உலகமயமாக்கல் என்பது தற்போது சமூகத்தின் எல்லாத் தளங்களிலும் பலவித எதிர்மறை மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சமூகத்தில் நிகழும் எந்த சிறுமாற்றமும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவது பெண்களுக்கே. இந்நூலில் உலகமயமாக்கல் சூழலினால் பெண்கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மகளிரியல் துறை பேராசிரியர் முனைவர்.சா.சுபா இந்நூலில் விவரித்துள்ளார்.
உலகமயமாக்கலுக்கும் கல்விக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு. அரசுப்பள்ளிக்கும் தனியார் ஆங்கிலப் பள்ளிக்கும் இடையேயான வேறுபாடு மிக அதிகமாக விரிவடைந்து கூர்மையடைந்தது 1990க்குப் பிறகான இக்காலகட்டத்தில்தான். நடுத்தர வர்க்கம் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை நோக்கிய மிகப்பெரிய படையெடுப்பை நிகழ்த்தியதும் இக்காலகட்டத்தில்தான். தனியார் ஆங்கிலப் பள்ளியை நோக்கிய படையெடுப்பிற்கு மிக முக்கியக் காரணம் அங்கு பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கிலம் இருப்பதேயாகும். இதைப்பற்றி பேரா.கிருஷ்ணகுமார் தனது முரண்பாடுகளிலிருந்து கற்றல் என்னும் நூலில் “ தனியார் ஆங்கிலப் பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவு, அவர்களை மேற்கு நாடுகளோடும் குறிப்பாக அமெரிக்காவோடு மிக இணக்கமான பண்பாட்டு உணர்வை ஏற்படுத்துகிறது. அதன் பொருட்டு அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் உலகப் பொருளாதார மயத்திலும் இணக்கமான உணர்வை ஏற்படுத்திவிடுகிறது. ஆங்கிலம் மின்னணுத் தொடர்பியலில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக விளங்குவதால் சமூகத்தில் சிறந்த பொருளீட்டும் வாய்ப்பாக ஆங்கில மொழியறிவு பயன்படுகிறது. அதன் மூலம் பயனடைவோர் ‘உலகே ஒரு கிராமம்’ எனும் சித்தரிப்பில் மிக ஆவலாக உள்ளனர்” குறிப்பிடுகிறார்.
இந்த உலகமயமாக்கலோடு தொடர்புடைய பெண்கல்வியை என் அனுபவத்தினால் நான் மிக எளிதாகப் புரிந்து கொண்டேன். நான் வேலை பார்க்கும் பள்ளி ஒரு கிராமப்புற அரசுப்பள்ளி. இங்கு ஒரே குடும்பத்திலள்ள பெண்குழந்தைகளெல்லாம் நமது பள்ளிக்கு படிக்க வர, அக்குடும்பத்தின் ஆண் குழந்தைகள் தனியார் ஆங்கிலப் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். இதைவிட என்ன பெண்கல்விக்கும் ஆண்கல்விக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கிச் சொல்ல… இத்தகைய சூழலில் பேராசிரியர் சா.சுபாவின் இந்த “உலகமயமாக்கலும் பெண் கல்வியும்” என்ற நூலானது இத்தளத்தில் மிகக் கூர்மையான கருத்துக்களை முன்வைக்கிறது.
இந்த புத்தகத்தின் தொடக்கம் உலகமயமாக்கலின் நோக்கத்தை “உலக நாடுகளை ஒரு கூரையின் கீழ் இணைத்து சந்தைப் பொருளாதாரத்தின் மூலமாக தனியார் மயம், தாராளமயம் என்று பல கொள்கை ரீதியான யுக்திகளைப் பயன்படுத்தி வல்லரசு என்று தங்களைப் பறை சாற்றிக் கொள்ளும் பணக்கார ஏகாதிபத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களைச் சுரண்டுதலேயன்றி வேறொன்றும் அல்ல” என்று கூறுவதோடு தொடங்குகிறது. மேலும் நுகர்வு கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் எதையும் பணம் கொடுத்து வாங்கி விடலாம் என்ற எண்ணத்தை உலகமயமாதல் மக்களிடையே மேலோங்கச் செய்துள்ளதென்றும், சுதந்திரம், சனநாயகம், மற்றும் மனித உரிமை போன்ற சமூக மாண்புகள் உலகமயமாதல் என்ற ஒற்றைச் சொல்லால் சந்தையின் நலன் கருதி தூக்கியெறியப்படுகின்றன என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். மேலும்சுரண்டலை பிரதான குணாம்சமாகக் கொண்ட உலகமயமாதல் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும், விவசாயிகளை நிலமற்றவர்களாகவும், கைவினைஞர்களை தொழிலற்றவர்களாகவும் அழிவை நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதையும் பதிவு செய்கிறார்.
இப்படிப்பட்ட சூழலிலேயே உலகமயமாக்கல் இந்தியப் பெண்களின் கல்வியில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைப் பற்றி இந்நூல் அலசுகிறது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் பாலின சமத்துவம், சமநீதி மற்றும் சமன்நிலை என்று பார்க்கும்போது பெண்கள் இன்றளவும் கல்வி, சுகாதாரம், அரசியல் போன்ற அடிப்படை உரிமைகளுக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் எதிராக போராட வேண்டிய நிலையிலேயே உள்ளதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார். வரலாறு நெடுகிலும் எல்லாக் கலாச்சாரங்களிலுமே பெண்களின் உணர்வுகளும் உரிமைகளும் ஆணாதிக்க சமூகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அங்கீகரிக்கப்படுவதையும், சாதி அல்லது இனத்தின் தூய்மையையும் குடும்பம் என்ற அமைப்பின் கௌரவத்தைத் தாங்கிப் பிடிப்பவர்களாகவே பெண்களை இச்சமூகம் வளர்த்தெடுப்பதையும் குறிப்பிடுகிறார். மேலும் மீண்டும் மீண்டும் பெண்களின் உடலை மையப்படுத்திய அரசியலை மையப்படுத்துவதன் மூலமாக பெண்களை அதிகாரம் அற்றவர்களாகவும், ஆளுகைக்கு உட்பட்டவர்களாகவும் வைத்துள்ளதோடு அதைப் பண்பாடு, கலாச்சாரம், சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களின் மூலமாக நம்ப வைத்துள்ளதையும் பதிவு செய்கிறார். பெண்களுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து பெண்கள் மேம்பாட்டிற்கான வளர்ச்சித் திட்டங்களும், யுக்திகளும் கூட ஆணாதிக்கச் சமூக நலன்களுக்கு கேடில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட சமூக விதிகளை மீறாமல் பார்த்துக் கொள்ளும்படியான வகையிலேயே உருவாக்கப்படும் சூழ்ச்சிகளையும் அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர்.
இவ்வாறு சமூகப் பாலின பாகுபாடுகளின் காரணமாக சமூக மற்றும் குடும்ப வளங்களின் மீதான பெண்களின் கட்டுப்பாடு, பயன்பாடு, பங்கேற்பு மற்றும் முடிவெடுத்தல் போன்றவைகள் தொடர்பான உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் உலகமயமாதல் பெண்களின் நிலைமையை மேலும் நலிவடையச் செய்துள்ளது என்னும் நூலாசிரியர், இச்சூழலில் வளங்கள் மற்றும் சொத்துரிமையற்ற தொழில்நுட்பங்களை கற்றறியாத பெண்களின் மீது உலகமயமாதல் வறுமையின் சுமையை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்.
பொதுவாகவே இன்றைய சூழலில் கல்வி என்பதன் நோக்கமாகிய , “மனிதகுல மேம்பாட்டிற்கான அறிவு உற்பத்திக்கும், சமூக வளர்ச்சிக்கான தேவை மற்றும் தனிமனித தற்சார்பு பெறுவது” என்ற நோக்கத்திலிருந்து விலகி கல்வி என்பது சந்தையில் விற்கப்படும் பொருளாகப் பார்க்கப் படுகிறது. கையில் காசுள்ளவர்கள் மட்டுமே கல்வியைப் பெற முடியும் என்பதும், தரமான கல்வியை தனியார் பள்ளிகளால் மட்டுமே தர இயலும் என்ற நிலைக்கு உலகமயமாதலும், தனியார்மயமாதலும் பள்ளிக்கல்வியை நிறுத்தியுள்ளதை குறிப்பிடுகிறார்.
இவ்வாறு பள்ளிக்கல்வியில் இத்தனை பிரச்சினை இருக்க, இதில் ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகளின் பாடு சொல்லி மாளாதது. ஆண்குழந்தைகளோடு ஒப்பிடும்போது பெண் குழந்தைகள் பள்ளிக் கல்வியை இறுதிவரை தொடர்வது சவாலாக உள்ளது. திருமணம் என்ற ஒரு நிகழ்வை கருத்தில் கொண்டே பெண்கல்விக்கான முக்கியத்துவம் நிர்ணயிக்கப்படுகிறது. கிராமப் புறங்களில் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும்போது குழந்தைகளைப் பராமரிப்பது, வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளர்களாக வேலைக்குச் செல்வது, குழந்தைத் திருமணம், புலம் பெயர்தல், பருவமெய்தல், அருகாமையில் பள்ளி இல்லாதது போன்ற பல காரணங்களுக்காக பெண் குழந்தைகளின் பள்ளிக்கல்வி இடை நிறுத்தப்படுகிறது. மேற்கூறியதுபோல் எவ்வித பொறுப்புகளோ அல்லது சவால்களோ ஆண் மாணவர்களுக்கு பெரும்பாலும் இருப்பதில்லை. இதனால் அவர்களால் பள்ளிப்படிப்பை இறுதிவரை நிறைவு செய்ய முடிகிறது என பெண்குழந்தைகளின் கல்வி இடைநிற்றலுக்கான காரணங்களை பட்டியலிடுகிறார். இத்தோடு சுகாதாரமான கழிப்பறை, சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்துவதற்கு வசதியான சேகரிக்கும் கூடை, எரியூட்டி போன்ற தேவைகளை உள்ளடக்கிய பெண்கள் நேய கழிப்பறை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும், பெண் பிள்ளைகளின் கல்விக்கும் இடையேயுள்ள நெருக்கமான தொடர்பை வலியுறுத்துகிறார். இதைத்தாண்டி பெண் மாணவிகளுக்கென்றே உள்ள பிரத்யேக பிரச்சினைகளான சகமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மூலமாக ஏற்படும் கேலி கிண்டல் மற்றும் பாலியல் சீண்டல்களும் தொந்தரவுகளும் பெண் குழந்தைகளின் கல்விக்கு மிகுந்த இடையூறாக இருப்பதையும் இதில் பல பிரச்சினைகள் உயர்கல்வியிலும் தொடர்வதை நூலாசிரியர் பதிவு செய்கிறார். மேலும் அறிவு உற்பத்தி , ஆராய்ச்சி இவற்றின் மூலம் சமூகத்தின் வளர்ச்சிக்கு துணையாக இருக்க வேண்டிய உயர்கல்வி இன்று அரசியல்வாதிகள் மற்றும் கல்வி வியாபாரிகளுடன் ஒன்று சேர்ந்து ஊழல் மற்றும் முறைகேடுகளின் இருப்பிடமாக மாறி இருப்பதை வருத்தமுடன் பதிவு செய்கிறார்.
இவ்வாறு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்விவரை பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் முன்னோடிப் பிரச்சினை பெண் என்பதே என்னும் நூலாசிரியர் பெண்களின் பிரச்சினைகள் மனிதவள மேம்பாட்டின் மையப்பிரச்சினையாக பார்க்கப்படும் சூழல்கள் உருவாக்கப்படுவதன் மூலமே உயர்கல்வி மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பை முழுமைப்படுத்துவது சாத்தியமாகும் என்று வழி சொல்லுகிறார்.
30 பக்கங்களே ஆன சிறுநூல்தான். ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. கடைசியில் மூன்று அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. ஒன்று இந்திய உயர்கல்வியில் 2010—2011 புள்ளிவிபரப்படி அறிவியல், கலை, மருத்துவம், பொறியியல் போன்ற துறைகளில் சேர்ந்துள்ள பெண்களின் சதவீதம் பற்றியதாகும். இதில் அறிவியலில் 19.14%, பொறியியலில் 11.36% என பெண்களின் பங்கேற்பு அதிர்ச்சியளிக்கிறது. ஆனால் கலைப்புலத்தில் 41.21% சதவீத பங்கேற்பு உள்ளது. இரண்டாவது அட்டவணை 1997-98 முதல் 2010-2011 வரையான ஆண்டுகளில் பெண்கள் கல்லூரிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. மூன்றாவது அட்டவணை 2010-2011 கல்வியாண்டில் இந்தியா முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் சேர்ந்த ஆண் பெண் சதவீதம் தரப்பட்டுள்ளது. இந்த அட்டவணைகள் உயர்கல்வியில் ஒட்டுமொத்தமான பெண்களின் பங்கேற்பைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த உதவியாயிருககும். பெண் கல்வியில் அக்கறை கொண்டோரிடம் இச்சிறுநூல் நிச்சயம் இருக்கட்டும்.