நூலின் பின்னட்டையில், “நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்ப காலப் படைப்புகளில் முக்கியமானது தோட்டியின் மகன். தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் பார்க்காத களம் – சேரி; கேட்காத மொழி – பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை – மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மாற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு” என்று சொல்லப்பட்டுள்ள இந்த தோட்டியின் மகன் நாவலை 1951 களில் தமிழில் மொழி பெயர்த்திருப்பவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள். இது 1957 களில் சரஸ்வதி இதழில் தொடராக வெளிவந்துள்ளது. இதன் புத்தகமாக்கப்பட்ட முதல் பதிப்பு 2000 ஆவது வருடம் வெளிவந்துள்ளது.
சுந்தர ராமசாமி தனது முன்னுரையில், “தோட்டியின் மகனைப் படித்த போது விருப்பமும் வியப்பும் அலைமோதின. வெளியுலகத்திற்கே தெரியாத ஒரு இருண்ட வாழ்க்கையினூடே எப்படி இவரால் இவ்வளவு சகஜமாகப் புகுந்து மன உணர்ச்சிகளை அள்ளிக் கொண்டு வர முடிகிறது! தகழி வெளிப்படுத்தியிருப்பது தோட்டிகளின் வாழ்க்கை சார்ந்த தகவல்களை அல்ல என்பதையும், காலம் அவர்களது அடிமனங்களில் மூட்டும் நெருப்பு என்பதையும் உணர்ந்தபோது மிகுந்த வியப்பு ஏற்பட்டது. கொடுமையில் மனம் கொள்ளும் கோபத்தில், ரத்தத்தில் உஷ்ணம் ஏறாமல் என்னால் அப்போதெல்லாம் தோட்டியின் மகனின் எந்தப் பக்கத்தையும் படிக்க முடிந்ததில்லை” என்று குறிப்பிடுகிறார்.
அவரால் மட்டுமல்ல என்னாலும் மனக்கிளர்ச்சி அடையாமல் இப்புத்தகத்தின் எந்தப் பக்கத்தையும் வாசிக்க முடிந்ததில்லை.
நாவலின் மிகச் சுருக்கம்:
இநநாவல் கேரளாவில் ஆலப்புழைப் பகுதியைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது. இங்கு தமிழ்நாட்டின் திருநெல்வேலி பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட மலம்அள்ளும் தொழில் செய்யபவர்கள் சேரிகளில் வறுமையிலும், சுகாதாரமற்ற சூழலிலும் வசிக்கிறார்கள். இப்பகுதியில் திடீர் திடீரென ஏற்படும் வைசூரி காய்ச்சலுக்கும், காலரா நோய்க்கும் கொத்துக் கொத்தாக இந்த நகரசுத்தித் தொழிலாளர்கள் மாண்டுபோவது வாடிக்கையாக இருக்கிறது. இவர்கள் இவ்வாறு இறக்க இறக்க புதிது புதிதாக தொழிலாளர்கள் திருநெல்வேலியிலிருந்து அழைத்து வரப்பட்டனர். நகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இவர்களை மேற்பார்வையிட கேசவப் பிள்ளை என்னும் ஓவர்சியர் இருக்கிறார்.
தனது ஆயுட்காலம் முழுவதும் கேரளாவின் ஆலப்புழை பகுதியில் வாளியும் மண்வெட்டியுமாக மலம் அள்ளும் தொழில் செய்து வந்த இசக்கிமுத்து என்னும் தோட்டி காய்ச்சல் காரணமாக அன்று தனக்கு மாற்றாக பணியைச் செய்ய தனது வாளியையும் மண்வெட்டியையும் தனது மகனான சுடலைமுத்துவிடம் கொடுத்து அனுப்புகிறார். அன்றே அந்த வயதான தோட்டி இறந்தும் போகிறார்.. புதைக்க கையில் காசில்லாத சுடலைமுத்தும் அவனது நெருங்கிய நண்பர்களான பிச்சாண்டி உள்ளிட்டவர்களும் சேர்ந்து மலக்கிடஙகின் ( அப்போது வீடுவீடாக சேகரித்து தள்ளுவண்டியில் அள்ளிவந்த மலம் கொட்டப்படும் இடம்) ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் புதைக்கிறார்கள். சிலநாட்களில் ஆழமாக புதைக்கப்படாத இசக்கிமுத்துவின் உடலை நாய்கள் வெளியே இழுத்துப் போடுகின்றன.. இவ்வாறு இந்ந நாவல் தொடங்கி வேகமெடுக்கிறது.
முதல் நாள் வேண்டா வெறுப்பாக தோட்டி வேலைக்குச் சென்ற சுடலைமுத்துவின் பிழைப்புக்கான வழியாக அந்த வேலையிலேயே தொடர்கிறான். கெட்ட பழக்கங்கள் ஏதுமில்லாத சுடலைமுத்து கற்பனை முகிழ்க்காத மற்ற தோட்டிகளிலிருந்து வேறுபட்டுத் தெரிகிறான். அவனுக்கு சொந்தமாக நிலம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், சுத்தமாக இருக்க வேண்டும், பணத்தை சேமிக்க வேண்டும் என்ற நிறைய கனவுகள் இருக்கின்றன. அதன்படி அவன் தான் தோட்டி வேலை செய்யும் வீடுகளின் செயல்பாடுகளை உற்று கவனித்து தானும் பின்பற்ற நினைக்கிறான். தான் சம்பாதிக்கும் காசை நகராட்சி சேர்மனிடம் கொடுத்து வைக்கிறான். இந்நிலையில் அதே சேரியில் வசிக்கும் வள்ளி என்பவள் மேல் காதல் கொள்கிறான் சுடலைமுத்து.காதல் மெல்ல வளர்ந்து கல்யாணத்தில் முடிகின்றது.
தன் மனைவியையும் தன்னைப் போலவே தோட்டி வாழ்வுக்கு அப்பாற்பட்டு தூய்மையாகவும், தெய்வ பக்தி உடையவளாகவும் வாழப் பழக்குகிறான். இதற்கிடையில் பணம் சம்பாதிப்பதற்காக சில சமயங்களில் தன் தோட்டி சமூகத்திற்கு எதிரான வேலைகளிலும், நகராட்சி சேர்மன், ஓவர்சியர் ஆகியோருக்கு ஆதரவாகவும் செயல்படுகிறான். மேலும் தன் சக தோட்டிகளிடம் பணம் வட்டிக்குவிட்டும் வருகிறான்.
இந்நிலையில் தான் தோட்டி சுடலைமுத்துவுக்கும் – வள்ளிக்கும் ஒரு மகன் பிறக்கிறான். அவன் பெயர் மோகன். இவ்விடமே நாவலின் இடைவேளை.
இந்த தோட்டியின் மகன் என்னவாகிறான்? இன்னொரு தோட்டியா? அல்லது படித்து பரம்பரைத் தோட்டித் தொழிலிலிருந்து மீண்டு விடுகிறானா?
நிற்க.
2017 ஆகஸ்ட் மாத தடம் இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் அம்பேத்கரின கீழ்கண்ட வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.
"ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது"
- பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
இந்த வாசகம் தான் நான் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் நான் படித்திருந்த தோட்டியின் மகன் நாவலை மீள் வாசிப்பு செய்ய வைத்தது. அதனடிப்படையிலேயே இந்த தோட்டியின் மகன் என்னும் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு நாவலின் அறிமுகத்தை எழுதுகிறேன். வேறு யாராவது தோட்டியின் மகன் நாவலை இவ்வாறு கல்வியியல் பார்வையில் விமர்சனம் செய்திருக்கிறார்களா என்பதும் தெரியாது… எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன். தவறிருந்தால் பொறுத்தருள்க!
