உலக இலக்கியப் பெரும் ஆளுமைகள் பற்றித் தமிழ்ச் சூழலில் ஆக்கபூர்வமாக அறிமுகப்படுத்தும் பெரும் பணியில் பல காலமாக ஈடுபட்டு வருபவர் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். அண்மையில் அவர் நிகழ்த்திய இலக்கியப் பேராசான் டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், ஹோமர், ஹெமிங்வே, பாஷோ, அரேபிய இரவுகள், தஸ்தாயெவ்ஸ்கி ஆகியோர் பற்றிய உரைகள் மிகவும் உயர் தரம் கொண்டவை. உரைகளை அடர்த்தியாக, வீண்சொல் இல்லாத நேர்த் தன்மையுடன் கூடிய வெளிப்பாட்டுடன் அவரால் அமைத்துக்கொள்ள முடிகிறது. 325 பக்கம் உள்ள இந்த நூலில், எந்தப் பக்கத்திலும் எந்தப் பாராவும் எதேனும் ஒரு செய்தியை வாசகர்களுக்குச் சொல்லத் தவறவே இல்லை. இது, எஸ்.ராமகிருஷ்ணன் கேட்பவர் - வாசகர் மேல் வைத்திருக்கும் ஈரமான மரியாதையைக் காட்டுகிறது.
முதல் கட்டுரை டால்ஸ்டாய் பற்றியதுதான். வேறு யாராகவும் இருக்க முடியாது. கல்லூரி மாணவராக இருந்தபோதே எஸ்.ரா (எஸ். ராமகிருஷ்ணன்) டால்ஸ்டாயின் சக இருதயர் ஆகிஇருக்கிறார்.
முதல் கட்டுரையில் எஸ்.ரா இப்படி எழுதுகிறார்: டால்ஸ்டாய் என்ற கதை சொல்லியின் ஆளுமை பன்முகப்பட்டது. சில வேளைகளில் அது ஒரு போர் வீரனைப்போல கலக்கமற்ற வாழ்வை விவரிக்கிறது. சில வேளைகளில் அது ஒரு ஞானியைப் போல், வாழ்வு இவ்வளவுதான் என்று அடையாளப்படுத்துகிறது. இன்னும், சில தருணங்களில் அது ஜிப்சியைப் போல சாகசமே வாழ்க்கை என்கிறது.
இளமையில் சாகசத்தைத் துரத்தியலைந்த டால்ஸ்டாய்க்கு சூதாட்டத்தில் இருந்த மிதமிஞ்சிய ஆர்வம் ஒரு நாளில் 18 மணி நேரம் சூதாட வைத்திருக்கிறது. அதோடு குடி. மனச்சோர்வில் இருந்து விடுபட விலைப் பெண்கள். கடனாளி ஆனார். வேறு வழியில்லை. பூர்வீக வீட்டை விற்பது என்ற முடிவுக்கு வந்தார். டால்ஸ்டாயின் அந்தப் பூர்வீக வீடு 36 அறைகள் கொண்டது.
டால்ஸ்டாயின் மகன் இலியா, ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறான். அந்தப் பெண்ணின் குடும்பத்தை டால்ஸ்டாய்க்குப் பிடிக்கவில்லை. மகனோடு நடைப்பயிற்சிக்குப் புறப்படுகிறார். ‘ ‘அந்தப் பெண் மிக நல்ல பெண்! ’’ என்கிறான் மகன்.
‘‘உடல் இன்பத்தை அனுபவிப்பதற்காக இவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாய் என்றால் அது உன்னை ஒருநாள் வேதனைக்கொள்ளச் செய்துவிடும்!’’ என்கிறார் டால்ஸ்டாய். சில நாட்களுக்குப் பிறகு இரவில் டால்ஸ்டாய் தனியே அறையில் இருக்கிறார்.
‘‘நீ இதுவரை எந்தப் பெண்ணோடாவது உடல் உறவுகொண்டிருக்கிறாயா?’’ என்ற தந்தையிடம் ‘‘இல்லை’’ என்கிறான் மகன். ‘‘ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்வதற்காக ஒரு ஆண் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இலியா, உன் நிலைமை எனக்குப் புரிகிறது’’ என்று சொல்லியபடியே கண்ணீர்விடத் தொடங்குகிறார். மகன் தன்னை மீறி அழுகிறான். டால்ஸ்டாய் எழுந்துவந்து ஒரு சிறுவனை அணைத்துக் கொள்வதைப் போல மகன் இலியாவை அணைத்துக் கொள்கிறார்.
