எம்.எஸ்.எஸ். பாண்டியனின் The Image Trap : M.G. Ramachandran in Film and Politics புத்தகம் வெளிவந்தது 1992ம் ஆண்டில். பூ.கொ. சரவணனின் மொழிபெயர்ப்பில் பிம்பச் சிறை என்னும் தலைப்பில் இந்நூல் பிரக்ஞை வெளியீடாகத் தமிழில் வெளிவந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தும், இந்தப் புத்தகத்தை முன்வைத்து ஒரு திறனாய்வு கூட்டம் இன்று நடைபெறுவது முக்கியம் என்று நான் கருதுகிறேன். காரணம் முன்னெப்போதையும்விட பாண்டியனின் புத்தகம் இன்று நமக்கு அதிகம் தேவைப்படுகிறது.
தமிழகம் ஒரு குழப்பமான சூழலில் சிக்கிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அக்கட்சியில் வெடித்த பதவிப் போட்டி இன்னமும் முடிவுக்கு வரவில்லை. பதவியைத் தக்கவைத்துக்கொள்வது ஒன்றே இன்றைய ஆட்சியாளர்களின் ஒரே செயல்திட்டமாக இருக்கிறது. கருணாநிதி உடல்நலக் குறைப்பாட்டால் ஓய்வெடுக்கவேண்டிய சூழல். ஜெயலிதா இறந்துவிட்டார். செல்வாக்குமிக்க ஆளுமை என்று இன்று ஒருவரும் இல்லை. இந்த வெறுமையை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்று ரஜினி, கமல் தொடங்கி பலரும் தங்கள் அவசர அரசியல் பிரவேசத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி மோடி அலையை இங்கே அறிமுகப்படுத்தமுடியுமா என்று சிலர் முயன்றுவருகின்றனர். வழக்கம்போல் லும்பன் குழுக்களும் சமூக விரோத, ஜனநாயக விரோத, மக்கள் விரோத சக்திகளும் இந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி மக்களை பிம்ப மயக்கத்திலிருந்தும் தனிமனித வழிபாட்டு உணர்விலிருந்தும் விடுபடச் செய்யவேண்டிய பணியைச் செய்யவேண்டியவர்கள் இதுவரை அமைதி காத்துவருகிறார்கள். அவர்களைத் தட்டியெழுப்பி அவர்களுடைய கடமையை நினைவுபடுத்த பாண்டியனின் நூல் உதவும் என்று நம்புகிறேன்.
****
எம்ஜிஆரின் அரசியல்அல்லது சினிமா வாழ்க்கை பற்றிய பதிவு அல்ல இந்நூல். எம்ஜிஆர் என்னும் பிம்பம் எப்படி வளர்ந்தது என்பதைப் படிப்படியாக விவரிக்கும் ஒரு நூலும் அல்ல. மாறாக, இந்தப் பிம்ப வளர்ச்சியை நாம் ஏன் புரிந்துகொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு முக்கியமான ஆய்வு இது. நம் கண்முன்னால் உருவான ஒரு நவீன அரசியல் புராணம், எம்ஜிஆர். எப்படி அவர் செல்வாக்குமிக்க ஓர் ஆளுமையாக வளர்ந்தார்? தன்னுடைய திரைப்பட பிம்பத்தை எப்படி வெற்றிகரமாக நிஜத்திலும் அவர் பயன்படுத்திக்கொண்டார்? இந்தப் பிம்பத்தை எப்படி அவர் கவனமாகத் திட்டமிட்டு கட்டமைத்துக்கொண்டார்? ‘எம்ஜிஆரின் பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டு எனக்குக் குழப்பமும் வலியும் ஏற்பட்டது’ என்கிறார் எம்.எஸ்.எஸ். பாண்டியன். தனது குழப்பத்தை விரிவான தளத்தில் விளங்கிக்கொள்ளவும் தன் வலியை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் இந்த ஆய்வை அவர் முன்னெடுத்திருக்கிறார்.
எம்ஜிஆருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வகையான பண்டமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் வாயிலாகவும் அதன்மூலம் வளர்த்தெடுத்து தக்ககைத்துக்கொண்ட பிம்பத்தின் வாயிலாகவும் மக்களுக்கு நம்பிக்கையை அளித்தார். தீமையை என்னால் அழிக்கமுடியும், சமூகச் சீர்கேடுகளைச் சரிசெய்யமுடியும், ஏழைமையை, கல்லாமையை அகற்றமுடியும், சமூகத்தை நல்வழிப்படுத்தமுடியும் என்று அவர் மக்களை நம்பவைத்தார். மக்கள் பதிலுக்கு எம்ஜிஆருக்குத் தங்களுடைய விசுவாசத்தை அவருக்கு அள்ளித்தந்தனர். இந்தப் பண்டமாற்றத்தால் எம்ஜிஆர் அடைந்த நன்மை என்ன? மக்கள் பெற்றது என்ன? தமிழ்நாட்டுக்கு என்ன கிடைத்தது? இந்தக் கேள்விகளை பாண்டியன் தன்னுடைய நூலில் எடுத்துக்கொண்டு விவாதிக்கிறார்.
ஒரு புத்தகம் என்பதைவிட ஒரு நீண்ட கட்டுரை என்று பிம்பச் சிறையை அழைக்கமுடியும். கைவண்டி இழுக்கும் தொழிலாளர்கள், திமுக அதிமுக ரசிகர்கள் தொடங்கி அரசியல், வரலாற்று, சித்தாந்த ஆய்வாளர்கள் வரை பலருடைய கருத்துகளைப் பயன்படுத்தி தன் வாதங்களை எடுத்துவைக்கிறார் பாண்டியன். ஆர்வமுள்ள வாசகர்கள் அடிக்குறிப்புகளில் உள்ள நூல்களையும் கட்டுரைகளையும் தேடிப்பிடித்துப் படித்துக்கொள்ளமுடியும்.வெறுமனே மலைப்பை ஏற்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள பட்டியல் அல்ல இது. முறைப்படி ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்வதென்பது என்ன என்பதைக் கற்பதற்கும் பாண்டியனின் நூலும் அவர் கையாண்ட வழிமுறையும் பேருதவி செய்யும்.
சில அறிமுக நூல்கள் தவிர, தமிழக அரசியல் வரலாறு குறித்த ஆழமான ஆய்வுநூல்கள் தமிழில் இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் பாண்டியனின் நூல் தனித்துவமாகத் தெரிவதற்குக் காரணம் பதிப்புலகில் காணக்கிடைக்கும் இந்த வெறுமைதான். மேலோட்டமான செய்தி அலசல்களையும் அரசியல் அறிக்கைகளையும் பரபரப்பான அக்கப்போர்களையும் தவிர்த்து ஆழமாக உள்ளிறங்கி சென்று அர்த்தங்களைத் தேடியெடுக்கும் முனைப்பு இன்று ஆய்வாளர்களிடம் காணப்படவில்லை. எம்ஜிஆர், கருணாநிதி உள்ளிட்டோரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல்கள் நம்மிடம் எத்தனை இருக்கின்றன என்று நினைக்கிறீர்கள்? தமிழக அரசியல், திராவிட அரசியல் குறித்து துதிபாடல்களும் வசவுகளும் கடந்து, விமரிசனப்பூர்வமாக அணுகி எழுதப்பட்ட நூல்கள் நம்மிடம் எத்தனை இருக்கின்றன? அரை உண்மைகளையும் அரைப் பொய்களையும் காலவரிசை சம்பவ அடுக்குகளையும் கடந்து முறையான வரலாற்று நூல்கள் எத்தனை இன்று நம்மிடம் உள்ளன? இந்தக் குறையைப் போக்க எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் பாண்டியனின் நூலை முதலில் வாசித்துவிடவேண்டும் என்று நினைக்கிறேன்.
ஓர் ஆய்வாளர் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் பாண்டியனிடமிருந்து கற்கமுடியும். சமரசமின்றி இயங்கும் குணம் வேண்டும். அச்சமின்றி, இரக்கமின்றி கூர்மையாக விமரிசிக்கவேண்டும். அவசியமான கேள்விகளை எழுப்பி விடைகள் தேடவேண்டும். புனித பிம்பங்கள் எப்போதெல்லாம் உருவாகின்றனவோ அப்போதெல்லாம் இத்தகைய ஆய்வுகள் உருதிரண்டு வரவேண்டும். பிம்பங்களைக் கட்டுடைத்து நிஜ முகத்தைக் காட்டவேண்டும். ஒரு வரலாற்றாசிரியர் அல்லது அறிவிஜீவியின் கடமை மக்களிடம் உண்மையைச் சொல்வது. அது ஒரு சமூகக் கடமையும்கூட. மக்களுக்கான அரசியலில், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள ஒருவர் இந்தப் பணியைச் செய்தே ஆகவேண்டும்.
