(எஸ். என். நாகராஜனின் ‘கீழை மார்க்சியம் - வரலாறு, அரசியல், மெய்யியல்’ என்ற நூல் குறித்தான விமர்சனம்)
கிழக்கு- மேற்கு என்ற முரணடிப்படையில் மேற்கத்திய அறிவுச் செல்வங்கள் கேவலமானது, கீழைத்தேய செல்வங்கள் யாவும் உன்னதமானது. மேற்கில் மரபு இல்லை, கிழக்கில் நீண்ட பெரும் மரபு உண்டு. மேற்கத்திய புராணங்கள் மோசம், கிழக்கத்திய – இந்துத்துவ புராணங்கள் புனிதம், மேற்கத்திய விஞ்ஞானம், பகுத்தறிவு, ஆங்கிலம் ஆகியன இழிவானது. கிழக்கின் மெய்யியல் உயர்வானது. பண்பாடு அற்ற மேலை கொச்சை நாத்திக வாதம், கலாச்சாரம், மெய்யியல் சார்பு கொண்ட புத்திசாலித்தனமான ஆன்மீக வாதம் உடைய கீழைத்தேயம் என்றெல்லாம் கிழக்கின் பெருமை பேசப்படுகிறது.
கிழக்கில் அப்படி என்னதான் மரபு இருக்கிறது? சீனாவின் (பக். 555) நீண்ட மரபுத் தொடர்ச்சியில் இந்தியாவில்அதுவும் தென்கலை வைணவத்தின் பங்கு என்ன? மரபைத் தேடுதல் என்பது இனத்தூய்மைவாத பாசிசமாகவே அமையும் என்பதை வரலாற்றின் பக்கங்கள் நெடுகிலும் கண்டுள்ளோம். அப்படி மரபைத் தேடும்போது இந்தியாவிலுள்ள (மன்னிக்கவும்! பாரதத்திலுள்ள – காந்தி – பாரதம், ஆர்.எஸ்.எஸ். – பாரத வர்ஷம், அகண்டபாரதம் – எஸ்.என்.என். – பாரதம் எவற்றோடு கைகோர்க்கிறது?) அவைதீக சமயங்களையும் (ஆசீவகம், பவுத்தம், சமணம்) அதையும் தாண்டி தொல்குடி மரபு வரை சென்று நமக்கான மரபு எது? மார்க்சியம், லெனினிசம், மாவோயிசத்துடன் நெருக்கமாக இருக்கக் கூடிய மரபு எதுவென தேடல் நீளலாம். ஆனால் இத்தகைய தேடல் ஏதுமற்று தமிழ்மறை – தென்கலை – வைணவ – கைங்கர்ய மரபுடன் நின்று போவதன் மர்மம் என்ன? வைணவம் மட்டும் “சுயம்பு” வான மரபா? அதற்கு முன்னால் இங்கு எதுவும் இல்லையா?
சைவ – வைணவ மடங்களுக்கும் அத்வைதம் – விசிஷ்டாத்வைதத்துக்கும் இடையே என்ன பெரிய வேறுபாடு இருக்க முடியும்? ஆழ்வார்களில் நிறையபேர் சூத்திரர் – தலித்கள் என்கிறார். (திருமங்கையாழ்வார் – கள்ளர், திருப்பாணாழ்வார் தலித்; பக் : 179). நாயன்மார்களில் கூட நந்தன் போன்று தலித்களும் சூத்திரர்களும் உண்டே! அதனால் சைவமும் முற்போக்கானது என்று கூறிவிடமுடியுமா? வைணவத்தில் சாதியம் இல்லை என்கிறார். ரொம்ப அபத்தமாக இருக்கிறது. இதை எப்படி ஏற்றுக்கொள்வது?
