புலம் பெயர்ந்த தமிழர்கள் மொழிமீது ஏற்படுத்துகிற தாக்கமும் நவீன வாழ்க்கைமுறை ஏற்படுத்துகிற தாக்கமும் தமிழைத் தற்கால வாழ்வுக்கானதாக மாற்றுகின்றன. இதனால் தமிழ் மொழி புதுப்பிக்கப்படுவதாகவும் கருதலாம். கந்தராஜாவின் ‘கள்ளக் கணக்கு’ தமிழ் இலக்கியத்தில் நம் வாசகன் அறிந்திராத வாழ்வெளிப் பரப்பை அறிமுகம் செய்கிறது.
அவசரம் பற்றிக்கொள்ளாமல் நிதானமாக உரையாடுகிற நவீன கதைசொல்லியாக கந்தராஜாவைப் பார்க்கிறோம். இவர் தேர்வு செய்யும் மனிதர்கள் எப்படி படைப்பின் பாத்திரமாக உருமாறுகிறார்கள் என்பது இவரது சிறுகதை ரகசியம்.
‘பத்தோடு பதினொன்று’ கதையில் மூன்று சிறார்கள். தாய் இல்லை. வேலைக்குப் போகிற தந்தை. இவர்களது வாழ்க்கையிலிருந்து சில நிகழ்வுகள். வாழ்க்கையை இன்னொரு கட்டத்துக்கு உயர்த்துவதுதான் ஒரே குறிக்கோள். படிப்பு மட்டுமே அதற்கு உதவும். ஆனால் அது அந்த வயதுப் பிள்ளைகளுக்குச் சுமக்க முடியாத பாரம். ஜப்பானிய நடுத்தர மக்களின் வாழ்க்கைதான் பின்புலம். இந்தப் பின்புலம் வாசகனுக்கு முன் வாசித்திராத எழுத்தைத் தருகிறது.
புலம் பெயர்ந்த தமிழ்ப்பெண் நளாயினியின் பார்வையிலிருந்து கதை சொல்கிறபோது இரு வேறு வாழ்க்கை முறைகளும் கூடவே பயணிக்கின்றன. நவீன வாழ்வின் வேர்களைத் தீண்டிவிட்ட அனுபவம். கெய்கோ ஒரு வெளிச்சக் கீற்றுபோல சட்டென தோன்றி மறைகிறாள். அந்த வெளிச்சத்தில் காட்சியாகி அதிர்கிற பிம்பம் பேரதிர்ச்சியைத் தருகிறது. கெய்கோவின் மரணம் பத்தோடு பதினொன்றாகப் பதிவாகிறது. மரணம் நிகழ்ந்தும் அவளின் தந்தை அவளது சகோதரி அன்றாட வாழ்வின் நிர்ப்பந்தத்தில் கட்டுண்டு நகர்கிறார்கள்.
சகோதரி பள்ளிக்குச் சென்றுவிட்டாள். இறுதிச்சடங்கு எங்கே என்று கேட்கும் நளாயினியிடம் தந்தை சொல்கிறார், ‘‘தொழிற்சாலைக்கு அருகிலுள்ள சவச் சாலையிலே இன்று இரண்டாவது சிப்ட் முடிந்தவுடன் நடைபெறும். வேலை முடிந்தவுடன் மாலை ஆறுமணிக்கு நான் சவ அடக்கத்துக்கு வந்துவிடுவேன். நீங்களும் அங்கு வாருங்கள்,” என்றார் கமாடா கண்களில் நீர் ததும்ப இப்படி ஓர் இறுதிச்சடங்கை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? இதில் ‘நீர் ததும்ப’ என்பதுதான் வாசகனிடம் உரையாடுகிற இடம்.
‘ஒட்டு மரங்கள்’ கதையில் செயல்படுகிற புறம், அகம் புதிய சங்ககாலத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த வெற்றி புற, அக மாற்றம்தான். தமிழைப் பரந்துபட்டவெளிக்கு நகர்த்திய பங்களிப்பு குறிப்பாக இலங்கைத் தமிழர்களுக்கே சேரும். புலம் பெயர்ந்த தமிழர்களின் இலக்கிய உள்ளடக்கம் உலகளாவியது. இவர்களது படைப்புகளே மொழியைத் தற்கால வாழ்வில் நிறுத்துகிறது. அவர்களால் யூகலிப்டஸ் மரத்தில் அவரைக்கொடியைப் படரவைக்க முடிகிறது. ஒரு யாழ்ப்பாண மனம் ஆஸ்திரேலியாவில் முட்டிக்கத்திரிக்காயை விளைவிப்பதை எளிய நிகழ்வாகக் கதைக்குள் வாசிக்க முடியாது.
கதையிலிருந்து சில வரிகள்...
‘‘அபியின் அம்மா இன்னமும் தான் பிறந்து வளர்ந்த மண்ணின் அருமை பெருமைகளைச் சுவாசித்தே வாழ்கிறார்.”
“அபியை நீங்கள்தான் கேளுங்கோ. எந்த நேரமும் றோட்டிலை, வெள்ளைக்கார பொடியன்களோடை குதியன் குத்திறாள்.”
“நீங்கள்தான் அவளுக்குச் செல்லம் குடுக்கிறது. அவளைக் கண்டிச்சுப்போடாதேங்கோ. இந்த வயதிலைதானே சங்கீதா இங்கே வந்தவள். வெள்ளைக்காரக் குஞ்சுகளோடையே சுத்தித் திரிஞ்சவள்? அபியாலே பின்னுக்கு ஏதோ பிரச்சனை வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை. இப்பவே சொல்லிப்போட்டன்..”
யாழ்ப்பாணத் தாயின் மனம் ஆஸ்திரேலியாவில் படும்பாடு மேற்குறித்த வரிகளில் தெரிகிறது. இறுதியில் இப்படியான வரிகளில் கதை முடிகிறது. “ஆஸ்திரேலிய சூழலிலே ‘யாழ்ப்பாணம் மட்டும்’, என்று வேலியடைத்து வாழ்தல் தோதுப்படமாட்டாது என்ற ஞானத்தினை, அம்மா யூக்கலிப்ரஸ் மரத்தின்கீழே பெற்றிருக்க வேண்டும்.”
ஞானத்தைக் கருவேப்பிலை மரத்திலிருந்து இப்போது யூக்கலிப்ரஸ் மரத்தில் பெற அபியின் அம்மாவுக்கு இடையில் என்ன நடந்தது என்பது இங்கே கதை.
விழுமியங்களோடு வாழ்வின் எதார்த்தம் முட்டி மோதுகிற தளமே ‘வெள்ளிக்கிழமை விரதம்’. உடல், மனம் இரண்டையும் ஓர் ஆப்பிரிக்க இளம்பெண் எப்படி பார்க்கிறாள் என்பதை உணர்த்துவதோடு விழுமியங்கள் என்று நாம் நின்று பார்க்கிற இடத்தைப் போகிற போக்கில் அடித்துத் துவம்சம் செய்கிறாள். வார்த்தைகளின் உலகத்தை அழித்து உணர்வின் மொழியில் நிகழ்கிறது கதையாடல். குளோறியா என்ற ஆப்பிரிக்க இனப் பெண்ணின் காதல் நாம் அறியாத வேறு காதல். காண்டாமிருகத்தின் கொம்பு பெண்களை அழுத்தும் பாரங்களை முட்டி மோதித் தூர எறிகிறது. மொறிஸ் மீதான குளோறியாவின் காதல் காவியக் காதலினும் மாசற்றது.