சரி… இப்போது நாவலின் அடுத்த பகுதிக்கு வருவோம். தன் மகனுக்கு பேர் வைப்பதில் கூட காலம் காலமாக தோட்டியினத்தில் வைக்கப்படும் பெயரன்றி நாகரீக பெயராக மோகன் என வைக்கிறான். இன்னொரு செல்லப்பெயர் பேபி.. இதைத் தான் வேலை பார்க்கும் வீடுகளில் சொல்ல, “தோட்டி மகனின் பெயர் மோகனாம்” என்று ஏளனம் செய்கிறார்கள். தோட்டி சுடலைமுத்து தன் மகன் இன்னொரு தோட்டியாவதை அறவே விரும்பவில்லை. தான் வேலை பார்க்கும் வீடுகளில் வளர்க்கப்படும் குழந்தைகள் போல அழகாக, அறிவாக நல்ல கல்வியுடன் வளர்த்து நல்ல வேலையில் அமர்த்த ஆசைப்படுகிறான். இதில் உச்சம் தன் தோட்டித் தொழிலால் தன் மேல் வீசும் மலத்தின் வாடை தன் மகன் மோகன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக தன் ஆசை மகனைக்கூடத் தூக்குவதில்லை, அவன் கூட உட்கார்ந்து சாப்பிடுவதுமில்லை. நாள்கள் நகர, மோகன் வளர்கிறான். கூடவே தன் சகாவான பிச்சாண்டிக்கும் திருமணமாகி குழந்தைகள் தோட்டியாவதற்கான எல்லாத் தகுதியுடன் தெருவில் திரிகிறார்கள். அதில் ஒருவன் எப்படியோ சுடலைமுத்து மகன் மோகனுக்கும் யாருக்கும் தெரியாமல் நண்பனாகிறான்.
சுடலைமுத்து தோட்டி வேலை செய்யும் வக்கீல் வீட்டுக் குழந்தைக்கு வீட்டிலேயே வைத்து படிப்புச் சொல்லித் தருவதைப் பார்த்தவன் தன் மகனையும் படிக்கவைக்க ஆசைப்படுகிறான். தன் வீட்டுக்கு அருகில் மண்ணில் எழுதி படிப்புச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரிடம் தன் மகனைச் சேர்த்துக்கச் சொல்லி கேட்கச் செல்கிறான் சுடலைமுத்து.
“ வாத்தியார் சந்தனமும் விபூதியும் பூசிக்கொண்டு, முன்குடுமியும் வைத்துக் கொண்டிருந்தார். சுடலைமுத்து அவன் வந்த விஷயத்தைச் சொன்னான். வாத்தியார் கேட்டார்:
“நீ அந்த ஸேட்டு வியாபாரி வீட்டுக்கு அடுத்தாப்ல தோட்டிதானே?”
“ஆமா?”
ஆசிரியர் சற்று கௌரவத்தோடு கேட்டார்:
“ உன் பையனை இங்கேதான் படிப்பிக்கணுமென்று ஏன் நினைத்தாய்?”
“ பக்கத்திலெ இருக்குதுனாலெதான்.”
“ஹூம், ஆனால் இங்கெ சேர்த்துக்க முடியாது.”
வாத்தியார் சுடலைமுத்துவின் முகத்தில் பார்வையை ஊன்றிக் கொண்டு தொடர்ந்து சொன்னார்:
“இங்கெ முடியாது தெரிஞ்சுதா? டேய், என்ன அக்கிரமம் இது? இந்தக் குழந்தைகள் பக்கத்தில் நீ உன் குழந்தையையும் கொண்டு வந்து உட்கார வைத்துவிடலாமென்று நினைத்தாய், இல்லையாடா? நன்றாக இருக்கிறதே”
என்று வாத்தியார் சொல்ல அந்த வகுப்பறையிலுள்ள குழந்தைகளையெல்லாம் பார்க்கிறான் சுடலைமுத்து. ஒன்று சோறு விற்கும் பெண்ணின் குழந்தை, ஒன்று ரிக்சாகாரனுடையது. வேறொன்று பிராமணக்குழந்தை. சுடலைமுத்து வெளியேறிவிட்டான்.
அடுத்து சற்று தூரத்திலுள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியரை வீட்டில் போய் பார்க்க, மறுநாள் பதில் சொல்கிறேன் என்கிறார். பின் அடுத்த நாள் போய்ப் பார்த்த சுடலைமுத்துவிடம் சட்டப்படி சேர்க்க வேண்டிய குழந்தைகளுக்கு மேல் சேர்த்து விட்டார்களென்று சொல்லி தட்டிக் கழித்தார். வேறொரு பள்ளிக்குச் சென்றபொழுது, அங்கு பள்ளி உதவி இன்ஸ்பெக்டரின் சம்மதம் வேண்டுமென்றார்கள். வேறொரு இடத்தில் மற்றொரு சாக்குப் போக்குச் சொன்னார்கள்.
