திரை சரியும் காலம்

திரை சரியும் காலம்

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி. சிவகங்கையில் பிரஹலாதன் நாடகம் முடிந்து பட்டாபிஷேகம் நடக்கும் நேரம். சிம்மாசனத்தில் பிரஹலாதனாக நடித்த சிறுவன் அமர்ந்திருந்தான். அன்று நாலைந்து பாடல்களை சிறப்பாகப் பாடி விட்டமையால் நிறைய கைத்தட்டல்களைப் பெற்றிருந்தான்.
நாடகம் முடிந்து மங்களம் பாடுவதற்கு முன்பு பரிசுகள் வழங்குவது அக்கால வழக்கம். அது ஒரு வகை வசூல் முறை. கட்டணம் வைத்துத்தான் கொட்டகையில் நாடகம் போடுவார்கள். அதன் பின்னர் புகழ்மொழிகளால் ஊருக்குள் உள்ள பெரிய மனிதர்களின் அகந்தையை தூண்டிவிட்டு மேடைஏறி பரிசுகள் தரச்செய்வார்கள். அதில் போட்டியை ஏற்படுத்துவதும் சீண்டிவிட்டும் ஏற்றிவிட்டும் பெரும் பரிசுகளை தரச்செய்வதும் நாடகக்காரர்கள் நன்றாகவே அறிந்த கலை.

ஒவ்வொருவராக மேடைக்கு வந்து பரிசுகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது பின்பக்கம் மேடையைக் கழற்றும் வேலை நடந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் மேடை முழுக்க முழுக்க காடாத்துணித்திரைகளில் வரையப்பட்டதாக இருக்கும். பெரிய மூங்கில்களில் அந்த திரைகளைக் கட்டி அப்படியே மேலேற்றி தொங்கவிடுவார்கள். காட்சி மாற்றத்துக்கு ஏற்ப ஒரு திரைமீது அடுத்த திரை சரியும்.

பிரம்மாண்டமான அரங்கத்திரைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்த காலம். புராண நாடகங்களுக்கு அரச சபை, தேவலோகம், நந்தவனம், அரண்மனை, போர்க்களம், காடு என்று விரிவான திரைகள் தேவையாக இருக்கும். மேலும் புராண நாடகங்களில் தேவர்கள் பறப்பது மலைகள் விலகுவது போன்று பலவகையான தந்திரக் காட்சிகளும் தேவைப்படும். அவற்றை மேலே எழுப்பிய மூங்கில் மீது கம்பி கட்டி பின்னால் நிற்பவர்கள் இயக்குவார்கள்.

அக்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது .ஓர் ஊரில் நாடகம் கடைசிநாள் நடந்து முடியும்போது மங்களம் பாடியதுமே அத்தனை ரசிகர்களின் கண்முன்னாலும் மொத்த அரங்கையும் கழற்றி கீழே போட்டுவிடுவார்கள். அதற்காக தேவையில்லாத திரைகளை பின்னாலிருந்து கழற்றிக்கொண்டே வருவார்கள். கடைசியில் பரிசுகள் வழங்கப்படும்போது இரண்டு திரைகள் மட்டுமே மிச்சமிருக்கும். பின்னால் திரைகள் கழற்றப்பட்டு தடால் தடாலென்று விழும் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

சட்டென்று சிறுவனின் அப்பா கடும்பீதியுடன் பக்கவாட்டில் தோன்றி ஏதோ கூவினார். பாண்ட் வாத்திய இசையில் அவனுக்கு அவர் சொல்வது கேட்கவில்லை. அவன் என்ன என்று கேட்டபடி எழுந்ததுமே அவன் தலைக்குமேல் இருந்த மிகக் கனமான தர்பார் திரை அதன் கனத்த மூங்கிலுடன் கழற்றப்பட்டு தடாரென்று விழுந்தது. சிறு இடைவெளியில் அவன் உயிர் பிழைத்தது மறு பிறவி. அப்பா பாய்ந்து வந்து மகனை அள்ளி மார்போடு சேர்த்துக்கொண்டு கதறி அழுதார்.

அந்தச்சிறுவன் சிறுவர் நாடக இயக்கம் வழியாக உருவான மாபெரும் நடிகர்களில் ஒருவரான ஔவை டி.கெ.சண்முகம். நாகர்கோயிலைச் சேர்ந்த நாடக நடிகரான டி.எஸ்.கண்ணுசாமிப்பிள்ளையின் நான்கு மகன்களில் மூன்றாமவர். அவரது பிற மகன்கள் டிகெ.சங்கரன். டி.கெ.முத்துசாமி, டி.கெ.பகவதி. 1918ல் சங்கரதாஸ் சுவாமிகளின் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபாவில் அவர் தன் மகன்களுடன் சேர்ந்தார். அங்கே நாடகப்பயிற்சி பெற்ற டி.கெ.சண்முகமும் சகோதரர்களும் பின்னர் சொந்தமாக ஸ்ரீ பால சன்முகானந்த சபா சபா ஆரம்பித்து தமிழகத்தின் வெற்றிகரமான நாடகக்குழுவினராக ஆனார்கள்.

அவர்கள் நடத்திய ஔவையார் நாடகத்தில் ஔவையாராக நடித்ததன் மூலம் டி.கெ.சண்முகம் ஔவை சண்முகமாக ஆனார். திரைப்படத்துறையில் நுழைந்து சிறந்த குணச்சித்திர நடிகராகப் புகழ்பெற்றார். 1972ல் வெளிவந்த அவரது சுயசரிதையான ‘எனது நாடக வாழ்க்கை’ தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த சுயசரிதைகளில் ஒன்றாக இப்போது கருதப்படுகிரது. சீதை பதிப்பக வெளியீடாக இப்போது கிடைக்கிறது.

அக்கால நாடகம் எப்படி இருந்திருக்கும்? பல நாடகங்களை வாசித்துப் பார்க்கையில் அவை மூன்று கலைகளின் கலவை என்ற எண்ணம் ஏற்படுகிறது. தெருக்கூத்து முதல் பாதிப்பு. வண்ணத்திரைச்சீலைகள் பெரிதும் பயன்படுத்தப்பட்ட பார்ஸி நாடகம் இரண்டாவது. மூன்றாவது, தமாஷா என்ற கலை. இருவர் மாறி மாறி கிண்டலும் கேலியும் போட்டிவிவாதமுமாக பேசிக்கொள்வது. இன்றும் இக்கலை மதுரையில் உண்டு. உரையாடலில் ஆபாசம் ஓர் அம்சம்.

அக்கால நாடகங்கள் பெருவாரியான ரசிகர்களின் தரத்துக்கே அமைக்கப்பட்டன. இன்று தமிழ்சினிமாவில் நீடிக்கும் பல அம்சங்கள், தனி நகைச்சுவைப்பகுதி, சம்பந்தமில்லாத ஆடல்கள் போன்றவை அக்கால நாடகங்களில்தான் உருவம் கொண்டன. துருவன் நாட்கத்தில் ஒரு காட்சியை சண்முகம் சொல்கிறார். துருவனும் உத்தானபாதரின் மகன் உத்தமனும் நதவனத்தில் விளையாடுகிறார்கள். பாடல் இவ்வாறு

டென்னிஸ் புட்பாலடித்து
ரவுண்டர்ஸ் பிளே செய்திடுவோம்
டிபன் பாக்ஸை எடுத்து
டீ காபி பார்த்திடுவோம்!

இதை ரசிக்கும் மக்களுக்கு கலையின் நம்பகத்தன்மை ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. அது கொஞ்சம் கலையை தொட்டுக்கொண்ட ஒரு கேளிக்கை மட்டுமே.

சண்முகத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது? நான்குவயதில் அவர் நாடகநடிகராக ஊர்கள் தோறும் அலைய ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாட்டில் அவரது கால்கள் படாத பெரிய ஊர்களே இருக்க இயலாது. அபப்டியே அரை நூற்றாண்டுக்காலம்! கடைசியில் அவர் தன் வரலாற்றை எழுத ஆரம்பிக்கும்போது அவ்வரலாறு மனித முகங்களின் கொந்தளிப்பாக இருக்கிறது. சண்முகத்தின் வழியாக காலத்தில் மறைந்த மனிதர்களின் குரல்களும் முகங்களும் ஓடி மறைகின்றன. நூலைப்படித்து முடிக்கும்போது ஒரு காலகட்ட வரலாற்றைக் காட்டிவிட்டு ஒளி சுருங்கி அணைந்த தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்த உணர்ச்சியே ஏற்படுகிறது.

விதவிதமான மனிதர்கள். கலைகளுக்கே உரிய வசீகரத்துடன் நாடகம் மனிதர்களை பித்துப்பிடிக்கச் செய்கிறது. கலைஞர்களை வேறு ஏதோ உலகைச் சேர்ந்தவர்களாக எண்ணி வழிபடும் மனிதர்கள். புதியம்புத்தூரில் கருப்பண்ணன் என்ற சண்டியரைச் சந்திக்கிறார்கள். அவர் ஒருநாள் ஒரு பெண்கள் கூட்டத்தை கூட்டிவருகிறார். இவர்களெல்லாம் யார் என்று சண்முகம் கேட்கிறார். ”எல்லாரும் என் மனைவிகள்…உங்களைப் பார்க்க ஆசைப்பட்டார்கள்” என்று கருப்பண்ணன் சொல்கிறார். அவருக்கு பதினாறு மனைவிகள்.

நாடகம் ஒரு ஊரில் முடிந்ததும் குழு கிளம்புபோது அந்தப்பிரிவை ஏற்க முடியாமல் கூடவே கிளம்பி வருகிறார்கள் பலர். அவர்களை நாடகக்குழு தலைவர் கூப்பிட்டு குடும்பத்தைக் கவனிக்கச் சொல்லி அறிவுரை சொல்லி அனுப்புகிறார். இருந்தும் விடாமல் வந்து மெல்ல நாடகக்காரராகவே ஆகிவிடுபவர்கள் உண்டு. நாடகம் நடக்கும் ஊரில் நாடகக்குழுவுடனே தங்கியிருக்கிறார்கள். அகப்பட்டதையெலலம் கொண்டு வந்து நாடக நடிகர்களுக்கு அளிக்கிறார்கள்.

அதே சமயம் அன்று கூத்தாடிகள் என்று நாடகநடிகர்களுக்கு வசையும் உண்டு. அவர்கள் பெண்களை மயக்கி கூட்டிக்கொண்டு ஓடிவிடுவார்கள் என்று நம்பினார்கள் என்று சொல்லும் சண்முகம் அதில் உண்மையும் உண்டு என்கிறார். குடி அக்காலத்து நடிகர்களை ஆட்டுவித்து சீரழித்தது. உண்மையில் நடிகர்கள் அன்றும் பணத்தில் தான் கொழிக்கிறார்கள். சண்முகம் சிறு குழந்தையாக நாடகத்தில் நடிக்கச்செல்லும்போது அவருக்கு மாத ஊதியம் பத்து ரூபாய். ஒரு போலீஸ்காரர் மாதம் ஏழு ரூபாய் வாங்கிய காலம் அது. ஆனாலும் அவர்களிடம் பணம் இருப்பதில்லை. காரணம், குடிதான்.

சண்முகத்தின் அப்பாவும் பெரும் குடிகாரர். சண்முகமும் சகோதரர்களும் அந்த நாடகநடிகர்களில் இருந்து மேலெழுந்து நாடகக்குழு அமைத்து வெற்றிகண்டு செல்வந்தர்களாக ஆனதற்கு அவர்களுக்கு குடி மீதிருந்த வெறுப்பே மையக்காரணம். ஆனால் நடிகர்கள் குடியை விடுவதும் எளிதல்ல. இரவுதோறும் விடிகாலை வரை நாடகம். விதவிதமான இடங்களில் உறக்கம். பல்வேறு வகை வேடங்களை எடுப்பதில் உள்ள மன அழுத்தம். அவை அவர்களின் தூக்கத்தை அழித்துவிடுகின்றன. குடிக்காமல் தூங்க முடிவதில்லை

சண்முகம் சின்னப்பையனாக இருக்கும்போது சென்னையில் நாடகம் போட வருகிறார். ஒற்றைவாடை அரங்கில் முதல்முறையாக அவர் மின் விளக்கு ஒளியில் நாடகம் நடிக்கிறார்.சென்னையின் கலவைத்தண்ணீர் ஒத்துக்கொள்வதில்லை. ஆகவே காய்ச்சல். அப்பா அதற்கு கொடுக்கும் மருந்து பிராந்தி. அதைக்குடித்தால் தெம்பாக மேடை ஏறி விடமுடியும். காய்ச்சல் தெரியாது. அப்படி உருவாக்கபப்ட்டார்கள் நடிகர்கள். அவர்களின் வாழ்க்கையும் ஒரு பெரிய நாடகம்தான். ஏற்றம் இறக்கம் திருப்பம் எல்லாம் உள்ள கதை.

ஆனாலும் அவர்களின் கலையை வியந்து போற்றும் பெரிய மனிதர்களும் இருந்தார்கள். எட்டயபுரம் மன்னர் குமார எட்டப்ப மகாராஜா பெரிய நாடக ரசிகர் என்று கேள்விப்படுகிறார்கள். அவருக்காக அரண்மனையில் தனி நாடக நிகழ்ச்சி ஏற்பாடாகிறது. அங்கே சென்று நடித்த குழுவினருக்கு பரிசுகள் வழங்கியபின் அவர்களுக்கு மகாராஜா ஒரு விருந்து அளிக்கிறார். அரசரின் அவையில் ஓர் படம் மாட்டப்பட்டிருக்கிறது. கோட்டு தலைப்பாகை பஞ்சக்கச்சத்துடன் இருக்கும் அவரை அரசகுலத்தவர் என்று எண்ணுகிறார்கள்.

