வன்முறையில்லா வகுப்பறை

வன்முறையில்லா வகுப்பறை

ஒரு ஆசிரியரின் அடிப்படைத் தகுதி என்ன? அன்பு.

அன்பு, ஆசிரியருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அடிப்படையானது. ஏற்றுக்கொள்ளப்படாத, அங்கீகரிக்கப்படாத அன்பிலிருந்து வருவதுதான் வெறுப்பு. ஒரு ஆசிரியருக்கு இந்த வெறுப்பு எப்போது வருகிறது?. இதை கீழ்கண்ட இரண்டு சம்பவத்தின் அடிப்படையில் விளக்கலாம்.

1. அவர் கணித ஆசிரியர். எப்பேர்பட்ட மக்கையும்,மட்டியையும் பாஸ் மார்க் எடுக்க வைத்துவிடுவார், கண்டிப்பானவர், அடி பின்னி எடுத்துவிடுவார் என பெயரெடுத்தவர். அன்று வகுப்பில் அவர் சற்று நிலைகுலைந்து ஒரு மாணவியை அடிக்க , அம்மாணவியின் தாடை கிழிய, வழக்கு பாய, இப்போது நடையாய் நடக்கிறார் நீதிமன்றத்துக்கு. இப்போது கண்டிப்பான கணித ஆசிரியர் போய், ரத்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருக்கிறார்.

2. அவர் ஒரு திறமையான தாவரவியல் ஆசிரியை. மாணவ, மாணவிகள் அழகாக படம் வரைய வேண்டும் என்பதற்காய் மிகுந்த மெனக்கெடுபவர். அன்று ஒரு மாணவியை சரியாக படம் வரையவில்லை என்பதற்காய் , “இது படமா? உன் மூஞ்சியை மாதிரியே வரைந்துவிட்டாயே.. உனக்கெல்லாம் இந்தப் பாடம் சரிவராது. புள்ளை பெத்துக்கத்தான் லாயக்கு..” என்று வார்த்தையால் சுட, அம்மாணவியோ தன்னை நெருப்பால் சுட்டு இறந்து போகிறாள்.

ஒரு திறமையான ஆசிரியையை இப்போது கல்வித்துறையாலும், காவல்துறையாலும் காப்பாற்ற முடியவில்லை. வெளிநாடு தப்பிச் செல்ல துடிக்கிறார் ஆசிரியை. இது ராஜபாளையத்தில் நடைபெற்ற சம்பவம்.

இந்த இரண்டு சம்பவங்களிலிருந்து நாம் பெறும் பாடம் என்ன? இது போன்ற உடல் ரீதியான துன்புறுத்தல்களும், உள ரீதியான துன்புறுத்தல் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க ஆசிரியராக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்நூலிலுள்ள 25 கட்டுரைகளின் வழியே விளக்கியிருக்கிறார் கல்வியாளர் ஆயிஷா.இரா. நடராசன் அவர்கள். “சக மனிதர்கள் மேல் கொண்ட நேசம்தான் ஒருவனைக் கலகக்காரனாக்குகிறது” என்பார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன். ஆயிஷா நடராசனும் குழந்தைகள் மீது அன்பு, பிரியம், பாசம் கொண்ட மிகப் பெரிய கலகக் காரராக தன் யாருடைய வகுப்பறை?, ஆயிஷா, ரோஸ், வன்முறையில்லா வகுப்பறை போன்ற தன் புத்தகங்களின் வழியே தெரிகிறார்.

வன்முறையில்லா வகுப்பறை என்னும் இந்நூல் ஒவ்வொரு ஆசிரியரின் கையிலும் இருக்க வேண்டும். ஏனெனில் இந்நூல் குழந்தை உளவியலாளரான கரோலின் டிவிக்கின் மேற்கோளான, “ஒரு மாணவன் எதையெல்லாம் செய்தால் ஒரு ஆசிரியரான உங்களுக்குப் பிடிக்கும் என்பதைப்போல ஒரு ஆசிரியராக நீங்கள் எதை எல்லாம் செய்தால் தனக்குப் பிடிக்கும் என கருத ஒரு மாணவருக்கும் உரிமை உள்ளது.” என்பதிலிருந்துதான் இந்நூலே தொடங்குகிறது. குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்த ஆசிரியர் மாணவர் உறவு பற்றிய கெடுபிடிகளால், சட்டங்களால் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமான குற்றங்கள் பதிவாகி உள்ளன. நம் தமிழகத்தில் மட்டும், இப்புத்தகம் வெளிவந்த செப்டம்பர் 2016 வரை

• 6143 ஆசிரியர்களுக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
• 412 பேர் மீது முதல் குற்ற ஆவணம் பதிவாகி உள்ளது. ( அவர்கள் பெயிலில் உள்ளனர்)
• 92 ஆசிரியர்கள் இதுவரை சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.
• சுமார் 7000 பேர் தனியார் பள்ளிகளில் வேலையிழந்தும் உள்ளனர்.

எனவே வகுப்பறை வன்முறை என்பது இன்றைய ஆசிரியர்களின் மிகப்பெரிய வேலைச் சவாலாக உள்ளது. குழந்தைகளை அடிக்கக் கூடாது. எதுவுமே சொல்லக்கூடாது என்றால் இதன் பொருள் என்ன? ஒருபுறம் குழந்தைகளின் தலையைத் திறந்து பாடப்பொருளை கொட்டித் தீர்க்கத் தூண்டும் பாடச்சுமை. மற்றொருபுறம் குழந்தைகள் உரிமை என்னும் பெயரில் மிரட்டல்… தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்துக் காட்டாத ஆசிரியர்களுக்கு துறை நடவடிக்கை. இந்தத் துயரமான சூழலை வெற்றிகரமாக எதிர்கொள்ள பல உத்திகளை உள்ளடக்கியது இந்நூல். எனவே ஆசிரியராய் இருப்பவர்கள் தவிர்க்கவே முடியாத நூலாக இதனைக் குறிப்பிடலாம்.

குழந்தைகள் ஏன் பள்ளியை வெறுக்கிறார்கள்? என்று அதிரடியான தலைப்புடன் புத்தகம் ஆரம்பிக்கிறது. இதற்கு ஆதாரமாக “தேசிய கல்வி கணக்கெடுப்பு-2006” ன் அறிக்கை மேற்கோள் காட்டப்படுகிறது. இவ்வறிக்கை குழந்தைகள் பள்ளி செல்லக் கூசுகின்றன என்று குறிப்பிடுகிறது.
மேலும்

1. 99.1% குழந்தைகள் பள்ளியைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
2. பெரும்பான்மை குழந்தைகள் புரிந்து கற்பதில்லை.
3. மனச்சோர்வு, அவமதிப்பு, பெரும் பதற்றம் இவற்றோடு வீடு திரும்புகிறார்கள் என மூன்று காட்டமான கருதுகோள்களை முன்வைக்கிறது. இந்த மூன்று குறைகளையும் சரிப்படுத்த அடுத்தடுத்த கட்டுரைகளில் வழிகாட்டிக்கொண்டே செல்கிறார் நூலாசிரியர்.

உங்கள் குழந்தை வகுப்பில் மதிக்கப்படுகிறதா? என்ற கட்டுரையில் ரஷ்ய கல்வியாளரான மெக்கன்ரோ( 1927ல் பள்ளி கல்வித் திட்டத்தில் PET வகுப்புகள் வரக் காரணமானவர்) அவர்களின் கருத்துக்களான,

• கல்வியின் சக்கரவர்த்தி குழந்தையே. குழந்தை எந்த அளவுக்கு வகுப்பறையில் மதிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு கற்றல் சாத்தியமாகிறது.
• ஒழுங்கு- நடத்தை என்பது குழந்தையின் சுய மேலாண்மை( Self management) என்பதன் மூலம் கட்டமைக்கப்பட வேண்டும். தன்னை மதிக்கும் குழந்தையே அதை அடைய முடியும்.
• எது தவறு என்பதன் மீதே கவனம் செலுத்தும் ‘தண்டனை’ கல்வியைவிட , சரியான நடத்தையை தேடி பாராட்டி உயர்த்தும் முன் உதாரண கல்வியே சிறப்பானது.
• உடன் இணைந்து விளையாடு… ஒரு போதும் விளையாட்டை வழி நடத்தாதே ( Don’t guide play) என்பவை நாம் கற்றுத் தெளிய வேண்டிய வகுப்பறைப் பாடங்கள்.

பள்ளியிலிருந்து குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பும்போது…. என்ன எடுத்துச் செல்கின்றன? குட்டி முயற்சிகளால் பெற்ற ஏராளமான பாராட்டுகள்.. மதிப்புமிக்க ஆளுமை… தன்னம்பிக்கை… இவைகளையா?

உடல்வலி, வடு… காயம்… மனவலி, சுடுசொற்கள் தந்த அவமானம்… வகுப்பில் எல்லார் முன்பும் தன் வீட்டை இழுத்து… பிறப்பை கேலி செய்த….. கொடுமை அச்சம்… பதைபதைப்பு… இவைகளையா? என்று “குழந்தைகளுக்கு என்ன கொடுக்கிறது பள்ளி?” என்ற கட்டுரை கேள்வி எழுப்புகிறது. ஒரு குழந்தை பலவித குடும்ப சூழ்நிலையிலிருந்து பலவித மனநிலையோடு பள்ளிக்கு வரலாம். ஆனால் அக்குழந்தைகள் பள்ளியைவிட்டு வீடு திரும்பும்போது ஓரளவுக்கு மகிழ்வான மனநிலையோடு செல்வதை பள்ளி உறுதிசெய்யவேண்டும்.

இக்கருத்தையொட்டி பேராசிரியர் ச.மாடசாமி அவர்கள் முகநூலில் பதிந்த, “குடும்பங்கள் பல வறுமையாலும், கசந்த உறவுகளாலும்நொறுங்கிப் போனவை. அந்தக் குடும்பங்களில் இருந்து வரும் பிள்ளைகளுக்குப் பள்ளிதான் ஓர் ஆறுதல்; ஒரு பிடிமானம். குடும்பத்தோடு ஒப்பிடுகையில், பள்ளி ஒரு பெருவெளி; ஒரு பேரமைப்பு. வேலை, விடுமுறை, சம்பளம், அதிகாரம்- எனப் பல கூறுகளும் உத்திரவாதப்பட்ட அமைப்பு. மாணவர்களின் தற்கொலைகள் நிகழும்போது, உடனே உடைந்த குடும்பங்களை நோக்கிப் பள்ளிகள் விரலை நீட்டுவது நியாயமும் இல்லை; நேர்மையும் இல்லை. பிள்ளைகளின் மரணத்துக்குப் பள்ளிகள்தான் முழுக்காரணம் என்று யாரும் வாதிட வரவில்லை. ஆனால், இந்தத் துயரங்களுக்குத் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டிய முதல் அமைப்பு- நிச்சயம் பள்ளிதான். நுட்பமான காயங்களை- நோவுகளை உணர்ந்து குணப்படுத்தும் மனங்களும்..உரையாடல்களும் பள்ளிகளில் பெருக வேண்டும். ‘அந்தக் காலத்துல, நாங்க படிச்சப்ப எல்லாம்’ என்ற செத்த உரையாடல்களை அவிழ்ப்பதற்குத் திறக்கும் வாய்கள்- காலத்தின் எதிரிகள்....” என்ற கருத்து மிக முக்கியமானது.

“நீங்கள் குருவா…? ஆசிரியரா?” மற்றும் “நீங்கள் ஆசிரியராக வாழ்பவரா…? ஆசிரியப் பணியாளரா? என்னும் கட்டுரைகள் இரண்டுக்குமிடையேயுள்ள வேறுபாடுகளைச் சொல்லி “ நீங்கள் வகுப்பில் ராம் என்பவருக்கு அறிவியல் போதிக்கும் ஆசிரியர் என்றால் உங்களுக்கு அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. ராம் பற்றியும் தெரிய வேண்டும்” என்ற பேராசிரியர் யஷ்பால் அவர்களின் கருத்தை நமக்குக் கடத்துகிறது. இதன் பொருள் ஆசிரியப் பணியாளரால் அறிவியல் மட்டுமே கற்பிக்க முடியும். ஆனால் ஆசிரியராக வாழ்பவரால் மட்டுமே ராமையும் அதாவது ராமின் மனதையும் புரிந்து கொள்ள முடியும் என்கிறார்.

இன்றைய கல்வியே ஒழுக்கம் மற்றும் தரம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு ஒரு மாணவனால் பங்கம் ஏற்படும்போது பள்ளி எடுக்கும் தவறான நடவடிக்கைகளால் எத்தனை அசம்பாவிதங்கள் நடந்து விடுகின்றன. குழந்தை தரப்பு நியாயத்தை கேட்க எவருமில்லை.

• ஒரு குழந்தை பள்ளிக்கு கட் அடிக்கிறது.
• ஒரு குழந்தை ஊரை விட்டே ஓடிவிடுகிறது.
• ஒரு குழந்தை தற்கொலை செய்துகொள்கிறது.
• ஒரு குழந்தை கடுமையான மன உளைச்சல் நோய்க்கு தள்ளப்படுகிறது.
• ஒரு குழந்தை பள்ளிக்கு, ஆசிரியைக்கு எதிராக கத்தியை நீட்டுகிறது.
• ஒரு குழந்தை ஆத்திரத்தோடு தன்னைவிட பலமற்ற குழந்தை மீது பாய்கிறது.
• ஒரு குழந்தை தனது சகாக்களோடு மது அருந்தி முகநூலில் பகிர்கிறது.

குழந்தைகளின் ஒழுங்கீன செயல் ஒவ்வொன்றின் பின்னேயும் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது? என்பதை மாணவர்களின் நடத்தையை புரிந்து கொள்வது எப்படி? , ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? உள்ளிட்ட இந்நூலின் பல கட்டுரைகள் அறிவுற விளக்குகின்றன.

“எப்போது பள்ளிக்கு விடுமுறை என அறிவித்தால் குழந்தைகள் மனம் வருந்துகிறார்களோ, பள்ளி வேண்டும் என அடம் பிடிக்கிறார்களோ, அப்போதுதான் உண்மையான கல்வி நடக்கிறது என்று அர்த்தம்…” என்ற ஜார்ஜ் பெர்னாட்ஷா கூறியதற்கு ‘உற்சாகமான வகுப்பறையே வன்முறையில்லா வகுப்பறைகள்’ என்ற கட்டுரை மூலம் வலு சேர்க்கிறார் நூலாசிரியர்.

“To be normal during the adolescent period is by itself abnormal” என உளவியாலாளர் சிக்மண்ட் பிராய்ட் அவர்களின் மகளான அன்னா பிராய்ட் வளரிளம் பற்றி குறிப்பிடுவார். டீன் ஏஜ் புரிந்து கொள்வது எப்படி? என்ற கட்டுரையில் வளரிளம் பருவம் பற்றி பல கருத்துகளை எடுத்துரைக்கிறார். முன் மூளைப்புரணி, முழுமை வளர்ச்சி நோக்கி அதிவேகமாக செயலூக்கம் பெறுகிற அந்த காலகட்டத்தில் வளரிளம் பருவத்தினர் அதிகம் நாடுவது அங்கீகாரம்தான் என உளவியல் அறிஞர் ஃபைன்ஸ்டீன் கருத்தை முன்வைத்து, வளரிளம் பருவத்தினருக்கு ஊக்கமும், உற்சாகமும், தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். ‘உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளில் சரியாக உறங்க அனுமதிக்கப்படாதவர் பின்நாட்களில் கல்வியில் பின்தங்குவதோடு 40 சதவிகிதம் உறக்கம் குறைந்த நிலை பதின் பருவத்தினர், பிற்காலத்தில் மனவீழ்ச்சி (Depression) பெற்று தற்கொலை போன்ற ஆபத்துகளில் சிக்குகிறார்கள்…’ என ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுடன் நம்மை எச்சரிக்கிறார்.

குழந்தைகளை இன்று துரத்தும் மிகப்பெரிய அச்சுறுத்தல் , எல்லாவற்றிலும் வெற்றி மட்டுமே அடைய வேண்டும் என அவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் அன்பு நிர்பந்தம் ஆகும். இதனால் இக்காலத்தில் மன அழுத்தம் இல்லாத குழந்தைகளே இல்லை எனலாம் என மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது ஏன்? கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

“காலையிலும் மாலையிலும் அதே மணிதான் ஒலிக்கிறது. காலையில் கசக்கும் அது, பள்ளி முடியும்போது மட்டும் ஏன் இனிக்கிறது?” என்கிறார் ஆர்.கே.நாராயணன். இதைமாற்றி காலையில் ஒலிக்கும் மணியையும் இனிப்பானதாக மாற்ற ஒரு ஆசிரியர் தன்னை படைப்பாக்கம் மிக்க ஆசிரியராக மாற்றிக் கொள்வது அவசியம். அந்நிலையை ஓர் ஆசிரியர் அடைய பல வகையான உத்திகளை இந்நூல் கொண்டுள்ளது. இந்நூல் குழந்தைகள் மீதான அன்பை அடிப்படையாகக் கொண்டது. உண்மையான அன்பு கோலோச்சுமிடத்தில் வன்முறைக்கு இடமேது?

குழந்தைகள் மீதான அன்பு வளரட்டும்! வன்முறை இல்லா வகுப்பறை மலரட்டும்!

Buy the Book

More Reviews [ View all ]

இது யாருடைய வகுப்பறை?

ராமமூர்த்தி நாகராஜன்

ஆயிஷா - நூல் அறிமுகம்

ராமமூர்த்தி நாகராஜன்

எனக்குரிய இடம் எங்கே?

ராமமூர்த்தி நாகராஜன்

உலகமயமாக்கலும் பெண் கல்வியும்

ராமமூர்த்தி நாகராஜன்
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp