இலக்கியப் படைப்பாளன் தன் படைப்பு நிகழும்போது யாரோடாவது பேசுகிறானா, தனக்குள்ளே பேசிக்கொள்கிறானா, பாத்திரங்களோடு பேசுகிறானா, பாத்திரங்களின் வழி வாசகர்களோடு பேசுகிறானா முதலான வினாக்கள் ‘படைப்பு’ நிகழ்வின் உளவியலைச் சார்ந்தன.
பஷீரைப் பொறுத்தவரையில் அவர் படைப்புகள் என்பன, அவர் தன் வாழ்க்கையைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் அழகியல் எடுத்துரைப்புகளே ஆகும். “நான் இதுவரை எழுதிய எல்லாமே என் வாழ்க்கையின் கதைக்கூறுகள்தான். பெரும்பாலான எனது எல்லாக் கதைகளுமே சுய வாழ்க்கையின் அனுபவங்களே. கதைக்குத் தேவையான பாவனைகளைச் சேர்த்து அவற்றை மெருகுபடுத்தியிருப்பேன், அவ்வளவுதான்” (ப.72) எனத் ‘தங்கள் வாழ்க்கை வரலாற்றை எப்போது எழுதப் போகிறீர்கள்’ என்ற கேள்விக்கு விடை கூறியிருக்கிறார் பஷீர்.
‘உண்மையும் பொய்யும்’ என்ற இந்த நூல், பஷீர் வாசகனோடு நேரடியாகப் பேசுகின்ற ‘கேள்வி – பதில்’ வடிவமாகும்; ‘கேரளா சப்தம்’, ‘நர்மதா’, ‘குங்குமம்’, ‘சினிரமா’, ‘தூலிகா’, ‘கௌமுதி’ உட்பட பல்வேறு பத்திரிகைகளில் வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளும், இப்பத்திரிகைகளுக்கு எழுதிய சிறப்புக் கட்டுரைகளும் அடங்கியதாகும். பஷீரின் படைப்பிலக்கியங்களில் காண முடியாத ‘பஷீரை’, உலகம் தழுவிய மானுடநேயனை மிக மிக எளிய வார்த்தைகளில் எந்த மேல்பூச்சுமற்ற மொழியில் இந்நூலில் காணமுடிகிறது.
புண்படுத்தக் கூடிய கேள்விகளுக்கும், சித்தாந்த ரீதியிலான கேள்விகளுக்கும் பஷீரின் பதில்கள் பகடிகளாகவே வெளிப்பட்டுள்ளன. பஷீரின் வழுக்கைத் தலை பற்றிய கேள்விகள் ஏராளமானவை. அதற்கு அவர் அளித்த விடைகள் மிகச் சுவையானவை. ‘அகில கேரள வழுக்கைத் தலை யூனியனுக்குத் தங்களைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது பற்றி உங்கள் கருத்தென்ன’ என்பது வினா. “எனக்கு அருகதை இல்லாத பதவி அது. அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டியவர் சுத்த வழுக்கையராகவே இருக்க வேண்டும். நான் சுத்த வழுக்கையல்ல. என் மண்டையின் முகட்டுப் பகுதியில் மட்டும்தான் மயிரில்லை. அடிவாரப் பகுதியில் நிறையவே இருக்கிறது” (ப.48) என்பது பஷீரின் விடை.
‘இங்குள்ள முஸ்லீம்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போய் விடவேண்டும் எனச் சட்டம் வந்தால் என்ன செய்வீர்’ என்பது வினா. “அப்படி வந்தால் நான் மூன்று பெயர்களை எனக்கெனக் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். இதில் எதையாவது ஒன்றைச் சூட்டிக் கொள்வேன்: வைக்கம் மம்மட பட்டாச்சாரியர், வை.எம்.பி.நம்பூதிரிப்பாடு, வை.மு.ப.பணிக்கர்” என்பது விடை (ப.13).
பஷீரை யாராலும் புண்படுத்தவும் முடியாது; அவரால் புண்பட்டவர்களும் இல்லை. அப்படியான அனுபவங்களே அவருக்கு வாழ்க்கையில் கிடைத்துள்ளன. ‘குரு’ என்றும் ‘ஆச்சாரியன்’ என்றும் போற்றப்பட்டவர். ‘ஸீ வியூ’ (Sea View Hotel) வில் வைத்துத் தயாரிக்கப்பட்ட இலக்கியவாதிகளின் மானுஃபெஸ்டோ (அறிக்கை) பற்றிய தங்கள் கருத்தென்ன’ என ஒருவர் கேட்கிறார். “அதில் சாம்பாரின் வாசனையும், கட்லெட்டின் சுவையும், இட்லியின் மென்மையும் இருந்தன” என்கிறார் பஷீர் (ப.23).
‘தொழிலாளியின் வேர்வைத் துளிகள் விலை மதிக்கப்படுவது?’
“முதலாளித்துவ அமைப்பில்” (51)
இந்த வினா – விடையில் தொக்கி நிற்பது ஏளனமா, தத்துவமா, குத்தலா, வெற்று நகைச்சுவையா அல்லது எல்லாம் சேர்ந்ததா என வாசகன்தான் முடிவு செய்ய வேண்டும். இந்தக் கலவைதான் பஷீர்.
‘இறைவிசுவாசி தானா நீங்கள்? பள்ளி வாசலுக்குப் போவதுண்டா? தொழும் வழக்கமிருக்கிறதா?’
“எல்லைகளில்லாப் பிரார்த்தனையே வாழ்க்கை” (ப.67).
-இந்தப் பதிலில் காணும் பஷீர் வித்தியாசமானர். பஷீர் தான் முஸ்லீம் என்று கூறிக்கொள்வதில் தயக்கமற்றவர்; இஸ்லாம் மிக எளிய மதம் என்பவர். ஆனால் அவரை ஒரு கேள்வி கேட்டு ஏதேனும் சிமிழுக்குள் அடக்க நினைத்தால் அகப்படாதவர். பஷீரின் இந்தப் பதில் மதங்களுக்கு அப்பாற்பட்ட இறைநேய ஒளி (sprituality), வாழ்க்கையின் பேருருவத்தில் அடங்கும் என்ற மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது.
பத்திரிகைகளுக்குப் பஷீர் எழுதிய கட்டுரைகள் சில இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவருக்கே உரித்தான நகைச்சுவை, நட்புச் சாடல்கள், உலக விவகாரங்கள் இவற்றின் தொகுப்புகளே இக்கட்டுரைகள். ‘ஜனயுகம்’ என்ற பத்திரிகைக்கு ஏன் கட்டுரை எழுதவில்லை என்பதை விரிவான கட்டுரையாக எழுதி அனுப்பியுள்ளார். “மரியாதைக்குரிய வைக்கம் சந்திரசேகரன் நாயர்” எனத் தொடங்குகிறார். “தங்களுக்கும் தங்கள் மனைவிக்கும் வறட்டுச் சொறி வந்திருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” (ப.98). “பஷீர்ஸ் புக் ஸ்டால் எர்ணாகுளத்திலிருக்கும்போது ஐக்கிய கேரளத்தின் தலைநகரம் எர்ணாகுளத்தில்தான் அமையவேண்டும்” (ப.100). “…N.B.மரியாதைக்குரிய என்ற வார்த்தையை வெறுமனேதான் உபயோகித்திருக்கிறேன்” (ப.105). இந்த நகைச்சுவை உணர்வுதான் பஷீரின் இணையற்ற பலமாகும்.
‘மைத்ரி’ பத்திரிகை ஆசிரியருக்கு எழுதுகிறார்: “மானுட மனப்பிரம்மையின் உற்பத்திதானா கடவுள்?…உள்ளங் கையிலிருக்கும் சிறுமலரின் அழகைக் கண்டு ஆனந்தம் கொள்ளாத நான்…அற்புதங்களுக்கெல்லாம் பேரற்புதமான மகா சாகரத்தை நீந்திக் கடந்துவிட…வேண்டாம் (ப.134). மலர்கள் பூமியின் புன்னகை. இதைச் சொன்னது யார்? நான் தான். குடித்துவிட்டு நான் இதுவரை எதுவுமே எழுதியதில்லை. மது போதனையின் மோசமான கடைசி அம்சம் வரை என்னிடமிருந்து விலகி, உடலும் மனதும் மூளையும் சுத்தமான பிறகுதான் என்னால் எழுத முடிந்திருக்கிறது” (ப.135). - பஷீரின் கடிதங்கள் அவருடைய இலக்கிய ஆத்மாவின் நிர்வாணப் பதிப்புகள்.
மலையாள மனோரமாவின் விசேடப் பதிப்புக்கு எழுதுகிறார். பின் நவீனத்துவம் கேரளாவில் வளர்ந்து வரும் நிலையை கேலிக்குள்ளாக்குகிறார். “வாசிப்பவர்களின் அக மயக்கங்களைத் தெளிய வைக்க வேண்டும். அவர்களை நன்மைகளின்பால் நாட்டமுடையவர்களாக மாற்ற வேண்டும். மனதை இளகச் செய்து தூய்மைபடுத்த வேண்டும் அல்லது சிரிக்க வைக்க வேண்டும்…மரணம் எப்போது நிகழும் என்பது தெரியாதல்லவா? இறைவனின் கஜானாவில்தான் எல்லையற்ற காலமிருக்கிறது” (ப.153).
குங்குமம் இதழின் எட்டாவது விருது வழங்கும் விழாவுக்காக, விருது பெற்றவர்களை வாழ்த்தி பஷீர் தன் சொற்பொழிவைக் கட்டுரையாக எழுதியனுப்பியுள்ளார். இதை என்.வி.கிருஷ்ண வாரியர் வாசித்தளித்திருக்கிறார்: “எப்போதும் சாபத்தைவிட அனுக்கிரகம்தான் நல்லது…பசியை எப்படிப் போக்குவது? அறிவும் தொலைநோக்கும் உள்ளவர்கள் தங்களது நிலங்களில் பயிர் செய்திருக்கிறார்கள் அல்லவா? சமத்துவ வாக்குறுதிகளை அள்ளித் தந்துவிட்டு…பஞ்சணையில் ஆழ்ந்த அரைமயக்கத்துடன் வாழ்ந்தருளும் மக்கள் ஜனநாயகவாதிகளை எப்படி உலக்கையால் அடித்துக் கொன்றுவிட்டுத் தாய்த்திருநாட்டைப் பாதுகாப்பது?...வாழ்க்கையின் இயல்பான பிரவாகத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் எல்லாச் சித்தாந்தங்களும் செயல்பாடுகளும் தவறுகள்தான், தடைகள்தான், கேடுகள்தான், பாவங்கள்தான். உள்ளடக்கத்தை எண்ணங்களால் நிரப்பிக் கொள்ள வேண்டும். விஷம் வேண்டுமா, அமிர்தம் வேண்டுமா எனச் சிந்திக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தத்துவ அடிப்படை இருப்பது எப்போதும் நல்லதுதான்…வேதனைகள் ஞாபகங்களாக மாறட்டும்” (பக்.169-178).
வாழ்க்கை, சமூகம், பொருளாதாரம், விடுதலை வேட்கை, சிறைச்சாலைகள், லாக்கப் அடிகள், உலகப் பயணம், அம்மாவின் அன்பு, சக எழுத்தாளர்களின் நேசம்மிக்க மரியாதை ஆகிய இவை எவற்றாலும் தன் அடிப்படைகளை அசைத்துக் கொள்ளாதவர் பஷீர். சாப்பாட்டுக் கடை கடன் பதினொன்றரை அணாவுக்காக முதல்கதை எழுதிய பஷீரின் வாழ்வின் இறுதியில் எல்லா நலன்களும் அவருக்குக் கிடைத்தன. பாராட்டுகள், பத்திரங்கள், அரசு மரியாதை, டாக்டர் பட்டம், பணம் என எந்த வரவும் அவரை மாற்றிவிடவில்லை. உலக மனிதர்களைச் சந்தித்த பஷீர் கடைசி வரை ஒரு சாதாரண அரைவேட்டி மனிதனாகவே வாழ்ந்தார். பைத்தியக்கார மருத்துவமனையிலும் சிலகாலம் இருந்து நலமடைந்தார். வாழ்வின் இறுதிவரை சகல மக்களையும் நேசித்தார். முதலமைச்சர்கள் முதல் முக்கிய பிரபல எழுத்தாளர்கள் வரை அவரைக் காணவந்தனர். யாராக இருந்தாலும் ஒரு வறட்டுச் சாயாதான் அவர் வழங்கினார். நேரங்கெட்ட நேரத்தில் தன்னைக் காணவருபவர்களைக் காட்டமாகத் திட்டிக் கொண்டே உள்ளே வரவேற்பார்; அவர்கள் சாப்பிட்டார்களா என்பதில் கவனம் கொள்வார்.
பஷீர் ஆத்திரப்பட்டவரும் அல்ல; தன் எழுத்துகளால் பிறரை அசிங்கப்படுத்தியவரும் அல்ல; ஆனால் அனைவரையும் சிரிக்க வைத்தவர். தன் மண்ணில் காலூன்றி நின்றாலும் அவரது சிந்தனை உலகளாவியது. கதை எழுதும் பஷீர், கட்டுரை எழுதும் பஷீர், கேள்விக்குப் பதில் எழுதும் பஷீர் – இப்படிப்பட்ட பஷீர்களை விட, நண்பர்களோடு அரட்டை அடிக்கும் பஷீரே மக்கள் சமூகத்தோடு மிகவும் நெருக்கமானவர் ஆவார் (பின்னட்டை, பின்பக்கம்).
‘தாங்கள் ஒரு இறுக்கமான கம்யூனிஸ்ட் பிற்போக்குவாதி என்பதாகக் கேள்விப்பட்டேனே, சரிதானா?’
“பிற்போக்குவாதிதான்! ஆனால் கம்யூனிஸ்ட் அல்ல!” (ப.56 )
-இதுதான் பஷீர். இவற்றின் தொகுப்புதான் ‘உண்மையும் பொய்யும்’ என்னும் இந்நூல்.