ஸ்பானிய மொழி எழுத்தாளரான ஃபெர்னான்டோ ஸோரன்டினோ, அர்ஜென்டைனாவிலுள்ள பியூனஸ் அய்ரஸ் நகரில் பிறந்தவர். ‘அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்’ எனும் இவரது சிறுகதை, தமிழ் வாசகர்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றது. கதைசொல்லியை ஒருவன் பல ஆண்டு காலமாகக் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான். முதலில் இம்சையாகத் தோன்றும் இந்த அடிகள் நாளடைவில் பழக்கமாகி, இது எப்போதும் தொடர வேண்டும் என ஏக்கம்கொள்ளும்படி கதைசொல்லிக்கு நேர்கிறது.
தனக்கு இம்சை தரும் அநாவசியமான பழக்கத்துக்கும்கூட அடிமையாகி, அதிலிருந்து வெளிவரும் சாத்தியங்கள் சுலபமாக இருந்தும் அதில் அடிமையுற்றிருக்க விரும்பும் சாமான்யனின் மனநிலையைப் பூடகமாகப் பேசும் கதை எனவும் இந்தக் கதையினை அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். இப்படியான பூடகமான அம்சம் ஒரு கதைக்குப் பல்வேறு விதமான வாசிப்பினைச் சாத்தியப்படுத்துகிறது. அப்படி எதையும் அர்த்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லையெனினும் தன்னளவில் அது முழுமையைக் கொண்டிருக்கிறது. இதுவே ஒரு கதையின் வெற்றியாக இருக்க முடியும். “குறியீடு, படிமம், உருவகம் போன்றவற்றையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை, இதற்கெல்லாம் வாசகர்களே பொறுப்பு” என்கிறார் ஸோரன்டினோ. ‘கதைசொல்லி ஒரு கதை எழுதுகிறான், வாசகன் எப்போதும் வேறு ஏதோ ஒன்றை வாசிக்கிறான்’ என்பது ஸோரன்டினோவின் புகழ்பெற்ற வாசகம்.
அளவில் மிகச் சிறிய கதை இது. ஸோரன்டினோவின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டது. ஸ்பானிய மொழியில் அப்போது எழுதப்பட்டபோதே அங்கே மிகவும் சிலாகிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் வெளியான பின்பும் உலகின் பல்வேறு மூலைகளில் பாராட்டுகளுக்குள்ளாகி ஸோரன்டினோவின் க்ளாசிக் கதை எனும் அந்தஸ்தைப் பெற்றது. இந்தக் கதையை வெவ்வேறு இயக்குநர்கள் குறும்படமாக்கியிருக்கிறார்கள். தமிழிலும்கூட இக்கதை பல்வேறு படைப்பாளிகளால் வெவ்வேறு காலங்களில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கதை தமிழில் மொழிபெயர்ப்பான ஆரம்ப காலம் தொட்டு இப்போது வரை தனக்கான வாசகர்களைத் தக்கவைத்திருக்கிறது.
ஸோரன்டினோவின் அநேக கதைகளின் கதைக்கரு என்னவோ மிகச் சாதாரண எளிய கூறுதான். ஆனால், அவர் தனது கதைகளில் விசித்திரத் தன்மையோடு சம்பவங்களைச் சித்தரிக்கிறார். ஒரு கதையில், யாசித்து வாங்கிய ரொட்டிக்குள்ளிருக்கும் வைர மோதிரத்தைத் திருப்பித் தந்து மீண்டுமொரு ரொட்டியை வாங்கி வருகிறான். அந்த ரொட்டியிலும் வைர மோதிரம். மீண்டும் திருப்பித் தருகிறான். மீண்டும் வைர மோதிரம்.
மீண்டும்மீண்டும் இந்தச் செயல் தொடர்கிறது. இன்னொரு கதையில், ஒருவன் திரும்பத்திரும்ப ஹார்ன் இசைத்தபடி இருக்கிறான். இன்னொருவன் தொடர்ந்து குடையால் அடி வாங்கிக்கொண்டிருக்கிறான். ஒரு கதையில், அண்டை வீட்டாரின் கதவில் தனது மகன் மிகச் சிறியதாக கோடு கிழித்ததற்கு மன்னிப்பு கேட்கச் செல்லும் ஒருவன் அவர்களது உபசரிப்பில் வியந்து சிறிய பொருளொன்றைப் பரிசளிக்கிறான்.
பதிலுக்கு அவர்களிடமிருந்து கொஞ்சம் விலையுயர்ந்த பரிசு. பதிலுக்கு இவன் பக்கமிருந்து வேறொன்று. இப்படி இது தொடர்கிறது. இப்படித் திரும்பத்திரும்ப நடைபெறும் சம்பவங்கள் நமது அன்றாடங்களோடு தொடர்புடையதாக இருக்கின்றன. இத்தகைய அலுப்பூட்டும் அன்றாடங்களை ஸோரன்டினோவால் சுவாரசியமான கதையாக்க முடிகிறது.
ஸோரன்டினோவின் 11 கதைகளை எம்.எஸ்.இன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு பதிப்பகம் 2003-ல் வெளியிட்டது. பல ஆண்டுகளாகப் பதிப்பில் இல்லாத இந்தப் புத்தகம் இப்போது மீண்டும் மறுபதிப்பு கண்டிருக்கிறது.
(நன்றி: தி இந்து)