திகார் சிறை என்றாலே கொடூரமான, பயங்கரமான, குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி சிறை என்ற எண்ணம் தோன்றும். ஆனால் மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போராளிகளையும் இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே சித்தரிக்கிறது. அவர்களையும் அந்தக் கொடிய சிறையில் அடைக்கிறது. அப்படித்தான் ஒரு மக்கள் போராளியான கோபட் கந்தியும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
பொதுவாக சிறை போராளிகளை ஓய்ந்திருக்கச் செய்வதில்லை, சோர்வடையவும் செய்வதில்லை, அவர்கள் சிறையிலும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறையிலிருந்து படைக்கப்பட்ட பல இலக்கியங்களை நாம் படித்திருக்கிறோம். பாசிசக் கொடுஞ்சிறையில் வதைபட்ட நிலையிலும் தனது நினைவுகளை மக்களிடம் கொண்டு சேர்த்துக் கிளர்ச்சியடையச் செய்த ஜூலியஸ் பூசிக்கின் வீர நினைவுகள், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் சிறைப்பட்டிருந்த ஜவஹர்லால் நேரு தனது மகளுக்கு உலக வரலாற்றைக் கற்பிக்கக் கடிதங்கள் வடிவில் எழுதிய உலக வரலாற்றுக் காட்சிகள்ஆகியவை மக்களுக்காகப் போராடுவோருக்கு உணர்வுரீதியாகவும் அறிவுரீதியாகவும் பெரும் துணையாக இருந்தனஎன்பதனை நாம் அறிவோம். அந்தோனியோ கிராம்சியின் சிறைக் குறிப்பேடுகள் மார்க்சிய சிந்தனைகளை புதிய கோணத்தில் வளர்த்தெடுத்த. இப்போது சுதந்திரமும் மக்கள் விடுதலையும் என்ற தலைப்பில் விடியல் வெளியீடாக வந்திருக்கும் கோபட் கந்தியின் சிறுநூல் இந்த வரிசையில் இடம்பிடிக்கக் கூடிய ஒன்றாகத் திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.
முதல் அத்தியாயத்தில் ‘மானுடத்தின் அன்னியமாக்கப்பட்ட ஆற்றலான’ பணத்தின் ஆதிக்கம் பற்றி விவரித்து, கட்சியானாலும், அரசாங்கமானாலும் பணம் அதிகாரத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டும் என்பதுடன் தொடங்கும் இந்தச் சிறுநூல் தத்துவம், மதங்களின் தோற்றம் மற்றும் இன்றைய நிலை ஆகியவற்றை வரலாற்றுப் பூர்வமாக, அதேநேரத்தில் சுருக்கமாக (in a nutshell) எடுத்துக் கூறுகிறது. மனிதகுலத்தின் விடுதலையில் மார்க்சியத்தின் பங்களிப்புடன், ஆழ்மன உளவியல் பாத்திரம் பற்றி அலசுகிறது. நிலவுகின்ற சமூகத்திற்கும், ஆழ்மன உணர்வுநிலைக்கும், விழுமியங்களுக்கும் இடையிலான இடை உறவுகளை விளக்குகிறது. மூளையின் செயல்பாடும், விழுமியங்களும், உணர்வும், அறிவும், மக்களின் விடுதலை உணர்ச்சியுடன் கொண்டுள்ள தொடர்பு பற்றிய பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்திலான ஒரு புதிய அணுகுமுறையின் தேவையை வலியுறுத்துகிறது.
மனித குலத்திற்கு விடுதலையை அளிக்கும் புதிய சமூகத்தைப் படைப்பதில், அதைப் பின்னடைவு இல்லாமல் மேல் எடுத்துச் செல்வதில் சிறந்த விழுமியங்களுக்கு உள்ள முக்கியமான பங்கை வலியுறுத்துகிறது.
சமூகத்தில் தலைமை தாங்கும் முன்னோடிகளும் செயல்வீரர்களும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அம்சங்களாக எளிமை, நேர்மை, முதிர்ச்சியுடன் இருத்தல், தன்னலமற்று இருத்தல், நீதி/நடுநிலைமை போன்ற விழுமியங்களை முன்வைத்து இவற்றைப் புதிய அனுபவங்களுடன் விரிவாக்கக் கோருகிறது.
இந்நூலில் கோபட்கந்தி தனது துணைவியாரும் போராளியுமான அனுராதா பற்றிக் குறிப்பிடும் நிகழ்வுகள் நெஞ்சை நெகிழச் செய்பவை, எளிமையும் நேர்மையும் உண்மையும் அவருடைய மந்திரங்களாக இருந்ததாகச் சொல்கிறார். நாக்பூர் பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு சமூகவியல் பற்றி வகுப்பு எடுத்து வந்த போதும், பழங்குடி மக்கள், தலித்மக்கள், மாணவர்கள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண் களப்பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய போதும் அவர்களுடைய அன்பை ஈர்த்தது பற்றி உணர்ச்சி மேலீட்டுடன் குறிப்பிடுகிறார். கடும் நோய்வாய்பட்ட நிலையிலும் மலைவாழ் பழங்குடிப் பெண்களின் முன்னோடிகளுடன் பணியாற்றியதையும், அப்போது ஏற்பட்ட மலேரியா நோயின் தாக்குதலில், அடுத்த பதினைந்து நாட்களிலேயே மரணத்தைச் சந்தித்தையும் அவர் கூறும்போது நாம் நெகிழ்ந்து போகிறோம்.
அறவியல்ரீதியான, அமைப்புரீதியான பல புதிய சிந்தனைகளை இந்நூல் விதைக்கிறது. அவை விவாதிக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு, பேணி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அரிய சிந்தனைகளாக இருக்கின்றன.
கோபட் கந்தியே நம்மிடம் நேரில் பேசுவது போன்ற உயிரோட்டத்துடன் தோழர் மு.வசந்தகுமார் இந்நூலை மொழிபெயர்த்துள்ளார். விடியல் வெளியீடாக மூன்று பதிப்புக்களைக் கண்டுள்ள உலகமயமாக்கல் – அடிமைத்தளையில் இந்தியா... நூலின் ஆசிரியர் அரவிந்தும் கோபட் கந்தியும் ஒருவரே என்பதும் அதுவும் தோழர் மு.வசந்தகுமார் அவர்களுடைய மொழிபெயர்ப்பில் வந்துள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மனித குலத்தின் விடுதலையையும் சமூக மாற்றத்தையும் விரும்புவோருக்கும், குறிப்பாக, மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகளுக்கும் இந்நூல் ‘குறுகத் தரித்த’ ஓர் அரிய பெரும் பெட்டகம் ஆகும்.