கோதாவரி நதிக்கு நடுவே நீண்டு செல்லும் பாலமொன்றில் ஓடிக்கொண்டிருக்கும் இரயில் பயணத்திலிருந்து இதை எழுதத் தொடங்குகிறேன். இந்த இரயிலின் பேரிரைச்சலைவிடவும், அதிர்வுகளைவிடவும் ஆழமான குருதிபடிந்த சப்தங்களை எழுப்புகிறது அ.கரீம் எழுத்தில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள “தாழிடப்பட்ட கதவுகள்” எனும் சிறுகதைத் தொகுப்பின் பக்கங்கள். மதங்களைக் கடந்து மனிதநேயத்தை மையமாகக் கொண்டுள்ள இந்தச் சிறுகதைகளை வாசிப்பதற்கு சற்று இறுக்கமான நெஞ்சம் வேண்டும்.
அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கசிந்துகொண்டிருந்த மதக்கலவரங்களின் கூட்டுவடிவம், 1998ஆம் ஆண்டு கோவையில் வெடித்தது. அதுவரை அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாடு, அதன்பிறகு அச்சுறுத்தலான பூமியாக மாறிப்போனது. இந்திய நாட்டையே உலுக்கிப்போட்ட கோவை குண்டு வெடிப்பு என்பது தன்னிச்சையானது அல்ல. குண்டு வெடிப்பிற்கு முன்பு முஸ்லிம்கள்மீது நிகழ்த்தப்பட்ட இந்துத்துவ மற்றும் காவல்துறை வெறியாட்டங்களை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலமாகத்தான் குண்டு வெடிப்பின் பின்னணியை நாம் சரிவர புரிந்துக்கொள்ள முடியும். அதேசமயம் பல மனித உயிர்களை துடிக்க துடிக்க காவு வாங்கிய குண்டுவெடிப்பை நியாயப்படுத்தவோ, அதனைச் செய்தவர்களை மன்னித்துவிடவோ முடியாது. மனிதகுலம் உள்ளவரை குண்டுவெடிப்பைச் செய்தவர்களுக்கு மன்னிப்பென்பது கிடைக்காது என்றே நினைக்கிறேன்.
1997ஆம் ஆண்டு கோவையில் போக்குவரத்துக் காவலர் ஒருவர் ‘அல் உம்மா’ அமைப்பினரால் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையாளிகள் நேரடியாகக் காவல்நிலையம் வந்து சரணடைகிறார்கள். ஆனால் கோவை காவல்துறை வட்டாரம் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு, பிரச்சினையை மதரீதியாக மாற்றி, முஸ்லிம்களை வேட்டையாடுகிறது. அதில் 19 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுபோக, பத்துக்கும் மேலானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. இதன்நீட்சியில் ‘அல் உம்மா’ அமைப்பு குண்டு வெடிப்பை நிகழ்த்தி தனது எதிர்வினையக் காட்டுகிறது. இந்தக் கொடும் வரலாற்றின் உண்மைகளைத்தான் கரீம் புனைவுகளாக்கியிருக்கிறார்.
கரீமின் கதைகளிலும் சரி, ச.தமிழ்ச்செல்வனின் முன்னுரையிலும் சரி, கொலையான போக்குவரத்துக் காவலரை ‘அந்தோணி செல்வராஜ்’ என்றே பதிவு செய்துள்ளனர். உண்மையில் இதனை வாசிக்கையில் எனக்கு பெரும்மகிழ்ச்சி உண்டானது. போக்குவரத்துக் காவலரான “அந்தோணி செல்வராஜை,” “செல்வராஜாக” சுருக்கித்தான் காவல்துறையும் இந்துத்துவாவினரும் முஸ்லிம்களை வேட்டையாடினர். அதாவது ஒரு கிருஸ்த்துவரை இந்துவாக மாற்றி, அதனையே பிரச்சாரமாக முன்னெடுத்ததன் வழியாகத்தான் 1997ஆம் ஆண்டும் நவம்பரில் முஸ்லிம்களின்மீது இனப்படுகொலை நடத்தப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஏ.வி.அப்துல் நாசரின் சாட்சியத்திலும், என்னுடைய எழுத்தாக்கத்திலும் வெளியான ‘கோவை கலவரத்தில் எனது சாட்சியம்’ புத்தகத்தில்தான் ‘அந்தோணி செல்வராஜ்’ என்கிற ஆவணம் முதல்முறையாக வெளிப்பட்டது. கரீம் அதனைக் கையாண்டிருப்பதிலும், தமிழ்ச்செல்வன் அதனைக் குறிப்பிட்டிருப்பதிலும் ஒரு புத்தகத்தின் பணி சரியாகச் செயல்பட்டிருக்கிறது என்கிற மனநிறைவை எனக்கு அளிக்கிறது.
கோவைக் கலவரம் மற்றும் குண்டுவெடிப்புகள் குறித்து சம்சுதீன் ஹீராவின் ‘மெளனத்தின் சாட்சியங்கள்’ என்ற நாவல் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்றது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு கோவையின் கருப்பு வரலாற்றைப் பேசிய முதல் நாவல் அது. அதனைத் தொடர்ந்து ஆவணங்களின் தொகுப்பாய் வெளியானது ‘கோவை கலவரத்தில் எனது சாட்சியம்’ நூல். இப்போது அது கரீமின் மூலம் சிறுகதை வடிவம்பெற்றிருக்கிறது. இதேபோல் கோவையின் துயர தினங்களைக் குறித்து, ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் அதன் காலகட்டத்திலேயே கணையாழி போன்ற இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் கரீமின் படைப்பு இவைகளிலிருந்து சற்று மாறுபட்டு, சமகாலத்தையும் பேசுகிறது.
சமீபத்தில் நடந்த இந்து முன்னணிப் பிரமுகர் சசிக்குமார் கொலையையும், அதனையொட்டி ஏற்படுத்தப்பட்டக் கலவரத்தையும் கரீம் தனது ஆக்கத்தில் பதிவாக்கியிருக்கிறார். ‘பிரியாணி அண்டா திருட்டு’ என்பதுதான் இந்தக் கலவரத்தில் ஹைலைட் ஆகும். கரீம் இதையும் தனது படைப்பில் தவறவிடமால் சொல்லியிருப்பதன் மூலம், சமகால கோவையின் இரத்தப் பக்கங்களை பேசும் புத்தகமாக ‘தாழிடப்பட்ட கதவுகள்’ தனித்துவத்தை அடைந்து நிற்கிறது.
கரீமுடைய சிறுகதைகளின் நிறம் சிவப்பானது. அதிலும் அடர்சிவப்பானது என்பதுதான் இன்னும் நெருக்கமான சொல்லாக இருக்கும். ‘மொஹல்லாவின் மய்யத்துக்கள்’ என்கிற முதல் கதையிலேயே கரீம் நம்மை நிலைகுலைய வைத்துவிடுகிறார். தனது எதிர்காலக் கணவனை, மனம்நிறைந்த காதலனை ‘பைரோஜா’ சடலமாகப் பார்க்கும் தருணம் சொற்களுக்கு அப்பாற்றப்பட்ட துயரமாகும். அதுவும் தீயிட்டு எரிக்கப்பட்ட ‘அஸ்ரப்பின்’ உடலைக் கண்டு அவள் துடிக்கும் இடத்தை எளிதில் கடக்க முடியவில்லை.
காவல்துறை மற்றும் இந்துத்துவ வெறியர்களால் கொலைக்குள்ளான முஸ்லிம்களின் உடல் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசலின் நிமிடங்கள் ரணங்களின் கடலாக இருக்கிறது. ஒவ்வொரு உடலின் முகத்தையும் அனிபா பாய் துணியை நீக்கிக் காட்டுவதும், அதனைக் கண்டவர்கள் தங்கள் தந்தையும், சகோதரனும் அதிலிருப்பதைப் பார்த்து நெஞ்சிலடித்து மயங்கிவிழுவதும், ஒரு கட்டத்தில் அனிபா பாயே அடுத்த உடலைக் காட்ட முடியாமல் கைகள் நடுங்கி நிற்பதும் மூச்சைத் திணறடிக்கும் வரிகளாகும். உண்மையில் வாசிப்பில் இதனை அப்படியே தாவிச் சென்றிருக்கலாமோ என்றுதான் எனக்குத் தோன்றியது.
‘தாழிடப்பட்ட கதவுகள்’ கதையில்வரும் அமானுல்லா – ஆய்ஷா தம்பதியினரின் கதையானது, ராஜேஷ்குமாரின் த்ரில்லர் ஸ்டோரியைப் போன்றதாகும். நான்கு நாட்களாக வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் அவர்களின் வாழ்க்கையைக், கரீம் நெருங்கிநின்று அனுபவித்ததைப் போன்றே எழுதியிருக்கிறார். நான்கு நாட்களுக்குப் பிறகு அமானுல்லா தனது மனைவி மற்றும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, சொந்த வீட்டைவிட்டும், ஊரைவிட்டும் வெளியேறியதை முன்னும் பின்னுமாக விரித்துச் செல்கிறது ‘தாழிடப்பட்டக் கதவுகள்.’ இதேபோல் ‘அன்புள்ள அத்தாவுக்கு’ என்கிற கதையும் கண்ணீரை வழிய வைத்துவிடுகிறது.
