"ஒரு நல்ல படைப்பு தனக்கான வாசகனைத் தானே தேடிக்கொள்ளும்" என்ற இந்த அறிவிக்கை மீது எப்போதும் எனக்கு முரண்பாடு உண்டு. இது ஒரு அபத்தமான, மூடநம்பிக்கையை உணர்த்துகின்ற கருத்தில்லையா...? தனக்கான வாசகனுக்கு மட்டும்தான் ஒரு படைப்பா...? எதிர்முகாமில் கால்விரித்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவனுக்கு அது தேவையற்றதா...? படைப்பில் தீயது என்று இருக்குமா...? படைத்தலுக்கும் உருவாக்குதலுக்கும் வேறுபாடு என்ன...? அல்லது என்னுடைய முரண்பாடே ஒரு அபத்தமா...? மேற்கண்ட அறிவிக்கை மீதான இதுபோன்ற கேள்விகளை உள்ளடக்கிய விவாதம் என் மனதில் களமாடினாலும், "கடும் பனியைக் கரைக்கின்ற இளஞ்சூட்டுச் சுக வெயிலாய்" சில படைப்புகள் நம்மிடம் வந்து சேரும்போது, அது நமக்கே நமக்கானதாய்த் தோன்றி சிலாகிக்கச் செய்கிறது. உண்மையின் தரிசனத்தைக் காட்டுகின்ற ஒரு படைப்பு நமக்கானதன்றி வேறென்னவாக இருக்க முடியும்...! பாலகுமார் விஜயராமனின் சமீபத்திய உலகச் சிறுகதைகள் தொகுப்பான "கடவுளின் பறவைகள்" படித்து முடித்தபோது இந்த உணர்வே எனக்கேற்பட்டது.
நாம் கேள்விப்பட்டிருக்கின்ற உலகின் பல பகுதி மொழிகளிலிருந்து ஆங்கிலப்படுத்தப்பட்ட கதைகளில் ஒரு பத்துக் கதைகளைத் தமிழ்ப்படுத்தித் தந்திருக்கும் பாலகுமார் அம்மூல மொழிகளின் நுண் ஓசைகளையும் உணர்த்தியிருப்பதன் வாயிலாக தன்னுடைய படைப்பாற்றலை நிரூபித்திருக்கிறார். ஆயிரக்கணக்கான புழங்கு மொழிகளில் படைக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான கதைகளில் "தேர்வு" என்பதே மிக முக்கியம். நாம் சந்தித்துக்கொண்டிருக்கின்ற சமகால அரசியல் சூழல், நம்முடைய பண்பாடு கலாச்சாரத் தேய்வு மற்றும் அதன்பாலான மீட்டருவாக்கம், ஒப்பீட்டளவில் உலக அளவிலான கதைகளின் தரம் பற்றி சிந்திக்கும்போது கடலளவை மிஞ்சுகின்ற மொழிவளம் இருந்தும் தமிழகக் கதையோட்டத்தின் பின்னடைவு பற்றி சொல்வதைவிட எவ்வளவு முன்னேற வேண்டியிருக்கிறது என்ற பார்வை ஆகியவற்றைப் பார்க்கும்போது, பிறமொழிக் கதைகளின் தேர்வின் பொருட்டான தேடல் மிகப்பெரியது. அப்பேற்பட்ட அசாத்தியத் தேடலில் மேற்கண்ட அனைத்தையும் பாலகுமார் கவனத்தில் கொண்டுள்ளார் என்பதோடு வெற்றியடைந்திருக்கிறார் என்பதும் போற்றுதலுக்குரியது.
"காட்டுமிராண்டிகள்" என்ற ஹங்கேரிக் கதை (சிக்மண்ட் மோரிட்ஸ் - ஆங்கிலத்தில் க்யுலா குல்யஸ்) ஆடுமேய்ப்பவர்களின் வழியாக மனிதனின் சுயநலம் எத்தனை அற்பமானது, அந்த அற்பத்தை அடைய எத்தனை பெரிய காரியத்தையும் செய்யத்தூண்டுகிறது, இறுதியில் எத்தகைய சுயநலவாதி என்றாலும் தன்னுடைய மனசாட்சிக்கு மத்தியில் அவன் எவ்வாறு சுக்குநூறாகக் கிழித்தெறியப்படுகிறான் என்பதை வெகு அழகாகச் சித்தரிக்கிறது. கதையில் வருகின்ற ஒரு இடையன், தான் வைத்திருக்கின்ற இடைவாரினைக் கொடுக்காததால், சக இடையர்கள் இருவரால் கொல்லப்படுகின்றான். அதைத் தடுக்க வருகின்ற அவ்விடையனின் மகனும் கொல்லப்படுகின்றான். பின்னால் அதைக் கண்டுகொள்ளும் இடையனின் மனைவி இறந்துபோன தன்னுடைய மகனின் தலையில் இருந்த காயத்தைக் காணும்போது, "காய்ந்த விழிகளோடு அந்தத்தாய் அதனை வெறித்துப் பார்த்தாள்" என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த இடத்தில்தான் இலக்கியம் பிரவாகமெடுத்து நம்மை மூழ்கச் செய்கிறது.
