு சென்று சாதிப் பிரச்சினை யொன்றை எதிர்கொள்ளும்போது ஏற்படும் கலவரத்தில் தந்தை ராவணேசன் இறந்துபோனதும் தந்தையின் இடத்திற்குத் திருவேங்கடம் நகர்ந்து சிவமலையோடு நெருக்கமாகிறான். அதற்கிடையே அம்மா, பிழைப்பு, கல்யாணம், குழந்தைகள் போன்றவையும் அவனைச் சூழ்ந்துகொள்கின்றன. இருத்தலுக்கும் லட்சியத்திற்கும் இடையே அவன் ஊடாட்டம் நடத்த பழகிக்கொள் கிறான். இந்நிலையில் பால்யத்திலிருந்து பழகிவந்த சிவலிங்கத்திற்கும் அவனுக்குமிடையே உருவாகும் மனக்கசப்புதான் கதையாடலினுள் உருவாகும் முரணாக இருக்கிறது. திருவேங்கடம் நகரம் சென்று படித்தவன், சாதியை அதை அடையாளப்படுத்தும் அம்சங்களைக் கைவிடக் கோருபவன். கொள்கை இங்கு எதார்த்தத் தோடு கருணையின்றி முரண்படுகிறது. சிவலிங்கம் படிக்காமல் ஊரிலேயே இருப்பவன். மேளம் அடிப்பதன் மூலம் வாழ்வாதாரம் பேணுபவன். சிவலிங்கத்திற்கும் திருவேங்கடத்திற்கும் ஆன முரண் முற்றுவதற்கான வாய்ப்புகள் காலப்போக்கில் புதிய சூழ்நிலைகளால் அதிகரிக்கின்றன. திராவிடக் கட்சிகளின் கவர்ச்சி அரசியல், உடனடி லாபம் தராத உள்ளூர் அளவிலான கிடைமட்ட அரசியலைப் பின்னுக்குத் தள்ளுகின்றன. குறிப்பாக சிவலிங்கம், எம்ஜிஆர் ஆரம்பிக்கும் கட்சியில் நிர்வாகியாகிறான். ஆனால் மறுபுறத்தில் திருவேங்கடம் ஜெயில் கேஸ் என்று அல்லாடுகிறவனாகிறான்.
திருவேங்கடம் களஅரசியலுக்குள் பிணைக்கப்படும்போது அது அவனுக்குப் பௌதிகரீதியான உறவாக மாறுகிறது. மேளமடிக்க மறுத்தல், இரட்டைத் தம்ளர் மறுப்பு, செத்த மாடு அகற்ற மறுத்தல் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாதென்று கிராமங்கள்தோறும் தீர்மானங்கள் நிறை வேற்றப்படுகின்றன. அவற்றை ஏற்பதிலும் மறுப்பதிலும் உள்ளூரின் பல்வேறு அனுபவங்கள் நிழலாடுகின்றன. ஏற்கமறுக்கும் ஊர்களில் திருவேங்கடம் தலைமையிலான குழுவினர் நேரடிக் கிளர்ச்சியிலும் ஈடுபடுகின்றனர். திருவேங்கடம் மீதான உள்ளும்புறமுமான பகை வளர்கிறது. கலவர வழக்கொன்றில் சிக்கவைக்கப்படும் அவர் தலைமறைவாகிறார்; குடும்பம் சிதறுகிறது. இறுதியில் குடும்ப வலியுறுத்தல் காரணமாக மகனின் பஞ்சாயத்துத் தேர்தல் வெற்றிக்காக ஆதிக்கசாதியினரிடமே அவர் போய் நிற்பதோடு நாவல் முடிகிறது.
வடதமிழக எல்லையோர மாவட்டங்களின் நிலப் பரப்பைத் தமிழ் புனைகதைப் பரப்பிற்குள் கொணர்ந்தவர் அழகியபெரியவன். இந்நாவலில் அதே போன்று கவனம் பெறாத அவ்வட்டாரத்தின் தலித் அரசியல் போராட்ட மரபைப் பேசியிருக்கிறார். வட்டார மொன்றின் அரசியல் போராட்டத்தைச் சொன்னாலும் அதில் ஈடுபடும் மனிதர்களை அது பாதிக்கும் விதமும் அவற்றை மனிதர்கள் எதிர்கொள்ளும் விதமும் வாழ்வின் எந்த விசயத்திற்கும் பொருந்தக்கூடியனவாகவே இருக்கின்றன. லட்சியவாதத்திற்கும் எதார்த்தத்திற்கும் இடையே ஆன பழைய சங்கதியையே பேசுகிறதெனினும் மனித வாழ்வின் எப்போதைக்குமான எப்பகுதிக்குமான பிரச்சினை என்ற வகையில் இந்நாவலும் அதையே விவாதிக்கிறது. இது நன்கு திட்டமிடப்பட்டு எழுதப்பட்ட நாவல். ஒருபுறம் வரலாற்றுத் தகவல்கள், மறுபுறம் அதற்கான புனைவுமொழி என்கிற கவனத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. அதே சமயம் வரலாறாக மாறிவிடக் கூடாது என்ற ஓர்மை படைப்பாளிக்கு இருந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. பாரம்பரிய அடையாளங்களைச் சுமையாகக் கருதும் பாத்திரங்களை நாயகர்களாகக் காட்டும் நாவலாசிரியர் புனைவுவெளிக்குள் புழங்க விரும்பும்போது கிராமம், அங்கு புழங்கிவரும் மரபுகள் ஆகியவற்றில் தஞ்சம் கொள்வதென்பது பிரதியை அரசியலாக மட்டுமே சுருக்கிவிடாத ஓர்மையைப் பின்பற்றியிருக்கிறார். கடந்த ஒரு நூற்றாண்டு தலித் வரலாறு தொடர்பான விவரணைகளைத் தொகுத்துக் கதைப்பரப்பில் உலவவிடும் பிரதி அதற்கிணையாகக் காட்டுப்பாட்டு, காமன்கூத்து பாட்டு, சாவுப்பாட்டு, மேளமடிக்கும் முறை, விழாக்கள் போன்ற உள்ளூர் மரபுகளையும் தொகுத்துக்கொண்டிருக்கிறது. இந்த வரலாறு, புனைவு என்கிற எதிர்நிலைகளை நாம் நவீனம், மரபு என்றும் புரிந்துகொள்ளலாம். இவ்விரண்டுக்குமான ஊடாட்டத்தில் எது துருத்துகிறது அல்லது பிணைகிறது என்ற ஆராய்ச்சியை இலக்கியவாணர்களின் கவனத்திற்கு விட்டுவிட்டு இந்நாவலின் அரசியல் முக்கியத்துவத்தை மதிப்பிட முயலலாம்.
தலித் போராட்ட வரலாற்றுப் பதிவுகள் நாவலெங்கும் இறைந்துகிடக்கின்றன. ராவணேசனுக்கும் திருவேங்கடத்திற்கும் அரசியல் வழிகாட்டியாக வரும் சிவமலை பாத்திரம் வடஆற்காடு பகுதியில் செல்வாக்குமிக்க தலித் தலைவராக விளங்கிய பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமியே ஆவார் என்று தெரிந்துவிடுகிறது. ஊர்ப் பெயர், அடையாளம், போராட்டங்கள் போன்றவை அவரைத் தெளிவாகச் சுட்டுகின்றன. குறிப்பாகக் கோயில் நுழைவு தொடர்பாகக் காந்தியை அவர் சந்தித்தமை நாவலில் அப்படியே இடம்பெற்றிருக்கிறது. பலரையும் சொந்தப் பெயரில் குறிப்பிட்டிருக்கும் நாவலாசிரியர் கிருஷ்ணசாமிக்கு மட்டும் சிவமலை என்று மாற்று பெயரிட்டிருக்கிறார். அதற்கான காரணங்கள் எவையாக இருப்பினும் அது சரி என்றே தோன்றுகிறது. சிவமலை போன்றே ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ளூர்த் தலைவர்கள் இருந்த அனுபவங்கள் உண்டு. இப்போது போய்த் தேடினாலும் அவ்வாறானவர்களைக் கண்டுவிட முடியும். இந்நிலையில் தலைவர் என்பதைக் கிருஷ்ணசாமி என்ற நேரடியான வரலாற்றுப் பாத்திரத்திற்குள் அடைத்துவிடும்போது அது ஒற்றையாக உறைந்து போகவே வாய்ப்பிருக்கிறது. மாறாக சிவமலை என்கிற புனைப் பெயருக்கு மாற்றும்போது அவ்விடத்தில் போராளிகள் யாவரையும் பொருத்திக்கொள்ள முடிகிறது. இது நாவலின் மூன்று பாத்திரங்களுக்கும் பொருந்துகிறது. சிவமலை, ராவணேசன், திருவேங்கடம் என்கிற பாத்திரங்களை இக்காலகட்டத்தில் இதுபோன்று செயல்பட்ட பல்வேறு ஆளுமைகளின் கூட்டு உருவகங்களாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. நாவலில் எவரும் கற்பனைப் பாத்திரங்களல்லர்; கற்பனைச் சம்பவங்களல்ல. ஆனால் வரலாற்றுத் தகவல்கள் மட்டும் அந்தந்தப் பெயர்கள், ஆண்டுகளாகவே இடம்பெற்றுள்ளன.
ராவணேசனுக்கு அரசியல் தொடர்பு ஏற்படும் தருணத்தை நாவல் குறிப்பிடும் இடம் முக்கியமானது. சேலம் மார்க்கமாகப் போகின்ற சாலையின் கடைசிவரிசைப் பக்கமாக ராவணேசன் நின்றிருந்தபோது அவ்வழியாய்ப் போன கூண்டுவண்டியிலிருந்து சில பத்திரிகைகள் பறந்துவந்து சாலையில் விழுகின்றன. ராவணேசன் ஓடிச்சென்று தமிழன் என்ற பெயர்கொண்டிருந்த அப்பத்திரிகைகளைத் திரட்டி எடுக்கிறார். பத்திரிகை எடுத்து வந்தவரை நோக்கி ராவணேசன் பெயரைக் கேட்கிறார். “பெரியசாமி இங்கே கௌதமப் பேட்டையில் இருக்கிற என் வீட்டுக்குப் போய்க்கிட்டிருக்கேன்,” என்கிறார்.
அயோத்திதாசரின் வழிப்பயணியாகச் செயல்பட்ட ஏ.பி. பெரியசாமிப் புலவரையும் அயோத்திதாசருக்குப் பின் அப்பாதுரையார் நடத்திய தமிழன் இதழையும் நாவல் இங்கு குறிக்கிறது. இச்சந்திப்பு குறித்து திருவேங்கடத்திடம் விவரித்திடும் ஒவ்வொரு முறையும் சிலிர்க்கிறார் ராவணேசன். அம்மனிதரின் பார்வையும் தமிழன் இதழ்களும்தான் தன் மாற்றத்திற்குக் காரணம் என்று சொல்லிக்கொண்டேயிருந்தார் என்கிறது நாவல். மேலும் அந்தக் காலத்தில் தலித்துகளால் நிறைய மாநாடுகள் நடத்தப்பட்டன. அந்த தகவல்களை எடுத்துக்கொண்டு அதன் உள்ளார்ந்த வேலைப்பாட்டைக் கற்பனா ஊக்கத்தோடு நாவல் விவரிக்கிறது.
“நமது ஜில்லா திருப்பத்தூர் பெரியசாமிப் புலவரை எடுத்துக்கேன். எத்தினி மாநாடு? எத்தினி பொதுக்கூட்டம்? 1891லேர்ந்தே பௌத்தம், சாதியொழிப்புன்னு நடத்தினு வந்திருக்காப்பில. உங்க ஊர் பெரியபேட்டையில் 1931லேயும், உங்க பக்கத்து ஊர் மயில்பட்டியில 1926லேயும் ஆதிதிராவிடர் மாநாடுங்க நடந்திருக்குது. நம்ம ஜனங்க அன்னாடம் ஒளைக்கிற ஜனங்க. மாநாட்டுக்கும் கூட்டத்துக்கும் எப்பிடி வருவாங்க? மாநாடு நடத்துனவங்க ஜனங்களை வரவழைக்க ஆயிரக்கணக்கான பேத்துக்குச் சோறாக்கிப் போட்டிருக்காங்க. இங்க எங்கூருலே கூடப் பல கூட்டங்க,” (ப.28). “தாழ்த்தப்பட்டோர் பாதுகாப்பு மாநாடு, தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமை மாநாடு, பௌத்த மாநாடு ஆயிரக்கணக்கான பேரைச் சேர்த்ததா சொன்னாரே. எப்பிடிப் பேசியிருப்பாங்க அத்தனை பேர்க்கிட்டேயும்? ஊர் பக்கத்துலக்கீற கரம்புல எடம்புடிச்சி, செதுக்கி களம் பண்ணுவாங்க. ஒருத்தன் ஓலை கொண்டாருவான். ஒருத்தன் கொம்புகொடி. மைதானத்துல நடுநாயகமாக மேடை. சுத்தியும் ஜனங்க ஒக்காருவாங்க. கூட்டம் அதிகமாயிருந்தா ஒருத்தர் பேசறதை வாங்கி ஒருத்தர் சொல்வாரு. எல்லோருடைய எண்ணமும் ஒரே மாதிரியிருந்தா பேசறது சுலபம்,” (ப.32).