டால்ஸ்டாய் தன் கதைகளை டிக்கன்ஸுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் அடைய விரும்பிய இடம் சார்லஸ் டிக்கென்ஸுக்கு எழுத்தில் கிடைத்த கவுரவம் மற்றும் உயர் இடம். அவர் தன் காலத்தில் வாழ்ந்த எந்த எழுத்தாளரிடமும் சண்டையிட்டது இல்லை. துவேஷத்துடன் எதையும் எழுதியதில்லை. மிகவும் அரவணைப்போடு தான் நடந்துகொண்டிருக்கிறார். துர்க னேவ் தன் மகனைப் படிக்கவைக்க மறுக்கிறார் என்பதற்காகவே, அவரோடு 14 ஆண்டுகள் பேசாமல் இருந்திருக்கிறார். செகாவும், கார்க்கியும் அவர் மேத மையை மெச்சுகிறார்கள்.
டால்ஸ்டாயின் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம், அவர் ‘டுகோபர்ஸ்’ இயக்கத்துக்காக அவர்களின் செலவினங்களுக்காக ஒரு நாவலையே புதிதாக எழுதினார். அதுதான் ‘புத்துயிர்ப்பு’. ‘டுகோபர்ஸ்’ மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள் அவர்களின் வாழ்க்கை அறம் பற்றி எஸ்.ரா விரிவாக எழுதியிருக்கிறார். அதன் தன்மை பற்றி ஒரு வரியில் சொன்னால், டால்ஸ்டாய் மூலம் மகாத்மா காந்தி கற்றுக்கொண்டது ‘டுகோபர்ஸ்’ மக்களின் வாழ்க்கை அறங்களைத்தான். ரஷ்யா, அந்த மக்களை நாடு கடத்தியது. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் எழுதி வெளியிட்டு, 17 ஆயிரம் ரூபிள் சம்பாதித்து அந்த மக்களுக்கு உதவினார். இதன் பயனாக மரணத்தைத் தொட்டு மீண்டார் டால்ஸ்டாய்.
ஏதோ ஒரு மனநிலையில் (அதை - துறவு மனநிலை என்கிறார் டால்ஸ்டாயின் நண்பர்) வீட்டைவிட்டுப் புறப்பட்டார் டால்ஸ்டாய். மனைவி சோபியாவுடன் சிற்சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. சோபியா கொடுமைக்காரி இல்லை. கணவரின் எழுத்துக்கு பெரிய உதவிகள் செய்தாள். பயணத்தில் உடல் நலம் அற்று அஸ்தபோவ் ரயில் நிலையத்தில் இறங்கினார். பயணிகள் அறையில் தங்கும் வசதி அளிக்கப்பட்டது. 1910 நவம்பர் 8-ல் அவர் காலமானார்
ஷேக்ஸ்பியர் பற்றிய புதிர்கள், கேள்வி கள் பலவற்றை வளக்கி சரியாக அந்த மேதையிடம் ஆற்றுப்படுத்தும் (எழுத்து) பேச்சு இது. ஷேக்ஸ்பியர் காலத்தில்தான் பள்ளிக்கூடங்களில் கரும்பலகைகள் அறிமுகம் ஆயின. பெரிய உரையாடலை அப்போது மக்களிடம் அது ஏற்படுத்தியது. இதன் காரணமாகப் பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்பட்டனர். ஷேக்ஸ்பியரும் பள்ளிக்குச் சென்றார்.
இசையின் மேல் பெரிய ஆர்வம் அவருக்கு இருந்துள்ளது. 20 வயதில் லண்டனில் ஒரு நாடக நடிகராகத் தன் வாழ்வைத் தொடங்கினார். நாடகங்கள் பெரிய வெற்றி பெற்றன. புகழின் உச்சிக் குச் சென்ற அவர், லண்டனில் பிரம்மாண்டமான மாளிகை வாங்கினார்.
52 ஆண்டுகள் வாழ்ந்த ஷேக்ஸ்பியர், 36 நாடகங்களே எழுதி இருக்கிறார். ஷேக்ஸ்பியர் தனித்துவம் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் இப்படி எழுதுகிறார்: எப்படி ஸ்ட்ராட் போர்டு போன்ற சிறிய ஊரில் வசித்தபடியே கிரேக்க இலக்கியத்தின் அத்தனை முக்கிய ஆசிரியர்களையும் கற்றார்? சோபாக்ளீசின் துன்பவியல் நாடகங்களையும் பிளேட்டோவையும் யாரிடம் இருந்து கற்றார்? ஜெர்மானிய அரசியல் பற்றிய புத்தகங்கள் எப்படிக் கிடைத்தன?
சட்டத்துறை, கப்பற்படை, ராணுவச் செயல்பாடுகள், தாவரங்கள், விலங்குகள் பற்றிய தகவல்களை எவ்வளவு ஆண்டுகள் செலவிட்டுக் கற்றிருப்பார்? பருந்தைப் பழக்கிப் பந்தயந்துக்கு விடுவதில் தொடங்கி... பூ நாகம் எப்படி இருக்கும் என்பதுவரை எப்படி அவரால் நுட்பமாகத் தகவல்களை அறிந்து விவரிக்க முடிந்தது?’’
ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத்’ நாடகத்தை அகிரா குரசோவா படமாக்கிய விதம், ஒரு மேதை இன்னோரு மேதையை அணுகிய விதம், எந்தப் புள்ளியில் அவர்கள் இணைந்தார்கள் என்பது போன்ற அரிய தருணங்களைப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரை, பேச்சு இரண்டும் எப்போதும் இலக்கியத் தன்மையோடும், இலக்கியத் தரத்தோடுமே இருக்கும். கதைகள் படைப்பது வேறுவகை அவஸ்தை என்றாலும், அவர் படைப்புகளில் மிச்சம் இல்லாமல் ராமகிருஷ்ணன் இருப்பார். படைப்புகளின் அத்தனை சாதனைகளிலும் படைப்புகள் பற்றி அவர் விளக்கும் பல்வேறு விஷயங்கள் மிக முக்கியமானவை.
ஹெமிங்வே பற்றிய ஒரு கட்டுரை, ‘உலக இலக்கியப் பேருரைகள்’ என்ற இந்தத் தொகுப்பு நூலில் இடம்பெற்றிருக்கிறது. ஹெமிங்வேயைப் பூரணமாக அறிமுகப்படுத்தும் படைப்பு இது. வாழ்நாள் முழுக்க தனிமைவாசியாக இருந்த அந்த எழுத்தாளரைப் பற்றி இப்படி எழுதுகிறார் எஸ்.ரா:
தனிமைதான் எழுத்தாளனின் நிரந்தரத் துணை. தனிமையை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கே எழுத்து பயன்படுகிறது. தனிமை என்பது தீராத ஒரு அகநிலை. தனிமை மிக முக்கியமானது. ஆறு, மலை, நிலவு என யாவும் தனிமை கொண்டிருக்கின்றன. இலக்கிய முன்னோடிகளைத் தாண்டி ஒரு புதிய கதையை எழுதுவது எழுத்தாளன் தனித்து மேற்கொள்ள வேண்டிய சவால். இதற்கு யாருமே அவனுக்கு உதவி செய்ய முடியாது. எழுதும் கணத்தில் அடையும் சந்தோஷம் மட்டுமே அவனது உயர்ந்த பரிசு.
வில்லியம் ஃபாக்னர் அறிவாளிகளுக்கான நாவலாசிரியர் என்றும் ஹெமிங்வே வெகு மக்களுக்கான நாவலாசிரியர் என்றும் விமர்சகர்கள் வகை பிரித்தார்கள். பரந்த வாசக கவனத்தைப் பெற்றார் அவர். ஹெமிங்வே கூற்று இது : ‘‘நான் எந்த அனுபவத்தையும் பெறுவதற்கு தயராக இருந்தேன். கதைகள் என்னை எழுதும்படியாகத் தூண்டின. எழுத்தில் வெற்றி என்பது கதாபாத்திரங்களை உருவாக்குவதில்லை. நிஜமனிதர்கள் போல ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களை எழுத்தில் உருவாக்கிக் காட்டுவதே. என் கதைகளில் அது போன்ற மனிதர்கள்தான் இடம் பெறுகிறார்கள்!’’
பாஷோவின் ஜென் கவிதைகள் பற்றிய, ஜப்பானிய கவிதை வரலாற்று வரிசை பற்றிய சிறப்பான கட்டுரை ஒன்றும் இந்நூலில் இருக்கிறது. வாசகர்கள் அசைபோட இரண்டு கவிதைகள்:
‘நள்ளிரவு அலைகளில்லை
காற்றுமில்லை வெற்றுப் படகு
மிதந்து கொண்டிருக்கிறது நிலவொளியில்!’
’வசந்தம் போகிறது
மீன்கள் அழுகின்றன!’
இப்புத்தகத்தில் ஏழு கட்டுரைகள். உலக இலக்கியத்தை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவருக்கு சரியான திசையைக் காட்டும் கட்டுரைகள். போதனைகள் இல்லை. புரிதல்கள் உண்டு. ஆசிரியராக இல்லை, ஒரு தோழனாக ராமகிருஷ்ணன் பேசுகிறார் வளமான மொழியில்.
எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகளை வெளியிட ‘தேசாந்திரி பதிப்பகம்’ (பிறர் எழுதிய சிறந்த படைப்பும் கூட) தொடங்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணனே ஒரு தேசாந்திரிதான். புதிய பூமி - புதிய முகங்கள் என தேடித் தேடி அலைந்து கொண்டிருப்பவர். பொருத்தமான பெயர்தான். தேசாந்திரி பதிப்பகம், டி-1 கங்கை அபார்ட்மென்ட்ஸ், 110 எண்பது அடி சாலை, சத்யா கார்டன், சாலிகிராமம், சென்னை- 93) என்ற முகவரியில் இருந்து இயங்கும் இதன் வெளியீடுகள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. அழகான தயாரிப்பு. அர்த்தம் பொருந்திய அட்டைப் படங்கள். ராமகிருஷ்ணனைக் கவுரவம் செய்யும் புத்தகங்கள்.
(நன்றி: தி இந்து)