வேகமாக சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்து செல்லும் மனித முகங்களில் ஒன்று உங்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்கிறது. கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்ட உங்கள் பால்யகால ஆத்ம நண்பன்தான் அது. உடனே என்ன செய்வீர்கள்? ஓடி போய் கட்டித்தழுவி, நலம் விசாரித்து, வீட்டுக்கு அழைத்து நட்பை புதுப்பித்துக் கொள்வீர்களா? அல்லது கண்டும் காணாதது போல் அவ்விடத்தை விட்டு நழுவி விடுவீர்களா? இந்த இடத்தில் உங்கள் செய்கையை பெரிதும் தீர்மானிக்கப்போவது உங்களின் தற்போதைய வாழ்க்கை நிலைதான் என்ற யதார்த்தத்தை விவரிப்பதே சா.கந்தசாமி எழுதிய “தொலைந்து போனவர்கள்” நாவல்.
சிறிய கிராமம் ஒன்றில் நான்கு நண்பர்கள். அதில் படிப்பிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கியவனாக இருக்கிறான், கணித ஆசிரியரால் ‘சுழி’ என்றழைக்கப்படும் தாமோதரன். சங்கரன் எப்போதும் முதல் மாணவனாக இருக்கிறான். அடுத்தபடியாக வேணுகோபால். கடைசியாக ராமசாமி.
பத்தாவதில் சங்கரனும், வேணுகோபாலும் பாசாகி விட, தாமோதரனும், ராமசாமியும் தோல்வியை தழுவுகிறார்கள். அதன்பின் திசைக்கொருவராய் பிரிந்து போகிறார்கள். இவர்களில் ஒருவனை சாலையில் எதேச்சையாக சந்திக்கும் தாமோதரன், அவனையும் அழைத்துக்கொண்டு மற்ற இருவரையும் தேடிக் கண்டுபிடிக்கிறான். அவர்களோடு தன் பால்யத்தின் நினைவுகளை அசைபோட ஆசைப்பட்டு அவர்களை ஒரு குறிப்பிட்ட நாளில் தன் வீட்டில் விருந்துண்ண அழைக்கிறான். அவர்கள் வந்தார்களா, தாமோதரனுக்கு தன் பழைய நண்பர்கள் கிடைத்தார்களா என்பதே கதை.
பொதுவாக, பணக்காரனாகிவிட்டவன் பழைய நட்பை மறந்து போவான், தன்னைவிட பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களை மதிக்கமாட்டான் என்ற பொது சிந்தனையை உடைத்து, இந்தக் கதையில் நால்வரில் செல்வந்தராக இருக்கும் தாமோதரனுக்கே பழைய ஞாபகங்கள் அதிகம் இருப்பதாக கதாசிரியர் கட்டமைத்திருப்பது சின்ன ஆசுவாசம். சின்ன சின்ன விஷயங்கள்கூட அவன் நினைவில் இருக்கின்றன. தனக்கு சங்கரன் சைக்கிள் கற்றுத்தந்தது, பள்ளியின் கடைசி நாளன்று நண்பன் வீட்டில் விருந்துண்டது என பல நல்ல நினைவுகள் தேக்கி வைத்திருக்கிறான்.
தாமோதரனின் குணத்தைச் சொல்ல ஆசிரியர் தனியே மெனக்கெடவில்லை எனினும் சின்னச் சின்ன நிகழ்வுகள் மூலம் அவனை பற்றின பிம்பத்தை நமக்குள் உருவாக்கிவிடுகிறார். அவன் தன் வெளிநாட்டு காரை சிலாகிப்பதை காட்சிப்படுத்தும் அதே நேரத்தில், சங்கரன், அதை ஒவ்வொரு முறையும் அறைந்து சாத்துவதையும் தவராமல் குறிப்பிடுகிறார். அதனைக் கண்டித்து தாமோதரன் பேசப்போகிறான் என்ற பதைபதைப்பு ஒவ்வொரு முறையும் நம்முள் ஏற்படுகிறது. ஆனால் ஒரு தடவை கூட தாமோதரன் கண்டு கொள்ளவில்லை என்பதாலேயே அவன் அன்பின் உண்மைத்தன்மை உணர்த்தப்பட்டு அந்த கதாப்பாத்திரத்தின் மீது நமக்கு மரியாதை கூடுகிறது.
ஆனால், சங்கரனோ தாமோதரன் தன் தற்போதைய பணக்காரத்தன்மையை, தன் ராஜபோக வாழ்க்கை பற்றி பெருமையடித்துக் கொள்வதற்காகவே தன்னோடு பழகுவதாக நினைத்துக் கொள்கிறான். அதனாலேயே அவன் தாமோதரனிடமிருந்து விலக முற்படுகிறான்.
என்னதான் நெருங்கிப் பழகிய நண்பனாக இருந்தாலும், பின்னாளில் அவன் வாழ்க்கையில் ஜெயித்து, தங்களை விட மிக மிக வசதியாக இருந்தால், மற்றவர்க்கு அதற்கான காரணம் கற்பிப்பது தான் எவ்வளவு எளிதானது? அவன் கள்ள நோட்டடித்து பணக்காரனாகி விட்டதாக வேணுகோபால் சொன்னதை எவ்வித கேள்வியுமில்லாமல் சங்கரன் ஏற்றுக்கொள்ளும் இடம், ஒரு சுட்டெரிக்கும் உளவியல். அவர்கள் தங்களுக்குள் புலம்புகிறார்கள், கடன் வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் தாமோதரன் முன் வேலையில்லாத சங்கரன், பிஸியாக இருப்பதாக காட்டிக்கொள்ள முற்படுகிறான். பணத்தேவையில் இருக்கும் வேணுகோபால் சவடால் பேர்வழியாக தன்னை முன் நிறுத்துகிறான். பரிதாபப் பார்வை கூட சற்று மேலிருந்து விழுந்தால், இருக்கும் கொஞ்ச நஞ்ச சுயமரியாதையையும் அவர்கள் இழந்துவிடக்கூடும்.
கதையின் முடிவில் தாமோதரன் வாயிலிருந்து தன்னிச்சையாக வரும் வார்த்தைகளில் அவன் அயற்சியை புரிந்துகொள்ள முடிகிறது. யூகிக்க முடிகிற முடிவு தான் எனினும், வேறு எப்படி முடித்திருந்தாலும் அது யதார்த்த மீறலாகவே இருந்திருக்கும். மேலும் இது சுவாரஸ்யமான முடிவு நோக்கி பயணிக்கின்ற த்ரில்லர் கதையல்ல. நம்மோடு பொருத்திப் பார்த்துகொள்ள முடிகிற, நம்மையும் கேள்விக்கு ஆட்படுத்துகின்ற, புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வாழ்க்கைப் பாதையில் தொலைத்தவற்றை, தொலைத்தவர்களை நினைக்கத் தூண்டும் வாழ்வியல் சித்திரம்.
ஒருகாலத்தில் ஆத்மார்த்தமாக நேசித்த சிலரைக்கூட காலப்போக்கில் தொலைத்து விடுகிறோம். ஆனால், சிலரிடமிருந்து பிடிவாதமாக தொலைந்து போகிறோம். ஏன் என்று நிதானித்து பார்த்தால், கிடைக்கும் உண்மையை எதிர்கொள்ள கொஞ்சம் கூடுதல் திராணி வேண்டும் தான்.
கதையில் யாரும் தீயவர்கள் அல்ல. அவரவர் வாழ்க்கையை அவர்கள் செயல்களே தீர்மானித்திருக்க, அதன் பின் வரும் அவர்கள் செயல்களை அவ்வாறு தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கையே தீர்மானிக்கிறது. கதையில், நால்வரில் ஒருவர் மட்டுமே செல்வந்தனாக, மற்ற மூவரும் வாழ்வில் அடிமட்டத்தில் இருக்கிறார்கள். ஒருவேளை அதில் ஒருவராவது தாமோதரனுக்கு சமமான உயரத்தை அடைந்திருந்தால், அவர் தாமோதரனை எவ்வாறு அணுகியிருப்பார் என்ற சிந்தனைக்குள் சென்றால், நமக்கும் சுவாரஸ்யமான கற்பனைகள் கிட்டுகின்றன.
உரையாடல்கள் கடந்தகாலத்திலும், நிகழ்காலத்திலுமாக மாறி மாறி நிகழ்கின்றன. எனினும் எவ்வித குழப்பமுமின்றி உரையாடலின் சாராம்சத்தையும் தொனியையும் வைத்து காலகட்டத்தை கணிக்கமுடிவது கதாசிரியரின் வெற்றி என்று தான் சொல்லவேண்டும்.
(நன்றி: ஆம்னி பஸ்)