****
எம்ஜிஆரின் ஆட்சி (1977 முதல் 1987) எப்படியிருந்தது என்பதை பாண்டியன் தன் ஆய்வுகளின்வழி நிறுவுகிறார். எதிர்ப்புகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் இடமில்லை. திராவிட இயக்கத்தால் வலுப்படுத்தப்பட்ட பகுத்தறிவு அகற்றப்பட்டு அந்த இடத்தில் மத நம்பிக்கை புகுத்தப்பட்டது. எம்ஜிஆரை ஏழை, எளிய, அடித்தட்டு மக்களும் ஒடுக்கப்பட்ட சாதியினருமே பெருமளவில் உற்சாகமாக ஆதரித்தனர். அவருக்காக உயிரையே கொடுக்க (நிஜமாகவே கொடுக்கவும் செய்தனர்) அவர்கள் தயாராகயிருந்தனர். இருந்தும் எம்ஜிஆரின் ஆட்சி ஒருவகையில் அவரை ஆதரித்த மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது. நேரடியாகவும், மறைமுகமாகவும்.
திரையில் மது அருந்தாதவராக இருந்தார் எம்ஜிஆர். ஆனால் சாராயம் தமிழ்நாட்டில் கரைபுரண்டு ஓடியது. நன்மையே வெல்லும் என்று படத்தில் சொன்னார், நிஜத்தில் லும்பன் கூட்டங்களும் இடைத்தரகர்களும்தான் வளர்ந்து செழித்தனர். நக்ஸல் வேட்டை என்னும் பெயரில் காவல்துறையினர் அராஜகங்களை நடத்தினர். கட்டுக்கடங்காத அதிகாரம் சட்டத்துக்கு விரோதமான முறையில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது.
பாண்டியனின் ஆய்வுபொருள் எம்ஜிஆர் என்றாலும் அதை வேறு பலருக்கும் நம்மால் நீட்டித்துப் பார்க்கமுடியும். ஜெயலலிதாவும் அதே திரைத்துறையிலிருந்து எம்ஜிஆரின் அரசியல் வாரிசாகக் களமிறங்கி தமிழகத்தை ஆண்டவர்தான். ஆனால் அவருடைய பிம்பம் எம்ஜிஆருடையதைப் போலன்றி வேறு மாதிரியாகக் கட்டமைக்கப்பட்டது. இவரும் தன் ஆட்சியில் எதிர்ப்புக்குரல்களை நசுக்கினார். ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டது. லும்பன்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது. அல்லது அதிகாரத்தில் அமர்ந்தவர்கள் லும்பன்கள் ஆனார்கள். பாண்டியன் எம்ஜிஆருக்குச் செய்ததை இன்னமும் யாரும் ஜெயலலிதாவுக்குச் செய்யவில்லை.
மிகுந்த பொருட்செலவில் அரசியல் பிம்பங்கள் கவனமாகக் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரம் இது. முன்னெப்போதும் இல்லாதபடி இந்தப் பிம்ப கட்டமைப்புப் பணிக்கு இப்போது மீடியாவும் உதவிக்கொண்டிருக்கிறது. அரசியல் மேடையொன்றை அமைப்பதைப் போல் அரசியல் பேட்டி ஒன்றை ஊடகத்தில் வரவழைத்துவிடமுடிகிறது. அல்லது ஒரு விவாதத்தைத் தொலைக்காட்சியில் நடத்திவிடமுடிகிறது. மார்க்கெட்டிங் மாயாஜாலங்களைக் கொண்டு மாபெரும் ஆளுமைகளை உருவாக்குவது இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தின் பங்கையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். டொனால்ட் டிரம்ப் முதல் நரேந்திர மோடி வரை இதற்குப் பல உதாரணங்கள் சொல்லமுடியும். இவர்களும் எம்ஜிஆரைப் போலவே தங்கள் பிம்பங்களைக் கச்சிதமாகத் திட்டமிட்டு உருவாக்கிக்கொண்டவர்கள்தாம். வரலாற்றில் பின்னோக்கிப் போனால் ஹிட்லரும் இதையேதான் செய்தார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கடினமாக உழைத்து, பிரமாண்டமான முதலீட்டில் உருவாக்கப்பட்டவை என்பதால் இந்தப் பிம்பங்களை உடைப்பது அத்தனை எளிதல்ல. அதற்காக அந்தப் பணியைக் கைவிடவேண்டிய அவசியமும் இல்லை. பிம்பங்களைச் சீண்டுபவர்களுக்குப் பல சமயம் மரணம்கூடப் பரிசாகக் கிடைக்கலாம். அதற்கும் நம்மிடையே உதாரணங்கள் இருக்கின்றன. ஜெயலலிதா நேரடியாகவே நீதிமன்றத்தையும் காவல் துறையையும் பயன்படுத்தி எதிர்ப்புக்குரல்களை ஒடுக்கினார். எம்ஜிஆர் வழி. மோடியின் வழியும் இதுவேதான். இதுவேதான் ஹிட்லரின் வழியாகவும் இருந்தது.