இவரது வைணவச் சார்பு பிறப்பால் ஏற்பட்டது என்பதை அவதானிக்க முடிகிறது. வைணவ மரபில் பிறந்து வளர்ந்தால்தான் மார்க்சியனாகவும், கம்யூனிஸ்டாகவும் மாறுவது எளிதாக இருந்ததென்கிறார். இந்த எளிமையான வேலையை அமைத்து வைணவர்களும் ஏன் செய்யவில்லை? வைணவச் சார்போடு இவர் பிறரை அணுகும் விதம் பாசிசமாகத்தான் இருக்கிறது. “சனி நீராடு – என்பதன் அர்த்தம் அனுபவப்பட்டவனுக்குத் தெரியும்” என்கிறார். இது பாசிசமின்றி வேறென்ன? இவர் பிறப்பு வழி வைணவராக இல்லாவிடில் வைணவத்திற்கும், மார்ச்சியத்திற்கு முடிச்சு போடும் வேலையை செய்திருப்பார் என்பது அய்யமே.
இராமாநுஜர் மேல்கோட்டையில் செய்ததை ஏன் திருவரங்கத்தில் செய்யமுடியவில்லை என வைணவரான இ.பா. நேர்மையாக கேட்கிறார் (பக். 574). ஆனால் இவரோ காந்தியால் முடியாததை 800 ஆண்டுகளுக்கு முன்பு சாதித்துவிட்ட பெருமிதத்துடன், மேல் கோட்டையில் ஆண்டுகளுக்கு ஒரு நாள் தலித்கள் கோவிலுக்குள் புக அனுமதி அளிக்கப்படுகிறது பற்றி பெருமைப்படுகிறார். ஆண்டுக்கு ஒரு நாள் நடக்கும் தேரோட்ட நிகழ்வுகள், பிறகு செய்யும் ‘சுத்தி’ சடங்குகள் எல்லாம் நமக்குத் தெரியாதா? தோழரின் வைணவப்பற்று சுஜாதா, கமல்ஹாசன் போன்றோர்களையும் விஞ்சி விடுகிறது.
காந்தியை உண்மையான வைணவன் இல்லை என்கிறார் (பக். 272), ஆதிசங்கரனை நம்பூதிரி பார்ப்பான் என்று காய்கிறார் (பக். 256). நேருவை பல இடங்களில் (பக்.203,240) காஷ்மீர் பார்ப்பான் என்று திட்டுகிறார். காந்தி, நேரு போன்றவர்கள் தென்கலை – தமிழ் வைணவ – கைங்கரிய பார்ப்பனாக இருந்தால் ஏற்றுக் கொள்வார் என்று கருத இடமுண்டு.
காந்தியை முட்டாள் சுட்டுக் கொன்றான் (பக்.279) என்கிறார். இதை எப்படி புரிந்து கொள்வது? பிரிவினை, அது தொடர்பான கலவரங்கள், காந்தியின் செயல்பாடுகள், ஆர்.எஸ்.எஸ்.இன் சதி, சூழ்ச்சி, கொலைவெறி, இந்துத்துவம் போன்ற எவ்வித பின்னணி புரிதலுமற்று சொல்லப்படுகிற மேற்கண்ட வாசகம் யாருக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங்தள் மற்றுமுள்ள சங்பரிவார் கும்பலுக்கும் தோழருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது எனக் கேட்க வேண்டியுள்ளது. இந்நூலில் உள்ள மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ தொடர்பான சொற்களை எடுத்துவிட்டால் இந்துத்துவாதிகளுக்கு பயன்படும் ஒன்றாகக் கூட மாறி விடக்கூடிய அபாயம் இருக்கிறது. இது தெரிந்து தானே எஸ்.என்.என். நூற்களுக்கு விஜயபாரதத்தில் மதிப்புரை எழுதியிருக்கிறார்கள்!
பெருமைப்படத்தக்க நீண்ட மரபும், பாரம்பரியமும் இல்லாதவர்கள் தமக்கான விடுதலை குறித்து சிந்திக்கக் கூடாதா? போராட வழியே இல்லையா? உங்களைப் போன்ற கலாச்சார பெருமைமிக்க (அதாவது பாசிச) தென்கலை – தமிழ் – வைணவ மரபில் இல்லாத ஒரு இனக்குழு தனக்கான விடுதலையை யாரிடம் கையேந்தி பெற வேண்டும்? அவர்களுக்கு விடுதலை வாங்கித் தரும் வேலையை வைணவம் மேற்கொள்ளுமா? அல்லது அவர்கள் இதனுடன் அய்க்கியமாக வேண்டுமா? என்றெல்லாம் கேள்வி எழுகிறது.
