அது ஒரு மலேசிய பள்ளிக்கூடம். அப்பள்ளியில் காட்டொழுங்கு ஆசிரியர் என்னும் ஆஜானுபாகுவான நன்னெறி ஆசிரியர். அவரைக் கண்டாலே அப்பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் கூட பயப்படுவர். ஆனால் அவரது இரும்புக் கரங்களுக்குப் பயப்படாமல் ஒரு மாணவன் மட்டும் எப்போதும் அடி வாங்கிக் கொண்டே இருப்பான். வாரத்தில் ஒரு நாளாவது அடி வாங்கும் அவனைக் கண்டாலே பாவமாக இருக்கும். அப்படி என்னதான் இவன் செய்யும் தவறென்றால், அவன் பள்ளிக்கூடக் கால்பந்துகளை அனுமதியின்றி எடுத்துத் திடலில் உதைக்க முயன்றிருக்கிறான். பலமுறை தண்டனை பெற்றும் இதே தவறை அவன் தொடர்ந்து செய்ய தண்டனைகளும் கடுமையாகியிருக்கின்றன. இதனை அப்பள்ளியின் வேறு ஒரு ஆசிரியர் கவனித்து வர , விளையாட்டு அறைக்குள் புகும் போது அவனைக் கையும் களவுமாகப் பிடித்து விடுகிறார்.
பின் அவனிடம் கேட்கிறார், “எத்தனை முறை அடி வாங்கினாலும் ஏன் இதையே செய்ற… டிசிப்ளின் சார்ட்ட சொல்லவா?” எனக் கொஞ்சம் மிரட்டலாகக் கேட்க,
“வேண்டாம் சார்,அடிப்பாரு….” என நடுங்குகிறான்.
“ பின்ன ஏன் திருடுற?” அவன் உடல் உதறுவதை அவர் கரங்கள் அறிந்ததும் அந்த ஆசிரியர் தொனியைக் குறைத்துக் கேட்கிறார்.
“திருடல சார்… ஒரு தரம் எத்திப்பார்க்க எடுத்தேன்” என அவன் அப்பாவியாக நடுங்கியபடி சொல்கிறான்.
“ ஒருதரம் எத்திப்பார்க்கவா? ஏன் உன் வீட்டுல எத்திப் பார்க்க வேண்டியதுதானே?” என ஆசிரியர் கேட்கிறார்.
அதற்கு அம்மாணவன் தான் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் இருப்பதால் பந்தைக் கையில் பிடித்துத்தான் விளையாடமுடியுமென்றும், காலால் உதைத்தால் அடுத்த வீட்டின் கண்ணாடியைச் சேதப்படுத்தும் என்றும் கூறுகிறான். அதற்கு அந்த ஆசிரியர் , “சரி… அதான் ஸ்கூடல் திடல் இருக்கே.. விளையாட்டுப் பாடவேளையில் உதைத்து விளையாட வேண்டியதுதானே” என்கிறார்..அதற்கு அந்த மாணவன் சொன்ன பதில் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. அப்பள்ளியில் பந்து விளையாட்டுக்கும் பொறுப்பானவரான அந்த நன்னெறி ஆசிரியர், விளையாட்டுப் பாடவேளையையும் வகுப்புக்குள்ளேயே ஓட்டிவிடுவாராம். கரும்பலகையில் திடலை படம் வரைந்து எங்கே யார் நின்று எப்படி உதைக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பாராம்.
இதைக் கேட்ட ஆசிரியர் அம்மாணவனுடன் அந்தப் பள்ளியின் விளையாட்டு பொருட்கள் இருக்கும் அறைக்குச் சென்று பார்க்கிறார். பயன்படுத்திய அடையாளமே இல்லாமல் புத்தம் புதிதாய் இருக்கிறது. அப்போது அந்த ஆசிரியர் பின்னால் நின்ற அம்மாணவன் ஏக்கமாக சொல்கிறான் ,
“சார், ஒரு தரம் அந்தப் பந்தை எடுத்து வேகமா உதைக்கணும் சார்…. பந்து நான் எத்தினா எவ்ளோ தூரம் பறக்குதுன்னு பார்க்கணும் சார்.”
அவ்விடமே அந்த ஆசிரியரின் கண்கள் கலங்கி அவனை திடலுக்கு அழைத்துச் சென்று உதைக்கச் சொல்கிறார் பயிற்சி இல்லாததால் அது அவன் வசம் வராமல் வழுக்கிச் சென்றது. “ கனவுல பலமுறை எத்தியிருக்கேன் சார்….. உயரமாய்ப் பறக்கும்” என்கிறான்…
இந்த ஒரு சம்பவம் போதும் இந்தப் புத்தகத்தை மதிப்பிட. உன்மையில் இதைப் படித்து விட்டு நெடுநேரம் வாய்மூடி அமர்ந்திருந்தேன். இதில் வரும் ஆசிரியர்தான் நூலாசிரியர் ம.நவீன், தமிழர்., மலேசியாவில் ஆசிரியராக இருக்கிறார்.
இந்த வகுப்பறையின் கடைசி நாற்காலி என்னும் இந்நூல் இந்த ஆசிரியரின் அசலான அனுபவப் பகிர்வுகள். நாம் நமது ஊரில் கடைசி பெஞ்சில் உள்ள மாணவர்களை ‘மாப்பிள்ளை பெஞ்ச் அல்லது கடைசி பெஞ்ச்’’ மாணவர்கள் என்போம் . அங்கே மலேசியாவில் கடைசி நாற்காலி என்பார்கள் போலிருக்கிறது. எங்கே இருந்தால் என்ன? இது போன்ற கல்வி சார் பிரச்சினைகள் தமிழ்நாட்டுக்கும் கன கச்சிதமாய் பொருந்தும்.
நிறைய மதிப்பெண் எடுத்த மாணவர்கள், போட்டிகளில் வென்ற மாணவர்களை எனது மாணவன், எனது பயிற்சி என பெருமைப்பட்டுக் கொள்ளும் நாம், தேர்வுகளில் தோல்வி அடைந்த, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கைவிட்டுவிடுகிறோம் என்ற வேதனையின் வெளிப்பாடே இந்த நூலிலுள்ள 23 கட்டுரைகளும். நூலின் முன்னுரையில் தன்னை “ ஒரு பின் தங்கிய ஆசிரியன்” என அறிவித்துக்கொள்ளும் ம.நவீன், இந்நூல் முழுவதும் பின் தங்கிய மாணவர்கள் என பள்ளி முத்திரை குத்தி, காயப்படுத்திய , வெளியேற்றிய மாணவர்களுக்காகவே உரக்கக் குரல் கொடுக்கிறார்.
ஒவ்வொரு மாணவனிடமும் ஏதோ ஒரு தனித்திறமை இருக்கும், அதைக் கண்டறிய ஆசிரியருக்கு ஆயிரம் கண்கள் வேண்டுமென்பார் பேராசிரியர் மாடசாமி. ஆனால் மதிப்பெண் குதிரையை பள்ளிகள் விரட்டிச் செல்லும்போது, மெதுநிலை மாணவர்கள் (தமிழ்நாட்டில் மெல்லக் கற்போர்) கீழே விழுந்து , தன் சுயம் அழிந்து நசுக்கப்படுகிறார்கள், ஒதுக்கப்படுகிறார்கள். இவர்கள் மீது கரிசனம் கொண்டு இந்நூலில் பேசுகிறார் ம.நவீன்.
அந்தப் பள்ளியில் மிக மெது நிலை மாணவன் என அறியப்பட்ட நாகராஜன் என்னும் மாணவனின் தந்தை ஆடுமேய்க்கும் தொழில் செய்து வருபவர். ஒரு முறை பள்ளி சபை கூடலில் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம், “செம்மறி ஆடு போல வாழக்கூடாது “எனக் குறைத்துப்பேச, நாகராஜன் எழுந்து செம்மறி ஆட்டின் நற்குணங்களைப் பற்றியும், செம்மறி ஆட்டிற்கும் நாட்டாட்டுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் பற்றிச் சொல்ல அசந்து போனது பள்ளி, தலை கவிழ்ந்து போகிறார் தலைமை ஆசிரியர்.
மெதுநிலை மாணவர்களுக்கு ஆசிரியரின் அன்பான தொடுதல் மிகப்பெரிய அங்கீகாரமாய் இருப்பதைப் பதிவுசெய்கிறார். நாற்காலி நடப்பதாய்க் கூறும் ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியே கூடி பேய் பட்டம் கட்டிவிட, அவனிடம் இருந்த dyslexia குறைபாட்டால் இவ்வாறு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்து கூறியுள்ள “நடக்கும் பொருள்கள்” கட்டுரை அருமை. கடைசியாக குழந்தைகளை கல்வி “திருட்டுத்தனம் செஞ்சாவது ஜெயிச்சிடு..” என்னும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதைக் கண்டு வருந்தி “இதைச் சொல்லித்தர எதற்குப் பள்ளி, வீதியே போதுமே” என்று மனம் குமுறுகிறார்..
திக்குவாய் என்ற கட்டுரையில் நூலாசிரியர் சிறுவயதில் திக்குவாயுடன் இருந்து பேசச் சிரமப்பட்டபோது, “ நானும் திக்குவாய் தெரியுமா? சில பயிற்சிகள் மூலம் இப்போது நன்றாக பேசுகிறேன்.அதைப்போல நீயும் முயற்சி செய்” என்று தன்னம்பிக்கை கொடுத்த ஆசிரியையை இப்போதும் நன்றிடன் நினைத்துப் பார்க்கிறார், அந்த ஆசிரியை சொன்னது பொய் என்று தெரிந்த பிறகும்.
சுதந்திரம் என்ற கட்டுரையில்,”ஆசிரியரின் திணிப்பின்றிச் சுதந்திரமாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்ளக்கூடிய மாணவர்களே வருங்காலத்தில் புதுமைகளை உருவாக்க முடியும்” என்று எதார்த்தம் பேசுகிறார். மூடநம்பிக்கைகளை எள்ளி நகையாடும் “ சாவைத் தடுக்கும் சாமியார்கள்” ,” 690 வெள்ளிக்கு ஞானம்” போன்ற கட்டுரைகள், தன் உறவினராலேயே பாலியல் துன்பத்துக்குள்ளான சிறுமியைப் பற்றிக் கூறும் “தண்டனைகள்” கட்டுரை போன்றவை சம காலத்துக்குத் தேவையான தகவல்களை நமக்குத் தருகிறது.
“லண்டன் பயணம்”, “அறிவியல் விழா” போன்ற கட்டுரைகள் நமது மாணவர்களின் புத்தாக்கத் திறன் குறைவு பற்றி பேசுகிறது. இங்கு கல்விச்சூழல் வறட்சியாக, கற்பனையும் மகிழ்ச்சியும் இல்லாமல் பயம் மட்டுமே கொண்ட கல்விமுறையாக இருப்பதைப் பதிவு செய்கிறார். இந்தப் பயம் புத்தாக்கத் திறனுக்கு உதவுவதில்லை என்றும் நிறுவுகிறார் ம.நவீன்.
“தமிழ் இலக்கியங்கள் உதவாக்கரை” என்னும் தந்தை பெரியாரின் மேற்கோளோடு ஒரு சமூக நீதி பேசும் கட்டுரை. இதில் சேற்றிலே மலர்ந்த செந்தாமரை என்ற உவமையை உதாரணம் காட்டுகிறார். இதன் பொருள் ‘ தாழ்ந்த இடத்திலும் உயர்ந்தோர் தோன்றுவர்’ என்பது. இதில் ஒரு மாணவன் கேட்கிறான், “சார் தாழ்ந்த இடமுன்னா என்னா?”…. இதற்கு என்ன பதில் கூறுவது, தாழ்ந்த இடத்தில் உயர்ந்தோர் பிறப்பது சாத்தியம் என்றால் உயர்ந்த இடத்தில் தாழ்ந்தவர்கள் பி றப்பதும் சாத்தியம் தானே! இதை ஏன் புத்தகங்கள் சொல்லவில்லை என்கிறார்.. யோசிக்க வேண்டிய விசயமாகத்தான் இருக்கிறது.
