தஞ்சாவூரில் தனித்துவமிக்க ஓர் இலக்கிய இயக்கம்போலச் செயல்பட்டவர் தஞ்சை ப்ரகாஷ். வெங்கட் சாமிநாதன், பிரபஞ்சன் போன்ற பல்வேறு ஆளுமைகளின் நண்பர் தஞ்சை ப்ரகாஷ். நிறைய மொழிகளைக் கற்றுக்கொண்டவர். இலக்கியவாதிகள் சந்திப்புக்கென்றே ‘யுவர் மெஸ்’ என்ற உணவு விடுதியை நடத்தியவர். பல சிறுபத்திரிகைகளையும் நடத்தியவர். முழுக்க முழுக்க வெங்கட் சாமிநாதனுக்காக வெ.சா.எ (வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்) என்ற சிறுபத்திரிகையை நடத்தியவர். தஞ்சை இலக்கியவாதிகள் மத்தியில் இன்று கிட்டத்தட்ட ஒரு தொன்மம் போல் ஆன வாழ்வு அவருடையது. கடந்த 2000-ல் அவர் தனது 57-வது வயதில் மறைந்தார். ‘கள்ளம்’, ‘கரவமுண்டார் வீடு’ ‘மீனின் சிறகுகள்’ ஆகிய நாவல்களும் அங்கிள், மேபல், தஞ்சை ப்ரகாஷ் கதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும், என்றோ எழுதிய கனவு என்ற கவிதைத் தொகுப்பும், ‘தஞ்சை ப்ரகாஷ் கட்டுரைகள்’ என்று நூலும் இதுவரை வெளியாகியிருக்கின்றன. இலக்கியவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் பரவலான வாசிப்பை அவரது படைப்புகள் சென்றடையவில்லை.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் இலக்கியமாக்கியவர் தி. ஜானகிராமன். கும்பகோணத்தைப் போல காவிரி மண்ணின் இன்னொரு பிரதானமான ஊர் தஞ்சாவூர். பன்மைக் கலாச்சாரம் கொண்ட தஞ்சாவூர் நகரத்தை, அதன் இண்டு இடுக்குகளில் பார்த்து இலக்கியமாக்கியவர் தஞ்சை ப்ரகாஷ்.
சென்னையைப் போலவே தஞ்சையும் பல்வேறு கலாச்சாரங்களின் சந்திப்பாக பல நூற்றாண்டுகளாக இருந்துவந்தது. தெலுங்கர்கள் படையெடுப்பு, மராத்தியர்கள் படையெடுப்பு, முகலாயர் படையெடுப்பு, ஆங்கிலேய ஆதிக்கம் ஆகிய தொடர் நிகழ்வுகளால் தஞ்சைக்கு ஏற்பட்ட பலவண்ணச் சாயை இது. இப்படிப்பட்ட பல்வேறு படையெடுப்புகள், ஆதிக்கம் போன்றவற்றால் அரசியல், பொருளாதார ரீதியில் பல சீரழிவுகள் ஒரு பக்கம் ஏற்பட்டாலும் கலாச்சார ரீதியில் வளமான ஒரு பாரம்பரியம் தஞ்சையில் வேரூன்றியது. இந்தக் கலாச்சார வெளிதான் தஞ்சை ப்ரகாஷின் பெரும்பாலான சிறுகதைகளின் நிகழ்விடம்.
இந்தக் கலாச்சார வெளியைத் தன் படைப்புக்குப் பின்னணி தரும் திரையாக மட்டும் தஞ்சை ப்ரகாஷ் பயன்படுத்தவில்லை. பின்னணித் திரைக்குள்ளும் ஊடுருவி அதன் ஆழ்மனதை நோக்கிப் பயணிக்கிறார். அதன் ஆழ்மனதோ எல்லாக் கலாச்சாரங்களையும் போலவே தோற்றமளிக்கிறது. கலாச்சாரங்கள், மொழிகள், இனங்கள் எல்லாம் வேறு வேறாக இருக்கலாம். மனிதர்களின் ஆழ்மனதோ கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கிறது. விரக்தி, தனிமை, பிறழ்வுகள், கபடு, குரூரம், ஆனந்தம், தூய்மை என்று எல்லா மனிதப் பிராந்தியங்களின் சிக்கலான கலவையாகவே இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த மனிதர்களின் ஆழ்மனதும் தோற்றமளிக்கிறது.
பாலியல் ரீதியில் பிறழ்வுகள் என்றும் குற்றம் என்றும் சமூகத்தாலும் சட்டத்தாலும் தள்ளிவைக்கப்பட்ட பல விஷயங்களுக்குள் தஞ்சை ப்ரகாஷ் தயக்கமின்றி அந்த விஷயங்களுக்குள் புகுந்திருக்கிறார். இதன் காரணமாக அவருடைய நாவல்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதைகளுக்குள்ளும் அப்படிப்பட்ட விஷயங்களையே தஞ்சை ப்ரகாஷ் தொட்டிருக்கிறார் என்றாலும் நாவலில் அடையாத கலாபூர்வமான சில வெற்றிகளை இங்கே அடைந்திருக்கிறார்.
பொதுவாக, ஒரு பாலியல் இணையதளத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும் வெவ்வேறு தலைப்புகள் கவர்ந்திழுக்கும் உத்தி மட்டுமல்ல; மனநிலையின் இருளுக்குள் இத்தனை சாயைகளா என்பதை நமக்கு உணர்த்துபவையும்கூட. இருளின் அந்த சாயைகளில் பலவும் தஞ்சை ப்ரகாஷ் கதைகளில் உண்டு. பிறழ்வுகளை ஒரு எழுத்தாளர் எழுதாமல் விட்டுவிடுவது வசதியானது. ஆனால், எவ்வளவு பாராமுகம் காட்டினாலும் மனதுக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் பிறழ்வுகள் இருக்கத்தானே செய்கின்றன. அவற்றை தஞ்சை ப்ரகாஷ் அப்படியே விடுவதில்லை. கண்முன்னால் பிரம்மாண்டமாக வந்து நிற்கும் ‘பிறழ்வு’க்கு முன்னால் பலரும் கண்களை இறுக மூடிக்கொண்டிருக்க அவரோ அந்த ராட்சசத்தைக் கண்கொண்டு அங்குலம் அங்குலமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார். அப்படிப் பார்ப்பதன் மூலம் பிறழ்வின் ஆழ்மனதில் ஊடுருவுகிறார். தான் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் பயமுறுத்தினாலும் தன்னை ஒருவர் ஆடாமல் அசையாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எப்பேர்ப்பட்ட ராட்சசமும் நெளிய ஆரம்பித்துவிடுமல்லவா. தஞ்சை ப்ரகாஷின் பார்வையில் அது நிகழ்கிறது. கத்தி மேல் நடக்கும் விஷயம்தான். சில இடங்களில் தடுமாறவும் செய்கிறார் ப்ரகாஷ். ஆனால், தன் தடுமாற்றத்தை மறைக்க அவர் முயலவில்லை.
இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும் என்று பலரும் கேட்கலாம். “நாட்டில் நடப்பதைச் சொல்லியிருக்கிறேன். இதில் உங்களுக்குப் பிடிக்காதது இருந்தால், “இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது?” என்று வேண்டுமானால் கேளுங்கள்; ”இதையெல்லாம் ஏன் எழுத வேண்டும்?” என்று கேட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். உண்மையைச் சொல்வதென்றால் முழுமையுந்தான் சொல்லியாக வேண்டும். நான் விரும்பும் அளவுக்குச் சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்” என்று ஜி. நாகராஜன் சொன்னதையே அவர்களுக்குப் பதிலாகச் சொல்ல வேண்டும்.
தி, ஜானகிராமன் உள்ளிட்டோரும் நாசூக்காக சில விஷயங்களை எழுதியிருக்கிறார்கள். ஆனால், நாசூக்கின் எல்லையிலேயே அவர்கள் நின்றுகொண்டார்கள். அவர்களின் வெற்றிகளும் மிகவும் அதிகம். தஞ்சை ப்ரகாஷ் அந்த நாசூக்கு எல்லையைத் தாண்டிப் போகிறார். ஆனால், அதைக் கையாள வேண்டிய அசாத்தியமான கலைத்திறமை கைகூடாததால் பல கதைகள் கலையாகாமல் போய்விடுகின்றன. மீறியும், சில கதைகள் ஆழமும் அழகும் கொண்டு விகசிக்கின்றன.
இந்தியக் கதைகளுக்கே உரிய மாயயதார்த்தக் கூறுகள் தஞ்சை ப்ரகாஷ் கதைகளின் கூடுதல் பலம். ஊரையே கண்ணின் மண் தூவிவிட்டுத் திருடும் திண்டி என்ற அசாத்தியமான வீரன் நம் ‘அரைத்திருடன், முழுத்திருடன்’ கதைகளில் வரும் பாத்திரங்களைப் போன்றவன். சுவாரஸ்யம், மாயத்தன்மை இரண்டும் ஒன்றுகூடி வெற்றிபெற்ற சிறுகதை ‘திண்டி’. தொழுநோய் கண்டதால் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்காக காவிரித் தீவை நோக்கிப் பேய்போல் வெள்ளத்தில் நீந்திசெல்லும் லோச்சனாவும் ஒரு மாயயதார்த்தப் பாத்திரம்தான். தன் உடலில் உள்ள தொழுநோய்த் தழும்புகளை மறைக்க அவள் தன் உடல் முழுவதும் ஓவியம் தீட்டுவது ஏதோ மாந்திரீகம் செய்வதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தும். தமிழின் முக்கியமான சிறுகதைகளுள் இதுவும் ஒன்று.
தஞ்சையின், 70-களின் தொழில் முறை அரசியல் கொலைகாரன் ஒருவனைப் பற்றிய ‘கொலைஞன்’ கதை பரவலாக யாருக்கும் தெரியாத ஒரு பிராந்தியம். ஐயங்கார் குடும்பத்தில் பிறந்து, எட்டு வயது இருக்கும்போது தன் குடும்பத்தில் ஒரே நேரத்தில் ஏழெட்டுப் பேர் பசிக்குப் பலியாவைதைப் பார்த்துவிட்டு, 18 நாள் பட்டினியுடன் அங்கிருந்து தப்பிச்சென்று சிறுவயதிலேயே கொலைத்தொழிலில் ஈடுபடும் ரெங்கராஜனின் வாழ்க்கை நம்மை அதிர வைக்கிறது. பசியும் கொலைகளும் குரூரமும் அன்பும் நிறைந்த கதை அவனுடையது. இதையே வேறு மாதிரியாக தஞ்சை ப்ரகாஷ் எழுதிப் பார்த்த ‘க்யாமத் என்னும் இறுதித் தீர்ப்பின் நாள்’ சிறுகதையும் நம்மை அதிர வைப்பது.
‘திண்டி’, ‘அங்கிள்’, ‘கொலைஞன்’, ‘சோடியம் விளக்குகளின் கீழே’, ‘க்யாமத் என்னும் இறுதித் தீர்ப்பின் நாள்’, மேபல், பற்றி எரிந்த தென்னை மரம், கடைசிக்கட்டி மாம்பழம் ஆகியவற்றை தஞ்சை ப்ரகாஷின் சிறப்பான சிறுகதைகள் எனலாம். சற்றே இழுத்துக்கொண்டே போனாலும் ‘பொறா ஷோக்கு’ என்ற சிறுகதையிலும் அழகான தருணங்கள் சில இருக்கின்றன.
இதுவரை பிரசுரமான கதைகள், வெளியாகாத கதைகள், முற்றுப்பெறாத கதை ஒன்று எல்லாம் சேர்த்து இந்தத் தொகுப்பில் மொத்தம் 31 கதைகள் இடம்பெற்றிருக்கின்றன. தஞ்சையின் இருண்ட உலகம், பிறழ்வுகளை நோக்கிய பார்வை, தஞ்சை முஸ்லிம், கிறித்தவ மக்களின் அக வாழ்க்கை என்று இலக்கியரீதியிலும் கலாச்சாரரீதியிலும் முக்கியமான பல பதிவுகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது. இவையெல்லாம் பலம் என்றால் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் ஆயாசமூட்டும் நடை, கச்சிதமின்மை, தெளிவில்லாத வாக்கியங்கள் போன்றவை பலவீனங்கள்.
தஞ்சை ப்ரகாஷின் சிறுகதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டிருப்பது பாராட்டத் தகுந்த முயற்சி. கூடுதல் கவனம் செலுத்தி எழுத்துப் பிழைகளைக் களைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
(நன்றி: ஆசை)