வாழ்க்கை தருகின்ற துன்பமோ துயரமோ, இன்பமோ ஆரவாரமோ எதுவானாலும் அதை அதன்போக்கில் எதிர்கொள்ளவேண்டும் என்கிற அர்த்தத்தில், அதன்போக்கிலான ஒரு முடிவுறாத வாழ்க்கையைச் சொல்லும் கதைதான் மொஸாபிக் கதையான (மிளாகௌட்டோ) "கடவுளின் பறவைகள்". "நதியின் ஏழை மீனவன், கடவுளின் தூதுவர்களுக்கான பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருக்கிறான். மனிதர்கள் இன்னும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடமை அவனுக்கு இருக்கிறது. ஆம், இத்தகைய நற்குணங்கள், செழிப்பாக இருக்கும் நேரங்களில் அளவிடப்படுவதில்லை. மாறாக, மனிதர்களின் உடல்களில் பசி நாட்டியமாடும்பொழுதுதான் கணக்கிடப்படுகின்றன" இவ்வாறு குறிப்பிடப்படும் இக்கதை நாயகன், இறுதியில் அவ்வூர் மனிதர்கள் செய்துவிட்ட பாவங்களை மன்னிக்குமாறு இறைவனை மன்றாடுகிறான். பின்னர், மரணத்தைத் தழுவுகின்றான். அவனின் மரணத்தை, "எர்னெஸ்டோ நதியின் நீரோட்டத்தைக் கட்டியணைத்தபடிக் கிடந்ததை ஊரார்கள் பார்த்தார்கள்" என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
புகழ்பெற்ற எழுத்தாளர் இத்தாலியின் இடாலோ கால்வினோவின் "கருப்பு ஆடு" என்ற கதையும் இதிலுண்டு. எல்னெஸ்ட் ஹெமிங்வே எழுதிய "இந்திய முகாம்" என்ற கதை மிகுந்த கவனங்கொள்ளத்தக்கது. விளிம்புநிலை மக்களின் வாழ்வையும், அம்மக்களுக்கிடையேயான நிபந்தனையற்ற, கண்மூடித்தனமான பற்றுபாசம் மற்றும் அறியாமையைச் சொல்லும் இக்கதையில், வேறுநாட்டைச் சேர்ந்த மத்தியதர வர்க்க வாரிசு ஒருவன் கடைசியில் "தான் எப்பொழுதும் மரணிக்கப் போவதில்லை என்று தீர்க்கமாக நம்பினான்" என்று அவன் சிந்திப்பதைப் போல முடிக்கிறார். ஒரு அமெரிக்க எழுத்தாளரான ஹெமிங்வே இக்கதைக்கு இந்திய முகாம் என்று பெயர் வைத்ததன் அரசியல் குறித்து விவாதிக்க நிறைய உண்டு.
சமீபத்தில் டி.தருமராஜ் எழுதிய "ஃபூக்கோவின் மீது பாய்வதெப்படி?" என்ற கட்டுரை வாசித்தேன். மதுரையில் நடந்த ஃபுக்கோ குறித்த கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய உரை பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார். முதலில் தன்னுடைய உரையின் சாரம்சம் கட்டுரையில் இருக்கும் என்று நம்பியே நான் வாசிக்கத் தொடங்கினேன். ஆனால் கட்டுரை முழுவதுமே கருத்தரங்கம் எவ்வாறு நடந்தது, எத்தனைபேர் கலந்துகொண்டார்கள், அவருடைய உரையின் போக்கு எவ்வாறு இருந்தது போன்ற விவரங்களைச் சொல்லியவாறு செல்ல எனக்கோ சலிப்பு. ஆனால் இறுதியாக " இந்த இரு நாள் கருத்தரங்கிலும் எனது உரைகள் இந்த அடிப்படையிலேயே அமைந்திருந்தன. நான் கொஞ்சம் கொஞ்சமாக ஃபூக்கோ என்ற சித்திரத்தை வரைய வரைய எனது இன்னொரு கை அதை அழித்த படியே வந்து கொண்டிருந்தது. இறுதியில் நான் சித்திரத்தை வரைந்தே முடித்து விட்டேன். ஆனால், அது வெற்றிகரமாக அழிக்கவும் பட்டிருந்தது" என்று முத்தாய்ப்பாய் முடித்திருந்தார். இது நமக்கு ஃபூக்கோ பற்றிய தேடல் மீதான பூதாகரமான ஆவலைத் தூண்டுகிறதன்றோ...? அதுபோலவே உலகச் சிறுகதைகள் குறித்து நாம் பெறப்படுகின்ற துண்டு துணுக்குகளே அக்கடலுக்குள் மூழ்கி முத்தெடுக்க முனைய வைக்கின்றன. தன்னுடைய சிறு தொகுப்பின் மூலமாக அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் பாலகுமார்.
தன்னுடைய மேதாவித்தனத்தைக் காண்பிக்க மாத்திரமே பலரும் எழுதிக்கொண்டிருக்கின்ற இச்சூழலில், இருக்கின்ற இடம் தெரியாமல் கனன்றுகொண்டிருக்கின்ற நெருப்புக் குழம்புபோல் இலக்கியத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற பாலகுமாரின் செயல்பாடு உள்ளபடியே பாராட்டுக்குரியது. இந்நெருப்புக் குழம்பு வெடித்துச் சிதறும்போது மலர்களாய் மாறி மக்களைத் தாலாட்டும் வல்லமையாக்கும் என்ற நம்பிக்கையை அவரின் இலக்கியத்திறன் நமக்குக் கொடுக்கும். அர்ஷியாவின் தாய்மையின் வருடல்களோடு வந்திருக்கும் இந்த "கடவுளின் பறவைகள்" தொகுப்பு பல பதிப்புகள் கண்டு வெற்றி கண்டால் அது தமிழிலக்கியச் சூழலின் பாக்கியம்.
வாழ்த்துகள் பாலகுமார் விஜயராமன்.