அவன் குழந்தைக்குப் பள்ளியில் நுழைய முடியாயதன் காரணம் சுடலைமுத்துவுக்குத் தெரிந்திருந்தது. அவன் தோட் டியின் மகன் அதுதான்!
பிறகு ஒருவழியாக ஓவர்சியர் மூலமாக ஒரு தலைமையாசிரியருக்கு இருபது ரூபாய் லஞ்சம் கொடுத்து இரண்டு நிபந்தனைகளுடன் மோகனை பள்ளியில் சேர்த்து விட்டான். அந்த இரண்டு நிபந்தனைகள் ‘ குழந்தையின் பெற்றோர் என்னும் இடத்தில் வேறு யாருடைய பெயரையாவது போட வேண்டும். பீஸ் இல்லையென்றாலும் தலைமை ஆசிரியருக்கு மாதமாதம் இரண்டு ரூபாயாவது கொடுக்க வேண்டும். இவ்வாறு முனிசிபல் தலைவரின் வண்டிக்காரனின் மருமகனாக மோகன் என்றொரு குழந்தை ஒன்றாவது சேர்க்கப்பட்டான்.
சுடலைமுத்துவுக்கும் வள்ளிக்கும் அன்று விஷேச தினம். தோட்டியின் மகனொருவன் பள்ளி சொல்கிறான். மோகன் தோட்டியின் மகனாயிருக்கலாம் ஆனால் மோகனின் மகன் ஒரு தோட்டியின் மகனாக இருக்கக் கூடாது என்ற சுடலைமுத்துவின் லட்சியத்தில் முதல் அடி எடுத்து வைக்கிறான் மோகன். தினம்தோறும் அவ்வளவு சுத்தமாக பள்ளிக்குச் செல்கிறான் மோகன். தன் மகன் தோட்டியின் மகன் என்பதை யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்காக வள்ளி மிகுந்த மெனக்கெடுகிறார். நாளாக நாளாக மோகன் தோட்டி வாழ்வின் அவலத்தையும், தான் ஒரு தோட்டியின் மகன் என்பதையும் தெரிந்து கொள்கிறான். சக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கூட தெரிய வருகிறது.. சக மாணவர்கள் அவ்வளவு சுத்தமாக வரும் மோகன் மீது தோட்டி என்றாலே நாற்றமடிக்கும் என்ற பொதுப்புத்தியின் காரணமாக நாற்றம் அடிப்பதாக கேலி செய்கின்றனர்.
அன்று ஒருநாள் ஆசிரியரிடம் அடிவாங்கி அழுது கொண்டே வீட்டுக்கு வருகிறான் மோகன். நிஜாரை அவிழ்த்துப் பார்த்தால் அடிபட்ட மூன்று இடங்கள் தடிப்பேறி இருக்க, வள்ளி கோபத்துடன் மோகனிடம் கேட்கிறாள்.
“எதுக்காம் எங்கண்ணுவெ அவரு அடிச்சாரு?”
“தோட்டிக்கு மவனில்லையா? சொல்லிக் கொடுத்தா தலேலெ ஏறாதுன்னு சொல்லி அடிச்சாராம்மா. அந்த வாத்தியாரு சொல்லித்தந்தா ஓரெளவும் தெரியாது..” என்று குற்றம் சாட்டுவது அவன் சாரை மட்டுமல்ல. முதல் தலைமுறையில் படிக்க பள்ளிக்கு வரும் மாணவர்களிடம் கடுமை காட்டும் எல்லா ஆசிரியரையும் நோக்கித்தான்…
இவ்வாறாக மோகனுக்கு படிப்பின் மீது சிறிய நெருப்புப் பொறி போன்று வெறுப்புப் பொறி விழுகிறது. இதே சமயத்தில் சுடலைமுத்து தன் மகனின் விருப்பத்திற்கு ஏற்ப தோட்டி வேலையிலிருந்து விலகி மயான காவலாளி ஆகிறான். இந்த சூழலில் ஆழப்புழை நகரெங்கும் காலரா பரவி கொத்துக் கொத்தாக மனிதர்கள் சாகிறார்கள். சுடலைமுத்துவுக்கும் சாவு பயம் வந்து வள்ளியிடம் தனது ஆசை மகனின் எதிர்காலம் பற்றி புலம்புகிறான். முனிசிபல் சேர்மனிடம் தந்து வைத்திருந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு ஊரைவிட்டு போகலாமென்று முடிவெடுக்கிறான். ஆனால் பணத்தை இப்போது தர முடியாது என சுடலைமுத்துவை ஏமாற்றுகிறான் முனிசிபல் சேர்மன். இதனால் மிகுந்த மன வேதனையடைகிறான் சுடலைமுத்து.
