ஒரு நூலை வாசிப்பது எளிதாக இருக்கலாம். ஒரு கட்டுரையையோ அல்லது ஒரு கவிதையையோ கூட. தன் சுவாசத்தின் எச்சங்களை விழுங்கிக்கொண்டிருக்கும் ஒரு வயோதிகனின் நினைவுப்பொதிகளை கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பதென்பது அவ்வளவு எளிதானதல்ல. அதை விடவும் கடினமானது, அந்தக் குறிப்புக்களையெல்லாம் ஒன்று சேர்த்து நூலாக்கிவிடுவதென்பது. சசி வாரியரின் அந்த மெனக்கெடுதல்தான், ‘The Hangman's Journal' அல்லது தமிழில், இரா.முருகவேளின் திறனில், ‘தூக்கிலிடுபவரின் குறிப்புக்கள்’.
1940இலிருந்து திருவிதாங்கூர் மன்னனுக்காக தூக்கிலிடுபவராக ‘ ஆரட்சராக’ பணி புரிய ஆரம்பித்து, முப்பது வருடங்களில் 117 பேரின் இறப்பை பதிவு செய்த ஜனார்த்தனன் பிள்ளையிடமிருந்து அவரின் மனக்குமுறல்களை, இந்த சமூகத்தை நோக்கிய கேள்விகளை, சிறுபிராயத்திலிருந்து எல்லோர் மனதிலும் வேதங்களைப் பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், மரணத்தைப் பற்றியும் திணிக்கப்படுகின்ற, காலம் செல்லச் செல்ல காலாவதியாகின்ற நம்பிக்கைகளைப் பற்றியும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட ஒரு வயோதிகனின் பார்வையிலிருந்து பதிவு செய்துள்ள பணி அற்புதமானது.
தீண்டத்தகாதவர்களை சற்றே ஒதுக்கி வைத்துவிடலாம். இன்னார்தான் தூக்கிலிடுபவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டால் அந்நபரிடம் பாசாங்கின்றி பழகிட எத்தனை தூரம் நம்மால் இயலும்... தன்னைத் துரத்துவது மட்டுமே ஒட்டு மொத்த சமூகத்தின் மனக்கணக்கு என நிமிர்ந்து சொல்கிறார், தன்னுடைய குழந்தைகளின் பசியை எண்ணி தேர்ந்து கொண்ட பணியால் வாழ்நாள் முழுதும் சங்கடங்களை, அவமானங்களை, தாழ்வு மனப்பான்மையை, அலட்சியங்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பதிவு செய்கிறார்.
ஆரம்பத்தில் வெறுமனே கயிறுகளின் அளவைப் பற்றியும், அதன் கணக்கைப் பற்றியும் ஆரம்பிக்கும் அவரின் நினைவேடுகள் கடைசி அத்தியாயம் வர வரத்தான் முழுதும் விரிகிறது. வயதின் காரணத்தாலும், அந்த வயது வரை ஒவ்வோர் இரவும் தன்னைத் துரத்தி வந்த மன சஞ்சலங்களாலும், எல்லா எண்ணங்களையும் இறக்கி வைப்பது அத்தனை எளிதாக அமையவில்லை. இந்த நூல் முழுதும் அந்த முதியவரின் வாஞ்சையும், புழுக்கமும், சமூகத்தில் தானும் ஒரு அங்கமாக வாழவேண்டும் என்னும் ஏக்கமும் தொடர்ந்து கொண்டே வருகிறது. அவரின் கனவுகளை விவரிக்கும் இடங்களிலும், என்னுடன் முதன்முதலில் கை குலுக்கிய மனிதர் இவர் என சசி வாரியரை அவர் அடையாளப்படுத்தும் இடத்திலும் மனம் நடுங்குகின்றது. எப்படி இதையெல்லாம் இத்தனை காலம் புதைத்துக்கொண்டு சுமந்தார் என...
மாஷ் ஒரு உன்னதமான நண்பர். எல்லா மனிதருக்கும் இப்படியொரு நட்பு தேவையாயிருக்கிறது. ராமைய்யன் குருக்கள் போல உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் கிட்டுமா தெரியவில்லை. கொலை செய்வதை கலையாக பார்க்கும் சமூகத்தை, கொலை செய்வதற்காக பயங்கர கருவிகளை உருவாக்கிய சமூகத்தை, கொலைப்பழியை யார் மீதும் சுமத்தாமல் காலத்தின் பெயரால் (கூட்டு மனசாட்சியின் பெயராலும்??) நழுவச்செய்யும் உபாயங்களை கண்டுபிடித்தவர்களை எனப் பலதரப்பட்ட காட்சிகளும் இந்த நூலில் நமக்கு தெரிகின்றது. வாழ்வின் அரசியல்களிலிருந்து ஓடி ஒளிந்தவர்கள் மரணத்தின் அரசியலிலிருந்து கட்டாயம் தப்பிக்க இயலாது என்றே படுகிறது. என்னதான் அரசருக்காக பணி செய்பவராக இருப்பினும், அரசாங்கத்திற்காக பணி செய்பவராக இருப்பினும், இறுதியாக தூக்கை கைதியின் கழுத்தில் இறக்கிடும்போது, ‘நான் இதை மனமுவந்து செய்யவில்லை, அரசிற்காகத்தான் செய்கிறேன்..’ என அமைதியாகக் கூறிக்கொள்வேன் என்னும் வரியில், எத்தனை கொடுமையான மன உளைச்சலுக்கு அவர் ஆட்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகின்றேன். அதே போல மரணதண்டனைக் கைதி ஜேம்ஸ், ஒவ்வொருவரிடமும், ‘நீங்கள் ஏன் என்னைக் கொல்கிறீர்கள்... உங்களுக்கு நான் என்ன செய்தேன்..’ என்றும் கேட்டதை நூலின் இறுதியில்தான் பதிக்கிறார் எனில் உளவியல் ரீதியாக எத்தனை பெரியதொரு துன்பத்தை அவரைப் போன்றோருக்கு இந்த சமூகம் தந்துள்ளது...?. இவர்களில் எல்லோருமே குற்றவாளிகளல்ல என எனக்குத் தெரியும் என்கிறார், சட்டம் சரியானதாகச் செயல்பட்டிருந்தால் இவர்களில் ஒருவர் கூட கழுவிலேற்றப்பட்டிருக்க மாட்டார் என்கிறார். முப்பது வருடங்களாக அது எத்தனை பெரிய வலியைத் தந்திருக்கும் என்று சற்றே எண்ணிப்பார்க்க வேண்டும். தன்னுடைய மரணத்தின் வெகு அருகில் இந்த நூல் ஒரு வடிகாலாக ஆறுதல் தந்துள்ளது அவருக்கு.
நூல் முழுக்க ஜனார்த்தன் பிள்ளையின் வாழ்வையும் மனக்கொதிப்புக்களையுமே சுற்றி வந்தாலும், அக்கால வறுமையின் நிஜத்தையும், சாதியின் கோரத்தையும், அதிகாரத்தின் அலட்சியங்களையும் ஆங்காங்கே தோலுரித்துக்காட்டுகின்றது. நிமிர்வதும் தாழ்வதுமாக ஒரு ஆன்மாவின் ஊசலாட்டங்கள், வடுக்கள் என அத்தனையையுமே பதிவு செய்துள்ளது. ஜனார்த்தன்பிள்ளையுடையது மட்டுமல்ல, ஒரு சாதாரண, மத்திய வர்க்க பள்ளிக்கூட ஆசிரியரின் வாழ்வையும், ஒரு சிறிய கோவிலின் பூசாரியின் வாழ்வையுங்கூட காட்சிப்படுத்திக்கொண்டே நகர்கிறது. உளவியல் ரீதியாக மிகவும் தாக்கத்தை தரக்கூடிய நூல் இது.
இதே போன்றதொரு களத்தில்தான், மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற ‘ஆரச்சர்’ நாவலும். ஆனால் அது ஒரு பெண் ஆரச்சரை மையப்படுத்தி எழுதப்பட்ட தனிச்சிறப்பு.
ஒரு சாமான்யனாக, ஒரு குடியுரிமைச் சமூகத்தில் தண்டனை பெற்ற கைதிகளை தூக்கிலிட்டதையே தன் வாழ்நாளெல்லாம் மனம் புழுங்கித் தவித்த ஒரு மனிதனின் கதையே இத்தனை ஆழமானதெனில், லதீஃப் யஹியாவின் ‘The Hangman of AbuGhraib' எத்தனை ஆழமாக இருக்கக்கூடும் என எண்ணிப்பார்க்கிறேன். எந்த ஒரு குற்றமும் செய்யாத அப்பாவிகளை சதாமுக்காகவும் பின்னர் ஒபாமாக்காகவும் ஆயிரக்கணக்கில் கழுவிலேற்றிய அந்த மனிதனின் மனதில் என்ன இருக்கக்கூடும்...???
ஜேம்ஸைப் பற்றிய குறிப்பினைப் படித்த போது நினைத்துக்கொண்டேன், அப்சல் குருவையும், யாகூப் மேமனையும் தூக்கிலிட்டவரிடமும் ஒரு நேர்காணல் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் ஏன் கொல்லப்பட்டனர், எதற்காக அவர்களை தூக்கிலிட்டீர்கள் என........
//அந்த இடத்தின் அடையாளம் எனக்கு நன்றாகத் தெரிகிறது. அங்கே எல்லோரும் வந்த காலடித் தடங்கள் உள்ளன. சென்றதன் அடையாளமில்லை....//