ஆசிரியராய் இருப்பவர்கள் படித்தே ஆக வேண்டிய நூலாக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் இந்த நூலைக் குறிப்பிடுவார்.
முதல் வகுப்பைத் தாண்டுவதற்குள் வழக்கமான இரண்டு பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் டோட்டோ-சான் என்னும் செல்லப்பெயர் கொண்ட இந்நூலாசிரியரான டெட்சுகோ குரோயாநாகி என்னும் பெண்மணி. தான் அடுத்த பயின்ற டோமாயி பள்ளியைப் பற்றிய தன் இளமைக்கால அனுபவங்களை இந்நூலில் விவரித்துள்ளார். தான் வாழ்க்கையில் வெற்றி பெற எவ்வாறு டோமாயி பள்ளி தன்னைத் தயார் செய்தது என விளக்கியிருப்பதே இப்புத்தகத்தின் மூலக்கருத்து ஆகும்.
இந்த டோமாயி பள்ளி இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பானின் டோக்கியோவில் இருந்த ஒரு முன்மாதிரி பள்ளி. அப்பள்ளியில் கற்பதில் மகிழ்ச்சி, சுதந்திரம், அன்பு அடங்கியிருந்தன. வழக்கத்திற்கு மாறான இப்பள்ளியில் பழைய ரயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தன. அப்பள்ளி, வித்தியாசமான ஒருவரால் , அப்பள்ளியை நிறுவியவரும் தலைமை ஆசிரியருமான திரு.கோபயாஷி என்பவரால் நடத்தப்பட்டது. அவர் கருத்துக்கள் வெளியிடுவதிலும், செயல்படுத்துவதிலும் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டுமெனத் திடமாக நம்பியவர்.
இந்த புத்தகத்தில் குறிப்பிடப்படும் டோமாயி பள்ளி பற்றி *திரு இறையன்பு IAS* அவர்கள் பின்வருமாறு சிலாகிக்கிறார்.
“குழந்தைகளைப் பாடத்திட்டத்திற்குள் முக்கி எடுக்காத பள்ளி அது. அந்த பள்ளி குழந்தைகளுக்கு மிருகக் காட்சி சாலையாக இல்லாமல் சரணாலயமாக இருந்தது. கூண்டாக இல்லாமல் கூடாக இருந்தது. அந்தப் பள்ளியில் பள்ளி நேரம் முடிந்தபின் கூட குழந்தைகள் வீட்டிற்குப் போக விரும்பியதில்லை. பள்ளி முடிவதற்குக் காத்திருக்கும் மாணவர்கள் மத்தியில் அந்தப் பள்ளி தொடங்குகின்ற நேரத்திற்காக அவர்கள் எதிர்பார்ப்பை இதயத்தில் ஏற்றுக் கொண்டு காத்திருந்தார்கள்.
அங்கே சக மாணவர்கள் முதல் இடத்திற்கு முந்துகின்ற பந்தயக் குதிரைகள் அல்ல. அவர்கள் ஒரே இலக்கு நோக்கிப் பயணம் செல்லும் ஒரே தேரின் சக குதிரைகள். அங்கு கனத்த மழையிலும் இயற்கை கை குவித்துப் பாதுகாக்கும் தளிர்களைப் போல பள்ளி சுயமரியாதையையும், குழந்தைகளின் தனித்தன்மையையும் வளர்க்க ஆதரவுக் கரங்களாய் ஆனது.
காலை நேரம் கற்பதற்கு - மாலை நேரம் உலவவும், உரையாற்றவும், பாடவும், படம் வரையவும் பயன்பட்டது. பயிர்களைப் பாதுகாக்கவும், மிருகங்களை சிநேகிக்கவும் அங்கு சொல்லித் தரப்பட்டது.
இரண்டாம் உலகப் போரில் டோமாயி மீதும் குண்டு வீசப்பட்டன. பள்ளி அறைகளாகப் பயன்பட்ட ரயில்பெட்டி வகுப்புகளின் மீது விமானங்கள் ஏராளமான குண்டுகளை வீசின. குழந்தைகளின் சிரிப்பு, குழந்தைகளின் பாடல் சத்தம் ஆகியவை அந்த ராட்சதக் குண்டுகள் வெடிக்கும் ஓசையில் கரைந்து போயின.
வீழ்ந்தது ஒரு பள்ளி மட்டுமல்ல - ஒரு பாடமும் கூட.
எரிந்தது கட்டடங்கள் மட்டுமல்ல - ஒரு கனவும் கூட.
இடிந்தது ஒரு இடம் மட்டுமல்ல - ஓர் இலக்கும் கூட.
அது எரியும் போது கூட அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் கோபயாஷி தன் கால்சட்டைக்குள் கைகளை நுழைத்தவண்ணம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம்.
அவலம் அதிகமாகும் போது அழுகை வியர்த்தமாகும். புழுக்கம் புகும் போது புலம்பல் வீணாகப் படும்.”
மேலே உள்ள கூற்று மிகவும் சரியானது என்பதை புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளலாம். சிறிது காலமே செயல்பட்ட இந்த டோமாயி பள்ளி உலகெங்கும் உள்ள கல்வியாளர்களால் கல்வியின் முன்னோடிப பள்ளியாகக் கருதப்படுகிறது.
இந்நூலில் வரும் சிறுமி டோட்டோ-சான், உண்மை வாழ்வில் டெட்சுகோ குரோயாநாகி,ஜப்பானின் தொலைக்காட்சி ஆளுமை. இவர் தனது வெற்றிக்குக் காரணம் அற்புதமான அப்பள்ளியும் அதன் தலைமை ஆசிரியருந்தான் எனக் கூறுகிறார்.
இந்நூல் ஜப்பானில் வெளியான முதல் ஆண்டிலேயே 45 இலட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை புரிந்தது.நேரம் கிடைப்பவர்கள் படித்துப் பார்க்கலாம், நிச்சயம் உங்களுக்கு பிடித்துப் போகும்.