அங்கிள் சாம்க்கு மண்ட்டோவின் கடிதங்கள் என்னும் நூல் மூலம் 2013இல்தான் முதன் முதலில் மண்டோவை அறிகிறேன். தற்காலத்திற்கு தேவையான அத்தனை சிந்தனைகளுடனும், சொல் வீச்சுக்களுடனும், அசைந்திடா உறுதியுடனும் ஆயிரத்தி தொளாயிரத்தி ஐம்பதுகளிலேயே வாழ்ந்திருக்கிறார் என்பது திருப்தியையும் எதிர்பார்ப்பையும் ஒரே நேரத்தில் உண்டு பண்ணுகின்றது. மிக யதார்த்தமான, எளிமையான சொற்களைக் கொண்டு, முகத்திற்கு நேரே சாட்டைகளாக நிறுவும்சொல்வீச்சு மண்ட்டோவினுடையது. முதலாளித்துவத்திற்கும் முக்கியமாக ஏகாதிபத்தியத்திற்கும் அமெரிக்காவிற்கும் பரம எதிரியாக தன்னை நிலை நிறுத்தியவர் மண்ட்டோ. செயல்பாடுகளில்லாத ஏட்டுச்சுரைக்காயாய் மட்டுமே மார்க்கத்தை கட்டி அழும் முல்லாக்களையும் விடவில்லை.
வழக்கமாய் எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு கிடைக்கும் 20 ரூபாயை விட்டுவிட்டு 200 ரூபாய் தாருங்கள் எனக் கேட்டதாகவும், அமெரிக்க அரசாங்கத்தின் பெயரில் புரோக்கர்களாய் வந்தவர்களோ 500 ரூபாய் வரைக்குமே தரச் சம்மதித்ததையும் தன் படைப்பிலேயே எழுதி, நேரில் அவமானப்படுத்திய செயல்வீரர் மண்ட்டோ. அத்தனை அழுத்தம். கம்பீரம். முகத்தில் தெறிக்கும் கோபக்கனல், எழுத்துக்களிலும் பொங்கியோடவே செய்கின்றது.
ஒவ்வொரு கதையிலும் ஒரு சாதாரண மனிதனை, சாலைகளில் நாம் தினந்தோறும் கடக்கும் எளியவர்களை அறிமுகப்படுத்துகிறார். தூர இருந்து பார்க்கும்போதே அருவருப்பாய் உணரும் பணம் மிகுந்த சமூகத்திடம், பணமில்லாத ஒரே காரணத்தினால் அவமானப்படும் அவர்களின் வலிகளை, அவர்களின் சிந்தனைகளை அவர்கள் தரப்பில் இருந்து எத்தி வைக்கின்றார். ‘டிட்வாலின் நாய்’ ஒரு கதை. இராணுவ வீரர்களின் கதை , தன்னை, தன் சிந்தையை, தன் நலனை, தன் ஊன், உறக்கத்தை, உடலை, நாட்டுக்காகவே 24 * 7 முழுவதும் அர்ப்பணித்த ஜீவன்கள் என நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்கள், சுயத்தில் அவர்களின் யதார்த்த வாழ்க்கை எத்தனை போலியான, குறுகிய மனப்பான்மை கொண்ட வெறி நிறைந்ததாக உள்ளது என்பதை முன் வைப்பார். ஒரு நாயின் ஆயுள் கூட எல்லைக்கோட்டை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பார். வாயில்லா அந்த ஜீவன் மரணித்ததை இரு நாட்டு இராணுவமுமே கொண்டாடும், எனில், எதனைக் காக்க அவர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளார்கள்? கேள்விகள் பலமாய் அறைகின்றன. அதே பாணியில், ‘மிருகத்தனம்’ என்னும் கதையில் ஒரு தாயின் அன்பின் அளவையும் கேள்விக்குள்ளாக்குவார். ஈரம் என்பது ஈரம்தான் அல்லவா... அதற்கு படைப்புக்கள், நிறங்கள், பிறந்த தேசங்கள், சாதிகள், மதங்கள், எல்லைக்கோடுகள் என அளவீடுகள் வைப்பது யார்?? மண்ட்டோவின் எல்லாப் படைப்புக்களுமே இப்படித்தான், எள்ளி நகையாடும் நகைச்சுவையைக் கலந்து, சம்மட்டியினால் செதுக்கப்பட்ட ஒரு கேள்வியையும் முன் வைக்கும். காட்டாறு போல. மலையாடுகள் போல. யாரின் கட்டுக்குள்ளும் வராதவை. அவைதான் மண்ட்டோவின் வசீகரத்திற்கு அடையாளம்.