விஞ்ஞானத்திற்கு மட்டுந்தான் உரை தேவை. சமய நூலுக்கு உரை தேவையில்லை. இஸ்லாம், கத்தோலிக்கம், ப்ராஸ்ட்ஸ்டண்ட் போன்ற மதங்களில் பூசாரிகள் உருவாகிவிட்டதாகச் சொல்கிறார் (பக்.449). வைணவத்தில் எல்லாம் இருக்கிறது. இதில் இல்லாதது ஒன்றுமில்லை எனும்போது, இன்னும் என்னவெல்லாம் இருக்குமோ என்று அச்சமாக உள்ளது. எஸ்.என்.என். வைணவத்திற்கு உரையெழுதும் வேலையை மேற்கொண்டு தென்கலை தமிழ் – வைணவ கைங்கர்ய பூசாரியாக மாறினார் என்று தெரியவில்லை?
சுற்றுச்சூழல், பெண்ணியம் பேன்றவற்றைப் பற்றி இங்கு இதுவரையில் நிறைய விவாதிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ். சுவாமிநாதனின் பொய், புரட்டு போன்றவை அம்பலப்படுத்தப்படத்தான் வேண்டும். ஆனால் சுற்று சூழலியர்களின் செயல்பாடுகள் பலவற்றில் இந்துத்துவவாதிகளுடன் இணக்கமான போக்கு, மதவாதம் பற்றிய புரிதலின்மை போன்றவற்றையும் விமர்சிக்க வேண்டியுள்ளது.
சர்தார் சரோவர் அணை, சேது சமுத்திரத் திட்டம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் இந்துத்துவத்துடன் கொள்கின்ற உறவு மிகவும் எதிரிடையான நிலைப்பாட்டுக்கு வழிவகுத்து விடுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் நோக்கம் நிறைவேறினால் சரி, யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என்ற நிலைப்பாடு மோசமானதொன்றாகும். ‘கற்பு’ பற்றிய பொதுபுத்தி சார்ந்த கதையாடல்களை எல்லாம் (பக்.201, 496) நிகழ்த்திவிட்டு பெண்ணியம், சுற்றுச்சூழலுக்கு பெண்களின் தலைமை பற்றியெல்லாம் விவாதிப்பது முரணாகவே இருக்கிறது. சூழலியம், பெண்ணியம் பற்றி பேசுமளவிற்கு கூட தலித்தியம் பற்றி பேச மறுக்கும் போக்கு உள்ளது. 800 ஆண்டுகளுக்கு முன்பே இராமாநுஜர் தலித்களை ஆலய நுழைவு செய்து விட்டார் என்று பெருமையடித்துக் கொள்வதில் என்ன பயன்? தலித்களின் இன்றைய நிலை என்ன? ஆலய நுழைவு இப்போது கூட சாத்தியமில்லையே! தலித்தியம் பற்றியெல்லாம் போகிற போக்கில் கருத்து சொல்வதை வேறுபடுத்தித்தான் பார்க்க வேண்டியுள்ளது.
பவுத்தம், சமணம் போன்ற அவைதீக சமயங்களையும், வைதீகத்திற்கு எதிரான பல்வேறு போராட்டங்களையும் அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் செயல்பாட்டையும் எப்படி பார்ப்பது? இவைகள் எல்லாம் ஏன் நடைபெற்றன? அன்பு வழியான வைணவம் ‘வைணவப் பேராசான்’ எஸ்.என். நாகராஜன் சொல்வது போல் இருந்திருந்தால் மேலை சொன்னவற்றுக்கு தேவையில்லாமற் போயிருக்குமே! அது ஏன் நடக்கவில்லை? இவற்றையெல்லாம் மேலே ஆங்கில அறிவால் ஏற்பட்ட வறட்டு நாத்திகவாதம் என்று எப்படி புறந்தள்ள முடியும்? இதற்கு எதிரிடையான கீழைத்தேய புத்திசாலித்தனமான ஆன்மீக வாதம் எங்ஙனம் செயல்படும்? புத்திசாலித்தனத்துக்கும், அறிவுக்கும் என்ன வேறுபாடு?
