‘லட்சுமி என்னும் பயணி’ என்ற லட்சுமி அம்மா எழுதிய புத்தகம், தன் வரலாறு வகையைச் சார்ந்தது. சாதாரண மனுஷியாகத் தன்னை நேர்ந்துகொண்டு, உழைக்கும் பெண்களே என் வளர்ச்சிக்குக் காரணம் என்று சொல்லி, தன் வாழ்க்கையை மிகையற்ற சொற்களால் சமூகத்தின் முன் வைத்திருக்கிறார். அரசியல் மற்றும் பொதுநல அக்கறைகளை முன்னிட்டு பொதுவெளியில் வாழும் ஆண்களைப் பராமரிப்பது, அவர்களின் குடும்பங்களுக்குப் பொறுப்பேற்பது, அதற்காக உழைப்பது, பொருள் ஈட்டிப் பசியாற்றுவது, வாய்ப்பு கிடைக்கும்போது அரசியல் வாழ்க்கையில் பங்கேற்பது என்று தன் முழு வாழக்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் லட்சுமி. இவர் போன்றவர் வாழக்கையை யாரும் எழுதியது இல்லை. அது சொல்லும் அரசியலையும் அறத்தையும் யாரும் பேசியதும் இல்லை.
1955-ம் ஆண்டு வறுமையான குடும்பத்தில் பிறந்த லட்சுமியை, ‘ஜென்ம சனியன்’ என்றே அழைத்தார்கள். பசியும், நிராதரவும், புறக்கணிப்பை பருகிய குழந்தையாக வளர்ந்த அவருக்கும் மற்ற குழந்தைகளைப் போல பள்ளிக்குப் போக ஆசை. பெற்றோர் அவரைப் படிக்க வைக்க விரும்பவில்லை. ஒருநாள், கீழே கிடந்த உடைந்த சிலேட்டுப் பலகையை எடுத்துக்கொண்டு சவேரியார் நடுநிலைப் பள்ளிக்குச் செல்கிறார். ஆசிரியை லட்சுமியை வகுப்புக்கு வெளியே தள்ளுகிறார். அவரிடம் ‘‘டீச்சர் என்னையும் வகுப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்’’ என்கிறார். அந்த ஆசிரியை, தன்னுடைய வீட்டுக்கு லட்சுமியை அழைத்துச் சென்று இரண்டு பாவாடை சட்டைகள் வாங்கித் தருகிறார். மறுநாள், பள்ளியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார் லட்சுமி. தான் அனாதை என்ற உணர்வை மாற்றுவதாகப் பள்ளிக்கூடம் இருந்தது என்று இந்நூலில் எழுதுகிறார் லட்சுமி.
லட்சுமியின் பின்னணி இதுதான். தோழிகள், நண்பர்கள் கருணையில் வாழ்ந்தவர். பள்ளி இறுதித் தேர்வில் கணக்குத் தேர்வு. தாள்கள் ஒரே இருட்டாக இருந்தது. தேர்வு மேற்பார்வையாளரிடம் நிலைமையைச் சொல்லியிருக்கிறார். அந்த நல்லவர், எதிரில் இருக்கும் மாணவனைப் பார்த்து காப்பி அடித்து விடை எழுத ஏற்பாடு செய்கிறார். ஆனால், அந்த நிமிடத்திலேயே விடைத்தாளை வெள்ளையாக வைத்துவிட்டு வெளியேறியிருக்கிறார். வாழ்க்கை யுத்தங்கள் பலவற்றைச் சந்தித்திருக்கும் லட்சுமி, எப்போதும் அதர்மத்தின் பக்கம் நிற்கவே இல்லை.