இவையெல்லாம் நடத்தப்பட்ட மாநாடுகள் பற்றிய நாவலின் விவரணைகள்.
இதேபோல ஆம்பூர் பகுதியில் ஜே.ஜே. தாஸ் நடத்திய உதயசூரியன் பத்திரிகை பற்றியும் அவரின் தொழிற்சங்கம் பற்றியும் குறிப்புகள் உள்ளன. சிவமலையாகிய பள்ளிக்கொண்டா கிருஷ்ணசாமிக்கு என். சிவராஜோடு இருந்த தொடர்பு கூறப்படுகிறது. சிவராஜ் கூட ஓரிடத்தில் கதைப் பரப்பில் ஒரு பாத்திரமாக வந்துபோகிறார். அம்பேத்கர் அகில இந்திய அளவில் ஆரம்பித்த கிமிஷிசிதிக்குத் தமிழகத்தைச் சேர்ந்த சிவராஜ்தான் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. 1886ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் ஜான்ரத்தினம் நடத்திய பள்ளியும் வேலூர் பகுதியிலிருந்து சுரங்க மேஸ்திரியாய் கோலார் தங்கவயலுக்குப் போன செல்லப்பா என்பவர் அங்கேயே தொடங்கிய பள்ளியும் சென்னை பச்சையப்பன் கலாசாலையில் தீண்டப்படாதார் படிப்பதில் இருந்த தடையை நீக்க எம்.சி. ராஜா நடத்திய போராட்டமும், 1944ஆம் ஆண்டின் அம்பேத்கரின் சென்னை வருகை போன்ற தகவல்களும் தேவையான இடங்களில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஒரு கட்டத்திற்கு மேல் இழிதொழில் மறுப்புப் போராட்ட சம்பவங்கள் நாவலை ஆக்ரமித்துக்கொள்கின்றன.
AISCF அமைப்போடு 1940களில் செல்வாக்குப் பெற்ற போராட்டங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் பரவலாகின. 1950களிலும் 1960களிலும் கிராமங்களில் இரவுப் பஞ்சாயத்துக் கூடி இத்தொழிலுக்குப் போகமாட்டோம் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுக் கிராமக் குறிப்பேடுகளில் ஏற்றப்பட்டிருக்கின்றன. பல ஊர்களில் அதையொட்டி பேண்ட் வாத்தியம் என்கிற நவீன வடிவம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. இவற்றையெல்லாம் நாவல் உய்த்துணர்ந்திருக்கிறது. ஊர்வலமாகச் சென்று மேளங்களை ஓரிடத்தில் குவித்து எரியூட்டுவது, செத்த மாடுகளை எடுத்துச்சென்று தோலுரித்து கறிவெட்டும்போது மண்ணெண்ணெய்யை ஊற்றிவிட்டு ஓடுவது, கறிகளில் மண்வாரி இறைப்பது போன்று போராட்டமாகவே கருதப்படாத எதிர்ப்புகளை நாவல் கவனமாகச் சேகரித்திருக்கிறது. இந்தப் போராட்டங்களில் வன்முறையும் கலந்திருந்தது. ஆண்டையை மடக்கித் தாக்குவது, இரட்டைத் தம்ளர்களை உடைப்பது போன்றவற்றைத் திருவேங்கடத்தின் மீது நாயக அம்சம் கருதி ஏற்றிப்பார்க்கிறது நாவல். AISCF அமைப்பின் பணிகள் பற்றி ஓரிடத்தில் இவ்வாறு கூறப்படுகிறது: “கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டங்கள் நடைபெறும்போது மாவட்டத்திலே எந்தெந்த ஊர்களிலெல்லாம் ஜாதிக் கொடுமைகள் நிலவுகின்றன என்பதைப் பகிர்ந்துகொள்வார்கள்; அதற்குரிய தீர்வுகளும் விவாதிக்கப்படும்.”
தனராஜ் என்பவர் பற்றிய குறிப்பொன்று சுவையானது. பெடரேஷன் கொடியை சைக்கிளில் கட்டிக்கொண்டு வரும் தனராஜ் எதையும் பிரகடனப்படுத்தாமல் ஊருக்குள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நேராக முடிவெட்டத் தொடங்குகிறார். இவ்வாறு சளைக்காமல் நாள் முழுவதும் வெட்டுகிறார். அவரிடம் திருவேங்கடம் கேட்கும்போது தனராஜ் இப்படி கூறுகிறார்: “நான் கூட்டமைப்பு கேடர் தம்பி. ஜாதி இந்துங்க நமக்கு முடிவெட்ட மறுக்கிறாங்க. தாழ்த்தப்பட்டவன் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கக்கூடாது அப்படின்றதுதானே அவங்களோட நோக்கம்? அவங்ககிட்ட நாம ஏன் போயி நிக்கணும்? நமக்கு நாமேதானே இப்பவும் முடிவெட்டிக்கிறோம். சரி அதையே ஒரு சேவையா செஞ்சா என்னன்னு தோணுச்சி. அதான் கௌம்பிட்டேன். வேலைக்குப் போற நாளு தவிர்த்து கெடைக்கிற நாள்ல ஊரூரா போவேன். ஒரு ஊருக்குப் போனேன்னா அந்த ஊருல இருக்கிற எல்லாருக்கும் முடிவெட்டி முடிக்கிறவரைக்கும் வேற ஊருக்குப் போகமாட்டேன்.” வெறும் லட்சியவாதத்தின் முன்னிருந்து கிளம்பிய இதுபோன்ற அர்ப்பணிப்புடைய செயற்பாட்டாளர்களை எந்த இயக்கத்திலும் பார்க்கலாம். அம்பேத்கரிய இயக்கமும் அத்தகைய லட்சியவாதிகள் பலரைக் கொண்டிருந்தது. தனராஜ் போன்ற ஒருவர் உண்மையாகவே இருந்திருக்க முடியும் என்று தோன்றுகிறது.
அதேபோல நாவலில் கோலார் தங்கவயல் பற்றிய குறிப்புகள் அதிகம் வருகின்றன. அதாவது வடஆற்காடு மாவட்ட சாதி எதிர்ப்பு அரசியலில் கோலார் தங்கவயல் உருவாக்கிய விழிப்புணர்வின் தாக்கம் குறிப்பிடத்தக்கது. கோலார் தங்கவயல் தங்கச்சுரங்கப் பணியாளர்களாய் வடமாவட்டக் கிராமங்களிலிருந்த தலித்துகளே அதிகம் இடம்பெயர்ந்திருந்தனர். உள்ளூர் போல் அல்லாமல் முறையான ஊதியம், வேலைநேரம், பணிப்பாதுகாப்பு ஆகியவற்றின் மூலமாகப் பொருளாதாரத் தற்சார்பைப் பெற்ற அவர்கள் கல்வி, ஆங்கில வாசிப்பு, அரசியல்ஞானம் ஆகியவற்றைப் பெற்று இயக்கங்களை உருவாக்கியதோடு அவற்றைத் தத்தம் கிராமங்களுக்கும் கொண்டு சென்றனர். அந்த வகையில் அம்பேத்கரின் வருகைக்கு முன்பே வடமாவட்டங்களில் நடந்த விழிப்புணர்ச்சிக்குக் கோலார் தங்கவயல் பிரதான பின்னணியாக இருந்தது. சென்னையிலிருந்து செயற்பட்ட அயோத்திதாசருக்குக் கோலார் தங்கவயல்தான் கைகொடுத்தது என்பது வரலாறு. குறிப்பாக AISCF மேற்கொண்ட இழிதொழில் மறுப்புக்கான பிரச்சாரர்களாகப் பாடகர்களும் நாடகக்குழுக்களும் கோலாரிலிருந்து வந்ததை நாவல் பரவலாகச் சுட்டிச்செல்கிறது.