விடுதலை பிரிக்க முடியாது என்றே வைத்துக் கொள்வோம். பொருளை ஒழித்தால்தான் தொழிலாளியுடன் சேர்த்து முதலாளிக்கும் விடுதலை. இதையும் ஒத்துக் கொள்வோம். வைணவத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் ஒழிக்காமல் பாறையனுடன் சேர்த்து பார்ப்பானுக்கு என்ன மாதிரியான விடுதலையைத் தர முடியும்? தீவிரமான வைணவப்பற்றைத் தவிர இதில் வேறெதையும் காணமுடியவில்லை.
தமிழில் 40,000 பழமொழிகள் இருக்கின்றன (பக்.516) என்று பெருமிதம் கொள்கிறார். இவைகள் யாரை நோக்கி, எதற்காக சுட்டப்பட்டன என்பதையும் வருணாஸ்ரம, சாதீயப் பின்னணி, சாதியடிப்படையிலான பார்ப்பன – பறைச்சேரிகள், இழிசனர் வழக்கு என்றெல்லாம் அடித்தட்டு மக்களின் மொழிகூட எள்ளி நகையாடப்பட்ட சூழலில் பழமொழிகளை வைத்து பழம் பெருமையை மட்டுந்தான் பேசமுடியும்.
மாவோவின் “முள்ளங்கி கம்யூனிஸ்ட்” க்கு தோழர் எஸ்.என். நாகராஜன் உதாரணமாகிப் போனதுதான் வரலாற்றின் அவலம் என்று நினைக்கிறேன். வெளியே மார்க்சிய, லெனினிய, மாவோயிய, கம்யூனிச சிவப்பு சாயம்; ஆனால் உள்ளேயிருப்பதோ வைணவ – இந்துத்துவ வேஷம். நூல் முழுமையும் தென்கலை – வைணவம் – கிழக்கு – சுயமாச்சார்ய மரபு – அன்பு வழி – மரபைத் தேடுதல் – விசிஷ்டாத் வைதம் – இராமாநுஜர் – புத்திசாலித்தனமான ஆன்மீகம் – கைங்கர்ய மார்க்கம் – பறையனுடன் சேர்த்து பார்ப்பனுக்கும் விடுதலை (பக்.191) – இவ்வாறான வலைப்பின்னலில் கம்யூனிச மூலாம் பூசப்பட்ட இந்துத்துவமே வெளிப்படக் காண்கிறோம்.
மார்க்சியம், ஹெகலியம், லெனினியம், ஸ்டாலினியம், மாவோயியம் போன்றவற்றைப் பற்றியும் மேலும் பகை முரண் நட்பு முரண், உற்பத்தி சக்தி உற்பத்தி உறவு பற்றியும் விவாதம் செய்துதான் நம்மையும் மார்க்சியத்தையும் செழுமைப்படுத்திக் கொள்ளவும், நமக்கான விடுதலைப்பாதையைத் தெரிவு செய்யவும் முடியும். ஆனால் இந்த புத்தகத்தில் முழுக்க முழுக்க மரபு, வேர் என்றெல்லாம் சொல்லி தென்கலை – தமிழ் வைணவம் பற்றியே விதந்தோதப்படுகிறது. மார்க்சியம், மாவோயியம் போன்றவற்றிற்கு வைணவ உரை எழுதும் போக்கு ரொம்ப அபத்தமாகப்படுகிறது.
தோழரின் கூற்றுப்படியே இந்நூலில் அறிவதற்கு ஒன்றுமில்லை. எனவே, இதைத்தூக்கி எறிந்துவிடலாம் (பக்.557) என்பதே என் நிலைப்பாடு. ஆனால் 578 பக்கங்கள் கொண்ட நூலுக்காக எத்தனை மரங்கள் வெட்டப்பட்டிருக்கும் என்றெண்ணும் போது மிகுந்த வருத்தம் உண்டாகிறது.
(நன்றி: மு. சிவகுருநாதன்)