நண்பர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர் எம்.கே.பாலசுப்ரமணியன் மூலம், ‘டான்டெக்ஸ்’ பனியன் கம்பெனியில் சேர்ந்தார். அங்கே திருமகள் என்பவர் லட்சுமியின் தோழியாகிறார். மகள் ஊதாரித்தனமாகச் சம்பளத்தைச் செலவு செய்வதாக அபிப்ராயப்பட்டார் லட்சுமியின் தந்தை. (சம்பளம் ஒரு நாளைக்கு 2 ரூபாய்).
பேருந்து, டீ என்ற அடிப்படைத் தேவைகளுக்கு அப்பா ஒன்றும் கொடுத்ததில்லை, என்றாலும் விறகுக் கட்டை அடி விழுந்தது லட்சுமிக்கு. அதன்பிறகு வல்லத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் நடந்தே கம்பெனிக்குப் போயிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தின்போது, தோழர் ஜெயபால், கார்க்கியின் ‘தாய்’ நாவலை லட்சுமியிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லியிருக்கிறார்.
கட்சியினரே லட்சுமிக்கு மாப்பிள்ளை பார்த்தனர். தோழர் ஜெயபால் கடையில் தோழர்கள் லட்சுமியைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள். அதில், டேவிட் என்கிற தோழர் லட்சுமியை விரும்புவதாக தெரிந்தது. தான் எழுதிக்கொண்டு வந்த ‘மணப்போம்’ என்ற கவிதையை லட்சுமிக்குத் தந்தார் டேவிட். சில நாட்களுக்குள், வீட்டைவிட்டுப் புறப்பட்ட லட்சுமி, வீட்டு மாட்டுக் கொட்டகைச் சுவரில் ‘முடிந்தால் திருந்துங்கள்; இல்லையேல் வருந்துங்கள்!’ என்று எழுதி வைத்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.
1977 ஜனவரி. காலையில் மாட்டுப் பொங்கல். 125 ரூபாய்க்கு மாப்பிள்ளை - பெண்ணுக்கு ஆடைகள் எடுக்கப்பட்டன. திருமணத்தை நடத்தி வைத்த ஜீ.வீ, ‘‘டேவிட் என்ற மணியரசன் எங்கள் பொக்கிஷம். அவரைக் காத்து இயக்கத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் தோழர் லட்சுமி வாழ்ந்து காட்ட வேண்டும்!’’ என்று வாழ்த்தியிருக்கிறார். லட்சுமி யோடு வேலை செய்யும் சாந்தகுமாரி மணமக்கள் தங்குவதற்கு இடம் கொடுத்தார்.
அதுவரை, லட்சுமிக்குக் கிடைக்காத தாய் - தந்தை பாசத்தை முழுமையாக தோழர்கள் அனாரம்மாவும் மன்ன ரும் அவருக்குக் கொடுத்தார்கள். ஆனாலும், அடக்கு நிலைக் காலத்தில் தலைவர்கள் தலைமறைவானார்கள். காவல்துறை, தலைமறைவுத் தலைவர்களைக் காட்டச்சொல்லி, கட்சி உறுப்பினர்களைச் சித்திரவதை செய்தது. ‘மிசா’ சட்டத்தில் கைது செய்யப்பட்ட என்.வி விடுதலையானார். அவரைக் காண மணியரசன் - லட்சுமி சென்றனர். லட்சுமிக்கு முதல் ரயில் பயணம் இது. மகிழ்ச்சி கொண்டார்.
தோழர் என்.வி, லட்சுமியைப் பார்த்து, முகம் சுளித்ததபடி, ‘‘மணியரசு, இந்தப் பெண்ணையா திருமணம் செய்தாய்?’’ என்றார்.