"இவர் பிரபல நடிகர் கல்யாணராமையர். பெண்ணாக நடிப்பதற்கு அவரைப்போல இனி ஒருவர் பிறந்து வரவேண்டும். பாமாவிஜயத்தில் அவர் சத்யபாமாவாக நடித்தது என் கண்ணை விட்டு போகக்கூடாது என்பதற்காக அவர் படத்தை மாட்டி வைத்திருக்கிறேன்" என்று சொல்கிறார் மகாராஜா. அன்று மனோகரா நாடகத்தில் மனோகரனாக நடித்த சண்முகத்துக்கு தன் கழுத்தில் கிடந்த வைரம் பதித்த அரச சங்கிலையை கழற்றி போட்டுவிட்டார் மகாராஜா.

எத்தனை நடிகர்கள். வாத்தியார் பாட்டு சொல்லிக்கொடுக்கும்போது ஒவ்வொருமுறையும் ஒரு குறிப்பிட்ட வரிக்கு பீரிட்டுச் சிரித்து அவரைக் கடுப்பேற்றும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பேய் வேடமிட்டு பயமுறுத்தும் பிரண்டு ராமசாமி… அவர்கள் நாடகத்தை விட்டு சினிமாவுக்குத் தாவி தப்பிவிட்டவர்கள். ஆனால் அப்படி தப்ப முடியாமல் சேர்ந்து மூழ்கிய பலரை சண்முகம் சொல்லிச் செல்கிறார். பாய்ஸ் கம்பெனி நடிகர்களின் பட்டியலில் ஒவ்வொருவராகச் சொல்லி அவர்களின் நடிப்புத்திறனை வியந்து குறிப்பிட்டு அவர்கள் நாடகத்தால் கைவிடப்பட்டு வறுமைச்ச்சூழலில் சில்லறை வேலைகள் செய்து வாழ்வதைச் சொல்லிச் செல்கிறார் சண்முகம்.

தமிழின் வாழ்க்கை வரலாறுகளில் பலசமயம் இன்னொருவர் மெல்ல மெல்ல கதாநாயகனாக திரண்டு வருவதுண்டு. உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வரலாறு. டி.செ.சௌ.ராஜனின் ‘நினைவலைகள்’ ராஜாஜியின் ஆளுமையின் சித்தரிப்பு. சண்முகத்தின் இந்த தன்கதையின் நாயகன் என்று சங்கரதாஸ் சுவாமிகளைக் குறிப்பிடலாம்.

மதுரை தத்துவ மீனலோசனி வித்து பால சபா என்னும் அமைப்பை நிறுவி தமிழின் பொதுஓட்ட நாடகத்துறையின் புத்தெழுச்சிக்கு காரணமாக இருந்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். துறவி. நாடக ஆசிரியர். நடிப்பு கற்றுத்தருவதில் நிபுணர். நாடகக்குழு உரிமையாளர். அவரது ஸ்ரீவள்ளி போன்ற நாடகங்கள் இன்றும் ஸ்பெஷல் நாடகம் என்ற வகை நாடகங்களாக தென் தமிழகத்தில் நடிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு ஊரில் இருந்து வருவார்கள். மேடையில் சந்திப்பார்கள். ஒத்திகை இல்லாமலேயே நாடகத்தை நிகழ்த்துவார்கள். அந்த அளவுக்கு அந்நாடகங்கள் அனைவரும் அறிந்த நாடகப்பிரதிகள் இன்றும். குறிப்பாக ஸ்ரீவள்ளியின் வள்ளி-முருக உரையாடல் பெரும்பாலான மக்களுக்கு மனப்பாடம்.

சங்கரதாஸ் சுவாமிகளின் முரட்டுத்தனமான குணத்தை கூர்மையாகச் சொல்லியிருக்கிறார் சண்முகம். சட்டென்று கோபம் வந்து அடிக்கப்பாய்ந்து வருபவர் அவர். புராணங்களில் அபூர்வமான தேர்ச்சி கொண்டவர். அவர் ஒரே இரவில் முழு நாடகத்தையும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாடல்களுடன் எழுதி முடித்ததை சண்முகம் எழுதும்போது அவரது ஆவேசத்தை உணர முடிகிறது. கடைசியில் பக்கவாதம் வந்து படுக்கையில் கிடந்து அவர் இறக்கும் சித்திரமும் துயர் நிறைந்தது.

சண்முகத்தின் இந்தச் சுயசரிதையை வாசிக்கும்போது பாலநாடகசபாக்களின் கடைசிக்காலத்தை காண முடிகிறது. ஒவ்வொரு திரையாக மடேர் மடேர்ன்று சரிந்து விழுந்து அரங்கு நம் பார்வை முன் இல்லாமலாகும் அனுபவம். சண்முகம் அதில் மயிரிழையில் தப்பித்த சிலரில் ஒருவர்.

(நன்றி: ஜெயமோகன்)

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp