எப்போதும் தலைசிறந்த புத்தகம் தனக்கான தலைசிறந்த வாசகனுக்காக காத்திருக்கிறது என்கிறது புத்தகம் பேசுது இதழின் அக்டோபர் மாத தலையங்கம். நூல்கள் வாசித்த உடன் மனநிறைவை தரக்கூடியதாக இருக்கும். சில நூல்கள் நேரத்தை விரயம் செய்துவிட்டதாக நினைக்கத் தோன்றும். ஆனால்சில நூல்கள் மட்டுமே நாம் ஏன் இந்த நூலை இதுவரை வாசிக்கவில்லை என நினைக்கச் செய்திடும். அத்தகைய நூல்களில் ஒன்றுதான் ‘கோவை கலவரத்தில் எனது சாட்சியம்.'
கோவையில் கலவரம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு, படுகொலை, குண்டுவெடிப்பு என்ற சில வார்த்தைகள் செய்திகளாக நம் காதுகளில் கண்டிப்பாக வந்தடைந்திருக்கும். ஆனால் கலவரத்திற்கான காரணம் என்ன, யாரால், எதற்காக நடத்தப்பட்டது, அதன் பின்னால் இருக்கும் நோக்கம் என்பதைப் பற்றி பெரும்பாலும் நாம் அறிவதில்லை. அத்தகைய முக்கியமான விஷயங்களை நாம் அறிய வேண்டுமெனில் அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்.
“மனிதர்களின் காயங்களை வெறும் சொற்களாக, வார்த்தைகளாகப் புரிந்து கொள்வதைவிடவும் வலியாக உணர்வது மிக முக்கியமானது” என்று இந்நூல் குறித்து முன்னுரையில் எழுதியுள்ள பாரதிகிருஷ்ணகுமாரின் கூற்று மிகச் சரியானது. அத்தகைய வலியை உணரக்கூடிய உணர்வைத் தருகிறது. அதேபோல பேராசிரியர் அ.மார்க்ஸ் தன்னுடைய அணிந்துரையில் “தமிழகத்தில் நம் கண்முன் நடந்த மத அடிப்படையிலான மிகப்பெரிய வன்முறை 1996, 1997ஆம் ஆண்டுகளில் கோவையில் நடைபெற்றதுதான். இந்த கலவரங்களின் போது அரசும், காவல்துறையும் மேற்கொண்ட அநீதிகளுக்கு எதிராக ஒரு இளம் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர் இடையீடு செய்தது குறித்த அனுபவத் தொகுப்பு” என்று குறிப்பிட்டு இருப்பது இந்நூல் குறித்த மதிப்பீடாகும்.
நேற்றைய செய்தி இன்றைய வரலாறு என்கிறார்கள். ஆனால் செய்திகள் மட்டுமே வரலாறாக முடியாது. செய்திகளுக்குப் பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகளின் முழுத்தொகுப்பையே வரலாறு என்று சொல்லலாம். கோவை கலவரத்தின் சுருக்கமான வரலாறாக இந்நூல் உள்ளது.
மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தியை சந்தித்ததில் ஏற்பட்ட திருப்புமுனையால் நிகழ்ந்த மிகப்பெரிய உழைப்பால் கிடைத்த அனுபவத்தின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
தமிழகத்து மதக்கலவரங்களின் மையங்களாக உள்ள இந்து சனாதன தீண்டாமைக் கொடுமைகளால் மதம் மாறியது கன்னியாகுமரி மாவட்டமா, கன்னி‘மேரி’ மாவட்டமா என்ற நச்சுப் பிரச்சாரம் வைத்து தமிழகம் முழுவதும் வெறுப்பு பிரச்சாரத்தை தொடங்கியது இந்து முன்னணி. அதன் தொடர்ச்சியாக நடத்தப்பட்டதுதான் 1982ஆம் ஆண்டு கோவையில் நடந்த ‘இந்து எழுச்சி’ மாநாடு. இங்கிருந்துதான் தொடர்ந்து வகுப்புவாத மோதல் உருவானது. 1984 முதல் 1997 நவம்பர் கலவரத்திற்கு முந்தைய நிகழ்வுவரை 49 கலவரங்களும், 5 கொலைகளும் நடைபெற்றதாக குறிப்பிடுகிறது நீதிபதி கோகுல கிருஷ்ணனின் அறிக்கை.1997 நவம்பர் கலவரத்தில்கூட கொலையுண்ட காவலர் செல்வராஜின் முழுப்பெயர் அந்தோணி செல்வராஜ் என்பதாகும். ஆனால் கொல்லப்பட்ட செல்வராஜ் இந்துவென கூறியே கலவரத்தை உருவாக்கியுள்ளன, இந்து மதவெறி அமைப்புகள். இல்லாத எதிரியை கட்டமைக்க மதத்தைப் பயன்படுத்துவதைப் போலவே உண்மையை மறைத்து தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் என தெரிய வருகிறது.
இக்கலவரத்தின் பின்னணியில் இயங்கிய இந்து மதவெறி அமைப்புகளின் செயல்பாட்டை தெளிவாக அறியலாம். இத்தருணத்தில் போலீஸ் கமிஷனர் மாசானமுத்து நடத்திய கூட்டத்தில் இராம.கோபாலன் பங்கேற்றது எப்படி? போலீஸ் ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சியினரும், அர்ஜூன் சம்பத்தும் சென்றது எப்படி? குண்டு வெடிப்பு நிகழப்போகிறது என்ற செய்தி அறிந்த பின்பும் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன? 58 பேர் குண்டு வெடிப்பில் பலியான பின்பும் வழக்கு ஏன் விரைந்து முடிக்கப்படவில்லை? பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உண்மையை வெளிக்கொணர முயற்சி செய்திருக்கும் நூல் ஆசிரியரை தீவிரவாதியாகக் காட்ட முயற்சித்தது, எந்த குற்றமும் செய்யாமல் இளமையின் பத்தாண்டு வாழ்க்கையை இழந்தவர்களுக்கு நீதி எப்போது கிடைக்கும் போன்ற ஏராளமான கேள்விகளுக்கு பின்னால் உள்ள உண்மையான பதில்களை அறிய படிக்க வேண்டிய நூல்.
சின்ன மோதல்கள் நடைபெறும் போது சில சமயங்களில் அலட்சியமாக கடந்து சென்று விடுகிறோம். அது வளர்ந்து மிகப்பெரிய கலவரமாக வந்து நம்முன்னே நிற்கும்போது அதனை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகின்றது. இதனை உணர்ந்து எழுத்துகளை வாசிக்கத் தெரிந்த அனைவரும் கோவை கலவரத்தின் முழுப்பரிமாணங்களை அறிய வாசிக்க வேண்டிய நூல் இது.
(நன்றி: தீக்கதிர் 19/11/2017)