கோயம்புத்தூரிலும் கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச நாடகத் திருவிழாவிலும் திருநங்கை ரேவதியின் தனிநபர் நாடகம் பலரது கவனத்தை ஈர்த்தது. தன் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களையே காதல், பிரிவு, சோகம், மகிழ்ச்சி, பாசம் எனப் பல்வேறு உணர்ச்சிகளின் கலவையோடு வெளிப்படுத்தினார் ‘வெள்ளை மொழி’ ரேவதி.
மாற்றுப் பாலினத்தவரின் உரிமைக்காகச் செயல்பட்டுவரும் ‘சங்கமா’ அமைப்பில் 1999-ல் உதவியாளராகச் சேர்ந்து படிப்படியாகப் பல பொறுப்புகளை ஏற்று அதன் இயக்குநராகவும் சில காலம் பணியாற்றிவர் ரேவதி. தற்போது சமூகச் செயல்பாட்டாளராக இருக்கும் ரேவதி, மாற்றுப் பாலினத்தவர்களான திருநம்பிகளைப் பற்றிய புரிதல் சமூகத்தில் பரவலாக இல்லாமல் இருப்பதை உணர்ந்தார். திருநம்பிகளைப் பற்றிய புரிதலைச் சமூகத்தில் ஏற்படுத்த அவர்களைக் குறித்த ஆவணங்களைத் தமிழில் எழுதினார். இதன் ஆங்கில வடிவம், ‘லைஃப் இன் டிரான்ஸ் ஆக்டிவிசம்’ (மொழிபெயர்ப்பு: நந்தினி முரளி). ரேவதி எழுதிய ஆவணத் தொகுப்பு தமிழில் புத்தகமாக வெளிவரவிருக்கிறது.
“எங்க அப்பா பெரிய இம்சையெல்லாம் குடுத்தாரு. அவரோட என் தம்பியும் சேர்ந்துக்கிட்டான். ‘நீ இப்படி அரவாணியா ஆயிட்டு எங்க வம்சத்தையும் குடும்பத்தையும் கெடுக்க வந்தையா? எங்களோட மதிப்பைக் கெடுக்க வந்தையா?’ன்னு ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு என்னைப் பேசாத பேச்சு இல்லை. அது மட்டுமில்ல, எங்க அம்மா வயலுக்குப் போன பிறகு ‘அவங்க திரும்பி வீட்டுக்கு வர்றதுக்குள்ள நீ செத்துப் போயிடணும்’ன்னு விஷத்தைக் கொடுத்து என்னைக் குடிக்கச் சொல்லிக் கொடுமைப்படுத்தினாங்க”
இது ஒரு திருநங்கையின் கதை. இப்படிச் சமூகத்தில் வாழும் பல திருநங்கைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை முதன்முதலாகப் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்த புத்தகம் ‘உணர்வும் உருவமும்’. அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகள் நிறைந்திருக்கும் இந்தப் புத்தகம், 2005-ல் வெளியானபோது பல்வேறு தளங்களில் விவாதங்களை எழுப்பியது. குடும்பம், பள்ளிக்கூடம், நெருக்கமான உறவுகள், மதம், சாதி என அனைத்தும் திருநங்கைகளுக்கு எதிராக அணிதிரளும்போது, திருநங்கை சமூகமே எப்படி அவர்களுக்கு ஆதரவாக அமைகிறது என்பதைச் சொன்ன முதல் புத்தகம் என்ற வகையிலும் இந்தப் புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் புத்தகத்தின் தொகுப்பாசிரியரான ரேவதி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையை இதில் பதிவுசெய்திருந்தார்.
நாமக்கல்லைச் சேர்ந்த ரேவதியும் திருநங்கைகள் சந்திக்கும் அனைத்துவகையான பிரச்சினைகளையும் எதிர்கொண்டிருக்கிறார். வீட்டினரின் புறக்கணிப்பையும் அவமானத்தையும் தாண்டி, தனக்கெனத் தனி அடையாளம் பதித்திருக்கிறார்.
“உணர்வும் உருவமும் புத்தகம்தான் முற்போக்கு எழுத்தாளர்களிடமும் பல்வேறு கலை - பண்பாட்டுக் குழுக்களிடமும் என்னைக் கொண்டு சேர்த்தது. தமிழகத்தின் பல இடங்களிலும் சமூகத்தின் பல பிரிவுகளிடையே இந்தப் புத்தகம் திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த வேளையில்தான் பெங்குயின் பதிப்பகத்தாரிடமிருந்து இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் கொண்டுவருவதற்கு எனக்கு அழைப்பு வந்தது.
அப்போது நான் என் சுயசரிதையை எழுதிக்கொண்டிருந்தேன். அதையே ஆங்கிலத்தில் ‘எ ட்ரூத் அபவுட் மீ’ என்னும் பெயரில் 2008-ல் பதிப்பித்தனர். அது தமிழில் ‘வெள்ளை மொழி’ எனும் பெயரில் 2012-ல் வெளிவந்தது. தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டது” என்று சொல்கிறார் ரேவதி.
இந்தப் புத்தகம் மதுரை அமெரிக்கன் கல்லூரி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், லண்டன், சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பாலினம் குறித்த பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கிறது. இதையொட்டி லண்டன், சுவிட்சர்லாந்து பல்கலைக்கழகங்களுக்கு இவர் சென்றுவந்திருக்கிறார்.
“கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் திருநங்கைகளுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைத்தால் அவர்களாலும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ முடியும். இதற்கு அரசாங்கமும் ஒத்துழைக்க வேண்டும்” என்கிறார் வெள்ளைச் சிரிப்போடு ரேவதி.
நவீன இலக்கியச் சூழலில் மூன்றாம் பாலினத்தவரின் உலகத்தை மிக அருகிலிருந்து தரிசிக்க உதவியது ‘வாடாமல்லி’ நாவல். 90-களிலேயே பாலினச் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவரை மையப்படுத்தி எழுத்தாளர் சு.சமுத்திரத்தால் அவர்களால் எழுதப்பட்ட தொடர் கதை ‘வாடாமல்லி’. சுயம்பு என்னும் தனிப்பட்ட ஒருவரைப் பற்றிய கதையாக இல்லாமல் பாலினச் சிறுபான்மையினரின் வாழ்க்கையையும் அப்படிப் பிறப்பவர்களை குடும்பமும் சமூகமும் எப்படி நடத்துகின்றன என்பதையும் இந்த நாவல் ஆவணப்படுத்தியிருக்கிறது.
(நன்றி: தி இந்து)