புதுமைப்பித்தனைப் பற்றிய அவரது மனைவி கமலா புதுமைபித்தன் எழுதிய கட்டுரைகளை வே.மு.பொதியவெற்பன் தொகுத்து ‘புதுமைப் பித்தனின் சம்சார பந்தம்’ என்ற சிறு நூலாக வெளியிட்டிருக்கிறார். இதனை ‘பரிசல்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
எழுத்தில் காணப்படும் அதே நக்கல், நையாண்டி, கிண்டல் பேச்சு, உணர்ச்சி பூர்வமான மனநிலை. இளகிய மனது புதுமைப்பித்தனின் அன்றாட வாழ்க்கை யிலும் அமைந்திருந்தது என்பதை கமலா புதுமைபித்தன் மிக அழகாக எடுத்துக் காட்டுகிறார். ‘உமா’, ‘காதல்’ இதழ்களில் வெளியாகியிருந்த இந்த அரிய கட்டுரை களை தேடித் தொகுத்திருக்கிறார் பொதியவெற்பன்.
புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தொ.மு.சி. ரகுநாதன் தனி நூலாக எழுதியிருக்கிறார். ஆனால், அது முழுமையானது இல்லை. நிறைய தகவல்கள், விவரங்கள் விடுபட்டுள்ளன. புதுமைபித்தன் குறித்த விரிவான வாழ்க்கை வரலாற்று புத்தகம் எழுதப்பட வேண்டும்.
‘கண்மணி கமலாவுக்கு’ என்ற புதுமை பித்தனின் கடிதங்கள் மிக முக்கியமான ஆவணத் தொகுப்பாகும். இதனை இளையபாரதி தொகுத்திருக்கிறார். தனக்கு எழுதப்பட்ட கடிதங்களைப் பொதுவெளியில் பகிர்ந்துகொண்டது கமலா அம்மாவின் தார்மீக அறவுணர் வின் வெளிப்பாடாகும். அந்த மனவெளிப் பாட்டின் இன்னொரு வடிவமே அவர் தனது கணவர் குறித்து எழுதிய கட்டுரைகள். அதில் புதுமைபித்தனின் குடும்ப வாழ்க்கை பற்றிய அரிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
தங்கள் வாழ்வில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் கமலா விவரித்துள்ளார்.
வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனை விக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடை யாது. அவர் உயிரோடு இருந்த காலங் களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாட்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக் கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் என பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். கதை எழுத உட்கார்ந்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்த பிறகே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்.
என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன் னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூடத் தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்.
திருமணமாகி 6 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு முதல் குழந்தை பிறந் தது. ஆனால், அது உடனே இறந்து விட்டது. பின்பு 2 ஆண்டுகள் சென்றபின்பு ஒரு பெண் குழந்தை பிறந்து, அதுவும் 3 மாதங்களில் இறந்துபோனது. அந்தக் குழந்தை உடல்நலமற்று இருந்தபோது, அதற்கு மருந்து வாங்க கையில் காசு இல்லாமல் திண்டாடினோம். இறந்த குழந்தையை அடக்கம் செய்யக்கூட எங்களிடம் பணம் இல்லை. இவற்றை நினைத்து அவரது உள்ளம் மிகவும் வேதனை கொண்டது.
அதன் பிறகு 6 ஆண்டுகளுக்குப் பிறகே தினகரி பிறந்தாள். குழந்தை பிறந் திருக்கிறது என்ற தகவல் கிடைத்தவுடனே சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து சேர்ந்துவிட்டார். அவருக்குக் குழந்தைகள் மீது மிகுந்த பிரியம்.
அதிலும் பெண் குழந்தை என்றால் மிக மிக ஆசை. ஆனால், குழந்தை பிறந்த நாலாவது மாதம் திரைப்பட வேலையாக புனே நகருக்குச் சென்றார். நோயாளியாக திரும்பி வந்து இறந்து போனார். குழந்தையைக் கொஞ்சிக் குலாவ கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. கமலா தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது நம் மனது கனத்துப் போய்விடுகிறது.
புதுமைபித்தன் எப்படி எழுதுவார்? கமலாவின் கட்டுரை அந்த காட்சியை கண்முன்னே படம் பிடித்துக் காட்டுகிறது.
சுவர் ஒரமாக விரிக்கப்பட்ட ஒரு தாழம் பாய், இரு தலையணைகள், பக்கத்தில் ஒரு கூஜா நிறைய தண்ணீர், திறத்து வைக்கப்பட்ட வெற்றிலை செல்லம், கையில் எழுதும் பலகையும் பேப்பரும் பேனாவும், ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி தலையணையில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு எழுதுவார். காற்றி னால் பஞ்சு போன்ற தலைமுடி நெற்றியில் பறந்து விழுவதை இடை இடையே கையால் ஒதுக்கிவிட்டுக் கொள்வார். வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டே அவர் கிடுகிடுவென எழுதுகிற வேகத்தைக் கண்டால் வியப்பாக இருக் கும். எழுதும்போது யாரும் பக்கத்தில் வந்து பேசிவிடக் கூடாது. குறைந்தது 30 பக்கம் எழுதி முடித்தபிறகே வெற்றிலை எச்சிலைத் துப்ப எழுந்திருப்பார்.
இப்படி எழுத்து, படிப்பு என ஒயாமல் இயங்கிக் கொண்டிருப்பவர் திடீரென மாதக்கணக்கில் சோம்பலில் பேனாவை கையால் தொடாமலே இருந்துவிடுவார். அவரது கதை வெளிவருவதாக அறிவித்த பத்திரிகைகள் நெருக்கடி கொடுக்கும் போது, ‘இதோ 4 மணிக்கு ரெடியாகி விடும்’ என சமாளிப்பார். ஆனால், அது நடக்காது என எனக்குத் தெரியும். அவருக் காக மனம் கூடினால்தான் எழுதுவார்.
அவர் ஒரு புத்தகப் பைத்தியம். சம் பளம் வாங்கியதும் நேராக புத்தகக் கடைக்குப் போய் புதுப் புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேருவார். சம்பளக் கணக்கு கேட்டால் மீதி பணத் தைத் தந்துவிட்டு இவ்வளவுதான் மிச்சம் என சிரிப்பார். அதனால் எங்களிடையே சண்டை வருவதும் உண்டு. அவரால் புத்த கம் வாங்காமல் இருக்கவே முடியாது.
தமிழ் இலக்கியத்தை ஒர் உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என் பதே அவரது ஆசை என பசுமையான நினைவுகளைக் பகிர்ந்து கொள்கிறார் கமலா.
இத்தொகுப்பில் நான்காவதாக இடம் பெற்றுள்ள கட்டுரையில் நோயாளியாக கையில் கம்பை ஊன்றிக் கொண்டு நடக்க முடியாத நிலையில் ரயிலை விட்டு இறங்கி, தன் மனைவியைத் தேடி வரும் புதுமைப்பித்தனின் அந்திம நிலை பதிவாகியுள்ளது. இதை கண்ணீர் கசியாமல் வாசிக்க முடியாது.
‘கமலா கவலைப்படாதே. தைரி யத்தை கைவிடாதே. மனதைத் தளர விடாதே… உன்னை நல்லநிலையில் வைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட் டேன். ஆனால், விதி என்னை இப்படிக் கொண்டுவந்துவிட்டது. ஆறுதல் சொல் வதைத் தவிர என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலாது’ என புதுமைபித்தன் சொன்ன கடைசி வார்த்தைகளைக் கண்ணீருடன் பகிர்ந்துகொள்கிறார் கமலா புதுமைபித்தன்.
தன் எழுத்தால், சிந்தனையால் தமிழ் இலக்கியத்தை மேன்மையுறச் செய்த ஒரு மகத்தான கலைஞன், தான் வாழும் காலத்தால் புறக்கணிக்கபட்டு, வறுமை யில், நெருக்கடியில், தனிமையில், நோயுற்று இறந்து போனது காலக் கொடுமை. அந்தத் துயரத்தின் அழியாச் சித்திரமாக திகழ்கிறது இந்தப் புத்தகம்.
இத்தனைக்கும் மேலே
‘இனி ஒன்று;
ஐயா நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்.
நினைவை விளிம்புகட்டி
கல்லில் வடித்து
வையாதீர்;
‘வானத்து அமரன்
வந்தான் காண்...
வந்தது போல்
போனான் காண்’ என்று
புலம்பாதீர்;
அத்தனையும் வேண்டாம்
அடியேனை விட்டுவிடும்’
- என கவிதை எழுதியிருக்கிறார் புதுமைப்பித்தன்.
வாழும் காலத்திலே எழுத்தாளர்கள் கொண்டாடப்படவும் உரிய முறையில் கவுரவப்படுத்தப்படவும் வேண்டும். அதுவே எழுத்துக்கு நாம் செய்யும் மரியாதை. புத்தகங்கள் நமக்கு கற்றுக் கொடுக்கும் முதல் பாடமும் இதுவே!
(நன்றி: தி இந்து)