‘சோசலிசத்தில்’ சமவுடைமையை கேலிப்பொருளாக்கும் மண்ட்டோ, ‘தன்னடக்கத்திலும்’, ‘பிழை சரி செய்யப்பட்டதிலும்’மதவாதிகளின் மிருகத்தனங்களை காட்சிப்படுத்துவார். “விலைமாதுகள் பற்றி எழுதுவதே ஆபாசம் என்றால் அவர்களின் இருப்பும் ஆபாசமானதுதான் அவர்களைப் பற்றி எழுதுவதை தடை செய்ய விரும்பினால் முதலில் விலைமாது என்ற நிலையை ஒழித்துகட்டுங்கள் பிறகு அவர்களைப் பற்றி எழுதுவது தானாக மறைந்துவிடும்” என்ற மண்ட்டோவின் ‘சதைப் பிண்டம்’ புனைவும், ‘அவமானம்’ எனும் புனைவும், வாசிப்பவர்கள் யாருக்குமே ஒரு அதிர்வை, அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் விடாது. அவமானத்தில் லேசாக பெண்ணிய சாயல் ஊடுருவி இருந்தாலும், தனி ஒரு மனுஷியின் அங்கீகாரம் என்பது வெறுமனே உடலின் கவர்ச்சிக்கும், செழிப்பிற்கும் மட்டுமே தரப்படுகிறது எனும்போது, அவர்களின் ஏக்கங்களை பலவீனங்களை சமயோசிதமாக கையாளும் நயவஞ்சக ஓநாய்களையும் காணும்போது சமூக அமைப்பின் இலட்சணங்கள் நிர்வாணக்கூத்தாடுவது புரியும். நிர்பயா வழக்கும் அதன்பின் வந்த பல்வேறு அதே போன்ற சம்பவங்களும் இதனை இன்னுமின்னும் உண்மைப்படுத்தியுள்ளன.
‘சில்லிட்டுப்போன சதைப் பிண்டம்’, ‘திற’ என்னும் இரு புனைவுகளிலும் எந்த ஒரு கலவரத்தின் போதும் பெண் என்னும் படைப்பு எத்தனை எளிதில் உரிமையாக்கப்படக்கூடிய ஒரு சதைப்பொருளாக மட்டுமே காட்சி தருகிறாள் என்பது சுடும் நிஜம். இந்தக் கதைகள் எத்தனையாண்டுகள் முன்னர் வெளிவந்திருப்பினும் இன்றைய குஜராத்திலும், முஜாஃபர் நகரிலும் நடந்தவற்றின் முன் ஜென்ம ஜெராக்ஸ் பிரதிகளாகவே தென்படுகின்றன. இன்றைக்கும் மதவாதிகளும், அரசியல்வியாதிகளும் தங்களின் ஆதாயத்திற்காக மக்களின் மனதில் வக்கிர மனப்பான்மையை காலமெல்லாம் செறிவூட்டிக்கொண்டேயுள்ளனர் என்பதே சத்தியமான உண்மை. இந்தக் கதைகளுக்காகவெல்லாம் மண்ட்டோ நீதிமன்றங்களின் படியேறிய நிலையை எண்ணும்போது, சமூகத்தின் புரிதலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
இதே மண்ட்டோவிடம் இருந்துதான் ‘காலித்’ என்னும் கதையும் எழுதப்பட்டிருந்தது. உண்மையில் எந்த வருடம், எந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கதையை மண்ட்டோ எழுதியிருப்பார் என வியக்கிறேன். கதை எழுதுபவர்கள் அனைவரும் கதாபாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், சில கதைகள் நிகழ் சம்பவங்களால் மட்டுமே சாத்தியபப்டுகின்றன. குழந்தையை இழக்கும் தாயின் துயரத்தை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகின்றது, குழந்தையின் பிரிவைத் தாங்க இயலா தந்தையின் மனவலி. என் பாஷையில் சொன்னால், #சான்ஸ்லெஸ்....
எனினும் எந்த ஒரு வறுமையிலும் தன் கொள்கைகளையோ, கருத்துக்களையோ, நிராதரவாக்கப்பட்டவர்களின் வலிகளை, பிரச்சினைகளை எழுத்தின் வழி சொல்வதில் சமரசமேதும் கொள்ளாதவர் மண்ட்டோ என்பது அவரின் வாழ்வின் கதையைப் படிக்கும்போது தெரிகின்றது. எந்த வறுமையாலும் அவரின் வீரத்தை வெற்றிடமாக்க இயலவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நிச்சயம் இலக்கிய உலகில் மண்ட்டோ ஏற்படுத்திய வெற்றிடத்தை நிறைவு செய்ய இன்று வரை யாராலும் முடியவில்லை என்பதும் நிஜம். ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மதவாதிகளுக்கும், முதலாளிகளுக்கும், மேட்டுக்குடிகளுக்கும் படைப்புக்களின் வழி அசுரனாய் நின்ற மண்ட்டோவை யாராலுமே வெற்றி கொள்ள இயலாது.
இத்தனை சொற்களாலும் மண்ட்டோவினை சரியே புரிந்து எழுதியுள்ளேனா தெரியவில்லை. சமுத்திரத்தின் ஒரு துளியையே சுவைத்துள்ளேன் எனலாம். அவரின் உலகம், இந்த உலகின் அத்தனை சாமானியர்களையும் நிறைத்தது. உண்மையில், He was and is a Legend..!