“நானும் கல்லூரியும்” என்ற தலைப்பிலான மூன்று கட்டுரைகளில் தனது ஆசிரியர் பயிற்சி அனுபவங்களைப் பட்டியலிடுகிறார். இதில் இவரது கற்பித்தல் திறன் பற்றி அவரது விரிவுரையாளர் குறை சொன்னதற்கு தனது பதிலாக “கற்பித்தல் என்பது ஒரு கலை. அதை ஏதோ ஒரு நாள் கல்லூரிக்கு வந்து போகும் விரிவுரையாளரால் தீர்மானிக்க முடியாது. சில வருடங்கள் கடந்து நம் மாணவர்கள் தீர்மானிப்பார்கள்” என்கிறார்.
அவள் பெயர் சர்வேஷ் என்ற கட்டுரையில் ஆணாகப் பிறந்து பெண்ணாக உணரும் ஒரு மாணவன் சந்திக்கும் மனப்போராட்டங்களையும், இதனால் தடைபடும் கல்வி பற்றியும் வலியுடன் பதிவு செய்துள்ளார்.
கடைசியாக மரம் ஏறும் யானைகள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் நமது கல்வியமைப்பின் முரண்களை எழுதியுள்ளார். அதாவது பறவை, குரங்கு, பெங்குயின்,யானை, மீன், நீர்நாய் , நாய் என வரிசை பிடித்து நிற்க “மரத்தில் ஏற வேண்டும்” இதுவே தேர்வு எனக் கட்டளை இடுகிறார் ஆசிரியர். எல்லா விலங்குகளும் அதிர்ச்சியில் பார்க்க சிரிப்புடன் குரங்கு. இதுதானே நம் கல்வி அமைப்பு.
இவ்வாறு இந்நூல் முழுவதும் பின்தங்கிய மாணவர்களைப் பற்றி எழுதியுள்ள நூலாசிரியர், “பின்தங்கிய மாணவனுக்குக் கருணை காட்டச் சொல்லவில்லை; பின் தங்கிய மாணவன் என ஒருவருமே இல்லை என்கிறேன். பின்தங்கியோர் என நாம் கணிப்பவர்களெல்லாம் பாடத்திட்டத்தில் உள்ள திறன்களை அடையாதவர்கள் மட்டுமே. பாடத்திட்டம் என்பது கல்வியின் ஒரு பகுதி மட்டுமே தவிர, அதுதான் கல்வி என்பதில்லை.ஏட்டில் இல்லாத ஏதோ ஒரு திறமை உங்கள் மாணவனிடம் இருக்கும். அது என்னவென்று ஆராய வேண்டியுள்ளது. அதற்குப் பெரிய ஆய்வெல்லாம் செய்து மெனக்கெட வேண்டியதில்லை. குற்றங்களைத் திணிக்காமல் ,ஒரு மாணவனை அவன் இயல்பில் விட்டாலே போதும்.அவன் தன் திறமையுடன் வெளிப்படுவான். மீன் இயல்பாய் நீந்துவதைப் போன்று, பறவை இயல்பாய் பறப்பதைப் போன்று, நீர்நாய் பந்தை லாவகமாகச் சுழற்றுவதைப் போன்று அவனும் தன் இயல்பில் சுழல்வான். அப்போது நாம் ‘நீ ஏன் இன்னும் மரம் ஏறவில்லை?” எனக் கேட்காமல் இருந்தாலே போதும்.” என்று இந்நூலை நிறைவு செய்கிறார் நூலாசிரியர் ம.நவீன்.
என்ன சத்தியமான வார்த்தைகள். இந்நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள பிரளயன் மிக பொறுப்பான பணியைச் செய்துள்ளார். இவரது கட்டுரையும் கல்வி பற்றிய பல செய்திகளை நமக்குத் தருகிறது. விட்டுவிடாதீர்கள். இந்நூலைப் படித்துப் பாருங்களேன். நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.