(கம்யூனிஸ்ட்களில்கூட சிலர் ‘பெண்’ பற்றிய சித்திரத்தை் தவறாகவே புரிந்துவைத்துள்ளார்கள்போலும்). பிறகு தன் கருத்தை மாற்றிக்கொண்ட என்.வி, லட்சுமி யின் பிரசவத்தை தன் வீட்டில் வைத்துக்கொள்ளலாம் என்றார். லட்சுமி, கம்பெனி யில் பிரசவ விடுமுறை பெற்றார். ஆனால், என்.வி-யிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்று பின்னால்தான் தெரிந்தது. தோழர் கள் மன்னரும் அனாரம்மாவும் தாத்தா - பாட்டியாக லட்சுமி பெற்ற குழந்தையை வாங்கிக் கொண்டார்கள். குழந்தைக்கு செந்தமிழன் என்று பெயரிடப்பட்டது.
இந்த நேரத்தில் ரெஜினா அறிமுகம். வீட்டில் உணவே இல்லாதபோது, ரெஜினா தன் நீண்ட தலைமுடியை வெட்டி அம்மாவுக்கு சோறு போட்ட பெண்.
ஒரு நாடகத்தில் நடிகை வராததால், அந்தப் பாத்திரத்தை ஏற்று லட்சுமி நடித்திருக்கிறார். அதுகுறித்து ஒரு ‘உதிரி’ லட்சுமியைக் கேலி செய்துள்ளான். அது தொடரவே, அவனை கீழே தள்ளி மிதித்திருக்கிறார் லட்சுமி.
கட்சி வேலை (சி.பி.எம்) பற்றி லட்சுமி குறிப்பிடுகிறார்: ‘‘அவசர நிலையையொட்டி வந்த தேர்தலில் சி.பி.எம் கட்சியானது தி.மு.கவோடு கூட்டு. அடுத்தத் தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டு. ஓட்டு கேட்கவே வெட்கமாக இருந்தது.
பேராசிரியர் அ.மார்க்ஸுடன் சேர்ந்து மணியரசன் ‘பாரதி - ஒரு சமூக இயல் பார்வை’ என்ற நுலை எழுதியிருக்கிறார். அடிப்படையில் கவிதை ரசனை கொண்ட மணியரசன் தமிழ்மொழி, தமிழ்நாடு குறித்தான சிந்தனைகள் கொண்டவர். காவிரி பிரச்சினையை நுணுகி ஆராய்ந்தவர். தமிழ்த் தேசம் பொதுவுடமைக் கட்சி பிறந்து, ‘தமிழர் கண்ணோட்டம்’ பத்திரிகையும் தோன்றி வளர்ந்துகொண்டிருந்தது. லட்சுமி அம்மாள் தொடர்ந்து மாவு அரைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.
லட்சுமி அம்மாவின் வாழ்க்கையும் பணியும் வரலாற்றில் முக்கியமானவை. இந்த அரிய வாழ்க்கையை ஆவணப் படுத்த முன்வந்த ‘மைத்ரி பதிப்பகம்’ பாராட்டத்தக்கப் பணியைச் செய்திருக்கிறது. பதிப்பாளர் பிரேமா ரேவதி, கிருஷ்ணவேணி ஆகியோர் மிக முக்கியமான அரசியல் நிகழ்வை முன் எடுத்துள்ளார்கள்.
அரசியல் என்பது கொடி, களம், உழைப்பு, மேடை என்ப தோடு முடிவடைவது இல்லை. மனித மனதைப் பண்படுத் திச் சமூகமயப்படுத்தும் எதுவும் மேன்மையான அரசியல்தான். லட்சுமி அம்மா, அந்த வகையில் மிக முக்கிய, மேன்மையான அரசியல்வாதியாவார். அவரைப் பற்றிய இந்த ‘லட்சுமி எனும் பயணி’ தன் வரலாற்று நூலும் முக்கியமான பதிவாகும்.
491-B ஒமேகா பிளாட்ஸ், 4-வது லிங்க் சாலை, சதாசிவம் நகர், மடிப்பாக்கம், சென்னை-600 091 எனும் முகவரியில் இருந்து ‘லட்சுமி எனும் பயணி’ நூலை - மைத்ரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இது நல்ல சமூக இலக்கிய பணி.
(நன்றி: தி இந்து)