இன்னொரு கதையில் குண்டுவெடிப்பில் கைதாகி, பிறகு நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட ஒரு முஸ்லிமைக் குறித்து எழுதியிருக்கிறார் கரீம். அப்படி விடுதலையானவரை தன் மகளே வெறுக்கிறாள். தன் தந்தையால் அவள் இந்தச் சமூகத்தில் எதிர்கொண்ட புறக்கணிப்புகளும், அதன்வழியான அவமானங்களும் அவளை அவளது தந்தையுடன் நெருங்கவிடாமல் தடுத்துவிடுகிறது. என்னதான் அரசே தனது தந்தையை நிரபராதி என்று சொல்லிவிட்டாலும், அவள் மட்டும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் குற்றவாளியாகவே தனது தந்தையை அணுகுகிறாள். கதையின் இறுதியில் திருமணமாகிப் பிறந்த வீட்டைவிட்டு வெளியேறும் தருணத்தில், தனது தந்தையைப் பார்த்து மகள் பேசும் காட்சி மனதை உருக்கிவிடுகிறது. இது பல அப்பாவி சிறைவாசிகளின், விசாரனைக் கைதிகளாகவே பல ஆண்டுகள் சிறைக்குள்ளிருக்கும் நபர்களின் கூட்டுக் கதையாகவே முன்வைக்கப்பட்டிருக்கிறது.
கோவை மண் இரத்தச் சிவப்பில் மிதந்த காலம் 20 ஆண்டுகளைத் தொட்டுவிட்ட நிலையில், இப்போது அது மீண்டுமொரு கொலைக்களத்தைச் சந்திக்கவிருந்த சூழலில் விரல்நுனியில் பாதுகாக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வீரியம்கொண்டிருந்த இந்து முன்னணி அமைப்பு, இடைப்பட்ட காலங்களில் தனது செல்வாக்கை இந்துக்களிடையே இழந்து தனிமைப்படுத்தப்பட்டது. ஆனால் அது மீண்டும் ‘சசிக்குமார்’ கொலையில் புத்துயிர் பெற்றதை அனைவருமே அறிவார்கள். இது எப்படிச் சாத்தியமானது? 20 ஆண்டுகளாக இந்து முன்னணியின் வலையில் விழாமல் இருந்தவர்கள் இப்போது எப்படி அதனுடன் இணைந்தார்கள்? என்கிற ஆழமான சமூகப் பார்வைமிகுந்த கேள்விகளை, கரீம் தனது புனைவுகளின் துணையோடு எதிர்கொண்டிருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்து முன்னணியின் இலக்கிற்கு இரையானவர்கள், அதன் தலைவர்களால் கைவிடப்பட்டவர்கள், அதனால் ஜாமீன் எடுக்கக்கூட வழியற்றநிலையில் தத்தளித்த சாமானிய இந்துக்கள், அதனையடுத்து இந்து முன்னணியை முற்றாகத் துறந்தனர். சிலர் அதனை வெறுத்து ஒதுக்கி, தலித் அமைப்புகளின்கீழ் திரண்டனர். இதனால் இந்து முன்னணி அமைப்பு இருபது ஆண்டுகள் முடங்கிப் போனது. இப்போது அது இருபது வயதுக்காரர்களை தனது வலையில் வீழ்த்தி, முந்தைய வரலாறுகளை அறியாத பருவத்தினரை அமைப்பில் இழுத்து, தனது மதவெறிக் கோட்பாட்டைத் திணித்திருக்கிறது. அதன் நீட்சியே சசிக்குமாரின் கொலையையொட்டி நடத்தப்பட்ட கலவரம் என்று, கதையில் சில குறியீடுகளைக்கொண்டே சொல்லிச் செல்கிறார் கரீம்.
