நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை ஏற்பதும், அவற்றைப் பின் தொடர்வதும் அவ்வளவு எளிதானதில்லை. மனதிற்கு உவப்பானதாக மாற்றங்கள் இல்லாமல் போகிறபோது மரபினில் ஐக்கியமாவதும், அதன் பெருமைகளை ஊதிப் பெருக்கிப் பேசுவதும் தவிர்க்க முடியாத செயலாகிப் போகிறது பலருக்கும். மாற்றத்தின் தன்மையை உணர்ந்து கற்க முயல்பவர்களே புதிய எல்லைகளை அடைகிறார்கள். இது எல்லாத் துறைகளையும் போலவே இலக்கியத்திற்கும் கூட பொருந்தும். அதிலும் குறிப்பாக புனைகதைகளுக்கு மிகவும் பொருந்தும். நூற்றைம்பது வருட புதின இலக்கியவரலாற்றில் புதிய, புதிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. வடிவத்தைக் கலைத்து அடுக்குவது, வடிவமேயில்லாத புதிய வடிவத்தை உருவாக்குவது எனப் புதிய எழுதுதல் முறைகள் இன்றுவரையிலும் புதிது புதிதாக எழுதப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. வடிவத்தில் மட்டுமில்லாது கருத்தியல் ரீதியாக பொருளடக்கத்திலும் கூட புதிய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது.
இப்போது யாரும் தனிநபர் ஒருவரின் கால வாழ்க்கையை படைப்பாக்கிட முயற்சிப்பதில்லை. மாறாக இனக்குழு வரலாற்றை எழுதிப் பார்ப்பது, நிகழ்ந்த சம்பவங்கள், ஆவணக் காப்பகங்களில் உறைந்திருக்கும் தகவல்கள் செவிவழி கர்ண பரம்பரைக் கதைகள் என யாவற்றையும் கலந்து கட்டி எழுதுவதும் நிகழ்கிறது. எழுதப்பட்டிருக்க வேண்டிய ஆனால் எழுதாமல் விட்டுச்சென்ற குறிப்புகளைக் கண்டறிந்து கலைப்படைப்பாக்கிடும் முயற்சிகளும் தொடர்ந்து இலக்கியப் புலத்தில் விலகிநின்று அறிவியல் புனைகதைகள் எழுதப்படுகின்றன. தமிழில் அறிவியல் புனைகதைகளின் வருகைக்கு ஐரோப்பிய வகை மாதிரிகளே காரணம் என்கிற அழுத்தமான நம்பிக்கை இங்கு யாவருக்கும் இருக்கிறது. எழுத்தாளர் சுஜாதா எழுதிச் சென்றவை மட்டுமே அறிவியல் புனைகதைகள் என்கிற முடிவ¤ற்கே தமிழ்வாசக உலகம் வந்து சேர்ந்திருக்கிறது அறிவியல் கருத்துக்களை சுவாரஸ்யத்திற்கும், அதிர்ச்சிக்குள்ளாக்குவதற்கு மட்டுமே கையாள்கிற தன்மை இன்று வரையிலும் நீடித்திருக்கிறது. நாவல் இலக்கியத் தளத்தில் மாற்றங்களை மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் எப்போதும் ஏற்படுத்தி வருகின்றன. அப்படியான மாற்றத்தின் திறவுகோல் தான் க்ரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கிற பாரன்ஹீட் 451 என்கிற அறிவியல் புனைவிலக்கியம். ரேபிராட்பரியின் நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் இலக்கிய வாசகர்கள் மட்டுமல்ல, தமிழில் புதிய எழுதுதல் முயற்சி கொண்ட எழுத்தாளர்களும் அவசியம் படித்தறிய வேண்டிய மிக முக்கியமான நாவல் ஃபாரன்ஹீட் 451.
ஃபாரன்ஹீட் 451 என்பது புத்தகங்களின் தாள் தீப்பற்றி எரியும் வெப்பநிலையாகும். கோடு போட்ட தாள் உனக்குக் கொடுக்கப்பட்டால் வேறு திசையில் எழுது என்கிற ஹ்வான் ரமோன் ஹிமெனஸின் வாக்கியத்திலிருந்து நாவல் துவங்குகிறது. ஒரு விதத்தில் மொத்த நாவலும் கூட புத்தகம், எழுத்து, புனைவு, வரலாறு ஆகியவற்றைக் குறித்ததுதான். இந்த உலகினில் எரித்து இல்லாமல் ஆக்க வேண்டியவை புத்தகங்களே என்கிற முடிவிற்கே அரசதிகாரவர்க்கம் வந்து சேர்கிறது. நாலந்தா பல்கலைக் கழகம் எரியூட்டப்பட்டு பௌத்த அறிவுச் சேகரங்கள் கருகிப் போனமையின் துயரம் இன்று வரையிலும் மனித குலத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யாழ் நூலகம் தீ வைத்து நிர்மூலமாக்கப்பட்டதற்குப் பின்னுள்ள இனவெறியின் சூட்சுமம் கூட அதிகாரம்தான். ஜெர்மனியின் பாசிச பயங்கரம் தெருவின் நடுவில் நூல்களைக் குவித்து வைத்து எரியூட்டிய போது கோயபல்ஸ் உலகமக்களைப் பார்த்து இதுவரையிலான யாவற்றையும் அழித்து விட்டோம். இனி நாம் புதிதாகத் தொடங்குவோம் என்று கொக்கரித்தான். பாசிசத்தை வீழ்த்திடும் ஆற்றல் மிக்கவை புத்தகங்கள் என்பதை அவர்கள் கண்டு கொண்டதால் தான் உலகெங்கும் அவற்றை இல்லாமல் ஆக்கியே தீர்வது என்கிற முடிவிற்கு பாசிச சக்திகள் இன்றும்கூட வந்து கொண்டிருக்கிறார்கள்.
நிகழ்வதை எழுதிச் செல்வது மட்டும் அல்ல எழுத்து. வரலாற்றின் பக்கங்களைக் கதையாடிக் கடப்பது மட்டுமல்ல புனைவெழுத்தாளனின் வேலை. மாறாக நிகழப் போவதை முன் உணர்ந்து படைப்பாக்குவதும் கலைஞனின் பணிதான். அப்படியான ஐம்பது வருடங்களுக்குப் பிறகு நிகழ்ந்து கொண்டிருப்பதான நிகழ்வினையே ரே பிராட்பரி தன்னுடைய ஃபாரன்ஹீட் 451 என்கிற நாவலில் எழுதிச் செல்கிறார். கைமோன்டாக் என்கிற தீயணைப்பாளனின் மனம் கொதித்து அலைகிற நாட்களே நாவலின் கதைக் களம். மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மனிதர்களும், விதவிதமான புத்தகங்களும் நாவல் எங்கும் நம்முன் கடந்து கொண்டேயிருக்கின்றன. மூன்று பாகங்களாக முன்வைக்கப்படுகிறது ‘மோண்டாக்’கின் வாழ்க்கை. நாவலுக்குள் அவன் வெளிப்படுகிற முதற்புள்ளியில் தீயூட்டி யாவற்றையும் எரிப்பவனாக வெளிப்படுகிறான். மூன்றாவது பாகத்தில் அரசாங்கத்தினால் தேடப்படுகின்ற குற்றவாளியாகி விடுகிறான்.
அரசின் ஆகச்சிறந்த பணியாளன் நான் என்கிற பெருமிதத்தோடு புத்தகங்களை எரியூட்டிய மோண்டாக, புத்தகங்களோடு தேசத்தை விட்டே தப்பித்து வெளியேறுகிறான். இந்த இரண்டு புள்ளிகளுக்கான இடைவெளிகளால் அறிவுச் சேகரங்களான புத்தகங்கள் எப்படி மனிதகுலத்தை மேம்படுத்திடும் தன்மை மிக்கது என்பதை மட்டுமல்ல, அதிகார வர்க்கத்திற்கு அச்சமூட்டும் ஆயுதமாகவும் புத்தகங்கள் எப்படி மாறும் தன்மை கொண்டவை என்பதையும் நாவலாசிரியர் எழுதிச் செல்கிறார். ஆசிரியருக்கு உதவி செய்திட க்ளாரிஸ் என்கிற பதினேழு வயதுப் பெண்ணும், முதுகிழவி ஒருத்தியும் நாவலுக்குள் வந்துப் போகிறார்கள்.
அறிவினை விரிவு செய்து சமூகச் சொத்தாக்கிடும் நூல்களை எரியூட்டி மகிழ்வதில் பெரும் விருப்பம் மிக்கவர்களாக தீயணைப்பாளர்களை உருமாற்றுகிறது பெரியடப்படாத அந்த நாட்டின் அரசதிகாரம். கைமோண்டாக் எனும் தீயணைப்பாளனுக்குள்ளும் இப்படியான ருசி வெறியாக இறங்கியிருப்பதையே அவனுடைய உரையாடல்கள் உணர்த்துகின்றன. புறாக்களின் இறக்கைகள் படபடப்பதைப் போல தீச்சுவாலையில் புத்தகங்கள் கருகி விழுவதைக் கண்டு மனம் மகிழ்ந்த குரூரமனம் பாசிசக் கருத்தியலின் குறியீடு தான். அதனால்தான் அரசு ஊழியனின் கடமையென தேடித் தேடி தீயிட்டு யாவற்றையும் அழிக்கிறான். வீடு எரிந்து தரைமட்டம் ஆகிற நொடியில் அங்கிருக்கிற புத்தகங்களில் வரிவரியாக ஓடிக் கொண்டிருந்த சொற்கள் யாவும் எரியூட்டப்பட்டு உருகி ஓடுகின்றன.
தீயணைப்பாளனான மோண்டாக் மட்டுமல்ல, அவனைப் போன்ற அரசு ஊழியர்களிடமும் கூட புத்தகங்கள் எப்படி அரசுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை ‘‘பியாட்டி’’ என்பவன் கூறிக் கொண்டேயிருக்கிறான் எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது இனியெதற்கு புத்தகங்கள் என அவர்களைத் தன்வயப்படுத்துகிறான். இவன் கோயபல்ஸின் பிம்பம் என்பதை நாம் நாவலை வாசிப்பதன் ஊடாக அறிந்து கொள்கிறோம். அவன் அவனுடைய ஊழியர்களுக்குச் சொல்கிறான். ‘‘ இது அரசின் கடமை, அதைவிட மிகவும் முக்கியமாக இது ஒரு சுவாரஸ்யமான தொழில், திங்கட்கிழமை மில்லோவை எரிக்க வேண்டும் புதன்கிழமை விட்மன், வெள்ளிக்கிழமை ஃபாக்னர், சாம்பலையும் கூட விட்டு வைக்கக்கூடாது அவற்றையும் கூட எரித்துவிட வேண்டும். இதுதான் அரசின் 2050ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ பிரகடனம்.’’
இப்படித்தான் நாவலின் காலம் முன்னும், பின்னும் நகர்ந்து கொண்டிருக்கிறது.
உலகத்தை நாமே இயக்குகிறோம் என நம்பிக் கொண்டிருப்பவர்களின் கனவுகளையும் கலைத்து மக்களுக்கான உலகினை வடிவமைத்திடும் ஆற்றல் மிக்கவை புத்தகங்கள். புத்தகங்களின் ஆற்றலை கவித்துவமான காட்சிகளால் நகர்த்திட எழுத்தாளன் க்ளாரிஸ் என்கிற பதினேழு வயதுப் பெண்ணொருத்தியை உருவாக்குகிறான். ஒரு விதத்தில் க்ளாரிஸ் வேறு யாருமல்ல. நாமேதான். புத்தகம் எரியூட்டப்படுவதைக் காண நம்முடைய மனதின் குரலையே க்ளாரிஸ் மோண்டாக்கிடம் சொல்லிச் செல்கிறாள். வரலாற்றை, கலையை அதிகாரத்தின் குறியீட்டை எடுத்தியம்பவில்லை அவள். பெய்யும் மழையை விலகி நின்று வேடிக்கைப் பார்க்கும் மனிதக் கூட்டத்தில் மழைத்துளியை நாவில் ஏற்றி ருசித்துக் கிறங்குகிறவள் அவள். எல்லா உயிரிகளிடமும் அன்பாயிருங்கள் எனச் சொல்லிடும் ஆற்றலை அவளுக்குப் புத்தகங்களே வழங்குகின்றன.