அதைப்பற்றிக் கூறும் வரலாற்றாசிரியர் எஸ். பெருமாள், “அப்பாத்துரையாரும் இரத்தினசபாபதியும் அமைத்த சமதர்ம நடிகர் சங்கம் பகுத்தறிவுக் கொள்கைகளைக் கொண்ட நாடகங்களைத் தங்கவயலிலும் வடஆர்க்காடு மாவட்ட ஊர்களிலும் மேடை ஏற்றியது. இந்த நாடகக்குழுவைச் சேர்ந்த சேக்கனூர் (வேலூர்) வி.எஸ். ஜெகந்நாதனின் பாடல்கள் ‘ஜாதிபேத விமோசன சமரசானந்த கீதம்’ (1946) என வெளியாயிற்று. சமூகவிமோசனம், வீரத்தமிழர்கள் விடுதலை, புதுஉலகம் என்னும் நாடகங்களையும் இவர் எழுதினார். ஞானசூரியன் பூபாலன் குழுவினர் அறிவானந்தா என்னும் கதாகாலட்சேபத்தைத் தங்கவயலிலும் வேலூர், குடியேற்றம் வட்டங்களிலும் நடத்தினர். நிதி வசூலுக்காக நடந்த இந்நிகழ்ச்சிகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றன. தங்கவயல் ‘பழந்தமிழர் இளைஞர் நடிகர் கழக’த்தினரும் சமூகச்சீர்திருத்த நாடகங்கள் பலவற்றை நடத்தினர்” (‘மக்கள் இயக்கங்களும் தமிழ் வெளியீடுகளும்’ 2000, மேகலை பதிப்பகம்) என்று வரலாற்று அளவில் கோடிட்டுக் காட்டுவதை நாவல் புனைவாகப் பொருத்திக்கொள்கிறது. நாடகங்கள் நடத்தப்படும் விதம், நாடகத்தில் இடம்பெறும் சீர்திருத்தப் பாடல்களின் முழுவடிவம், நாடகத்திற்கு முன்பு நடக்கும் சொற்பொழிவுகள், இசை வடிவங்கள் எனப் பலவற்றையும் இவ்வாறு விவரிக்கிறது நாவல். AISCF அமைப்பின் வருகை, அவை வரிந்துகொள்ளப்பட்ட விதம் போன்றவற்றை நாவல் விவரிப்பதைப் பார்க்கும்போது அம்பேத்கர் பிறந்த மாநிலமான மராட்டியத்தில் அவ்வமைப்பு உள்வாங்கப்பட்ட முறையைப்பற்றி வசந்த் மூன் எழுதுவதோடு ஒத்துப்போவதைப் பார்க்கமுடிகிறது. (பார்க்க: வசந்த் மூனின் ‘ஒரு தலித்திடமிருந்து’, அக்டோபர் 2002, ‘விடியல்’ பதிப்பகம்) இரவுப்பள்ளிகள், தங்கவயல் சித்தார்த்தா புத்தகசாலை வெளியிட்ட நூல்கள் பற்றிய தகவல்கள், பெடரேஷன் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்கள், வடஆற்காடு நாட்டாண்மைக்காரர்கள் சங்கம் போன்ற தகவல்களும் அடங்கியுள்ளன. செங்கல்பட்டு அங்கம்பாக்கம் குப்புச் சாமி, காட்டுமன்னார்க்குடி பாண்டியன் ஆகியோர் பற்றிய வரலாறுகள் கதைப் போக்கினூடாக விரவிநிற்கின்றன.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, தமிழ் தலித்தரப்பில் புனைகதைகளைவிட வரலாற்றுப் பிரதிகளே மிகுதியாக வெளிப்பட்டுள்ளன. அவை வரலாற்றில் தங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இடத்தினையும் அதனை அணுகுவதற்கான முறையியலையும் பரிசீலித்திருக்கின்றன; புதிதாகக் கட்டமைத்திருக்கின்றன. வரலாறு மட்டுமே உண்மை, வரலாறு என்பதே புனைவுதான் என்ற இரண்டு எதிர்வுகளையும் கடந்து வரலாற்றைப் புனைவுக்கான சாத்தியத்தோடு அது