‘144’ என்கிற இப்புத்தகத்தின் இறுதிக் கதையில்தான், சசிக்குமார் கொலை மற்றும் அதனைவைத்து நிகழ்த்தப்பட்ட கலவரங்களின் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு பத்திரிகை நிருபர், நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருக்கும் ‘தெலுங்கு மொழி’ பேசும் துப்புரவுத் தொழிலாளரிடம் பேசுகிறார். அவர் தனது மனைவியை நீண்ட நேரமாகத் திட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்த நிருபர், அதனைக் குறித்துக் கேட்பதற்காகத் துப்புரவுத் தொழிலாளரை அணுகுகிறார். நிருபரின் கேள்விக்கு, ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்லிவிடுகிறார் அந்தத் தெலுங்கு மொழிக்காரர். மீண்டும், மீண்டும் நிருபர் கேட்கவே, தனது மகன் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதை அந்தத் துப்புரவுத் தொழிலாளர் கூறுகிறார். அதன்தொடர்ச்சியாக ஒருகாலத்தில் துப்புரவுத் தொழிலாளர்கூட, தனது மகனை இரையாக்கிய மதவெறி அமைப்பில் இருந்தவர் என்பதும், அவர்களால் தான் பலிகொடுக்கப்பட்டதினால் அதனையெல்லாம்விட்டு விலகி நிற்பதாகவும், அது தெரியாத தனது மகன் இப்போது சிக்கியிருப்பதாகவும் அவர் நிருபரிடத்தில் கூறுகிறார். இந்தத் தலைமுறை இடைவெளியில் நிகழ்ந்திருக்கிற மாற்றங்களைக் கரீம் கதையின் ஊடாகவே ஆய்வுக்குட்படுத்தியுள்ளார். இந்த இடத்தில் தெலுங்கு மொழி பேசும் நபரென்பது ‘தலித்’ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான குறியீடாகக் கையாளப்பட்டிருக்கிறது. தலித்துகள் ஏன் இந்துத்துவவாதிகளின் சதிக்கு இரையாகிறார்கள் என்கிற கேள்விக்கு, தலித் அமைப்புகள் போதியளவு தங்களது பணியைச் செய்வதில்லை என்கிற பதிலைத் தேடியலைந்து முன்வைத்திருக்கிறார் கரீம்.
மேலும், ‘144’ தடை உத்தரவு என்பது கோவையில் மறைமுகமாக வேறொரு வழியில் தொடர்ந்து இருபதாண்டுகளாக நடைமுறையில் இருக்கும்போக்கையும், கரீம் சொல்கிறார். உண்மையில் இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயலாகும். இதில் பாவம் என்னவென்றால், தாங்கள் இப்படி திறந்தவெளிச் சிறைக்கூடத்தில் தொடர்ந்து வைக்கப்பட்டுக்கொண்டுள்ளோம் என்று அறியாமல் இருக்கும் கோவை மக்களின் நிலைதான். “கலவரங்களை மையப்படுத்திப் பறிக்கப்படும் உரிமையக்கூட தெரியாமல் எல்லோரும் அப்படியே பழகிப்போய்விட்டார்கள்” என்று கரீம் தனது இறுதிக் கதையில், இறுதி வரிகளை எழுதியிருக்கிறார். எவ்வளவு கொடுமையான போக்கு இது?
கோவை மாநகரின் வீதிகள் தார்ச்சாலைகளால் மட்டுமே ஆனவை அல்ல. அதில் குருதியும் சேர்ந்தே இருக்கிறது. அந்தக் குருதிகள் கேட்டுநிற்பது பழிக்குப் பழி அல்ல. மனிதநேயத்திற்கான தடங்களாக எங்களால் இருக்கமுடியாதா என்றுதான் அந்தக் குருதியின் குரலற்ற ஆன்மாக்கள் கேட்கின்றன. உண்மைகளின் குரல்கள் கிணற்றுக்குள் தள்ளப்பட்டு, பொய்களின் பேச்சுகள் கடல் அலையாய் ஆர்ப்பரிக்கின்றன. அதனால்தான் குருதியாகிப்போன ஆன்மாக்களின் குரல்கள், மதவெறிக்கூட்டங்களின் கோஷங்களால் வெகுமக்களுக்கு கேட்காமலே முடங்கிக்கிடக்கிறது. கோவை மக்கள் அந்த ஆன்மாக்களின் குரல்களைக் கேட்க வேண்டும். அதன் வழியாக அறியப்படும் வரலாறு என்பது, மலரப்போகும் மனிதநேயத்திற்கான பலம்வாய்ந்த பாலமாக அமையும்.
“தாழிடப்பட்ட கதவுகள்” மெல்லத் திறக்கட்டும். உண்மைகளின் உறக்கம் கலைந்து, மனிதயநேயம் படிதாண்டிப் பயணிக்கட்டும். அதனைச் சாத்தியப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கரீமின் எழுத்துகள் இருக்கின்றன என்கிறவகையில், இது ஒரு முக்கியமான படைப்பாகும்.
(நன்றி: காலச்சுவடு)