‘மணப்பெண் கூலி’ என்பது தந்தைக்கானதாக ஆகிறபோது அதை ஆப்பிரிக்கப் பெண்கள் கடந்துபோகிற இடம் முற்றிலும் அறம் சார்ந்தது. ஆப்பிரிக்கப் பெண்ணின் சமூக வாழ்வும் ஜப்பானியப் பெண்ணின் சமூக வாழ்வும் முற்றிலும் வேறானவை. இந்த இரு நிலைகளையும் இக் கதைகளின் வழியாகச் சந்திக்கிற வாசகனின் மனத்தில் குளோறியாவின் வார்த்தைகள் அழிக்க முடியாது தங்கிவிடும். ஆப்பிரிக்கப் பெண்ணிடம் வாழ்தல் மட்டுமே இருக்கிறது. வாழ்தலைப் பேசுவதுதானே இலக்கிய மாண்பு. இந்தக் கதையில் வரும் ‘பயனுள்ள பெண்’ என்று மொறிஸ் குறிப்பிடும் சொற்கள் தோற்றுவிக்கிற அலைகள் சிறுகதையின் விளைவு.
பாரசீக -& அராபிய கலப்பினச் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த றொஸ்நாக், ஈராக் & ஈரான் எல்லையோரக் கிராமத்தில் பிறந்தவள். அமீர் பாரசீகப் பிரபுத்துவக் குடும்பத்தைச் சார்ந்தவன். தேரான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த றொஸ்நாக் முதல் வருஷமே அழகு ராணிப் போட்டியொன்றில் பேரழகியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். அவளது அழகில் மயங்கி அமீர் அவளைக் காதலிக்கிறான். தந்தையோடு போராடித் திருமணம் செய்துகொள்கிறான். ஆஸ்திரேலிய வாழ்க்கை இவர்களது வாழ்வில் குறுக்கிடுகிறது.
“தூய பாரசீக ரத்தத்துடன் வந்திருந்தால் இப்படி செய்யாள்” என சிட்னிக்குப் படிக்கவந்த ஈரானிய மாணவர்கள் பேசித் திரிந்தார்கள். ஆனால் றொஸ்நாக் பின் நாளில் தனது கணவரின் பேராசிரியரிடம் இப்படி சொல்கிறாள்.
“நான் ஆஸ்திரேலியாவுக்கு வந்தபோதுதான் சுதந்திரம் என்றால் என்ன என்பதைக் கண்டு கொண்டேன். சுதந்திரம் அழகானது. அது இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே அல்ல. பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும். பெரும்பாலான இஸ்லாமியப் பெண்கள் இந்த விடயத்தில் வலிமையற்றவர்களாகச் சந்ததி சந்ததியாக ஏதோ ஓர் ஆணிடம் அடிமைப்பட்டுக்கொண்டுதான் வாழ்கிறார்கள்.”
இந்த இரு கூற்றையும் சந்திக்கிறது கதை. ஆனால் சிறுகதையாக உருகண்டு ஒளிரும் இடம் வேறு. இஸ்லாமியப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட எல்லையில் மோதி றொஸ்நாக் தனது காதல் கணவனின் வரவுக்காகக் காத்திருப்பது சிறுகதையாகிறது. தொகுப்பில் பேசப்படும் பல பெண் பாத்திரங்களோடு றொஸ்நாக் பாத்திரம் மோதி அதிர்வது தொகுப்பின் வெற்றி.
நவீன வாழ்வில் திறன்வெளிதான் உண்மையில் வாழ்வெளி. இதைப் புரிந்துகொண்ட புலம் பெயர்ந்த பலர் வாழ்க்கையில் வெற்றி அடைந்திருக்கிறார்கள். உலகில் இப்போது இந்த வெளிதான் இருக்கிறது. திறன்வெளியைச் சந்திக்கும் போராட்டமே நவீன வாழ்க்கை.
கதைசொல்வதான தொனியில் ஆசிரியர் கந்தராஜா மனித வாழ்க்கையின் இருள்வெளிமீது கொஞ்சமான ஒளிக்கற்றைகளைப் பரவவிடுகிறார். அப்போது வாசகன் பார்க்கிற சிறுவெளி, பார்வைக்கு வராத மேலுமான இடங்களை முடிவிலாது விரிக்கிறது.
மின்னஞ்சல்: kavai.palanisamy@gmail.com
(நன்றி: காலச்சுவடு)