“ஒரு வார்த்தை வெல்லும்… ஒரு வார்த்தை கொல்லும்….” என்பார்கள்.
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.” இது அய்யன் திருவள்ளுவர்.
வார்த்தைக்கு வலிமை உண்டு….. ஒரு ஏழை அமெரிக்கக் கருப்பினச் சிறுமியை, ஒரு பணக்கார வீட்டு வெள்ளையினச் சிறுமி , “ உனக்குப் படிக்கத் தெரியாது” என்று ஏளனம் செய்கிறாள். இந்த அவமரியாதை அந்தக் கருப்பினச் சிறுமியின் மனதைத் தொட்டது, தீயாய் சுட்டது. தன் தலைமுறையில் மட்டுமல்ல, தன் பகுதியிலும் யாரும் இதுவரை பெற்றிடாத கல்வியைப் பெற வேண்டும், எழுதப்படிக்கத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அந்தச் சின்னஞ்சிறு பெண்ணின் உள்ளத்தில் நெருப்பாய் தகிக்கிறது. உள்ளத்தின் உள்ளே இயல்பாய் முகிழ்த்து வந்த ஆசை நடந்தேறுகிறது. படிக்கிறாள்…. தொடர்ந்து படிக்கிறாள்…. தான் உயர்ந்தது போலவே தன் கருப்பினத்தைச் சேர்ந்த பலரும் கல்வி பயில வேண்டும் என நினைத்து பள்ளியை நடத்துகிறார். இப்பள்ளி பின்காலத்தில் ஒரு கல்லூரியாக வளர்ச்சி பெறுகிறது. இப்பெண்மணி அமெரிக்க குடியரசுத்தலைவருக்கு ஆலோசகராகவும் பணியாற்றி மறைகிறார். என்ன ஒரு பயனுள்ள வாழ்க்கை.
யார் இவர்?
அவர் பெயர் இள வயதில் மேரி ஜேன் மெக்லியோட்… இறுதிக்காலத்தில் மேரி மெக்லியோட் பெத்யூன். இவரின் சாகசம் மிகுந்த வாழ்க்கை வரலாறே” உனக்குப் படிக்கத் தெரியாது” என்னும் இந்நூலாக விரிகிறது.
அமெரிக்காவில் அடிமை முறை ஆபிரகாம் லிங்கனால் ஒழிக்கப்பட்டு சிறிது காலமே ஆகியிருந்தது. அதுவரை பென் வில்சன் என்னும் குடும்பத்திடம் அடிமையாயிருந்த ஒரு அமெரிக்கக் கருப்பினக் குடும்பம் அப்போதுதான் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்திருந்தது. தந்தையின் பெயர் சாம், தாய் பாட்சி. அந்தக் குடும்பத்தில் குழந்தைகள் ஏராளம் இருந்தாலும் வறுமையிலும் பாசத்தோடு வாழ்ந்து வந்த குடும்பம். அதிகாலையில் எழும் அக்குடும்பத்திற்கு பகல் முழுவதும் பருத்திக்காட்டில் வேலை.ஒரு நாளின் ஒரே ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடக்கூடாது என நினைக்கும் குடும்பம் அது. இருந்தும் பருத்திக்காட்டில் பூக்கும் முதல் பூவை யார் பார்ப்பது? என்பது போன்ற சின்னச் சின்ன அன்பிலே ஜீவன் வைத்து வாழும் குடும்பம். மேரியின் அம்மா அவ்வப்போது தனது பழைய எஜமானி பென் வில்சன் என்ற வெள்ளைப் பெண்மணி வீட்டுக்கு வேலைக்குச் செல்வது வழக்கம். அன்றும் அவ்வாறே செல்லும் பாட்சி சிறுமி மேரியையும் கூட்டிச் செல்கிறார். அங்கு வீட்டுப் பின்புறம் ஒரு சிறிய வீட்டில் அப்பணக்கார வீட்டின் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மேரி எட்டிப் பார்த்தவுடன், மேரியை அவர்கள் உள்ளே அழைக்கிறார்கள். மேரி தயங்கி படியே உள்ளே சென்று ஒவ்வொன்றாகப் பார்க்கும்போது, அவளது கண்ணுக்கு அந்தப் பைண்டிங் செய்யப்பட்ட புத்தகம் தட்டுப்படுகிறது. மேலட்டை ஓவியத்தையும், அச்சிடப்பட்ட தலைப்பையும் பார்த்துப் பிரமித்துப்போன மேரி அதனை கையில் எடுக்கிறாள்… ஆம் பதினொரு வயது மேரி முதன்முதலில் ஒரு புத்தகத்தை தன் கையால் எடுக்கிறாள்.
