வாழ்வின் தடங்கள்: சித்தலிங்கையாவின் தன்வரலாறு

வாழ்வின் தடங்கள்: சித்தலிங்கையாவின் தன்வரலாறு

வாழ்வின் தடங்கள் சித்தலிங்கையாவுடைய தன்வரலாற்று நூலின் இரண்டாவது பகுதி. இதன் முதல் பகுதி ஊரும் சேரியும் என்னும் தலைப்பில் வெளிவந்தது. இரண்டாவது பகுதியான நூலை மொழிபெயர்த்து முடித்ததும் அதன் கையெழுத்துப் பிரதியை எனக்கு நெருக்கமான நண்பரிடம் படித்துப் பார்க்கக் கொடுத்திருந்தேன்.

ஒரு வாரம் கழித்து ஒரு விடுமுறை நாளில் நாங்கள் மீண்டும் சந்தித்தோம். இடைப்பட்ட நாட்களில் அவர் அந்தப் பிரதியை இரண்டு முறை படித்துவிட்டதாகச் சொன்னார். மிகவும் பரவசத்துடன் அதை கையில் வைத்துப் புரட்டியபடி “மிகச்சிறந்த புத்தகம் இது” என்றார். அவர் நல்ல வாசகர். சமூகப்பணியாளர். சமூக மேம்பாடெனும் இலட்சியப்பாதையில் நம்பிக்கையோடு நடந்து, ஏழை எளியவர்களுக்கான கோரிக்கைகளோடு பல அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் முன்னிலையிலும் நின்று, வசைபட்டு, கேலிக்குள்ளாகி, விமர்சனத்துக்கும் ஆளாகி நொந்து மெலிந்தவர். இருப்பினும் ஒருபோதும் தன் முயற்சியில் தளராத மனிதர். பத்து முயற்சிகளில் நான்கு அல்லது ஐந்து முயற்சிகளில்தான் அவருக்கு வெற்றி கிடைக்கும். அதையே அவர் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றி கிடைத்த துபோல எண்ணி மகிழக்கூடியவர். தன் தலைக்கு மேலாக கையெழுத்துப் பிரதியை தூக்கிக் காட்டி “எங்களைப்போன்ற ஆட்களுக்கு நல்ல வழிகாட்டி” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தார்.

ஒரு தேநீரை அருந்தியபடி சித்தலிங்கையாவின் அனுபவப்பதிவு தனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்பதற்கான காரணங்களை அவர் அடுக்கத் தொடங்கினார். எந்தக் காலவரிசையிலும் அடங்காத வகையில் தன் நினைவிலிருந்து சொல்வதுபோல சித்தலிங்கையா பல அனுபவங்களை இந்தத் தன்வரலாற்றுப் பிரதியில் முன்வைக்கிறார். தனித்தனியாகப் படிக்கும்போது, ஒவ்வொன்றும் ஒரு சின்ன அனுபவக்குறிப்பைப்போன்ற தோற்றத்தை அளித்தாலும் பிரதியை முழுக்க வாசித்த பிறகு அனைத்துக் குறிப்புகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து தன்னைத்தானே முழுமைப்படுத்திக்கொள்ளும் விசித்திரம் நிகழ்வதை ஒரு வாசகனால் எளிதாக உணர்ந்துவிட முடியும். ஒரு பெரிய நாவலின் சின்னச்சின்ன அத்தியாயங்களை கலைத்துவைத்துத் தொகுத்ததுபோல உள்ளது என்றார். ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் ஒரு பண்பாட்டுச்சூழலில் இவை அனைத்தும் நிகழ்ந்திருப்பதை, கலையின் கண்களால் பார்த்து எழுதியிருக்கிறார் சித்தலிங்கையா. எந்த விவாதமும் தனிப்பட்ட விதத்தில் நிகழாமலேயே, தன் தொகுப்புத்தன்மையின் காரணமாக அது வரலாற்றை, பண்பாட்டை முன்வைத்து விவாதிக்கத் தூண்டுகிறது. அவர் கவிஞர் என்பதால் ஒவ்வொரு சம்பவத்தையும் கவிதைக்கே உரிய நெகிழ்ச்சியோடும் அழகோடும் கோர்த்துக்கொண்டே செல்கிறார். சம்பவங்களிடையே அவர் விட்டுச் சென்றிருக்கும் இடைவெளியின் ஊடாக வரலாற்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் இன்னொரு கோணத்தில் தூண்டிவிடுகிறார் என்றே சொல்லவேண்டும்.

அவர் சொல்லச்சொல்ல ஆர்வத்துடன் நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயமாக விரித்துவிரித்துச் சொல்லி, அதற்கு இணையாக தனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவத்தைத் தன் நினைவிலிருந்து எடுத்துச் சொல்லத் தொடங்கினார். ஒவ்வொரு பழைய அனுபவத்தைச் சொல்லும்போதும் அவர் குரல் உடைந்தது. விழிகள் தளும்பின. சித்தலிங்கையாவின் ஒவ்வொரு அனுபவத்திலும் தன் நிழல் படிந்திருப்பதைப்போல உணர்வதில் அவர் அடைந்திருக்கும் பரவசத்தை என்னால் உணரமுடிந்தது.

