புத்தகக் கண்காட்சிகளில் அதிகம் விற்கும் புத்தகங்களில் தற்போது சுயமுன்னேற்ற நூல்கள் முக்கிய இடம் வகிக்கின்றன… இதில் பல போலி நூல்களாகத்தான் உள்ளன.
நாம் இப்போது பார்க்க இருக்கும் புத்தகம் பிரபல மனநல நிபுணர் ருத்ரன் அவர்களின் புத்தகம்...
பத்தாண்டுகளுக்கு முன் நூலகத்தில் படித்து குறிப்பு எடுத்து வைத்தநூல்... பிறகு சொந்தமாகவே வாங்கிவிட்ட நூல். “இது நல்லபுத்தகம் நிச்சயம் மிஸ் பண்ணிடாதீங்க” என்று நான் சொன்னால் “நாங்க எப்படி நம்புறது?” என்று நீங்கள் கேட்பீர்கள், அதனால் இன்றைய நவீன வாழ்வில் பள்ளி செல்லத் தயாராயிருக்கும் சிறு குழந்தையிலிருந்து, வயதானவர்கள் வரை அதிகம் சந்திக்கும் பிரச்சினை மன இறுக்கம்... அதைப்பற்றி ருத்ரன் வரிகளில்...
மன இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம். இந்நிலையில் மனம் இயல்பாய் சில விதங்களில் இயங்கும். இறுக்கமான கட்டங்களில் மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே நம் வெற்றிகள் நிர்ணயிக்கப்படுகின்றன.
இறுக்கமான கட்டங்களில் செயல்பட எளிய வழிமுறைகளாய் நாம் பழக வேண்டியவை.
1.நிலைமையை அலசி ஆராயும் பழக்கம் சிந்தையில் உருவாக வேண்டும்.
2.நம் தேவைகள் என்ன என்பதில் தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.
3.நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நம் வருங்கால வளர்ச்சியை நோக்கி உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
4.எந்த முடிவும் தற்காலிக விடுதலைக்காக இருப்பதைத் தவிர்த்து, ஒரு நிரந்தர அமைதிக்காகவே அமைய வேண்டும்.
5. அவசரமோ, ஆத்திரமோ, நம் முடிவினை நிர்பந்தப்படுத்தாமல் இருக்கப் பழக வேண்டும்.
6.நாம் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் பக்குவமும் பலமும் நமக்கு உள்ளதா என்பதை கருத்தில் கொண்டே முடிவெடுக்க வேண்டும்.
7. ஆசைகளும் கனவுகளும் கவர்ச்சியான வழியைக் காட்டினாலும், நம் சுய மதிப்பீட்டின் வெளிப்பாடாகவே வம் முடிவுகள் அமைய வேண்டும்.
8. நம் மன அமைதியை விட ஏதும் பெரிது இல்லை என்பதால், நம் மனதை நெருடும் எந்த முடிவையும் ஏற்கக் கூடாது.
9.கடந்த காலத் தவறுகளும், தப்பித்திருந்தாலும் ஏற்பட்ட தடுமாற்றங்களும் நமக்கு வழிகாட்ட வேண்டும்.
10.நியாயமான, நேர்மையான விமர்சனங்களை ஏற்க நாம் பழகி, தகுந்தவரிடம் ஆலோசனை பெறத் தயங்கக் கூடாது.
இந்த பத்து வழிகளும் கண்டிப்பாக மனம் இறுக்கமாக, முடிவெடுக்க முடியாமல் திணறும் காலகட்டங்களில் பயன்படும் என நம்பலாம்.
மேலும் இந்நூலின் ஒவ்வொரு வரிகளும் நமக்கு பல சிந்தனைத் திறப்பை ஏற்படுத்துவது நிச்சயம்... அதில் சில...
நம் சூழலை மாற்ற முடியாது என்றால் நமது அணுகுமுறையை மாற்ற வேண்டும்.
மனதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதைத் தெரிந்து வைத்தால்தான் அதில் விஷயங்களை நிரப்ப முடியும். மனதுக்குப் பரிமாணங்கள் கிடையாது. மரப்பெட்டி என்று கருதினால் அதில் ஓரளவுதான் நிரப்ப முடியும். ஆகாயம் என்று கருதினால் வாழ்வு முழுக்கக் கற்றுக்கொள்ளலாம்.
எனக்கு எதுவும் தெரியாது என்ற எண்ணத்தை வளர்க்கக் கூடாது. எனக்கு இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை வளர்க்க வேண்டும். தாழ்வாகக் கருதிக் கொள்வதற்கும், பணிவோடு இயங்குவதற்கும் உள்ள வேறுபாடுதான் வெற்றியின் அர்த்தம்.
மனதில், தெளிவு, நிதானம், தைரியம் இருந்தால் எதிலும் ஈடுபடலாம். சிறிதளவு சந்தேகமோ, ஆணவமோ இருவ்தால் எதிர்பார்த்த விளைவைத் தராது.
கற்றுக் கொள்ளத் தயாராய் மனதை மாற்றிக்கொள்ளத் தெரிந்து கொள்ள வேண்டும். பார்வை விரிவடைந்தால் புதுப்புது பாதைகள் தெரியும். பயணம் செல்லக் கற்றுக் கொள்ளத் தயாரென்றால் முடிவில் மகிழ்ச்சியே காட்சியளிக்கும்.
எந்தெந்த கட்டங்களில் எப்படி நாம் முடிவெடுக்கிறோம் என்பதைப்பற்றி நாமே ஆராய்ந்து பார்த்தால் நம் குணாதிசியம் நமக்கே புலப்படும்.
தீர்க்க முடியாத பிரச்சினைகள் கிடையாது. தீர்வு நமக்குத் தெரியாததாலேயே பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று நினைக்கிறோம்.
நம் இயக்கத்தில் ஒரு தேக்கம் ஏற்பட்டால் உந்து சக்தியைச் சரிபார்க்க வேண்டும். உந்து சக்தி என்று நாம் எதை நினைத்துக் கொள்கிறோமோ அதுதான் உந்து சக்தி. அது இல்லாதவர்களுக்கு வாழவோ வெல்லவோ காரணம் இருக்காது...
என் வாழ்க்கையின் மிகப்பெரிய உந்து சக்தி என் புத்தகங்களே... உங்களுக்கு?
இப்போது நம்புகிறீர்களா? இது மிஸ் பன்னக் கூடாத நூலென்று...