அதைப்புரட்டத் தொடங்கியபோது வில்ஸனின் இரு பெண் குழந்தைகளுள் சிறுமியாக இருந்தவள், “புத்தகத்தை என்னிடம் கொடு! நீ இதை எடுக்கக் கூடாது! உன்னால் படிக்க முடியாது…!” என்று மேரியிடமிருந்து புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டாள்.
முதலில் மேரிக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு “சும்மா, அதைப் பார்த்துவிட்டுத் தருகிறேன்… நான் ஒன்றும் அதை சேதப்படுத்திவிட மாட்டேன்… பத்திரமாக வைத்திருப்பேன்…”
“எனக்கு அது எப்படித் தெரியும்? புத்தகம் படிக்க முடியாதவர்களுக்காக இல்லை! தெரிந்து கொள்…!”
“பத்திரமாக வைத்திருப்பேன்.”
“முடியாது”
“அப்படியானால் உன்னால் அதைப் படிக்க முடியுமா..?” மேரி கேட்டாள்.
“நிச்சயமாக நான் படிக்க முடியும். விளையாட்டுச் சாமான்களையும் என்னிடம் கொடு!” என்று சொல்லிக்கொண்டே அந்தச் சிறுமி விளையாட்டுச் சாமான்களை மேரியிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறாள்.. மனம் துவண்ட மேரி, நட்புணர்வற்ற அந்த இடத்திலிருந்து உடனே கண்ணீருடன் வெளியேறுகிறாள்… இந்த அவமானகரமான, கண்ணீருடன் நிகழ்த்தப்பட்ட வெளியேற்றம் மேரியின் மனதில் ஆறா வடுவாகப் பதிகிறது.. அந்த வெள்ளைக்குழந்தையைப் போல நாமும் படிக்க வேண்டும், அந்த வெள்ளை மனிதர்களைப் போல நமது வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும் என்ற எண்ணம் விதையாய் சிறுமி மேரியின் மனதில் விழுகிறது.
இந்த எண்ணத்துடன் வீடு வந்து சேரும் மேரி வழக்கம்போல பருத்திக் காட்டில் வேலை செய்கிறாள். அப்போது ப்ரெஸ்பைட்டீரியன் தேவாலயத்திலிருந்து வரும் மிஸ் வில்சன், “தான் தேவாலயத்தால் கருப்பினக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க அனுப்பப் பட்டிருக்கிறேன்” என்று சொன்னதும், “ தான் படிக்கப்போகிறோமா?” என்றெண்ணி தன்னையே மேரியால் நம்ப முடியவில்லை. திகைத்துப்போன மேரியின் கண்களில் கண்ணீர் ததும்பி நிற்கிறது.
இதன்பின் நூலில் ஒரு அழகான காட்சி விவரிக்கப்படுகிறது…
மேரியின் வீட்டில் ஜன்னலோரமாக கீழ்ப்பக்கமிருந்த மேசையின்மீது தலைமுறைக் காலமாக பைபிள் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. அந்த வீட்டின் எல்லோரும் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அந்த மேசையும் பைபிளும் அதிக தூரத்தில் இல்லை. பல ஆண்டு காலமாக அந்த பைபிள் அங்கேதான் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தக் குடும்பத்திலிருந்து எந்த ஒருவரும் எந்தக் காலத்திலும் அதைப் படிப்பதற்கு முடிந்ததே இல்லை. காரணம் யாருக்கும் படிக்கத் தெரியாது.
இப்போது மேரி , “நான் இந்த பைபிளையும் இனி படித்து விடுவேன். எல்லோருக்கும் படித்துக் காட்டவும் செய்வேன்.” என தனக்குத் தானே முணுமுணுத்தாள்.
பள்ளி செல்ல மனதளவில் தயாரான மேரியை அவளது தந்தை கடை வீதிக்கு அழைத்துச் சென்று “உனக்கு என்ன வேண்டும் மேரிம்மா..?” எனக் கேட்க, மேரி எழுதுவதற்கு தனக்கு ஏதாவது வாங்கித் தாருங்கள் எனக் கூற அவர் சிலேட் வாங்கித் தருகிறார்.
ஆசையாய் ஆசையாய் மிஸ் வில்சனிடம் கல்வி கற்கச் செல்லத் தொடங்குகிறாள் மேரி.. அந்த சில மாணவர்களைக் கொண்ட எளிய பள்ளி மேரியை வாரி எடுத்துக் கொள்கிறது. மேரி தனது புதிய கல்வியினால் எழுதப் படிக்கத் தெரிந்தவளாக, கணக்குப் பார்க்கத் தெரிந்தவளாக மாறிக் கொண்டிருந்தாள். தனது பாதையில் உயர உயரப் போய்க் கொண்டிருக்கிறோம் என்று மனதில் அசை போடத் தொடங்குகிறாள். சில வருடங்களில் அப்பள்ளியிலிருந்து மதிப்பு மிக்க டிப்ளமோ பட்டத்தை வாஞ்சையுடன் பெறறுக் கொண்டாள் மேரி.
அடுத்து தனது மேல் படிப்பைத் தொடர வேண்டும் என மனதார மேரி ஆசைப்பட மேரி கிறிஸ்மான் என்ற வெள்ளைக்காரப் பெண்மணியின் பண உதவி மூலம் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. இப்போது மேரி தனது வாழ்வில் முதல் முதலில் ரயில் பயணம் செய்து ஸ்காட்டியா செமினரிக்கு கல்வி பயிலச் செல்கிறாள். திரு சாட்டர்பீல்ட் தலைவராயிருந்த அப்பள்ளியில் ஏழு ஆண்டுகள் கல்வி பெறுகிறாள் மேரி.
பின் சொந்த ஊருக்குத் திரும்பி சிலமாதங்கள் அங்கு தங்குகிறாள். அச்சமயத்தில் தன்னைப் போன்ற கருப்பினப் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குகிறாள். பின் சிகாகோவின் மூடி பைபிள் நிலையத்தில் கல்வி பயிலச் செல்கிறார். அங்கு தனது கல்வியை முடித்து , ஜியார்ஜியாவின் அகஸ்டா பகுதிக்கு ஆசிரியைப் பணிச் செய்ய செல்கிறார். அந்த கல்வி நிலையமானது லூஸி லேனி என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது. இவர் மேரி ஜேனைவிட இருபது வயது மூத்தவர். இவரும் அடிமை வாழ்க்கையில் பிறந்தவர். இவரிடமிருந்து மேரி சிறந்த நிர்வாகத்திறனைப் பெற்றார். இங்கிருந்தபோது மேரி ஜேன் மெக்லியோட், ஆல்பர்ட்டஸ் பெத்யூன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆல்பர்ட் மெக்லியோட் பெத்யூன் என்னும் மகன் பிறந்தான்.
பின் கருப்பினக் குழந்தைகளுக்கான ஒரு பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் மேரியிடம் ஏற்படுகிறது. பல இடங்களில் இடம் தேடி, கடைசியில் கருப்பினத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியான தாய்தோனா என்ற இடத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அங்கு ஒரு மாதத்திற்கு 11 டாலர்கள் வாடகையில் ஒரு வீட்டில் தனது மகன் ஆல்பர்ட்டையும் சேர்த்து ஆறு பேருடன் தனது பள்ளியைத் துவக்குகிறார் மேரி பெத்யூன். தாய்தோனா நகரம் மெல்ல மெல்ல மேரியின் இருப்பை உணரத் தொடங்குகிறது. மேரி எல்லா பக்கமிருந்தும் தன் பள்ளியை நடத்துவதற்கு நிதி வேண்டி நின்றார். தெருத்தெருவாக குழந்தைகளுடன் பாடல் இசைத்துக் கொண்டு சென்று பள்ளிக்கு நிதி சேகரித்தார். அந்நகரத்தின் தொழிலாளர்களும் நிதி தந்தனர் பள்ளிக்காக. இதைவிடச் சிறப்பு, அந்தப் பள்ளிக்கு அருகிலுள்ள சிறையிலிருந்த கைதிகள் நால்வர் சில உணவுப்பொருட்கள் மற்றும் பழங்களைத் தங்களின் நிதியாகத் தந்து சென்றனர். இதைக் கண்டு உருகிப்போனார் மேரி பெத்யூன். அடுத்த இரண்டு வருடங்களில் மேரியின் பள்ளியில் 250 மாணவர்கள் இருந்தனர். தற்போது பள்ளிக்கு சொந்தமான கட்டடத்தின் அவசியத்தை மேரி பெத்யூன் உணர்கிறார். தேடி அலைந்து அங்கு ஊரின் ஒதுக்குப் புறத்தில் குப்பைகளுக்கு மத்தியில் தனது முதலாவது பள்ளியை உருவாக்குகிறார், ஏனெனில், அந்த இடம்தான் குறைந்த விலைக்குக் கிடைத்தது. அப்போது ஐந்து டாலர்கள் தர வேண்டும், பின் இரண்டு வருடங்களில் மீதித் தொகை என 200 டாலர்கள் அந்த இடம் வாங்க செலவானது. பின் வெள்ளையர்கள் உட்பட பலரின் நிதி உதவியுடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மேரி பெத்யூனின் முயற்சியாலும், அயராத உழைப்பாலும் பல கட்டடங்களுடன் , பல மடங்கு மாணவர்களின் எண்ணிக்கையுடன் பள்ளி வளர்ந்தது. பல முக்கிய ஆளுமைகளான புக்கர் டி வாசிங்டன், ஜனாதிபதி ரூஸ்வெட்டின் மனைவி போன்றோர் வருகை தந்து பள்ளியின் வளர்ச்சியில் பங்கு கொண்டனர். பள்ளியானது வளர்ச்சி பெற்று பெத்யூன் குக்மேன் கல்லூரியானது. தனது கடைசிக்காலம் வரை கருப்பினத்தவருக்கான கற்பித்தல் பணியில் அக்கறை காட்டியவராகவே மறைந்தார் திருமதி மேரி பெத்யூன்.
உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வார்த்தைகளால் அவமானப்படுத்தப்பட்ட மேரி என்னும் சிறுமி தனது விடா முயற்சியால் தன் வாழ்க்கைப் பயணத்தில் எட்டிய கல்வி அசாத்தியமானது. அத்தகைய மதிப்பு வாய்ந்த கல்வியை தான் கற்றதோடு மட்டுமல்லாமல் பல் ஆயிரம் கருப்பினத்தவரையும் கல்வி கற்றவராக மாற்றியது மிகவும் போற்றுதலுக்குரியது. தான் நடத்தி வந்த பள்ளிப்ப பகுதியில் தங்களை வாக்களிக்க விடாமல் க்கு க்ளக்ஸ் க்ளான் அமைப்பு விடுத்த மிரட்டல் பேரணியை தீரத்துடன் எதிர் கொண்டார். தனது சுய கௌரவம் பாராமல் நிதி கிடைக்கின்ற திசையிலெல்லாம் தனது கையேந்தி நின்றார். கருப்பினப் பெண்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக மேரி பெத்யூனின் செயல்பாடுகள் மிகவும் மதிப்பு வாய்ந்தது.
இந்நூல் வெறும் ஒரு கருப்பினப் பெண்மணியின் கல்விக்கானப் போராட்டம் மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கல்வி மறுக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் நிகழ வேண்டிய கல்விப் போராட்டத்திற்கான ஒரு வழிகாட்டி மேரி பெத்யூனின் வாழ்க்கை. முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளதைப் போல, “கனவுகள் முக்கியமானவை. ஆனால் கனவுகளைவிட கனவுகளைச் செயலாக்குவதில் அதுகோரும் உழைப்பு அசாத்தியமானது”. உனக்கு படிக்கத் தெரியாது என்பதில் இருந்து ஒரு தலைமுறைக்கே கல்வி அளித்த திருமதி மேரி பெத்யூன் உழைப்பு அசாத்தியமானது.
ஒரு 95 பக்கங்களால் ஆன இந்நூலை வாசித்து முடிக்கும், பல்லாயிரக்கான ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் வெற்றியை மேரி பெத்யூன் என்னும் ஒரு வீராங்கனையின் வடிவில் காணலாம்.
திரு. கமலாலயன் அவர்களின் மொழியாக்கம் மிக எளிமையாக , தடங்கலின்றி நம்மை வழிநடத்துகிறது.