வீட்டுக்குத் திரும்பிய பிறகும் கூட நண்பருடைய சொற்கள் என் காதருகில் ஒலித்தபடியே இருந்தன. முப்பது நாற்பது ஆண்டுக்காலம் என்பது வரலாற்றில் ஒரு பெரிய காலகட்டமல்ல. ஆனால் முப்பது நாற்பது ஆண்டுக்கு முன்னால் நிகழ்ந்த வாழ்க்கைச்சம்பவங்கள் ஒரே சமயத்தில் நேற்று நடந்ததுபோன்ற உணர்வையும் வெகுகாலத்துக்கு முன்பே நடந்ததுபோன்ற உணர்வையும் அளிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வாழ்க்கைவரலாற்றில் சித்தலிங்கையாவுக்கு நண்பர்களாகவும் சகபயணியர்களாகவும் குறிப்பிடப்படும் ஒவ்வொருவரும் இன்று பெரிய ஆளுமைகளாக உயர்ந்து நிற்பவர்கள். அனைவரோடும் ஒரு சீரான நட்பை மிகநீண்ட காலமாகப் பேணி வந்திருக்கும் சித்தலிங்கையாவின் பேரன்பு வளையத்தை எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை. ஒருபுறம் தேவராஜ் அரஸ், பசவலிங்கப்பா, எம்.என்.கல்லண்ணா, எம்.கே.பட் போன்ற அரசியல் தளத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொரு புறம் சிவருத்ரப்பா, மளகி, முகளி, பசவராஜ் கல்குடி, டி.ஆர்.நாகராஜ், தேவனூரு மகாதேவ போன்ற இலக்கியத்தளத்தை சேர்ந்தவர்கள். பிறிதொரு புறம் மானந்தூரு கெம்பய்யா, பக்தவத்சலம், ஷங்கரப்பா, ஜானகெரெ, நாகபூஷணம் போன்ற வாழ்க்கைத்தளத்தை சேர்ந்த எளியவர்கள். அனைவரும் சித்தலிங்கையாவின் வாழ்க்கையில் மாறி மாறி ஊடாடிச் செல்வதை அவர் வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது. அவர்களுக்கிடையே சித்தலிங்கையா என்னும் ஆளுமை மெல்ல மெல்ல திரண்டு உருவாகி வருவதையும் உணர்த்துகிறது. சித்தலிங்கையாவின் வாழ்க்கை வரலாறு முக்கியமானதொரு ஆவணம். மனிதர்களிடையே நிகழும் பூசல்கள், கோபங்கள், தோல்விகள், ஆற்றாமைகள், ஏமாற்றங்கள் அனைத்தையும் அதனதன் வண்ணங்களோடு அவர் மொழி அருமையாக தீட்டிக் காட்டுகிறது. மற்றவர்கள் பார்வையின் வழியாக சித்தலிங்கையாவும் சித்தலிங்கையாவின் பார்வை வழியாக மற்றவர்களுமாக விரிந்துவிரிந்து இந்தத் தன்வரலாற்றின் கட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இதுவே இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு. வெறுப்பை வெளிப்படுத்தும் ஒரு சொல்லோ தடமோ எதுவுமின்றி அமைந்திருப்பது இன்னொரு சிறப்பு.

ஒரு கலைநிகழ்ச்சி முடிந்து அனைவரும் கலைந்துகொண்டிருந்த ஒரு தருணத்தில் சித்தலிங்கையாவிடம் பேசக் கிட்டிய நேரத்தில் இந்தத் தன்வரலாற்றை மொழிபெயர்க்கும் விருப்பத்தைத் தெரிவித்தேன். அக்கணமே அவருக்கே உரிய புன்னகையோடு “நீங்கள் செய்யவேண்டும் என்பதற்காகத்தானே நான் காத்திருக்கிறேன்” என மறுமொழி உரைத்தபடி இசைவைத் தெரிவித்த சித்தலிங்கையா என்றென்றும் என் அன்புக்கும் நன்றிக்கும் உரியவர். அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகவும் ஆழமானது. என் அனைத்துச் செயல்பாடுகளிலும் எனக்கு எப்போதும் உற்ற துணையாக விளங்குபவர் என் அன்புமனைவி அமுதா. தன் சொற்கள் வழியாக அவர் அளிக்கும் எல்லையற்ற ஊக்கமே என்னை இத்தனை தொலைவுக்கு அழைத்து வந்திருக்கிறது. இந்தத் தன்வரலாற்றை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தருணத்தில், இதன் ஒருசில அத்தியாயங்கள் தடம் இதழில் அறிமுகப்பகுதியாக வெளிவர துணைநின்ற கதிர்பாரதிவும், இளங்கோவும் என் நன்றிக்குரியவர்கள். இந்த நூலை மிகச்சிறப்பான வகையில் வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் என் நன்றி.

(காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை)

(நன்றி: பாவண்ணன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp