கடந்த சில ஆண்டுகளாக கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருக்கும் புதியவர்கள் பலர் தங்கள் படைப்புகளைத் தொகுக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு புதிய தலைமுறையின் தொடக்கம். தமிழ்ச் சிறுகதையின் நூற்றாண்டுத் தருணத்தில் யாவரும் பப்ளிஷர்ஸ் போன்ற பதிப்பகங்கள் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய தொகுப்புகளைப் பதிப்பிக்கின்றன.
அவ்வகைமையில் வெளிப்பட்டிருப்பவரான தூயனின் தொகுப்பில் மொத்தம் எழு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் உள்ளன. கதைகளின் நீளம் மற்றும் விவரிப்பு முறைகளில் சில இடறல்கள் இருந்தபோதிலும் ஒவ்வொரு கதையும் தன்னளவில் ஒரு வடிவக் கச்சிதத்தைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகைக் கச்சிதம் முதல் தொகுப்பிலேயே கைவரப்பெறுவதென்பது ஒரு அபூர்வமே. கதைகளின் எல்லைகள் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதால் வடிவ ஆற்றொழுக்கு சிறப்பானதாக இருக்கிறது.
தூயனின் கதைகளில் இயங்கும் முக்கிய பண்பாக இருமையியல்பைச்(Duality) சொல்லலாம். இந்த இருமையியல்பானது இரண்டு மனிதர்களுக்கு இடையிலானதாகவோ அல்லது வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழும் ஒத்த தன்மையுடைய நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவோ இருக்கின்றன. உதாரணத்திற்கு இன்னொருவன கதையில் கதை சொல்லும் பாத்திரத்திற்கும் அமிர்தி ராஷனுக்கும் இடையிலான ஒற்றுமைகள், இருமுனை கதையில் வெவ்வேறு பிரதேசங்களில் உயிர்தெழும் இருபால் நிழல்கள், தலைப்பிரட்டைகள் கதையில் நாயகப் பாத்திரத்தின் தந்தையான முடிதிருத்துபவர் மற்றும் பெண் பாலியல் தொழிலாளி ஆகியோர் தம் தொழிலின் இறங்குமுக காலத்தில் உணரும் அழுத்தங்கள் ஒற்றைக்கைத் துலையன் குறுநாவலில் தொன்மத்திற்கும் சமகாலத்திற்கும் உண்டாக்கப்படும் இருமையான தொடர்பு ஆகியவற்றைச் சொல்லலாம்.
இத்தொகுப்பிலுள்ள கதைகளில் உள்ள கதாப்பாத்திரங்கள் பலர் பாதிக்கப்பட்டவர்கள் (Victims) என்ற வகைமைக்குள் வருகிறார்கள். உடல்நோய், உளச்சிக்கல்கள், சமூக அழுத்தங்கள், உறவுகளின் இழப்பு, இருக்கவேண்டிய ஒன்றின் இன்மை போன்றவையால் பாதிக்கப்பட்டவர்கள். பெரும்பாலும் அப்பாதிப்புகளிலிருந்து மீளாமல் அவர்கள் மரிக்கிறார்கள் அல்லது காணாமல் போகிறார்கள். இருமுனை, முகம், பேராழத்தில், ஒற்றைகைத் துலையன் போன்ற கதைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பிரிவு, பீறிடும் காமம் மற்றும் மரணம் ஆகியவற்றை பல கதைகளில் அவதானிக்க முடிகிறது. ஆனால் காமம் குறித்த விவரணைகள் ஒற்றைத்தன்மையுடையவனாக, ஒரு தன்னிலையின் வேட்கையை கவித்துவமான மொழியில் சித்திரமாக்கும் குறிப்புகளாகவே எஞ்சுகின்றன. ஒரு மாற்றாக இன்னொருவன் கதையில் மட்டும் இது கதையோடு ஒட்டியதாக இயல்பாக இருக்கிறது. பல கதைகளில் ஆணின் பார்வையிலேயே காமம் பேசப்படுவது இதற்கான காரணமாக இருக்கக்கூடும். ஆனால் இது தூயனுக்கு மட்டுமல்ல, பலருக்கும் நேரக்கூடிய ஒரு விபத்தாகவே தோன்றுகிறது
நோய்மை சார்ந்த சித்தரிப்புகள் இக்கதைகளில் நுண்மையாக நிகழ்கின்றன. உதாரணத்திற்கு அமிர்தி ராஷனின் தந்தையின் நோய்மை குறித்த விவரிப்புகள், இருமுனையில் விபினின் பைபோலார் பிறழ்வு மற்றும் மரிலின் டிஸோசாவின் கணவனின் நோய்மை குறித்த விவரணைகள், முகம் கதையில் நாயகனின் தந்தையின் விபத்துக்குப் பின்னான அவஸ்தைகள், ஒற்றைக்கைத் துலையன் குறு நாவலில் இளம்பெண் ராசாத்தியின் அகவுலகச் சிக்கல்கள் என்று நோய்மையின் வாதையை வெகு அருகில் காண்கிறோம்.
இன்னொருவன் கதையில் வெவ்வேறு கலாச்சாரப் பின்புலங்களைச் சார்ந்த, கதை சொல்லும் தன்னிலை மற்றும் அமிர்தி ராஷன் ஆகியோரிடையேயான இணக்கம் தாங்கள் இருவருமே காணாமல் போனவர்கள் என்பதிலிருந்து தொடங்குகிறது. வினோதமான தோற்றத்தைக் கொண்டவனும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவனுமான அமிர்தியுடன் கதை சொல்லும் தன்னிலை தன் மனதின் வெகு ஆழங்களில் உணரும் இணையுணர்வையும் பிரிவுணர்ச்சி தோற்றுவிக்கும் வெறுமையைக் குறித்தும் இக்கதை பேசுகிறது.
நிழல் என்பது இலக்கியத்தில் வெகு பழைய படிமம். ஆனால் அதனைக் கொண்டு ஒரு நுட்பமான கதையை முயற்சித்திருக்கிறார் தூயன். இக்கதையை புனைவின் அதிதீவிர தளத்திற்கு எடுத்துச்செல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்திருந்தபோதும் பைபோலார் பிறழ்வை காமத்தையும் எதிர்பால் விழைவையும் பிரதானமாக ஊடுபாவி பேசியிருப்பதால் மனித மனங்களின் இன்னும் நுட்பமான பிரதேசங்களுக்கான பயணத்தை இக்கதை இழந்திருக்கிறது. ஆயினும் இந்த வடிவத்திலும் சிறப்பான கதையாகவே சொல்லலாம்.
முகம், மஞ்சள் நிற மீன் மற்றும் எஞ்சுதல் ஆகிய கதைகளை வாசிக்கும்போது கே.என்.செந்தில் கதையுலகத்தின் இன்னொரு கோணத்தை வாசிக்கும் ஒரு பழகிய உணர்வு தோன்றுகிறது. குறிப்பாக விளிம்புநிலை உலகத்தைப் பேசும் முகம் கதையை தூயனின் பெயரைத் தவிர்த்துவிட்டுப் வாசித்தால் அது கே.என் செந்திலின் கதை என்று ஒரு வாசகர் சொல்லக்கூடும். கடலும் கரையும் சார்ந்த ஒரு நிலவெளியை சிறப்பாகக் கோடிட்டுக் காட்டிய அதே வேளையில் புனைவை உருவாக்கும் முரண்களுக்குள் பயணிக்காமல் சிறுவர் உலகத்தின் காட்சி சித்தரிப்பாகவே நின்றுவிடுகிறது மஞ்சள் நிற மீன். இத்தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று எஞ்சுதல். தாய்மைப்பேறு தாமதடையும் ஒரு பெண்ணின் அகத்தனிமையை, திருவிழாக்காலத்தின் மகிழ்ச்சியான புறச்சூழலில் பொருத்திப் பேசியதோடு ஒரு கவித்துவமான முடிவையும் கொண்டிருக்கிறது.
நெஞ்சுக்குள் நின்று கனலும் சாதியக் கட்டுமானம் சார்ந்த வசவொன்றின் உக்கிர அழுத்தத்திலிருந்து தப்பிக்க பாலியல் தொழிலாளியை நாடும் ஒருவனுடைய முன்கதையையும் அவ்விரவின் நிகழ்வுகளால் அகச்சிக்கலுக்குள் சிக்கிக்கொள்ளும் அவனுடைய பின்கதையையும் பேசுகிறது தலைப்பிரட்டைகள். பேராழத்தில் கதையை வாசிக்கும்போது நாம் ஜெயமோகனின் கதையை வாசிக்கும் பிரமையை அடைகிறோம். மேலும் இக்கதை தாபத்தையும் காமத்தையும் ஒற்றைத்தன்மையாக பேசும் எளிய கதையாக மட்டும் நின்றுவிடுகிறது.
இருமுனை கதையின் இன்னொரு விரிந்த வடிவமாக ஒற்றைக்கைத் துலையன் கதையை வாசிக்கலாம். தொன்மப்பிரதியிலும் சமகாலப்பிரதியிலும் வரைய முயலப்பட்ட இணைகோடுகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறெதென்றாலும் “புனைவின் தர்க்கத்திற்குள்” இது சரியாக நிறுவப்படவில்லை. “அம்மோதல்கள் மனித பிரக்ஞைக்கு புலனாகாத வெளியில் நடப்பதால்” நமக்குப் புகைமூட்டமான தோற்றமே தெரிகிறது. துலையன்/இளுவத்தி மற்றும் ராசாத்தியின் கதைகளை இணைக்கும் நரம்பு வலுவனதாக தோற்றமளிக்காத போதும் இக்குறுநாவலும் இருமுனை கதையும் ஒரு வேறுபட்ட வாசிப்பனுபவத்தை தர முயல்வதை முக்கியமானதாகக் குறிப்பிடலாம்.
பல கதைகள் தன்னிலையின் பார்வையில் நிறைய விவரணைச் சித்தரிப்புகளுடன் சொல்லப்பட்டிருப்பதால் கதைகளில் இயல்பியக்கம் குன்றி வாசிப்பின்பம் சற்றே குறைவுபடுகிறது. ஒரு சிறுகதையின் இயல்பான வேகம் என்பது ஒரே அமர்வில் முழுக்கதையையும் வாசித்துவிட வாசகனைத் தூண்டுவது. ஆனால் தூயனின் சில கதைகளில் அத்தூண்டுதல் நிகழவில்லை. எங்கள் ஊர்ப்பக்கம் மண்ணுள்ளிப் பாம்பை மொன்னைப்பாம்பு என்போம். மிக மெதுவாக ஊரக்கூடியது. இக்கதைகள் சில மண்ணுள்ளிப் பாம்பு பயணிக்கும் வேகத்திலிருக்கின்றன. மடிக்காம்பு என்று பயன்படுத்த வாய்ப்புள்ள ஒரிரு இடங்களில் முலைக்காம்பு என்ற சொற்பிரோயகத்தைத் தவிர்த்திருக்கலாம்.
முன்னோடிகளின் ஆளுமைப்பாதிப்புகளிலிருந்து வெளிவந்து வாசிப்பின்பம் சார்ந்த சில செம்மையாக்கங்களை கைகொள்ளும்போது தூயனின் கதையுலகம் இன்னும் சிறப்பாகத் துலங்கும் என்று நம்பலாம்.
(நன்றி: குணா கந்தசாமி)