ட்வைன் மலர்களுக்கு மனிதர்களின் மனதின் தன்மையை நிர்ணயிக்கும் ஆற்றல் மிகுந்திருக்கிறது என மோண்டாக்குடன் விளையாடிய நாளில், அந்த விளையாட்டு அடைந்த உச்சமே அவனை வேறு ஒருவனாக மாற்றுகிறது. தலைமுதல் கால்வரையிலும் பரீட்சித்த போதினிலும் கூட அன்பற்றவராக இருக்கிறீர்கள் என்கிறாள் அவள். ஒரு அறிவியல் புனைகதைக்குள் மாயத்தையும், மனதின் வித்தையையும் எழுதிச் செல்கிற ஆற்றல் மிக்க எழுத்தாளன் ரே பிராட்பரி. அதனால்தான் க்ளாரிஸை இப்படிப் படைத்திருக்கிறார். யாரும், யாருடனும் பேசிக் கொள்ள முடியாத பரபரப்பும், தீவிரமான இயக்கமும் கொண்டவர்கள் மனித உயிரிகள் என்கிற நம்பிக்கை அவர்களை அவர்களுக்குள் மட்டுமே சுருங்கிப் போகிறவர்களாக உருமாற்றுகிறது.
மாறாக புத்தகக் காதலியான க்ளாரிஸ் இந்த உலகினில் எப்போதுமே யாருடனாவது பேசிக் கொண்டேயிருக்கிறாள். பூச்சிகளும், தாவரங்களும், விலங்குகளும் அவளின் நேசத்திற்கும், அன்பிற்குமுரியதாகின்றன. மோண்டாக்கைப் பார்த்துக் கேட்கிறாள். ‘‘நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா?” இந்தக் கேள்வியே அவனை புத்தகங்களை நோக்கித் தள்ளுகிறது.
மாறியிருக்கும் இந்த உலகத்தை அவன் பார்க்கும் விதமே வேறு ஒன்றாகிவிடுகிறது. க்ளாரிஸ் வீட்டினுள் அப்பாவும், அம்மாவும், மாமாவும் பேசுகிறார்கள். தீராது பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். மாறாக மோண்டாக்கின் வீட்டில் மனிதர்களுக்குப் பதிலாக சுவர்த் தொலைக்காட்சியின் கதாபாத்திரங்கள் தோன்றிப் பேசிக் கொண்டேயிருக்கின்றன. நான்கு சுவர்களிலும் இருந்து அரட்டையும், விற்பனையும் நடந்து கொண்டேயிருக்கிறது. அதன் பிறகு பற்பசை விளம்பரத்தைப் பார்த்து தெறித்து ஓடுகிறான். அப்போது துவங்கிய அந்த ஓட்டம் நிற்கவேயில்லை. தீயணைப்பாளர்கள் இப்போது இருப்பதுபோல புத்தகங்களை எரியூட்டும் பணியினை செய்தவர்கள் அல்ல. எரியும் தீயை நீருற்றி அணைத்தவர்கள் என்கிற நிஜம் அறிந்த பிறகு செல்லும் இடங்களில் எல்லாம் புத்தகங்களை எடுத்து ரகசியமாகப் படிக்கத் துவங்குகிறான்.
ஷேக்ஸ்பியரும், விவிலியத்தின் பழைய புதிய ஏற்பாடுகளும், மார்க்ஸும், தத்துவங்களும் அவனை புத்தகங்களோடு கட்டிப் போடுகிறது. அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருந்தும், மிருக உலோக வேட்டை நாய்களின் மோப்ப எல்லையிலிருந்தும் தப்பித்து புத்தகங்களோடு பயணிக்கிறான். அவன் கொண்டு வரப்போகும் புத்தகங்களுக்காக க்ளாரிஸோடு நாமும் காத்திருக்கிறோம். எரியூட்டி அணைந்து போக புத்தகங்கள் வெற்றுக் காகிதங்கள் அல்ல என்பது மட்டும் வாசகனுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கட்டும்.
(நன்றி: புத்தகம் பேசுது)