ஒருநாள் வழக்கம் போல் பள்ளி செல்லும் வழியில் சுடலைமுத்துவின் நண்பன் பிச்சாண்டியின் மகனும், மோகனை விட சிறிது மூத்தவனும் மோகனின் நண்பனுமான பொறுக்கி பையன் ஆசை காட்டி பள்ளிக்கு செல்லாமல் மோகனை ஊரில் நடைபெறும் திருவிழா பார்க்க அழைக்கிறான். ஏற்கனவே பள்ளியின் மீது கொண்ட வெறுப்பாலும், அன்று செய்யாத வீட்டுப் பாடத்தாலும் பயந்து பள்ளிக்கூடம் செல்லாமல் புத்தகப் பையை ஒரு கடையில் வைத்துவிட்டு திருவிழா சென்றுவிடுகிறான். அங்கு சுற்றிவிட்டு பசி மயக்கத்தில் அன்றிரவு திருவிழா நடக்கும் இடத்திலேயே உறங்கிவிடுகிறான். காலையில் எழுந்து அவன் அம்மாவிடம் பயந்து கொண்டே வீட்டுக்கு வர அவன் அம்மா காலராவினால் வீட்டில் மலத்துடன் இறந்து கிடக்கிறாள். அவன் தந்தை சுடலைமுத்துவும் மயானத்திலேயே இறந்து போகிறான்.
சுடலைமுத்துவும் வள்ளியும் தன் மகன் தோட்டியாகிவிடக் கூடாதென்று எவ்வளவு பிரயாசைப் பட்டார்களோ அத்தனையும் நிராசையானது. இதோ ஆழப்புழை வீதிகளில் பிச்சாண்டியின் மகனும் சுடலைமுத்துவின் மகனும் இன்னும் சிலரும் வாளியும் மண்வெட்டியுடனும் வாலிபத் தோட்டிகளாகத் திரிகின்றனர். என்ன இப்போதைய தோட்டிகளுக்கு நிரந்தர சங்கம் உண்டு. தங்கள் சம்பளம் எவ்வளவு என்று தெரியும்.
மோகன் தன் தந்தையின் பணத்தைத் தராது ஏமாற்றிய முனிசிபல் சேர்மன் கட்டிய புதிய பங்களாவிற்குத் தீவைக்கிறான். புரட்சிக்காரனாக மாறுகிறான். சங்கத்தின் முக்கிய ஆளுமையாகவும் மாறுகிறான். ஒரு போராட்டத்தின்போது குண்டடி பட்டு மாண்டும் போகிறான். வலியுடன் நாவலும் நிறைகிறது.
இப்போது மேலே சொன்ன அம்பேத்கரின் வாசகத்தைத் திருப்பி படியுங்கள்.. அந்த வாசகத்தின் வீரியம் புரியும்.
"ஒரு சாதி இந்துவுக்குப் பிறந்த குழந்தை, நீதிபதி ஆவதற்கான கனவைக் கொண்டிருக்கிறது. ஆனால், தோட்டியின் குழந்தையோ இன்னொரு தோட்டியாவதற்கான கொடூர யதார்த்தத்தைக் கொண்டிருக்கிறது."
- பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.
கல்வி மறுக்கப்பட்ட ஒரு சமுதாயத்தின் குரலாக, ஆசையாக, லட்சியமாக இங்கு ஒலிக்கும் குரல் சுடலைமுத்துவுடையது. அது நிறைவேறாமல் போவதை மிக எதார்த்தமாக வலிக்க வலிக்க எழுத்தில் வடித்த தகழியும், மொழி பெயர்த்த சுந்தரராமசாமியும் போற்றுதலுக்குரியவர்கள்