சொல்லத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த பதினைந்து ஆண்டுகாலத் தலித் வரலாற்றுத் திரட்சியையும் அவற்றிலும் கூட இடம்பெறாத புதிய வரலாற்றுப் பகுதிகளையும் திரட்டிப் புனைகதை வடிவத்தில் இப்பிரதி முன்வைத்திருக்கிறது. ஆசிரியன் இறந்துவிட்டான் என்கிற கோட்பாடு இயந்திரகதியிலானதாக முன்வைக்கப்பட்டு வந்த 1990களின் தருணத்தில் வெளிப்பட்ட தலித் தன்வரலாற்றுப் பிரதிகள் ஆசிரியனின் முக்கியத்துவத்தை மீண்டும் கண்டெடுத்தன. வரலாற்றைப் புனைவு என்று மட்டுமே மறுதலித்துவிடும் இப்போதிய சூழலில் தலித் சாதிகளின் வரலாற்றுப் புனைவுகளும் புனைவுகளின் வரலாறும் தமிழில் வரலாற்றை அணுகிப் புரிந்துகொள்ளும் நம்முடைய வழமையான சட்டகத்தையே மாற்றுகின்றன. இந்நாவலில் வரலாற்றுத் தகவல்களைத் தகவல்களாக மட்டுமே தரப்பட்டிருப்பதைத் தாண்டி வரலாற்று ரீதியான சம்பவங்களைச் சுமப்பதற்கான பாத்திரங்களாகக் கதாமாந்தர்களை மாற்றியிருக்கிறது இப்பிரதி.
இத்தகவல்களினூடாக நாவலில் நாம் சந்திப்பது போராட்ட வரலாற்றை மட்டுமல்ல; அவற்றை எதிர்கொண்ட சமூகம் உருவாக்கிக் கொண்ட மதிப்பீடுகளையும் அவற்றைத் தக்கவைத்துக்கொள்ளுவதில் நடத்திய போராட்டங்களையும் எனப் பலவற்றைச் சந்திக்கிறோம். லட்சியவாதியான திருவேங்கடம் மட்டுமல்ல, சமரசம் ஆகிவிடும் சிவலிங்கமும் இந்தச் சமூகத்தின் அங்கம்தான். இப்போராட்டங்கள் தொடங்கிய அடுத்த கால்நூற்றாண்டுகளுக்குள்ளாக, அதாவது 1970களில் புதிய அரசியல் சூழல்களில் வேறுமாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்தகாலப் போராட்ட அனுபவங்கள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்பதை நாம் இவ்வாறே புரிந்துகொள்ள முடிகிறது. இதை நாவலின் ஒரு பத்தி இவ்வாறு விவரிக்கிறது:
“நாற்பதுகளிலேயே பறைமேளமடிக்கிறத நம்ம முன்னோர்கள் பல ஊர்கள்ல ஒழிச்சாங்க. நம்ம பெரிய பேட்டையைச் சுத்தியிருக்கிற ஊர்கள்லயும் நாங்க அதை செஞ்சோம். எவ்வளவோ எதிர்ப்பு, அவமானம், வழக்கு எல்லாத்தையும் சந்திச்சோம். இதோ கால்நூற்றாண்டைத் தாண்டறதுக்குள்ளேயே முன்னோர்களின் தியாகங்களையெல்லாம் கால்லபோட்டு மெதிச்சிட்டு மறுபடியும் அடிக்கத் தொடங்கிட்டாங்க.”
இதுபோன்ற தருணங்களில் இதற்காகப் போராடியவர்கள் காலத்திற்கொவ்வாத சுமையாகப் பார்க்கப்படுகிறார்கள் அல்லது ஒதுக்கப்படுகிறார்கள். இயலாமை உருவாக்கும் தனிமையின் இடத்தில் சமூகவாழ்வு தரும் நெருக்கடி அவர்களை அதுவரை தான் நம்பிய நம்பிக்கைகளுக்கு எதிரான சமரசத்தை நோக்கி விரட்டுகின்றன. அதனால் தான் தன் மகனின் தேர்தல் வெற்றிக்காக எதிரியிடம் போய் திருவேங்கடம் நிற்கும்போது நம்மால் அங்கு நிற்க முடிவதில்லை.
மின்னஞ்சல்: stalinrajangam@gmail.com
(நன்றி: காலச்சுவடு)