‘உலகப் புகழ்பெற்ற மூக்கு’ என்னும் இந்நூலானது பஷீரின் தேர்ந்தெடுக்கப்பட்ட 16 சிறுகதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு நூலாகும். இச்சிறுகதை களுக்குள் அடங்கும் ‘உலகப் புகழ்பெற்ற மூக்கு’ என்ற சிறுகதையின் தலைப்பையே நூலின் தலைப்பாகவும் மொழிபெயர்ப்பு ஆசிரியர் வைத்துள்ளார். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்துமே பஷீரின் சொந்த வாழ்க்கை நிகழ்வுகளையும், பயண அனுபவங்களையும் கூறுவதாக அமைந்துள்ளன. எம்.டி.வாசுதேவன் நாயர் மற்றும் எம்.என்.விஜயன் ஆகியோரது கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள், பஷீர் என்னும் கலைஞன்/எழுத்தாளன் தன்னுடைய வாழ்க்கைப் பாதைகளில் எங்கோ ஓரிடத்தில் சேர்த்து வைத்திருந்த அல்லது மறக்க நினைத்த அல்லது உணவளித்துப் பசியாற்றிய நிகழ்வுகளின் நினைவுக் குவியல்களே. தன்னுடைய சொந்த வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியும், துன்பமுமான நிகழ்வுகளைக் கற்பனைக்கு இடமின்றி யதார்த்தமான முறையில் வெளிப்படுத்தியுள்ளார்.
“இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத வேண்டும்…ஆனால் என் அறையில் இருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. நிறைய எழுத வேண்டியதுமிருக்கிறது. ஆகவே தூக்கப்பாயிலிருந்து எழுந்துவந்து இந்த நதியோரத்தின் விளக்குத் தூணில் சாய்ந்தமா்ந்து சம்பவங்களின் சூடு ஆறிப் போவதற்குள் எழுதத் தொடங்கினேன்” (பக்.38 – 39) என்று ‘ஜென்ம தினம்’ என்னும் சிறுகதையில் குறிப்பிட்டுள்ள பஷீர், தன்னுடைய பிறந்த நாளன்று தனக்கு ஒருவேளைகூட உணவு கிடைக்காத நிலையில் ‘மாத்யூ’வின் சமையலறையில் இருந்த உணவினைத் திருடி உண்டதையும் (ப.54) குறிப்பிட்டுள்ளார்.
வைக்கம் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காகக் காந்தி வந்தபோது, வகுப்பைப் புறக்கணித்து விட்டு அவரைக் காண்பதற்காகச் சென்றதையும், காந்தியின் வலது தோளைத் தொட்டதையும் கூறும் பஷீர், ‘சத்தியாக்கிரக ஆசிரமத்திற்குப் போகக் கூடாது’ என்ற தலைமை யாசிரியரின் கட்டளையை மீறியதற்காகத் தான் அடிவாங்கியதையும் ‘அம்மா’ என்ற சிறுகதையில் குறிப்பிட்டுள்ளார். எந்தக் கேள்விக்கும் எளிதாகப் பதில் கூற முடிந்த தன்னால் அம்மா கேட்ட, ‘டேய், இந்தக் காந்தி நம்ம பட்டினியைப் போக்குவாரா?’ என்ற கேள்விக்குத் தான் தடுமாறியதாகவும் குறிப்பிடுகிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய பஷீர், கோழிக்கோட்டிற்குச் சென்று சுதந்திரத்திற்கான போராட்டத்தில் கலந்து கொண்டதையும், தன்னுடைய முதல் ‘போலீஸ் ஸ்டேசன்’ அனுபவத்தையும், தான் அனுபவித்த வலிகளையும் கூறும் பஷீர், இந்தியர்களின் சுதந்திரத்திற்காகப் பாடுபடும் இந்திய மக்களை ஆங்கில அரசாங்கத்தின் கீழ் வேலை செய்யும் இந்தியர்களே மிகவும் கொடூரமான முறையில் நடத்தினார்கள் (ப.77) என்பதையும் பதிவு செய்துள்ளார்.
சூழ்நிலைகள் ஒரு பெண்ணை எவ்வாறு விபச்சார வாழ்க்கைக்குள் தள்ளுகின்றன என்பதை ‘மூடர்களின் சொர்க்கம்’ என்னும் சிறுகதையில் வெளிப்படுத்திய பஷீர், வெறும் ஒரு ரோமத்தைத் ‘திவ்ய சக்தி’ உடையதாகக் கருதி அதன் பெயரில் மக்கள் செய்யும் பிரார்த்தனை களையும் வழிபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் பற்றிப் ‘புனித ரோமம்’ என்னும் சிறுகதையில் கூறிச்செல்கிறார்.
‘இஸ்லாம் எளிய மதம்’ என்று குறிப்பிடும் பஷீர், அதே மதத்தில் உள்ள குறைகளை வெளிப்படுத்த தயங்கிய தில்லை. “இஸ்லாத்தில் புரோகிதர்களுக்கு இடமில்லை என்று சொல்லப்படுவது அதன் கிரந்தங்களில் மட்டுந்தான்” என்று இஸ்லாத்தின் நடைமுறைகளையும் கேள்விக்கு உட்படுத்துகிறார்.
பஷீரின் மிகவும் பிரசித்தி பெற்ற மற்றும் நகைச்சுவையான ‘பூவன்பழம்’ என்னும் சிறுகதையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. ஆரஞ்சு பழம் எவ்வாறு பூவன்பழமாக மாறியது என்பதே இக்கதை.
தனது வாழ்க்கையில் மனிதர்களுக்குக் கொடுத்த அதே அளவு முக்கியத்துவத்தை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கொடுத்திருந்தார் பஷீர். ‘பூமியின் மீது மனிதர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதேயளவு உரிமை விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இருக்கிறது’ என்று ‘பூமியின் வாரிசுதாரர்கள்’ என்னும் சிறுகதையில் வாதிடுகின்றார்.
கடவுள் நம்பிக்கை என்னும் திரைமறைவில் மூடநம்பிக்கைகளை மக்களிடையே வளர்த்து அதைக்கொண்டு வாழ்க்கை நடத்திப் பெரும் செல்வந்தர்களாகும் மனிதர்களையும், அரசியல் என்னும் போர்வையில் நீதி, நேர்மை இவற்றை நிர்மூலமாக்கும் நிகழ்கால அரசியல் நடைமுறைகளையும் கேலிக்கு உட்படுத்துக்கிறார் பஷீர்.
சுய வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே ஒரு படைப்பாளிக்குத் தீவிரமான கலைத்தன்மையை உருவாக்க இயலும். அவ்வகையில் பஷீர் தன்னை முன்னிறுத்தியே படைப்புக்களை அடையாளப்படுத்து கிறார். “வாசகர்களை விஷயங்களின் எந்த இடைவெளிக்குள்ளும் கூட்டிச் செல்ல முடிந்த மாப்பசானின், மூச்சடைக்க வைக்கும் சூழ்நிலைகளைச் சிருஷ்டிக்க முடிந்த செக்காவின் விசேஷ அம்சங்கள் பஷீரிடம் கூடிக் கலந்திருக்கின்றன” என, தன் எண்ணத்தைப் பதிவு செய்திருகிறார் எம்.என்.விஜயன்.