முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் வழக்கறிஞருமான ப.சிதம்பரம், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழில் வாரம்தோறும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் ஆளும்கட்சியைக் கண்மூடித்தனமாகத் தாக்குவது அல்லது அடுத்த தேர்தல் வரைக்கும் ஓய்வெடுப்பது என்ற எதிரெதிர் நிலைகளில் ஏதாவது ஒன்றையே தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில், ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி ஆற்ற வேண்டிய பங்கு என்னவென்பதற்குச் சான்றாக அமைந்திருக்கின்றன அவரது கட்டுரைகள்.
ஆளுங்கட்சி எடுக்கும் கொள்கை முடிவுகளில் தவறுகள் நடக்கும்போது, அது எந்த வகையில் தவறு என்பதையும், அது என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும், அது எவ்வாறு சரிசெய்யப்பட வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறும் ஆலோசனைகளாக அமைந்திருக்கின்றன, அவர் முன்வைக்கும் வாதங்கள். எனவே, ஆளும் அரசு அவற்றைப் புறக்கணிக்க முடியாத ஒரு உளநெருக் கடிக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டு ரைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருப்பவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன். தனது பதவிக்காலத்தில் ப.சிதம்பரத்தின் பல கருத்துகளுக்குத் தான் பொறுப்பாக வேண்டியிருந்ததையும், அத்தகைய கருத்துகள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 54 கட்டுரை களும், தேசமும் தேசியமும், ஜம்மு காஷ்மீர், வெளியுறவுக் கொள்கை, பணமதிப்பு நீக்க நடவடிக்கை முதலான ஒன்பது பகுதிகளாக காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியில் உள்ள கட்டுரைகளையும் முழுமையாகப் படிக்க வேண்டும் என்பது அவரது வேண்டுகோளாகவும் இருக்கிறது. கட்டுரையாசிரியர் முன்வைக்கும் கருத்துகளின் முழுப் பரிமாணத்தையும் வாசகர்கள் உணர்ந்துகொள்ள அத்தகைய வாசிப்பு உதவியாகவும் இருக்கும்.
தேசமும் தேசியமும் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில், மத்தியில் ஆளும் பாஜக அரசு வலிந்து திணிக்கும் தேசிய உணர்வைக் கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். ஆட்சியின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனத்தையும் தேச விரோதமாகச் சித்தரிக்கும் ஜனநாயக விரோதத் தன்மையின் அபத்தத்தை எடுத்துரைக்கிறார். வெற்று முழக்கங்கள் மட்டுமே தேசிய உணர்ச்சியை ஏற்படுத்திவிட முடியாது என்பதை உதாரணங்களோடு விளக்குகிறார். நாடு என்பதும் தேசம் என்பதும் வெவ்வேறு பொருள் குறிக்கும் வார்த்தைகள். பிரிட்டனும் பெல்ஜியமும் தேசங்கள் அல்ல, நாடுகள். தேசிய இனங்களைக் கருத்தில் கொள்ளாத தூய தேசியவாதத்துக்கும் பாசிசத்துக்கும் வேறுபாடு இல்லை என்கிறார்.
ரோஹித் வெமுலாவின் தற்கொலைக்குப் பின்னிருந்த அதிகார அமைப்புகளின் வரம்பு மீறலைக் கண்டிக்கும்போது, அது தென்னகத்தின் சமூக நீதிக் குரலையே எதிரொலிக்கிறது. தேசிய இனப் பிரச்சி னைகளைப் பற்றிய இடதுசாரிகளின் கருத்து களையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். நீதிமன்ற விசாரணைக்கு வந்த மாணவர் கன்னையா குமார் அங்கிருந்த வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதைக் கண்டிக்கும்போது, அவரது கோபம் வழக்கறிஞர்களையும் விட்டுவைக்கவில்லை.
‘கண்ணாடி மாளிகையிலிருந்து கல்லெறியக் கூடாது’ என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருந்தும். இன்று ஆளுங்கட்சியாக இருக்கிறவர் கள் மீது வைக்கப்படும் விமர்சனம், நாளை நாம் ஆட்சிக்கு வரும்போதும் வைக்கப்படும் என்ற முன்கவனம் எதிர்க்கட்சிகளுக்கு எப்போதும் உண்டு. ப.சிதம்பரம் இந்த நடைமுறை அரசியலிலிருந்து விதிவிலக்காக நிற்கிறார். சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பணியாளர் நலத் துறை, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, வர்த்தகத் துறை, நிதித் துறை, உள் துறை ஆகியவற்றில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். கல்வியாலும் அனுபவத்தாலும் அவர் பெற்றிருக்கும் ஆழ்ந்தகன்ற அறிவின் காரணமாகத் தேர்தல் அரசியலைத் தாண்டி, அரசியலமைப்பின் மீதும் ஆட்சி நடவடிக்கைகளின் மீதும் நியாயமான கேள்விகளைத் தயங்காமல் எழுப்புவதே உண்மையான ஜனநாயகம் என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். இந்த நிலைப்பாட்டின் காரணமாகவே, உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த அவரால், தேசவிரோதம் பற்றிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவையும், காஷ்மீரில் கூட்டாட்சித் தீர்வுகளின் மூலமாகவே நிரந்தரத் தீர்வை அடைய முடியும் என்று எழுத முடிகிறது.
இந்நூலின் இறுதிப் பகுதியான பணமதிப்பு நீக்க நடவடிக்கை, கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிக்கிறோம் என்று தொடங்கிய ஒரு நடவடிக்கை, ரொக்கமற்ற பொருளாதாரத்தை நோக்கிய முயற்சியாகத் திரித்துரைக்கப்பட்ட பொறுப்பற்ற தன்மையையும் அதன் மிக மோசமான விளைவுகளையும் எடுத்துரைக்கிறது. முக்கியமாக, கறுப்புப் பணம் என்றால் என்ன என்ற அடிப்படைப் புரிதலை உருவாக்குவதற்காக, ஒரு பள்ளிக்கூட ஆசிரியரைப் போல பொருளாதார வகுப்பெடுத்திருக்கிறார் ப.சிதம்பரம். வரியிலிருந்து தப்பிப்பதற்காக, கணக்கில் வராத கறுப்புப் பணம் பதுக்கப்படுவதில்லை, அது சந்தையின் சுழற்சியில் இருக்கிறது என்பதை எளிமையாகப் புரியவைத்திருக்கிறார்.
அவரே சொல்வதுபோல, தனது கட்டுரைகளில் எளிமையான மொழியை அவர் கவனத்தோடு கையாண்டிருக்கிறார். ஆனால், நூலின் தலைப்பு சொல்வதுபோல உண்மையை உரத்துப் பேசியிருக்கிறாரா? ப.சிதம்பரத்தின் குரல் எப்போதுமே உரத்த குரல் இல்லை. அவரது இயல்பின்படி, எளிமையாக, மிக நிதானமாக, அழுத்தமாகவே இருக்கிறது. ஆங்காங்கே கொஞ்சம் எள்ளலும் தொனிக்கிறது.
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
(நன்றி: தி இந்து)