எனக்கென்ன யூதர்கள்தானே பாதிக்கப்படுகிறார்கள் என்று ஒரு பகுதி ஜெர்மானியர்கள் அமைதி காத்ததைப் போல், எனக்கென்ன முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்தானே அஞ்சவேண்டும் என்று சில இந்துக்கள் நினைப்பது போல், வெள்ளையர்களான நமக்கென்ன கவலை என்று டிரம்பைப் ஆதரிப்போரைப் போல் நாம் இருந்துவிடலாகாது. இவர்களுடைய ஆட்சி மொத்தத்தில் மக்கள் விரோத ஆட்சியாகவே இருந்தது, இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடம் கொண்டுசெல்ல பாண்டியனின் புத்தகம் ஒரு கருவியாக இருக்கும்.
****
எம்.எஸ்.எஸ். பாண்டியன் குறித்து ஒரு சிறிய அறிமுகம். நாகர்கோவிலில் 1958ம் ஆண்டு பிறந்தவர். சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை பட்டமும் எம்ஐடிஎஸ் ஆய்வு நிறுவனத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அதே நிறுவனத்தில் பணியாற்றவும் செய்திருக்கிறார். ஜவாஹர்லால் நேரு பல்பலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராக இறுதிவரை பணியாற்றினார். 2014ம் ஆண்டு இறந்தார். The Political Economy of Agrarian Challenge : Nanchilnadu 1880-1939 (1990), Brahmin & Non-Brahmin : Genealogies of the Tamil Political Present (2007) ஆகியவை அவருடைய பிற நூல்கள். இந்த இரண்டும் இன்னமும் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருடைய மூன்று கட்டுரைகளை காலச்சுவடு முன்பே மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அவற்றோடு பாண்டியனின் நூல்கள் குறித்த இரு விமரிசனங்களையும் தொகுத்து, எம்.எஸ்.எஸ். பாண்டியன் காலச்சுவடு கட்டுரைகள் என்னும் தலைப்பில் ஒரு நூல் (திருத்தப்பட்ட பதிப்பு 2015) வெளிவந்திருக்கிறது. எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி உள்ளிட்ட ஏராளமான ஆய்விதழ்களில் அவருடைய பல கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. அவை இன்னமும் தொகுக்கப்படவோ மொழிபெயர்க்கப்படவோ இல்லை.
மொழிபெயர்ப்பாளர் பூ.கொ. சரவணன் தேனீ போல் ஆர்வத்துடன் புத்தகங்களை நாடிச் சென்று வாசிப்பவர், அதே ஆர்வத்துடன் அவற்றைப் பற்றி எழுதுபவரும்கூட. பிம்பச் சிறை ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் அவரை நிறுவுகிறது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்ற வாய்ப்பளித்த தோழர் விலாசினி ரமணிக்கும் பிரக்ஞைக்கும் நன்றி.
(எம்.எஸ்.எஸ். பாண்டியனின் பிம்பச் சிறை நூலை முன்வைத்து நேற்று முன்தினம் (16 ஜனவரி) பியூர் சினிமா புத்தக அங்காடியில் நடைபெற்ற திறனாய்வுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்.)