சில புத்தகங்களின் தலைப்பே நம்மை வாங்க வைக்கும்… உடனே வாசிக்க வைக்கும். அப்படி ஒரு தலைப்பைக் கொண்ட புத்தகம் தான் வாழ்க்கையைப் புரிய வைப்பதுதான் கல்வி என்ற இந்தப் புத்தகம்.
எழுதியவர் கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன். சம காலத்தில் வாழும் 86 வயதைக் கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் மிக மூத்த கல்வியாளர். இன்றும் தி இந்து தமிழ் போன்ற இதழ்களில் கல்வி தொடர்பான செய்திகளுக்கு சுறுசுறுப்புடன் எதிர்வினை ஆற்றுபவர். கல்வி குறித்த இவரது பார்வை மிகவும் விசாலமானது. இவரது ஒவ்வொரு பேட்டியும் எழுபது ஆண்டு இந்திய, தமிழக கல்வி வரலாற்றின் வாழும் சாட்சியம். சமீபத்தில் கல்வி பற்றி இவரது பார்வையை ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்,
"அறிவாற்றல் அடிப்படையில் பார்க்கும்போது மாணவர்களிடையே பெரிய அளவில் வேறுபாடு இல்லை. 95 சதவிகித பேரின் அறிவாற்றல், ஒரே மாதிரிதான் இருக்கும். வாய்ப்புகள் மட்டுமே வேறுபடுகின்றன. வாய்ப்புகள் இல்லாததால் அறிவை வெளிப்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல்போகிறது. அதனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் அறிவு குறைந்தவர்கள் எனச் சொல்ல முடியாது."
வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் சமுதாயத்தில் நாம் இல்லை. ஒரே இடத்துக்குத்தான் எல்லோரும் போட்டிபோடுகிறார்கள். போட்டிமுறை கல்வியாகிவிட்டது. இருபது வருடங்களுக்கு முன்பு வரை பொதுப் பள்ளி கல்வி முறையில் படித்தவர்கள்தான் அனைத்து இடங்களையும் பெற்றுவந்தார்கள். இவர்கள், பயிற்சி வகுப்புக்கும் சென்றதில்லை; நீட் தேர்வையும் எழுதியதில்லை. நீட் தேர்வு, சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியாது. மருத்துவக் கல்லூரிகள்தான் சிறந்த மருத்துவர்களை உருவாக்கும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்" என்கிறார்.
இந்த புத்தகத்திலும் ச.சீ.ரா அவர்கள் கல்வி தொடர்பான தனது கருத்துக்களை ஐந்து கட்டுரைகளில் பதிவு செய்துள்ளார்.
முதலாவது, குடந்தைப் பள்ளி தீ விபத்தா – தனியார் மயத்தின் திட்டமிட்ட சதியா? என்ற கட்டுரையில், குடந்தை பள்ளி விபத்தை அடிப்படையாகக் கொண்டு தனியார் பள்ளிகளின் மோசடிகளைப் பட்டியலிடுகிறார். அதற்கு துணை போகும் அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
“தனியார்மயம் என்பது
இருட்டு – அது…
தரமான கல்வி தரும்
என்பது புரட்டு!
தாய்மொழி வழிக் கல்வி,
அரசுப் பள்ளிக்கான
போராட்டத்தால்
கல்விக் கொள்ளையர்களை
விரட்டு!”
என்று முரசறிவிக்கிறார்.
இரண்டாவது கட்டுரை “கேள்வி கேட்க வைப்பதுதான் கல்வி” என்னும் கட்டுரை. இதில் பாடத்திட்டம் என்பது வயது,திறமை, விருப்பம் ஆகிய மூன்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்கிறார். சுமை அதிகமான கல்வி தருவதுதான் நல்ல தரமான கல்வி என தனியார் பள்ளிகள் சொல்லி வருவதை கடுமையாக சாடுகிறார். மொழி பற்றிய ஆசிரியரது கருத்தான, “குழந்தைகள் முதல் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏறறுக்கொள்ளப்பட்ட அறிவியல் பூர்வமான நடைமுறை.ஆனால் நாம் முதலாம் வகுப்பிலேயே இரு மொழிகளை அறிமுகப்படுத்தியதால் தமிழும் சரியாக கற்க முடியவில்லை, ஆங்கிலத்தையும் சரிவர கற்க முடியவில்லை என்பதுதான் நடந்தது” என்பது மொழி பற்றிய எனது புரிதலில் புது வெளிச்சம் பாய்ச்சியது.
மூன்றாவது கட்டுரை, “ஆங்கிலம் வேண்டும், ஆங்கில வழிக் கல்விதான் வேண்டாம்!” என்பதாகும். இதில் சசீ.ராவின் “ ஆங்கிலம் படிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை, ஆங்கில வழிக்கல்விதான் வேண்டாம் என்று சொல்கிறேன். உங்களுக்கு வேலை தரும் அமெரிக்காக்காரன் உங்களுக்கு எவ்வளவு ஆங்கிலம் தெரியும் என்று பார்த்து வேலை தருவதில்லை. உங்களுக்கு எவ்வளவு கணிதம்,அறிவியல், பொறியியல் தெரியும் என்று பார்த்துத்தான் தருகிறான். ஒரு மொழியை ஓராண்டுக்குள் படித்துவிட முடியும்.” என்கிறார். நியாயமான வாதமாகப் படுகிறது.
நான்காவது கட்டுரை, “மாணவர்கள் நடத்திய பள்ளிக்கூடம்” என்பது. இதில் ஆசிரியராக இவர் பணியாற்றிய காலத்தில் விதிகளை மீறிய மாணவனிடம் “ஏனப்பா விதியை மீறி விட்டாய்?” என்று கேட்கிறார். அதற்கு அவன் “ யார் போட்ட விதி?” என்கிறான். எனவே ச.சீ.ரா அவனிடம்,”விதிகளை நீயே வகுக்கிறாயா?” என்று கேட்கிறார். “ சரி” என்ற அம்மாணவன் வகுத்தளித்த விதியின்படி பள்ளி எவ்வாறு சிறப்பாக நடைபெற்றது என்பதை இந்த கட்டுரையில் விவரிக்கிறார்.
ஐந்தாவது கட்டுரை, “வாழ்க்கையைப் புரிய வைப்பதே கல்வி!” என்பதாகும். வாழ்க்கை என்றால் என்ன என்ற புரிதலைக் கல்வி தரவேண்டும் என்பதை கல்வியின் ஆகச் சிறந்த நோக்கமாக நூலாசிரியர் ச.சீ.ரா இங்கு நிறுவுகிறார்.
கடைசியாக "ஆசிரியர்கள் எப்போதும் கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும். கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் மட்டுமே ஆசிரியராக இருக்க முடியும்.கற்றுக் கொள்வதை நிறுத்தும் போது அவர் ஆசிரியராக இருப்பதற்கான தகுதியையும் இழக்கிறார்" என்று நிறைவு செய்கிறார்.
படியுங்கள், நிச்சயம் பயனுள்ள புத்தகமே!